இஸ்லாத்தில் உறவுமுறை பேணுதல் (தொடர் 10)
முஸ்லிம் சகோதரர்களின் உறவு
இஸ்லாத்தில் முஸ்லிம்கள் அனைவரும் சமமானவர்கள் சகோதரர்கள் ஆவர். குலம், கோத்திரம், நிறம், நாடு, மொழி இவற்றால் வேறுபாடு கிடையாது. ஆனால் இறைபக்தியும் நற்கருமங்களும் பெற்றவர்கள் தான் சிறந்தவர்கள்; இறையச்ச மின்றி, கெட்ட, இழிவான மானக்கேடான, வெறுக்கத்தக்க செயலுடையோர் இறைவனின் முன் இழிந்தவர் ஆவார். எனவே நல்லோர், தீயோர் என்ற இரண்டு இனத்தைத் தவிர இஸ்லாத்தில் வேறு இனம் இல்லை. எனவே தான் அல்லாஹுதஆலா தன் திருமறையில் “....... உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகவும் கண்ணியமிக்கவர்….” அல்குர் ஆன் (49:13) என்றும் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலைநிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்.” அல்குர் ஆன் (49:10) என்றும் கூறுகின்றான்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன்
இதனையே எம்பெருமான் (ஸல்) அவர்களும், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவரை இவர் கொடுமைக்குள்ளாக்கவும் மாட்டார்; அவரை அவருடைய பகைவரிடம் ஒப்படைக்கவும் மாட்டார்.; யார் தனது (இஸ்லாமிய) சகோதரரின் தேவையை பூர்த்தி செய்கின்றாரோ, யார் ஒரு முஸ்லிமின் துன்பங்களை நீக்குகின்றாரோ, அவருக்கு மறுமை நாளில் ஏற்படக்கூடிய துன்பங்களை அல்லாஹ் நீக்கி விடுவான்.” என்று திருவுளமாகியுள்ளார்கள். மேலும், “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவார். அவர் மற்றவரை துன்புறுத்தவும் மாட்டார்; அவரை அவமானப் படுத்தவும் மாட்டார்; அவருடைய தூய்மையான இறைபக்தியை வெறுத்து நிந்திக்கவுமாட்டார்; ஏனெனில் தான் முஸ்லிம் சகோதரரை வெறுப்பது ஒரு நற்செயலல்ல. ஒரு முஸ்லிமைக் கொல்வதும், அவருடைய பொருளையும், கண்ணியத்தையும் பறிப்பதும் ஒரு முஸ்லிமுக்கு விலக்கப்பட்டதாகும், சட்டவிரோதமானதாகும்.” என்றும் கூறியுள்ளார்கள். மேலும், “நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவனம் புகமாட்டீர்கள், நீங்கள் ஒருவரையொருவர் நேசித்து அன்பு கொள்ளும் வரை உண்மை விசுவாசியாக மாட்டீர்கள்.” என்றும் கூறியுள்ளனர்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை வெறுத்திருப்பது விரும்பத்தக்கதல்ல
எனவே முஸ்லிம்கள் தங்களுக்குள் அன்பையும், நேசத்தையும் உருவாக்க வேண்டும். தனது மற்ற சகோதரருடைய கண்ணியத்தையோ உடமையையோ, உயிரையோ குலைப்பது மாபெரும் குற்றமாகும். முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்குள் பகைமை பாராட்டக் கூடாது என்றும் தடுக்கப்பட்டுள்ளனர். “மூன்று நாட்களுக்கும் மேல் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை வெறுத்திருப்பது விரும்பத்தக்கதல்ல என்றும், மூன்று நாட்களுக்கும் அதிகமாக ஒரு விசுவாசியை வெறுத்து அவருடன் பேசாதிருப்பது ஆகுமானதல்ல; சட்டப்படி விலக்கப்பட்டதாகும்.” என்றும், “யாராவது ஒருவர் தன் முஸ்லிம் சகோதரனுடன் ஒரு ஆண்டு பேசாது விலகி இருப்பாரேயானால், அவர் தன் சகோதரனுடைய இரத்தத்தை அநியாயமாக சிந்தியவர் போன்றவராவார்.” என்று “எவர் ஒரு முஸ்லிமைத் துன்புறுத்தி அவருக்கு மோசடி செய்கிறரோ அவர் சபிக்கப்பட்டவராவார்!” என்றும் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
ஓயாது குறைகளையே பேசி திரியக் கூடாது
ஒரு முஸ்லிம் சகோதரருடைய குறைகளை தேடித்திரியக் கூடாது. ஏதும் அவரிடம் குறையிருந்தால் அதனை இதமான முறையில் உபதேசித்து அக்குறையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதனை மற்றவரிடம் வெளிப்படுத்தாமல் மறைக்க வேண்டும். “கடும் வட்டிக்கெல்லம் கடும் வட்டி ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு அவமானம் ஏற்படும் வகையில் அநீதமாக ஒருவன் நெடுகிலும் ஓயாது பேசித்திரிவது தான்” என்றும் “உங்களது சகோதரன் துன்பங்களில் சிக்கிக் கஷ்டப்படும் போது, அதனைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம்; ஏனெனில் அல்லாஹ் அவருக்கு அருள் செய்து உங்களைச் சோதித்து விடவும் கூடும். என்றும் எச்சரித்துள்ளார்கள்.
சமுதாய அமைதியையும், ஒற்றுமையையும் குலைத்து விடும் செயல்கள்
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுப்பதால் தான் மனித சமுதாயம் சொல்லொணாத் துன்பத்திலும், துயரிலும், சிக்கலிலும் சிக்கி விடுகின்றது. இதைத் தடுப்பதற்கு இறைபக்தி, இறையச்சம் நிறைந்த சகோதரத்துவம் தான் அத்தியாவசியமானது. கொடுமை, பகைமை, காட்டிக் கொடுத்தல், அவமானப் படுத்துதல், துன்புறுத்துதல், கொலை செய்தல், அநியாயமாக மற்றவர் இரத்தம் சிந்த வைத்தல், பிறர் பொருளை அபகரித்தல், அவதூறுகள் கூறுதல், வெறுத்தல், மோசடி செய்தல், புறம், கோள் சொல்லுதல், பிறரின் இரகசியம் அறிய முனைதல், மானபங்கப் படுத்தல், பிறர் துன்பங்கண்டு மகிழ்தல் ஆகியவை சமுதாய அமைதியையும், ஒற்றுமையையும் குலைத்து விடும். எனவே இவைகளை இஸ்லாம் கண்டிப்பான முறையில் தடுக்கின்றது. “விசுவாசிகள் ஒர் உடலைப் போன்றவர்கள்” என்றும், “முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்டிடத்திலுள்ள கற்களைப் போன்றவர்கள்.” என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடத்தில் எதிர்பார்க்கும் கடமைகள் ஆறு என்று நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். “1. நீங்கள் ஒரு முஸ்லிமைச் சந்தித்தால் அவருக்கு சலாம் கூறுங்கள். 2. அவர் உங்களிடம் ஏதும் கேள்வி கேட்டால் அந்தக் கேள்விக்கு பதில் கூறுங்கள். 3.அவர் ஏதேனும் ஒரு விஷயத்தில் உங்களிடம் ஆலோசனை கேட்டால், அவருக்கு சிறந்த ஆலோசனை கூறுங்கள். 4. அவர் தும்மிய பின் “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறினால் அவருக்கு மறு மொழி கூறுங்கள். 5. அவர் நோய் வாய்ப்பட்டால் அவரைக் கண்டு விசாரியுங்கள். 6. அவர் இறந்து விட்டால் அவரின் ஜனாஸாவுடன் பின் தொடர்ந்து செல்லுங்கள்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துள்ளார்கள்.
இவ்வாறு கடமையாற்றும் போது ஒருவருக்கொருவர் சகோதர பாசம், நல்லுறவு, பெருந்தன்மை, அன்பு, தியாகம், நேர்மை, சமூக சேவை, ஆகியவை நிலவுவதுடன் சாந்தியும் சமாதானமும் வளரும். “நிச்சயமாக ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவராவார். அதில் ஒரு சிறு தூசைக் கண்டாலும், அதை அவர் நீக்கி விட வேண்டும்.” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர்.
ஒவ்வொரு நற்செயலும் ஒரு தர்மமாகும், தர்மத்துக்கு கூலி சுவனம்
முஸ்லிமான சகோதரருக்குச் செய்யக்கூடிய சிறு சிறு சேவையும் பெரும் பலனையும், பாக்கியத்தையும் அளிக்கின்றது. “மக்கள் செல்லும் வழியில் கிடக்கும் அருவருக்கத்தக்க பொருள்களை அப்புறப்படுத்தி அகற்றுவீராக” என்றும், “உன் முஸ்லிம் சகோதரர் முன் நீர் புன்னகை புரிவதும் ஒரு தர்மமாகும்; அவருக்கு நல்லதைக் கொண்டு ஏவுவதும் ஒரு தர்மமாகும்; அவரைத் தீமையை விட்டும் தடுப்பது ஒரு தர்மமாகும்; வழி அறியாதவர்களுக்கு சரியான பாதையைக் காட்டுவதும் தர்மமாகும்; ஒரு குருடருக்கு அவர் தமது கண் பார்வையைப் பெற உதவுவதும் தர்மமாகும்; நடைபாதையில் கிடக்கும் கற்கள், முட்கள், எலும்புகள் போன்றவைகளை அகற்றுவதும் தர்மமாகும்; தனது வாளியில் எடுத்த தண்ணீரை தனது சகோதரர் வாளியில் ஊற்றுவதும் தர்மமாகும்.” என்றும், “எந்த ஒரு முஸ்லிம், துணியில்லாது நிர்வாணத்துடன் உள்ள ஒருவருக்குத் துணி வழங்கி அவருடைய மானத்தை மூடி மறைத்தாரோ, அவருக்கு அல்லாஹ் விலைமதிப்பற்ற பசுமை நிற ஆடையை சுவனத்தில் அளிப்பான்; பசியுள்ள ஒரு முஸ்லிமுக்கு உணவளித்தவருக்கு அல்லாஹ் சுவனத்தில் கனிகளைக் கொடுப்பான்; தாகித்த ஒரு முஸ்லிமுக்கு தாகம் தீர தண்ணீர் அளித்தவருக்கு இறைவன் சுவனத்தில் நீரருவிகளிலிருந்து தண்ணீர் அளிப்பான்.” என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
சகோதர முஸ்லிமுக்கு நல்லதைச் செய்து, இறைவனின் அன்பை பெறுவோம்
“ஒருவர் மீது சந்தேகம் கொள்வது பற்றி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் அனுமானம் கொள்வது பேச்சுக்களில் எல்லாம் மிகவும் பொய்மையுடையதாகும். நீங்கள் ஒட்டுக் கேட்கவும் வேண்டாம். ஒருவருக் கொருவர் வீண் தர்க்கம் செய்து வம்புச் சண்டை போடவும் வேண்டாம்; ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளவும் வேண்டாம். ஒருவரை ஒருவர் இருட்டில் விட்டு விட்டு அகலவும் வேண்டாம்; மேலும் அல்லாஹ்வின் அடியார்களை சகோதரர்களாக கருதுங்கள்.” என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறு நாம் நமது சகோதர முஸ்லிமுக்கு நல்லதைச் செய்து இறைவனின் அன்புக்கு உரியவராக வேண்டும். உலக மக்களில் ஒரு பெரும் பகுதியினர் முஸ்லிம்களாக உள்ளனர். இந்த இனம் ஒற்றுமையாக, உலக சமாதானத்திற்கு உண்மையாகவே பாடு பட்டால், உலகம் முழுமையும் உண்மையான ஒருமைப்பாடு, சகோதரத்துவம் வெகு விரைவில் உறுதியாகக் கிட்டும் என்று கூறலாம்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.