மனித இனம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குர் ஆன் கூறும் அறிவுரையாகும். மனித இனத்தின் முதல் படி குடும்பமாகும். இறுதிப் படி முழு மனித சமுதாயமாகும். உலகில் அமைதி காண முதலில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிம்மதி நிலவ வேண்டும். குடும்பத்தில் நிம்மதி நிலவ அதன் ஒவ்வொரு உறுப்பினராகிய தந்தை - தனயன், கணவன் - மனைவி, உற்றார் - உறவினர் இவர்களிடையே நல்லுறவு உரம் பெற வேண்டும். இதைத் தான் இஸ்லாம் வலியுறுத்திக் காட்டியுள்ளது. ஒரு குடும்பத்தின் தலைவன் தந்தை; தலைவி தாய். பெற்ற இருவருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது பிள்ளைகளின் பொறுப்பாகும். விரிவு
(அல்லாஹ்)தான் நாடியவர்களுக்கு (கல்வி) ஞானத்தைக் கொடுக்கின்றான். இன்னும், எவர் (கல்வி) ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ, நிச்சயமாக அவர் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்…… (அல்குர் ஆன் 2:269) என்று இறைவன் தனது அருள் மறையில் அறிவிக்கின்றான். அல்லாஹ் நாடிய கல்வி ஞானத்தைப் போதிக்கக் கூடிய ஆசிரியர்களுக்கு, அறிஞர்களுக்கு மனித சமுதாயத்தின் மீது அதிகப் பொறுப்பு உள்ளது. எனவே தான் பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி இஸ்லாம் எடுத்தியம்புகிறது. “எனக்கு ஒரே ஒரு எழுத்தைக் கற்பித்த ஆசிரியருக்கு நான் அடிமையாகி விட்டேன். அவர் விரும்பினால் என்னை அவர் விற்று விடலாம் அல்லது விட்டும் விடலாம்.” என்று அலீ (ரழி) கூறுகின்றார்கள். “சிறு குழந்தைகளுக்குத் திருக்குர் ஆனைக் கற்றுக் கொடுப்பவர் இறுதி நாளில் அர்ஷுடைய நிழலிலிருப்பார்.” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருவுளமாகியுள்ளார். எனவே பெற்றோர்களுக்குப் பின்பு தனது ஆசானுக்கு கண்ணியமளிக்க வேண்டும். விரிவு
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும், மனைவியும் கருத்தொருமித்த உறவுடன் இருந்தால் தான் அந்த இல்லத்தில் நிம்மதியும் இன்பமும் நிலவும். இல்லையெனில் அந்த இல்லம் உலகிலேயே நரகின் படுகுழியாகிவிடும். வாழ்நாள் முழுவதும் அனைத்து சுகதுக்கங்களிலும் இவர்கள் சமபங்கெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். இவர்களின் பயிற்சியினால் தான் குழந்தைகளின் பண்பும், பழக்கமும், வாழ்வும் உருவாகின்றது. எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன்பு பெண்களுக்கு - குறிப்பாக மனைவிக்கு சமூகத்திலோ, வீட்டிலோ எந்தவித உரிமையும் கொடுக்கப்படவில்லை. வீட்டிலுள்ள தட்டுமுட்டு சாமான்களில் ஒன்றாகத்தான் அவளும் கருதப்பட்டாள். காம வேட்கையைத் தீர்க்கும் கருவியாகத் தான் அவளும் கருதப் பட்டாள். இன்னும் எத்தனையோ எண்ணிலடங்கா இழி நிலையும் இன்னலும் தன் மனைவிக்குக் கிடைத்தன. இந்நிலையைத் திருமறையும், நபி வழியும் மாற்றியமைத்தன. விரிவு
இஸ்லாத்தில் அனைவருமே சமமானவர் தாம். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரரே. குலம், கோத்திரம், நிறம், நாடு, மொழி ஆகியவற்றால் பாகுபாடு காண இயலாது. சிலர் முந்தி பிறந்ததனால் மூத்தோராக, பெரியவராக இருக்கலாம். சிலர் பிந்திப் பிறந்ததனால் சிறியோராக, இளையவராக இருக்கலாம். ஆனால் இறை அச்சத்திலும், நற்கருமங்களிலும் யார் சிறந்து விளங்குகின்றார்களோ அவர்கள் தாம் சிறந்த மனிதர்கள். இறையச்சமின்றி, கெட்ட இழிவான, வெறுக்கதக்க, மானக்கேடான செயல்களைப் புரிந்து வருபவர் தான் இறைவன் முன் தாழ்ந்தவர். எனவே இஸ்லாத்தில் நல்லவர், கெட்டவர் என்பது பற்றி தான் பாகுபாடு உண்டேயொழிய வேறு வேற்றுமைகள் இல்லை. விரிவு
உலகம் உழைப்பினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் இயங்குவதற்கு உழைப்பு இன்றியமையாதது. ஆனால் உழைக்கும் உழைப்பாளிக்கும், அவர்களை ஆளும் முதலாளிகளுக்கு மிடையே உள்ள உறவைப் பொறுத்து உழைப்பினால் நன்மையும் விளைகின்றது. தீமையும் முளைக்கின்றது. முதலாளி தொழிலாளிக் கிடையே முறையற்ற ஏற்றத் தாழ்வுகள் களையப்படுதல் வேண்டும். இருவருக்குமிடையே சகோதரத்துவம் நிலவுதல் வேண்டும். பிறப்பால் மனிதருக்கிடையே வேறுபாடு இல்லை. எனவே முதலாளிகள், தாம் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பில் தனது தொழிலாளிகளை தாழ்மைப் படுத்தக் கூடாது. விரிவு
இஸ்லாத்தின் இலட்சியமான உலக அமைதியைக் காண குடும்பத்திலிருந்து அமைதியை சமுதாயத்திற்குப் பரப்ப வேண்டும். பல குடும்பங்கள் கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு குடும்பத்திற்கும், சார்ந்திருக்கும் அடுத்த குடும்பத்திற்கு மிடையே உறவைப் பலப் படுத்த வேண்டும். அண்டை வீட்டினரிடையே உள்ள கடமைகள் தான் குடும்பங்களை இணைக்கும் பாலமாக, சங்கிலியாக உள்ளது. அண்டை வீட்டார் மூன்று வகைப்படுவர். முதலாவது உறவுக்காரராக உள்ள முஸ்லிம்; இரண்டாவது உறவு இல்லாத முஸ்லிம்; மூன்றாவதாக முஸ்லிம் அல்லாதார். இஸ்லாமியச் சட்டப்படி மூன்று வகையினருக்குமே மூன்று விதக் கடமைகளுள்ளன. அண்டை வீட்டார் முஸ்லிமாக இருந்தாலும், முஸ்லிமல்லாதவராக இருந்தாலும், சொந்தக்காரராக இருந்தாலும், பந்தமில்லாதவராக இருந்தாலும் அவர்களுடன் நேசம் கொண்டு ஒத்து வாழ வேண்டும் என்று தான் இஸ்லாம் இயம்புகிறது. விரிவு
பல குடும்பங்கள் இணைந்து ஒரு சமூகம். ஒரு குடும்பத்திற்கும் மற்றொரு குடும்பத்திற்கும் இணைப்புப் பாலமாக உறவினர் அமைகின்றனர். ஒரு குடும்பத்தில் மட்டும் அமைதியை நிலை நாட்டி விட்டு, உறவு முறையால் தொடர்பு கொண்ட வேறொரு குடும்பத்தில் அமைதி இல்லையெனில், இரண்டு குடும்பங்களிலும் அமைதி அழிந்து விடும். ஒரு குடும்பத்தில் செல்வச் செழிப்பும், உறவின் முறையால் நெருங்கிய மற்றொரு குடும்பத்தில் வறுமையின் வருத்தமும் இருந்தால் எங்ஙனம் இரு குடும்பத்திலுமுள்ள உறவினர்களிடையே உறவு எற்படும். விரிவு
ஒரு சமுதாயத்தின் அடித்தளம் ஏழை எளியோர் ஆவர். துன்பத்தில் புரண்டு அல்லல்படும் இவர்களது தேவையை நிறைவேற்றி வைக்கும் போது தான் ஒரு நாடு முன்னேறும். இஸ்லாமிய அரசின் வரி வசூல் பணத்திலிருந்து முதன் முதலாக உதவி வழங்குவது இந்த ஏழை எளியோர்களுக்கே. இந்த இனத்திற்கு வேண்டி பொருளை ஒதுங்கிய பின்பு தான் நாட்டின் இதர ஆக்கப்பணிகளுக்கு பணம் ஒதுக்க வேண்டும். பெரும்பாலான ஏழைமக்கள் பட்டினியும் பசியுமாக வாடும் போது, ஆட்சியாளர் நாட்டின் வருமானத்தை வேறு வகைகளுக்கு ஒதுக்கி முன்னேற்றம் காணலாம் என்றால் முன்னேற்றம் காண முடியாது. மனித வாழ்விற்கு இன்றியமையாதது உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தான். இவ்வசதிகளை முதலில் செய்தால் தான் நாட்டின் மற்ற ஆக்கப்பணிகளில் கவனம் செலுத்த முடியும். விரிவு
நாம் நமது சின்னஞ்சிறு குழந்தைகளின் மேல் அளவிலா அன்பு கொண்டு, அவர்களின் மகிழ்ச்சிக்காக எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கிக் கொள்கின்றோம். அவர்களுக்கு அறுசுவை உணவு ஊட்டுவதிலே, அழகு ஆடை அணிவிப்பதிலே, சொத்து செல்வம் சேர்ப்பதிலே, வீடு வாசல் கட்டுவதிலே எல்லையில்லாத ஆனந்தமடைகின்றோம். ஆனால் அதே சமயம் எத்தனையோ குழந்தைகள் தாயின், தந்தையின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாத நிலையிலே, தாய் தந்தைப் பாசம் என்னவென்றே அறியாத நிலையிலே, அரவணைக்க ஆளில்லாத அநாதரவான நிலையிலே, பிறக்கும் போதே பெற்றோர்களைத் தூக்கித் தின்று விட்ட தரித்திரம் என்ற பேச்சுக்கு நடுவிலே அநாதையாக ஆதரவற்ற நிலையிலிருக்கிறார்களே! இவர்களுடைய நிலை என்ன?. விரிவு
இஸ்லாத்தில் முஸ்லிம்கள் அனைவரும் சமமானவர்கள் சகோதரர்கள் ஆவர். குலம், கோத்திரம், நிறம், நாடு, மொழி இவற்றால் வேறுபாடு கிடையாது. ஆனால் இறைபக்தியும் நற்கருமங்களும் பெற்றவர்கள் தான் சிறந்தவர்கள்; இறையச்ச மின்றி, கெட்ட, இழிவான மானக்கேடான, வெறுக்கத்தக்க செயலுடையோர் இறைவனின் முன் இழிந்தவர் ஆவார். எனவே நல்லோர், தீயோர் என்ற இரண்டு இனத்தைத் தவிர இஸ்லாத்தில் வேறு இனம் இல்லை. எனவே தான் அல்லாஹுதஆலா தன் திருமறையில் “....... உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகவும் கண்ணியமிக்கவர்….” அல்குர் ஆன் (49:13) என்றும் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலைநிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்.” அல்குர் ஆன் (49:10) என்றும் கூறுகின்றான். விரிவு