Home


முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள்

கட்டுரையாளர் : அஹ்மத் (இஸ்லாமிய கலைக் களஞ்சியம் மறுமலர்ச்சி 1961)

“குலமொன்று, மறையொன்று, கொடியுமொன்று, கொள்கையினில் சிறப்பூட்டும் இறைவணக்கத் தலமொன்று..” என வாழ வேண்டிய முஸ்லிம்கள், தங்களின் தளபதியாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களையும், அனைத்திற்கும் அதிபதியாக அல்லாஹ்வையும், அவனது இறுதி வேதமாகக் குர்ஆனையும் ஒப்புக்கொண்டு, மறுமையின் இறுதித் தீர்ப்பு நாளை எதிர்பார்த்துச் செயல்பட வேண்டியவர்களாகவு மிருக்கின்றனர். இந்த அடிப்படை அம்சங்களில் மாறுபடுபவர்கள் முஸ்லிமாக இருக்க இயலாது.

விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே

அல்லாஹ் தன் “விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே” என்று குறிப்பிட்டு, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அனைவருமே ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாக வாழ வேண்டும் என்பதை வற்புறுத்தியுள்ளான். இதன் படி முஸ்லிம்களிடையே தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவுமே இல்லை. தம்மைச் சார்ந்தவர்கள் நலத்திற்காகவும், தன் சமுதாய நலத்திற்காகவும் வாழ்வது தான் அல்லாஹ்வின் இவிருப்பத்திற்காக வாழ்வதாகும் என்பதை ஒப்புக் கொண்டவர்கள் முஸ்லிம்கள்.

இப்படி அடிப்படை அம்சங்களிலேயே கருத் தொற்றுமைக்கும், செயல் ஒருமைப் பாட்டிற்கும் வழி வகை செய்துள்ள இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ள முஸ்லிம்களிடையே, சில செயல் பிரிவுகள் தோன்றியுள்ளன என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். பல பிளவுகள் ஏற்படக்கூடிய அளவுக்குச் சில பிரிவுகள் தோன்றி விட்டன என்றால் இதன் அடிப்படை காரணங்களை ஆராய்வது அவசியமாகும். வரலாற்று ஏடுகளைப் புரட்டினால், அரசியல் துறையிலும் ஆட்சித்துறையிலும் அவ்வப்போது தோன்றிய கருத்து வேறுபாடுகளே சகோதரர்களாக வாழ வேண்டிய முஸ்லிம்களை சில பிரிவுகளாகப் பிரித்து விட்டன என்பதைக் காணலாம்.

ஆட்சி நடத்தும் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது

“வானங்களிலும், பூமியிலும் ஆட்சி நடத்தும் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது” என்பதை குர்ஆன்(48:14) விளக்குகிறது. இந்த ஆட்சி நடத்தும் உரிமையில் தனிப்பட்டவர் தலையிட்டதன் விளைவு, அத்தகையவர்களைப் பெற்றெடுத்த சமுதாயத்திலேயே சில செயல் பிரிவினர்களைத் தோன்றச் செய்து விட்டது. இருப்பினும் இந்த செயல் பிரிவின் காரணமாக, அடிப்படை அம்சங்களிலும் பிளவுபட்டு விடாமலிருக்கின்றனர் என்பதில் நாம் சிறிது திருப்தியடையலாம்.

“உங்களில் எவர் உண்மையான விசுவாசத்தோடு (ஸாலிஹான) நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தவர்களை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், இவர்களையும் பூமிக்கு ஆட்சியாளர்களாக்குவோம்” என்று குர்ஆன் (24:55) மூலம் அல்லாஹ் உறுதியளிக்கின்றான். விசுவாசமோடு கூடிய நற்செயல்களுக்குப் பரிசாக உலகத்தில் அதிகாரம் செலுத்தும் உரிமை வழங்கப் படுகிறது. இது மட்டுமன்றி “கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் விசுவாசி(முஸ்லிம்)களுக்குமே உரித்தானது” என்றும் குர்ஆன் (63:8) உத்திரவாதமளிக்கிறது. இருந்தும் அதிகாரம் செலுத்தும் பதவிக்காகவும், பெருமை தரும் கண்ணியத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் சிலர் அவரவர்களே முயற்சித்து, எண்ணமும் செயலும் ஒன்று பட்டிருக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயத்தில் சில செயல் பிரிவுகளே தோன்றக் காரணமாகி விட்டனர் என்பதை யுணர்ந்தால் தற்காலத்தவரும், பிற்காலத்தவரும் அத் தவறான எண்ணங்களுக்கு அடிமையாகி முற்காலத்தவரின் பாதையில் புகாமலிருப்பார்களல்லவா! இந்த நம்பிக்கையிலேயே இப்பகுதியையும் இங்கு தொகுத்துத் தர விரும்பினோம். பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் தோன்றக் காரணமாக இருந்த சூழ்நிலைகளை முதலில் சிறிது ஆராய்வோம்.

நபி (ஸல்) அவர்களது அலுவல்களில் ஏக காலத்தில் இரு பொறுப்புகள்

நபிகள் திலகம் (ஸல்) அவர்களது அலுவல்களில் ஏக காலத்தில் இரு பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டன. ஒன்று இறைவனின் தூதர் என்ற பொறுப்பு. இரண்டாவது அதிகாரம் வகிக்கும் மக்களின் தலைவர் என்ற பொறுப்பு. இறைவனின் தூதராக அவர்கள் செயலாற்றும் போது வேறு எவருடைய ஆலோசனைகளுக்கும் தேவையின்றி அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றும் பொறுப்பே அவர்களுடையதாக இருந்தது. மக்களின் தலைவர் என்ற முறையில் செயலாற்றும் போது பிற்காலத்திய மக்களும் முன்மாதிரியாகப் பின் பற்றக் கூடியவையாகச் செயலாற்றும் பொறுப்பு அவர்களுடையதாக இருந்தது. பெருமானார் (ஸல்) அவர்களின் இத்தகைய செயல்களுக்கு அவர்களது தோழர்களும், தோழர்களின் தோழர்களும், பெருமானாரின் துணைவியர்களும் சாட்சியமளிக்கக் கூடியவர்களாக இருந்தனர். பெருமானார் (ஸல்) அவர்களின் அலுவல்கள், பேச்சுக்கள் (ஹதீது) ஒவ்வொன்றையும் தரமான சாட்சியங்களைக் கொண்டே பிற்காலத்திய மக்களுக்காகப் பாதுகாக்கப் பட்டுள்ளன என்றால் பெருமானர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை பகிரங்கமானதேயன்றி, அதில் எத்தகைய அந்தரங்கமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நபியே, உம்மிடம் அழகிய முன் மாதிரிகள் இருக்கின்றன

 ”நபியே, உம்மிடம் அழகிய முன் மாதிரிகள் இருக்கின்றன” என்று இறைவனே குர் ஆனில் குறிப்பிட்டுள்ளான் என்றால் அவர்களின் வாழ்க்கை உலகம் உள்ளளவும் முன் மாதிரியாக இருக்க பகிரங்கமானதாக இருக்க வேண்டியது அத்தியாவசியமல்லவா! இதன் படியே அவர்களின் வாழ்க்கை உள்ளும் புறமும் ஒன்றாகவே இருந்தது என்பதை உறுதி செய்யப் பட்டுள்ளது.

“அல்லாஹ்வின் (குர்ஆன்) வார்த்தைகளுக்கு மாற்றமாக ஏதேனும் என் வார்த்தைகளிருப்பின் அவற்றை நீக்கி விடுங்கள்” என்றும் “நான் சொல்லாததைச் செய்யாததை என் பெயரால் சிருஷ்டிப்பவர்களின் இருப்பிடம் நரகமாகும்.” என்றும் பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் படியும் நபிகள் திலகம் அவர்களின் சொல்லும் செயலும் உலக மக்களுக்கு முன் மாதிரியாகப் பாதுகாக்கப் பட்டுள்ளன என்பது தெளிவாகும்.

நான்கு கலீபாக்கள் (மக்களின் பிரதிநிதிகள்)

பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் குலபாயே ராஷிதீன்கள் என்று அழைக்கப்பெறும் நான்கு கலீபாக்கள் (மக்களின் பிரதிநிதிகள்) அதிகாரம் வகித்தனர். அரசியல் துறையிலும் வாழ்க்கைத் துறையிலும் முழுக்க முழுக்க குர்ஆனையும் பெருமானார் (ஸல்) அவர்களையுமே பின்பற்றினர். தங்களின் உயிரினும் மேலானதாக இஸ்லாத்தையும் இதன் சட்டதிட்டங்களையுமே மதித்தனர்.

சொந்த விருப்பு வெறுப்புகளற்ற இந்த கலீபாக்கள், தங்களின் குலம், கோத்திரம், குடும்பம் என்பதையும் பொருட்படுத்துவதில்லை. உற்றார் உறவினர் என்றோ, தம்மைப் பெற்ற தாய் தந்தையரென்றோ, தாம் பெற்ற புதல்வர்களென்றோ தனி தயவு தாட்சண்யம் காட்டாதவர்களாக நிர்வாகம் நடத்தினர். இறைவனின் ஆட்சியை உலகில் நிலைபெறச் செய்து, மக்கள் அனைவரும் அதை அடியொற்றி வாழ வைப்பதைக் கண்காணிப்பவர்களாகவே இவர்கள் வாழ்ந்தார்கள்.

ஏதேனும் புது வித பிரச்சனைகள் எழுந்தால் இந்தக் கலீபாக்கள் தங்கள் விருப்பத்திற்க்கு எதெச்சையாக முடிவு செய்வதில்லை. பெருமானார் (ஸல்) அவர்களின் பிற தோழர்களையும் கலந்து கொண்டே இறுதியாகத் தீர்மானிப்பார்கள். இவர்களின் நிர்வாகத்தில் முஸ்லிம்களிடையே எத்தகைய செயல் பிரிவினரும் தோன்றாமல் கண்காணிக்கப்பட்டது. இவர்களுக்கு பின்னரே ஆங்காங்கே செயல் பிரிவினர் தோன்றினர். இதற்கு முதன் முதலில் வித்தூன்றியவர் உமையாக்களைச் சேர்ந்த அமீர் முஆவியாவே.

குடியரசு - முடியரசு

பெருமானார் (ஸல்) அவர்களும், பிந்திய நான்கு கலீபாக்களும் இறைவனது ஆட்சியை அமுல் நடத்தும் பிரதிநிதிகளாகவே வாழ்ந்தார்கள். இதனால் அவர்களது ஆட்சி முறை குடியரசுக்கு இலக்கணமாகவே அமைந்திருந்தன இதை மாற்றித் தனிப்பட்டவர்களின் முடியரசாக மாற்றியவர் அமீர் முஆவியா.

அவர் தம் போர்திறனாலும் ராணுவ வலிமையாலும் அரசியல் சூழ்ச்சியாலும் ஆளும் உரிமை தம்மிலிருந்துத் தன் சந்ததியினரிடமே இருக்க வேண்டும் என்று திட்ட மிட்டுச் செயலாற்றினார். இதற்கு எதிராகச் செயல் படுபவர்களை எல்லாம் சித்ரவதை செய்யவும் படுகொலை நடத்தவும் அவர் தயங்குவதில்லை. ஈராக்கில் அவரது கவர்னராக இருந்த ஜியாத் என்பவர் அமீர் முஆவியாவின் முடியாட்சிக் கொள்கைக்கு முரண் பட்டவர்களைக் கொடுமைப் படுத்திக் கொலைகளும் செய்தார்.

கர்பலா யுத்தம் - இஸ்லாமிய குடியாட்சிக்கு முற்றுப் புள்ளி

அமீர் முஆவியா தன் அந்திய காலத்தில், தமக்குப் பிறகு தன் புதல்வர் எஜீதே ஆளும் உரிமையுடைய தன் வாரிசாவார் என்பதைப் பிரகடனப் படுத்தித் தனது ராணுவ பலத்தினால் பொதுமக்களைச் சம்மதிக்க வைத்தார். இந்த வாரிசு உரிமை கொண்டாடுவதை எதிர்க்கவே, எஜீதின் ஆட்சியை ஒப்புக் கொள்ளாமல் ஹஜ்ரத் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூபாவுக்குப் புறப்பட்டார்கள். இவர்களை எஜீதின் படைவீரர்கள் இடையிலே சுற்றி வளைத்து (கர்பலாவிலே) எஜீதின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினர்.

“எஜீதிடம் நேரில் பேசுவதற்கு என்னை அனுமதியுங்கள் இன்றேல் திரும்பிச் சென்றாலும் செல்வேனே தவிர, எஜீதின் ஆட்சியை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், அது இஸ்லாமிய குடியாட்சியல்ல, தனிப்பட்டவர்களின் முடியாட்சி யாகும்.”

என்று மறுத்து விட்டார்கள் ஹஜ்ரத் ஹுஸைன் (ரழி) அவர்கள். பதவி வெறி படைத்த எஜீதின் படையினர் ஹுஸைன் (ரழி) அவர்களை விடவில்லை. அவர்களது அருமைப் பாலகர்களுக்கு தண்ணீர் கொடுக்கவும் மறுத்து முற்றுகை யிட்டனர். இதன் விளைவு தான் கர்பலா யுத்தம். இஸ்லாமியக் குடியாட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்துத் தனிப் பட்டவர்களின் முடியாட்சியை நிலைநாட்டிய கொடிய நிகழ்ச்சி இது.

பெருமானார் (ஸல்) அவர்களின் பேரர்,  ஹஜ்ரத் அலி (ரழி) அவர்களின் மைந்தர் ஹுஸைனாரின் குருதியால் கர்பலா மண்ணைக் குழைத்தேடுத்து, முஆவியா திட்டமிட்ட முடியாட்சி அரண்மனையை எழுப்பினான் எஜீது. முஆவியா திட்டத்தின் இந்த வெற்றி முஸ்லிம்களிடையே சில செயல் பிரிவுகளைத் தோன்றச் செய்து விட்டது.

ஹிஜ்ரி 41 ஆம் ஆண்டில் தோன்றிய முஆவியாவின் இந்த உமையாக்கள் ஆட்சி, ஹிஜ்ரி 132 ஆம் ஆண்டு (கி.பி.661 - கி.பி 750) வரை தனிப்பட்டவர்களின் வாரிசு முறைப்படி அமைந்த முடியாட்சிகளைத் தோற்றுவித்தது.

முஸ்லிம்களிடையே தோன்றிய செயல் பிரிவுகள்

“கலீபா பதவியை, தம் சந்ததிக்குரிய வாரிசுப் பதவியாகச் செய்ய மாட்டேன்” என்று உத்திரவாதத்தை கடைசி கலீபா ஹஜ்ரத் அலீ(ரழி) அவர்களின் புதல்வர் இமாம் ஹஸன் (ரழி) அவர்களுக்குக் கூறித் தன்னைக் கலீபாவாக அங்கீகரிக்க கோரினார் முஆவியா, அவரது உத்திரவாதத்தை அரசியல் சூழ்ச்சியாகக் கருதாத இமாம் ஹஸன் (ரழி) அவர்கள், ஹிஜ்ரி 14 ஆம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் பிறை 20ல் முஆவியாவைக் கலீபாவாக ஏற்றுக் கொண்டு ராஜவிசுவாசப் பிரமாணம் செய்தார்கள். இந்த ஒப்பந்தத்துக்கு மாற்றமாகவே தன் புதல்வன் எஜீதைத் தனது அரச வாரிசாக ஏற்கச் செய்தார் முஆவியா என்பதை நினைவில் வைத்து, இவரின் பதவி மோகத்தால் எழுந்த அரசியல் கருத்து வேறுபாடுகளின் காரணத்தால் முஸ்லிம்களிடையே தோன்றிய செயல் பிரிவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

  1. காரிஜிய்யின்கள்
  2. ஷியாக்கள்
  3. ஜைதிய்யா
  4. இமாமிய்யா
  5. இஸ்மாயீலிய்யா
  6. அஸ்னா அஷரிய்யா
  7. கோஜாக்கள்
  8. போராக்கள்
  9. முத்தஸிலாக்கள்
  10. முர்ஜிகள்
  11. வஹ்ஹாபிகள்
  12. ஸனூஸிகள்
  13. காதியானிகள்
  14. அஹ்மதிய்யாக்கள்

தற்கால முஸ்லிம்களிடையேயும் பிற்கால முஸ்லிம்களிடையேயும் பதவி மோகமும் அரசியல் வேறுபாடுகளும் தோன்றாமலிருக்க இப் பகுதி உணர்ச்சியூட்ட வேண்டும் என்பதே நம் ஆசை.

இந்தியாவில் தோன்றியுள்ள பிரிவுகள்

  1. ”மேமன்”கள்
  2. “மாப்பிள்ளா”க்கள்
  3. மரைக்காயர்
  4. ராவுத்தர்
  5. லெப்பை
  6. தக்னி

        இன்ஷா அல்லாஹ் வாரம் ஒரு பிரிவின் வரலாற்று தொடர் நமது www.historybiography.com இணையதளத்தில் தொடந்து வெளிவரும்.

                                                                                தொடரும் …….

குறிப்பு :

உண்மையை உலகறிய செய்வோம். 

இந்தியாவில் உண்மையான வரலாறுகளை மாற்றி எழுதி வரும் இந்த காலத்தில் வாசகர்களாகிய தாங்கள், www.historybiography.com இல் வெளிவரும் உண்மையான வரலாறுகளை நமது தொப்புள் கொடி உறவுகளிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கொண்டு செல்லும் பணியை செய்ய, இத்துடன் உள்ள Share Button களை Click கிளிக் செய்து Share (பகிர) செய்யவும். நன்றி.

வரலாற்று தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Khan

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha

ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.