இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 2)
ஆசிரியர் - மாணவர் உறவு
(அல்லாஹ்)தான் நாடியவர்களுக்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். இன்னும், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ, நிச்சயமாக அவர் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்…… (அல்குர் ஆன் 2:269) என்று இறைவன் தனது அருள் மறையில் அறிவிக்கின்றான். அல்லாஹ் நாடிய கல்வி ஞானத்தைப் போதிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு, அறிஞர்களுக்கு மனித சமுதாயத்தின் மீது அதிகப் பொறுப்பு உள்ளது. எனவே தான் பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி இஸ்லாம் எடுத்தியம்புகிறது. “எனக்கு ஒரே ஒரு எழுத்தைக் கற்பித்த ஆசிரியருக்கு நான் அடிமையாகி விட்டேன். அவர் விரும்பினால் என்னை அவர் விற்று விடலாம் அல்லது விட்டும் விடலாம்.” என்று அலீ (ரழி) கூறுகின்றார்கள். “சிறு குழந்தைகளுக்குத் திருக்குர் ஆனைக் கற்றுக் கொடுப்பவர் இறுதி நாளில் அர்ஷுடைய நிழலிலிருப்பார்.” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவுளமாகியுள்ளார். எனவே பெற்றோர்களுக்குப் பின்பு தனது ஆசானுக்கு கண்ணியமளிக்க வேண்டும்; அவர்கள் நலம் பேண வேண்டும்; அவர்கள் இடும் கட்டளைப்படி நடக்க வேண்டும். அவர்களின் நற்பிரார்த்தனைகள் தங்களுக்குக் கிடைக்கும் படி நடந்து கொள்ளல் வேண்டும்.
கற்றறிந்த அறிஞர்களை மதித்து நடக்க வேண்டும்
ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு அறிவுறைகள் கூறுவதோடு தாமும் அவ்வழி நடந்து வர வேண்டும். அப்பொழுது தான் கல்வியின் கண்ணியமும், கல்வியைப் போதிப்பவரின் கண்ணியமும் பாதுகாக்கப்படும். “கல்வியைக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயக் கடமை.” என்றும் “சீரிய கல்வி சீனாவிலிருந்தாலும் (சிங்கத்தின் முகத்திலிருந்தாலும்) தேடிக் கொள்ளுங்கள்.” என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவுளமாகியுள்ளார்கள். “எவர் கற்றறிந்த அறிஞர்களை மதித்து நடக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர்.” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவுளமாகியுள்ளார்கள். எனவே கற்றறிந்த அறிஞர்களுக்கு எந்த அளவு கண்ணியமளிக்க வேண்டும் என்று சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
ஆசிரியருடைய கடமை
மக்களை நற்குடிமக்களாயும், சிறப்புறும் அறிஞர்களாயும், மேன்மை தரும் ஏந்தல்களாயும் உருவாக்க வேண்டியது ஆசிரியருடைய கடமையாகும். மனிதனை மனிதனாக ஆக்குவதற்கு கல்வியறிவு மிக மிக முக்கியம். இறைவன் முதலாவதாக இறக்கியருளிய திருமறையின் திருவசனங்களில் இதனைத்தான் வலியுறுத்தியுள்ளான். (நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் திருப்பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய திருக்குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! (96:1) அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (96:2) (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன் மகாபெரும் கொடையாளி! (96:3) அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.(96:4) அன்றி, (அதன் மூலம்) மனிதன் அறியாதவைகளை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கின்றான். (அல்குர்ஆன் 96:5.) மேலும் அறிவு வளர்ச்சியின் அவசியத்தை இறைவன், “இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும், அவைகளின் தன்மைகளையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்.” (அல்குர்ஆன் 2:31) என்னும் திருவசனத்தில் கூறுகின்றான். கல்வி கற்றுள்ள ஆசான்களை “கல்விமான்கள் நபிமார்களின் வாரிசுதார்கள்.” என்று நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துள்ளனர். அத்துடன், “வானங்களிலும் பூமியிலுமுள்ள எல்லாப் பொருள்களும், கல்விமான்களின் பிழைகளை எல்லாம் பொறுத்து மன்னிக்கும் படியாய் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கின்றன.” என்று கூறியுள்ளார்கள். கல்வியுடையோர்கள் நல்லோர்களாய் வாழ வேண்டும். அப்பொழுது தான் சமுதாயம் நேர்வழியில் நடக்கும். என் உம்மத்தில் இருவகையினர் உள்ளனர். அவர்கள் நல்லவராய்த் திகழ்ந்தால், மக்களும் நல்லவராய்த் திகழ்வர். அவர்கள் கெட்டவராய் இருந்தால், மக்களும் கெட்டவராய் இருப்பவர். அவர்கள் தாம் 1) ஆட்சியாளர்கள் 2) அறிஞர்கள்.” என்று பெருமானார் (ஸல்) நவின்றுள்ளனர். கல்வியைக் கற்றுத் தரும் ஆசிரியர்கள், கர்வமோ, அகம்பாவமோ இன்றி அடக்கமாய், தாழ்மையுடன் இறைவனை அணுகும் படி கல்வி கற்றுத்தரும் நிலையில் இருத்தல் வேண்டும். மேலும் “தாம் பெற்ற கல்வியறிவைக் கொண்டு ஒருவர் இயங்கிச் செயல்படாத வரை ஒரு மனிதன் உண்மையான கல்விமானாக மாட்டான்.” என்று பெருமானார் (ஸல்) நவின்றுள்ளனர். எனவே தங்கள் நடத்தைகளிலும், செயல்களிலும் குற்றங்குறைகள் இல்லாதபடி பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.
ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள்
“ஆசான் தற்பெருமை, நயவஞ்சகம், பொறாமை, பகைமை, வெறுப்பு முதலியவை தன்னிடம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் நேர்மையாக, நெறி தவறாது செயல்பட வேண்டும். மேலும் ஆசிரியர் புத்திக்கூர்மை யுடையவராகும், சொல்லும் செயலும் உறுதியுடன் ஒன்றுபட்டவராகவும், மாணவர்களிடம் அன்பாகவும், மென்மையாகவும், அதே சமயம் கடுமையாவும் இருத்தல் வேண்டும். அதற்காக மாணவர்களிடம் பலஹீனமாகவோ, பலாத்காரமாகவோ நடத்தல் கூடாது. பரந்த உள்ளத்துடன் யாதொரு விருப்பும் வெறுப்புமின்றி, அமைதியாக, பொறுமையாக பணியாற்ற வேண்டும். மேலும் இழி செயல்கள், வெறுக்கத் தக்க செயல்கள் இவைகளை விட்டும் விலக வேண்டும். மாணவர்களை தமது சொந்தப்பிள்ளைகள் போன்று கருதித் தூய்மையான அன்பை வெளிப்படுத்த வேண்டும். நடை, உடை பாவனைகளில் சான்றோர்களைப் பின்பற்றி நடக்க வேண்டும். தமது சேவைக்கு தமது ஊதியமல்லாத வேறு நன்றிக்கடனையோ, பரிசையோ, பாராட்டையோ எதிர் பார்க்கக்கூடாது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது தீய மாணவர்களை இதமாக அறவுரை, அறிவுரை கூறி நல்வழியில், நேர்வழியில் நடத்த முயல வேண்டும். தான் கூறும் உபதேசப்படியே தானும் நடந்து காட்ட வேண்டும்.” என்று இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்கள் ஆசிரியர் பற்றி கூறுகிறார்கள்.
மாணவர்கள் முதன் முதல் படிக்க வேண்டிய பாடம்
மனித சமுதாயத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பவர்கள் மாணவர்கள். நாகரிகத்தை உருவாக்குவதற்கும், அதனைச் செவ்வனே வளரச் செய்வதற்கும் மாணவர்களின் பங்கு இன்றியமையாததாகும். “மனிதன் அவசரக்காரன்” என்று கூறுவதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது மாணவப் பருவமே. மாணவர்கள் நன்முறையில் நெறிப்படுத்தப் பட்டால் தான் உலகில் அமைதியும் சாந்தியும் ஒருங்கே நிலவும். தங்களுக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்தால் தான் பண்பாடு தழைத்தோங்கும், நாடு முன்னேறும், உலகு செழிக்கும் எனவே நல்லோர்களுடன் தொடர்பு கொண்டு நன்மக்களாய்த் திகழ வேண்டுமேயொழிய, தீயோர்களுடன் சேர்ந்து தீயோராய் ஆகிவிடல் கூடாது. மாணவர்கள் எத்தனையோ படிப்பு, பாடங்களைப் படித்தாலும், முதன் முதல் படிக்க வேண்டிய பாடம் நல்லொழுக்கமும், நல்ல பண்பாடும் தான். கல்வி கற்பதற்கு முன்பே தன் இதயத்தை தீய எண்ணங்களை விட்டும் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். கல்வி கற்பவர்கள் உண்மை, நேர்மை, அடக்கம், பணிவு இவைகளை கைக்கொள்வதுடன் வஞ்சகம், பொறாமை, பெருமை, மோசடி, வீண் புகழ்ச்சி, நயவஞ்சகம் போன்ற தீய செயல்களை விட்டும் தூய்மையாக இருக்க வேண்டும். தன் ஆசானை கண்ணியப்படுத்துவது தான் ஒரு மாணவனின் முதல் கடமை. “ஆசிரியருக்கு கண்ணியமளியுங்கள், அவர் நபிக்கு அடுத்த அந்தஸ்தை உடையவர்” என்று அஹ்மது ஷெளக்கீ (ரஹ்) கூறுகிறார்கள்.
கல்வியின் நோக்கம் மற்றும் பலன்கள்
கல்வியின் நோக்கம், தாம் கற்ற கல்வியின் படி நடப்பது தான். தான் கற்றதுடன், கற்றவற்றை பிறருக்கு கற்றுக் கொடுத்து அவர்களும் நன்மையடையச் செய்வதில் இறைவனின் நல்லருளையும் திருப் பொருத்தத்தையும் பெற முடியும். அவ்வாறின்றி, “அறிஞர்களை வாக்குவாதத்தால் வென்று விட வேண்டுமென்றோ, அறிவிலிகளுடன் தர்க்கித்துப் புகழ்பெற வேண்டுமென்றோ தன் நன்மையைக் கொண்டு மக்கள் கவனத்தை தன்பால் ஈர்க்க வேண்டுமென்றோ, ஒருவன் கல்வி கற்றால், அல்லாஹ் அவனை நாசத்தில் ஆழ்த்தி விடுவான்.” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து விளங்கி கொள்ள முயற்சி செய்ய வேண்டும். படித்து அலுத்து விடும் போது விளையாட்டு போன்ற வேறு பராக்குகளில் ஈடுபட்டால் மீண்டும் படிப்பதற்கு அலுப்பு ஏற்படாது. அதற்காக முரட்டுத்தனமான விளையாட்டுகளிலோ ஈடுபடுதல் கூடாது. இதனால் படிப்புக்கு இடைஞ்சல் உண்டாகும். ஆசிரியர்களுக்கு கண்ணியம் தருவதோடு மற்ற அனைத்து மக்களுக்கும் கண்ணியமும், மரியாதையும் தரவேண்டும் அப்பொழுது தான் கல்வியின் பலன் கனிந்து வரும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...
இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை
இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்
இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.