இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 5)
முதலாளி - தொழிலாளி உறவு
முதலாளி - தொழிலாளி உறவின் முக்கியத்துவம்
உலகம் உழைப்பினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் இயங்குவதற்கு உழைப்பு இன்றியமையாதது. ஆனால் உழைக்கும் உழைப்பாளிக்கும், அவர்களை ஆளும் முதலாளிகளுக்கு மிடையே உள்ள உறவைப் பொறுத்து உழைப்பினால் நன்மையும் விளைகின்றது. தீமையும் முளைக்கின்றது. முதலாளி தொழிலாளிக் கிடையே முறையற்ற ஏற்றத் தாழ்வுகள் களையப்படுதல் வேண்டும். இருவருக்குமிடையே சகோதரத்துவம் நிலவுதல் வேண்டும். பிறப்பால் மனிதருக்கிடையே வேறுபாடு இல்லை. எனவே முதலாளிகள், தாம் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பில் தனது தொழிலாளிகளை தாழ்மைப் படுத்தக் கூடாது. முதலாளி - தொழிலாளி உறவு பாதித்தால், உணவு உற்பத்தித் தடை, பொருள் உற்பத்தித் தடை, சண்டை சச்சரவு, காலம் பொருள் வீண் விரயம், உயிர் சேதம் முதலியன ஏற்படுவதையும் தொழில் வளர்ச்சி தடை ஏற்படுவதையும் கண்கூடாகக் காணலாம்.
இஸ்லாம் வருவதற்கு முன் மற்றும் வந்த பின்
இஸ்லாத்திற்கு முன் தொழிலாளிகள் அடிமைகளைப் போல் நடத்தபட்டனர். அடிமைகளின் வாழ்வும் சாவும் எஜமானர்களின் விருப்பத்தைப் பொறுத்தே அமைந்து. எஜமானரின் அனுமதியின்றி அடிமைகள் உண்ணவோ, பருகவோ, ஓய்வு எடுக்கவோ, மணம் புரியவோ கூட முடியாது. இத்தகைய கொடுமைகளை இஸ்லாம் தகர்த்தெறிந்தது அடிமைகள் அனைவரும் இஸ்லாத்தில் விடுதலை செய்யப்பட்டதோடு உயரிய பதவிகளிலும் அமர்த்தப் பட்டனர். ஹல்ரத் பிலால் (ரழி) அடிமைத் தனத்திலிருந்து நீக்கப்பட்டு முதலாவது முஅத்தினாக (தொழுகைக்கு அழைப்பாளராக) நியமிக்கப்பட்டார்கள். அடிமையாயிருந்த ஜைத் (ரழி) மூத்தா அறப்போரின் போது பெரும் சஹாபிகளுக்கெல்லாம் சேனாபதியாக நியமிக்கப்பட்டார்கள். கஜ்னவி அரச வம்ச மூலபிதா சுபக்தஜினும், டில்லி பேரரசர் குத்புதீன் அல்தமிஷும், பால்பனும் அடிமைகளாயிருந்து அரசர்களானவர்கள்.
முதலாளியின் கடமைகள்
“தான் உண்ணுவதை உண்ணச் செய்தல்; உடுத்துவதை உடுத்தச் செய்தல்; வேலைப்பளுவால் துன்புறுத்தாதிருத்தல், தாங்க முடியாத பணியானால் தானும் துணைபுரிதல் முதலியன முதலாளியின் கடமைகளாகும்.” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளார். நபி பெருமானார் (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த ஹல்ரத் அனஸ் (ரழி) அவர்கள், “நாயகம் (ஸல்) அவர்கள் ஒருபோதும் என்னை ‘சீ’ என்றோ ஏன் செய்தீர்? ஏன் செய்யவில்லை? என்றோ கேட்டதில்லை” எனக் கூறுகின்றனர். தொழிலாளிகளை அடிப்பது கண்டிக்கப் படக்கூடியது. நிரபராதியான ஊழியர் மீது வீண்பழி சுமத்துவது பாவமாகும்.
உலகின் இன்றைய நிலை
இன்றைய உலகில் தோன்றும் ஒவ்வொரு கிளர்ச்சியிலும், புரட்சியிலும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திலும், முதலாளிகளின் கதவைடைப்பிலும், ஒவ்வொருவரும் தத்தம் உரிமைகளைப் பற்றி ஓலமிடுகிறார்களே தவிர, தமது கடமைகளைப் பற்றி பேசுபதுமில்லை; வாதிக்க முன் வருவதுமில்லை எனவே தான் உரிமையைப் போராடிப் பெறுவதற்கு முன் தன் கடமையை முழுமையாக நிறைவேற்றுவது சிறந்த வழி என்று இஸ்லாம் இயம்புகிறது.
தொழிலாளியின் கடமைகள்
தொழிலாளர்கள் தங்களுக்கு விதிக்கப் பட்ட வேலைகளைச் சரிவர நிறைவேற்றுவதுடன் முதலாளிகளின் உடைமைகளையும் பரி பூரணமாகப் பாதுகாக்க வேண்டும். முதலாளி ஏவிய வேலைகளுக்கு மாற்றம் செய்வதோ, தமது பராமரிப்பிலுள்ள முதலாளிகளின் உடைமைகளைப் பாழ் படுத்துவதோ கூடாது.
முதலாளி - தொழிலாளிகளின் பொறுப்பு
தொழிலாளர்களுக்கு சுமக்க முடியாத பளுவை முதலாளிகள் சுமத்தக் கூடாது. பளுவுக்கு மேல் பளுவையும் சுமத்தக் கூடாது. தங்களது பணியை அவர்கள் சரிவர நிறைவேற்றுவதற்குத் தகுந்த ஊதியமும், ஓய்வும் மற்ற வசதிகளும் செய்து தர வேண்டியது முதலாளியின் கடமையாகும். “வியர்வை உலர்வதற்கு முன் தொழிலாளிகளுக்குரிய கூலியை சரிவர வழங்கி விடுங்கள்.” என்று எம்பெருமானார் நபி (ஸல்) அவர்கள் ஏவியுள்ளார்கள். எனவே முதலாளிகளும், தொழிலாளிகளும் தத்தம் கடமைகளைச் சரிவர நிறைவேற்றினால் உரிமைகள் தானாக பாதுகாக்கப்படும். உறவும் சீர் படும். தொழில் வளர்ச்சி, உற்பத்தித்திறன், அன்பு, மரியாதை, லாபம், நேர்மை, உண்மை போன்றவைகள் தானாக வளர்ந்தோங்கும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.