இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 8)
ஏழை எளியவர் உறவு
சமுதாயத்தின் அடித்தளம்
ஒரு சமுதாயத்தின் அடித்தளம் ஏழை எளியோர் ஆவர். துன்பத்தில் புரண்டு அல்லல்படும் இவர்களது தேவையை நிறைவேற்றி வைக்கும் போது தான் ஒரு நாடு முன்னேறும். இஸ்லாமிய அரசின் வரி வசூல் பணத்திலிருந்து முதன் முதலாக உதவி வழங்குவது இந்த ஏழை எளியோர்களுக்கே. இந்த இனத்திற்கு வேண்டி பொருளை ஒதுங்கிய பின்பு தான் நாட்டின் இதர ஆக்கப்பணிகளுக்கு பணம் ஒதுக்க வேண்டும். பெரும்பாலான ஏழைமக்கள் பட்டினியும் பசியுமாக வாடும் போது, ஆட்சியாளர் நாட்டின் வருமானத்தை வேறு வகைகளுக்கு ஒதுக்கி முன்னேற்றம் காணலாம் என்றால் முன்னேற்றம் காண முடியாது. மனித வாழ்விற்கு இன்றியமையாதது உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் தான். இவ்வசதிகளை முதலில் செய்தால் தான் நாட்டின் மற்ற ஆக்கப்பணிகளில் கவனம் செலுத்த முடியும்.
செல்வத்தின் அடிப்படையில் மக்கள் வகை
செல்வத்தின் அடிப்படையில் பொதுவாக மக்களை மூன்று பிரிவினர்களாகப் பிரிக்கலாம். முதலாவது : பொருளாதார விஷயத்தில் எந்தத் தேவையும் இல்லாத செல்வந்தர்கள். இரண்டாவது : எப்போதும் தேவை இருந்து கொண்டே இருக்கும். மிதமான வருமானமுள்ள நடுத்தர மக்கள். மூன்றாவது : தேவையான வருமானம் இல்லாத மிஸ்கீன் என்னும் ஏழைகள். இந்த மிஸ்கீன்களிலும், பலர் யாதொரு பொருளுமில்லாது தினசரி உண்ணும் உணவிற்குக் கூட வழி இல்லாது துன்புறுவர்கள் உள்ளனர். இஸ்லாம் இவர்களை ஃபக்கீர் என்று குறிப்பிடுகிறது. இவர்களின் அவல நிலைக்குப் பரிகாரம் தேடுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
சீமான்களின் கடமையும் பொறுப்பும்
அளவான செல்வம் உள்ளவர்கள் தான் நிம்மதியாக வாழ்வு வாழ முடியும். அத்துடன் இறைவணக்கமும், மறுமையில் நிலையான நல்வாழ்வைப் பெற வேண்டும் என்ற ஆவலும் தான் மனிதனின் இலட்சியமாக இருத்தல் வேண்டும். அளவு கடந்த செல்வம் உடையவர்களும், வறுமையில் உழலுபவர்களும் பல காரணங்களினால் இந்த இலட்சியத்தைக் கைக்கொள்வதில்லை. செல்வத்தைத் தேடுவதில், பத்திரமாக பாதுகாப்பதில், தான் தோன்றித் தனமாக செலவிடுவதில் தனது மூச்சையும், பேச்சையும் செலவிட்டு காலத்தைக் கழிக்கும் செல்வந்தர்களும், உண்ண உணவோ, உடுக்க உடையோ, இருக்க இடமோ இல்லையே நாம் எதற்காக தான் வாழ வேண்டும் என்று நினைக்கும் வறியவர்களும் இந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதில்லை. ஆனால் அதே நேரத்தில் செல்வந்தர்களுடைய உள்ளத்தில், நாம் தான் ஏழைகளுக்கு உதவ வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளான ஜக்காத், ஹஜ்ஜு இவைகளை நிறைவேற்ற வேண்டும். கல்விகூடங்கள், அநாதை நிலையங்கள் அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் போதிய பண உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால், செல்வத்தை தேடுவதில், சேமிப்பதில், செலவிடுவதில் செலுத்தும் சிந்தனையை இவ்வழிகளில் ஈடுபடுத்துவர். எப்படி ஒரு குடும்பம் பெருகப் பெருக குடும்பத் தலைவரின் கடமையும், பொருப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ, அவ்வாறே, செல்வம் பெருகப் பெருக சீமான்களின் கடமையும் பொறுப்பும் அதிகரிக்கிறது. தனது கடமையிலிருந்து குடும்பத் தலைவன் தவறும் போது எவ்வளவு குழப்பங்களும், கொந்தளிப்பும், குமுறலும், கேவலமும், சோதனையும். வேதனையும் ஏற்படுமோ, அதனைக்காண ஒரு சீமான் தனது பொறுப்பிலிருந்து தவறும் போது ஏற்படும்.
வறுமையிலும் செழுமையிலும் மிதமான போக்கே சிறந்தது
பளுவுக்கு மேல் பளு ஏறினால் பயணத்தில் பாரம் தாங்காமல் தள்ளாடித் தள்ளாடி தளர் நடை போட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமல்லவா? அதுபோல் செல்வம் குவியக் குவிய மனிதனுடைய மறுமைப் பயணம் தள்ளாட ஆரம்பித்து விடுகின்றது. எனவே எம்பெருமானார் (ஸல்) அவர்கள், “எல்லாக் காரியங்களிலும் நடுத்தரப் போக்கே நனி சிறந்தது.” என்றும் “வறுமையிலும் செழுமையிலும் மிதமான நடுத்தரப் போக்கையே கைக்கொள்ள வேண்டும்.” என்றும் திருவுளமாகியுள்ளார்கள். எனவே மிதமிஞ்சிய செல்வந்தர்கள் ஏழை எளியோருக்கு சதகாத், கைராத், ஜக்காத் என்ற பெயரில் தான தருமங்கள், அன்பளிப்புகள் வழங்கும் போது, செல்வத்தின் மோகம் தங்களை விட்டு நீங்குவதற்கும், இறைவழியில் செலவு செய்வதற்கும், இறைவன் தங்களுக்களித்த பெரும் பேற்றிற்கு நன்றி செலுத்துவதற்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. ஏழைகளின் இன்னல்கள் துயரங்களை உணர்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
சுவர்க்கத்தின் திறவுகோல் எளியோரை நேசிப்பது
”நிச்சயமாக ஒவ்வொன்றிற்கும் ஒரு திறவு கோலிருக்கிறது. சுவர்க்கத்தின் திறவுகோல் எளியோரை நேசிப்பதாகும்.” என்றும், “யார் துன்பத்திலிருப்போருக்கு துணை புரிந்தோரோ அவரின் பாவங்களை அல்லாஹ் 73 தடவைகள் மன்னிக்கிறான்.” என்றும், “தருமங்களிலெல்லாம் சிறந்தது பசியுள்ள ஒரு வயிற்றை திருப்தி செய்வது தான்.” என்றும் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். எனவே எந்நாளும் இன்னல்களுக்கு உள்ளானவர்களுக்கும், உணவு, உடை, இருப்பிடம் முதலிய தேவையுள்ளவர்களுக்கும், நோயாளிகள் அல்லது இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வெள்ளம், புயல், பூமி அதிர்ச்சி, பஞ்சம், மற்றும் அக்கிரமங்களுக் குள்ளாகி வீட்டையும் நாட்டையும் விட்டுக் குடி பெயர்ந்தவர்களுக்கும், ஏழைத் தொழிலாளர்கள், பண்ணை ஆட்கள், கூலிவேலை செய்பவர்கள், கடனாளிகள், ஆதரவற்ற ஏழை விதவைகளுக்கும் பேருதவியும், நல்லாதரவும் நல்கிட வேண்டும்.
அல்லாஹ் நம்மை சும்மா விட்டுவிடுவானா?
சாதாரணமாக மிருகங்கள், பறவைகள் கூட அவ்வினத்தின் மீது ஒன்றுக்கொன்று அனுதாபம் காட்டுவதைக் காண்கிறோம். அவ்வாறிருக்க மேலான படைப்பினமாகிய மனிதன் அன்பு, இரக்கம் காட்டுவதில் மிருகங்களைக் காண கேவலமாகி விட்டானா? எதிர் பாராத துன்பங்களாலும், அவசியத் தேவைகளாலும் ஏழை எளியோர்கள் துன்புறுவதைக் கண்டும் அவர்கள் படும் துன்பத்தை நீக்குவதற்கு ஒரு பரிகாரமும் தேடாதிருப்பதை இறைவன் விரும்புவதுமில்லை; இவ்வாறிருக்க நாம் எது செய்தாலும் எதிர்க்க ஆளில்லை; ஏனென்று கேட்க முடியாது என்று ஏழை எளியோரை ஏளனமாக மதித்து அக்கிரமத்திற்கு, அநியாயத்திற்கு ஆளாக்குவது எவ்வளவு பெரும் கொடுமை. இன்றைக்கு நாம் ஏழை எளியோரை வாட்டி வதக்கி விட்டாலும், அநியாயத்திற்கு ஆளாக்கி விட்டாலும் அவர்களை படைத்த அல்லாஹ் நம்மை சும்மா விட்டுவிடுவானா?
“அக்கிரமத்திற்கு ஆளான ஒரு மனிதன் மனம் நொந்து இறைவனிடம் இறைஞ்சுவதைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்” என்றும், “நிச்சயமாக கொடுமை, அக்கிரமம் செய்வோன் தனக்குத்தானே தீங்கு செய்து கொள்கிறான்.” என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். எனவே உலகின்கண் சாந்தியும் சமாதானமும் தழைத்தோங்க, அமைதியும் நிம்மதியும் நிலவ, வாடி வதங்கும் ஏழைகளை ஆதரித்து, கொடுமைக்குள்ளான எளியோருக்கு நியாயம் வழங்குவதை ஒவ்வொரு தனவந்தரும், செல்வந்தரும் தனது கடமையான பொறுப்பாகக் கொள்ள வேண்டும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.