Home


முஃதஸிலாக்கள்

முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-6)

இஸ்லாமியத் தத்துவ விளக்க ஆசிரியர்களில் ஒருவரான இமாம் ஹசன்பஸரீ (ரஹ்) அவர்களது மாணவர்களில் வாஸில் பின் அதா என்பவரும் அம்ரூ பின் உபைத் என்பவரும் குறிப்பிடத் தக்கவர்கள்.

இஸ்லாத்தின் வெற்றிக்கு முன்னர், ஈராக்கின் உட்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த கிருஸ்தவர், யூதர், நெருப்பை வணங்கும் பார்ஸீயர், வைசானியர் முதலிய பிற மதத்தினரும், எம்மதத்தையும் ஏற்காத நாத்திகரும் இஸ்லாத்தின் வெற்றிக்குப் பிறகு முஸ்லிம்களிடையே மத சம்பந்தமான தங்களின் சந்தேகங்களை எழுப்பி விவாதம் செய்யலாயினர். இதற்கு விடையளிக்க அவர்களின் மதங்களை எல்லாம் ஆராய்ந்தறிந்து அதன் பின்னர் அவர்களின் அறிவுக்குப் படும் முறையில் இஸ்லாத்தைப் பற்றி விளக்கம் செய்ய வேண்டிய பொறுப்பு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கு ஏற்பட்டது.

யூத, கிருஸ்துவ மதங்களில் கிரேக்கத் தத்துவங்கள் நிறைந்திருந்தன. இதனால் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கிரேக்கத் தத்துவக் கலைகளைப் பயின்று அவர்களோடு விவாதம் புரியலாயினர். அந்த யூத, கிருஸ்தவ மத வாதிகள் மார்க்கத்தில் நம் அறிவுக்கு மறைவானவற்றுக்கும் தங்களின் பகுத்தறிவு ஏற்கும் முறையில் விடை வேண்டினர். இதனால் அவர்கள் பிரயோகிக்கும் அந்தப் பகுத்தறிவு ஆயுதத்தை முஸ்லிம்களும் பிரயோகிக்கும் திறமை பெற வேண்டியதாயிற்று. இப்பணியில் இமாம் ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்களின் மாணவரான வாஸில் பின் அதா ஈடுபட்டார். பிற மதத் தத்துவங்களோடு இஸ்லாமியத் தத்துவங்களையும் நடுநிலையாக இன்று ஆராய்ந்து விளக்கமளிக்கும் முறையில் ஈடுபட்ட வாஸில் பின் அதாவைப் பின்பற்றுபவர்கள் பெருகினர். இக்கூட்டத்தினரையே முஃதஸிலாக்கள் என்று அழைக்கப் பட்டது.

இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களில் தவ்ஹீத் என்னும் ஏக தெய்வக் கோட்பாடு எல்லா முஸ்லிம்களுக்கும் ஒரே விதமானது தான். இந்த நம்பிக்கையில் முஃதஸிலாக்கள் அதிகமான விளக்கம் தருபவர்களாக இருந்தனர். குர் ஆனில் அல்லாஹ்வின் தனிப்பட்ட பண்புகளாகக் குறிக்கப்படுபவைகள் அவனுக்கே உரியதென்றும் இவற்றை மற்றவர்கள் பெற முடியாதென்றும்  முஃதஸிலாக்கள் குறிப்பிடுகின்றனர்.

“தன்னிலே தானாய்த் தனித்தியங்கிடுவோன்” என்பதிலே அல்லாஹ்வின் ஆற்றல் பூரணத்துவமுடையதாகிறது. படைத்தல், காத்தல், அழித்தல், எண்ணுதல், காணுதல் போன்ற ஆற்றல்கள் தனித்தனி பண்புகளாகும். இவற்றில் எதையும் இறைவனென்று கொள்ள முடியாது.

“இறுதித் தீர்ப்பு வழங்குவதில் இறைவனே நிறைவானவன். அவன் எவருக்கும் அநீதி செய்வதில்லை” என்பதை எல்லா முஸ்லிம்களும் நம்புகின்றனர். ஆனால் முஃதஸிலாக்கள் இதற்குக் கூறும் விளக்கம் மனிதனின் பொறுப்பைக் தெளிவு படுத்துகிறது. படைப்புகளை எல்லாம் ஒரு முடிவுக்காகவே இறைவன் படைத்துள்ளான். முழுக்க முழுக்க மனிதர்களின் நன்மைக்காகவே படைத்துள்ளான். மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு இறைவன் சிறிதும் பொறுப்புடையவனல்ல, நன்மை, தீமைகளின் கிருஷ்டிகர்த்தா மனிதனே. சுய அறிவுடன் செயலாற்ற வேண்டிய மனிதன், அவனது ஒவ்வொரு செயலின் பலனையும் அனுபவிக்க வேண்டியவனாகிறான். இதன் படி அவரவரின் நன்மை தீமைகளுக்கேற்ப பாவ புண்ணியங்களைப் பெறுகின்றனர். இதில் எவருக்கும் பாரபட்சமாக இறைவனே முற்கூட்டியே நிர்ணயிக்கவில்லை என்பது முஃதஸிலாக்கள் விளக்கம். “இறைவனது நிர்ணயத்தின்படியே அவரவரும் செயல் படுகின்றனர்” என்ற கருத்துடைய முஸ்லிம்களில் முஃதஸிலாக்கள் வேறுபடுகின்றனர். “ஒவ்வொருவரின் செயலையும் இறைவன் முற்கூட்டியே நிர்ணயித்து விட்டான் என்றால் இறுதித் தீர்ப்பு நாளும், நரகமும் யாருக்காக?” என்பது முஃதஸிலாக்கள் கேள்வி.

இவ்வாறே ஈமான் விஷயத்திலும் இவர்கள் விளக்கம் மனிதனின் செயல்களுக்கு அதிக முக்கியத்துவமளிக்கிறது. ஏக இறைவனையும், அவனது இறுதித் தூதையும் இதயத்தில் ஏற்று நாவினால் ஒப்புக்கொண்டு விட்டால் மட்டும் முஸ்லிமாகி விட முடியாது; இதன் பின்னர் மார்க்கக் கட்டளையின் படியும் செயல்பட வேண்டும். இதில் மாறு படுபவர்கள் ஈமானில் பூரணமடைந்தவர்களல்ல. அன்றியும் கட்டாயக் கடமையாகிய ‘பர்லா’ன காரியங்களும் சரி, தனிப்பட்ட நன்மையெனக் குறிப்பிடப்படும் நபிலான காரியங்களும் சரி இறை நம்பிக்கையான ஈமானின் அம்சங்களே என்பது முஃதஸிலாக்கள் கொள்கை.

அறிவுத் துறையிலும், இலக்கியத் துறையிலும், கலாஞானத்திலும் மற்றெல்லா முஸ்லிம் பிரிவினர்களையும் விடச் சிறந்து விளங்கியவர்கள் முஃதஸிலாக்கள். பிற மதத்தினரின் கொள்கைகள் சரித்திரங்களில் தேர்ந்த பயிற்சி பெற்ற இவர்கள், குர் ஆன் விளக்க ஞானத்திலும் கூர்ந்த அறிவு பெற்றவர்களாக விளக்கினர். குர் ஆனையும் பகுத்தறிவையும் தவிர வேறு விஷயங்கள் இஸ்லாத்தின் அடிப்படையல்ல என்பது இவர்கள் முடிவு. தங்களின் கொள்கைகளுக்கு மாறுபடும் ஹதீதுகளை - அந்த ஹதீதுகள் முஹத்திதீன்களின் அங்கீகாரம் பெற்றவையாயினும் அவை சிருஷ்டிக்கப்பட்ட பொய்யான ஹதீதுகள் என்று தள்ளிவிடுகின்றனர்.

தேர்ந்த அறிவும் சிறந்த நாவன்மையும் படைத்த இந்த முஃதஸிலாக்கள், தங்களின் கொள்கைகளைத் தெளிவாயும் இனிமையாயும் விளக்கம் செய்வர். எதிரிகளால் எத்தகைய ஆத்திர மூட்டப்பட்டாலும் இவர்கள் பொறுமையை இழப்பதில்லை, எனவே இறுதி வெற்றி இவர்களுடையதாகவே இருந்தது. இவர்களின் சொற்பொழிவுகள் கேட்போரை ஈர்க்கும் இனிமையும் எளிமையுமுடையன வாதலால் பிற மதவாதிகள் இவர்களின் பேச்சைக் கேட்கவே நடுங்குவர்.

தெய்வ வழிபாட்டிலும் செயலொழுக்கத்திலும் சிரத்தையுடையவர்களாய் வாழ்ந்த முஃதஸிலாக்களின் வழியில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் சேர்ந்தனர். இதை நிறுவிய வாஸில் பின் அதா, தம் மாணவர்களை அல்ஜீரியா, ஆர்மீனியா, அபிஸீனியா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி ஆங்காங்கேயும் இவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களைத் திரட்டினார்.

உமையா கலீபாவான வலீதை இவர்கள் எதிர்த்தனர். அப்பாஸிய கலீபா மன்ஸூரின் அரச சபையில் முஃதஸிலாக்களின் மற்றெரு தலைவராகிய அம்ரு பின் உபைத் மத போதகராக நியமிக்கப்பட்டு, அவருக்கு அதிகமரியாதையும் வழங்கப்பட்டது. கலீபாவின் செயல்களில் குற்ற்ம் காணும்போது அவற்றை எடுத்துக் காட்டி அரச சபையிலேயே கண்டிப்பார் அம்ரு பின் உபைத். இதனால் மக்களிடையே முஃதஸிலாக்களின் செல்வாக்கு மேலும் மேலும் வளர்ந்தது.

ஆனால் ஹாரூன் ரஷீத் ஆட்சிக்கு வந்ததும், ”இஸ்லாத்தின் மூலக் கொள்கைகள் பற்றி முஸ்லிம்களுக்குள் எத்தகைய விவாதமும் செய்யக் கூடாது” என்று தடுத்து விட்டார். இதன் காரணமாக முஃதஸிலாக்களின் செயல் தடை பட்டது. பின்னர் மாமூன் ரஷீத் ஆட்சிக்கு வந்ததும் அவர் முஃதஸிலாக்களின் மார்க்க விளக்கங்களுக்குச் சுதந்திரமளித்தார். இத்துடனில்லாமல் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒருமைப் படுத்தும் நோக்கத்தில் பல்வேறு பிரிவைச் சேர்ந்த 40 பேர்களைக் கொண்ட மார்க்க அறிஞர்களின் சபை ஒன்றையும் நிறுவி, தன் முன்னிலையில் வாரந்தோறும் விவாதம் செய்யச் செய்தார் மாமூன் ரஷீத். இதன் மூலமாகக் கலீபாவையே தங்களின் கூட்டத்தில் சேரும் படிச் செய்துவிட்டனர் முஃதஸிலாக்கள்.

ஒருநாள் இந்த விவாத அரங்கத்தில் “குர் ஆன் படைக்கப்பட்டதா, படைக்கப்படாததா? படைக்கப்பட்டதென்றால் அதற்கொரு முடிவுமிருக்க வேண்டும்!” என்ற பிரச்சனை பெரிதாக எழுந்தது. இந்த விவாதத்தில் முஃதஸிலாக்களின் கொள்கையை ஆதரித்தார் மாமூன் ரஷீத். இதன் விளைவாகப் பெருமானாரின் வழி முறை (ஹதீது) விரிவுரையாளர்களான முஹத்திதீன்களும், பொதுமக்களும், கலீபா மாமூன் ரஷீதுக்கு விரோதமாகி விட்டார்கள். இந்தப் பிரச்னையின் விவாதமே முஃதஸிலாக்களின் சிதைவுக்கு மூலகாரணமாயிற்று. முஸ்லிம் பொதுமக்களையும், அப்பாஸியக் கிலாபத்தையும் கூட இந்தப் பிரச்னை ஆட்டிவைத்து விட்டது.

சர்வசாதாரண விஷயங்களிலும் பொது மக்களைப் போல் தலையிட்ட முஃதஸிலாக்கள் மார்க்கக் கொள்கை விவாதங்களிலும் “பேச்சுத்திறனால் மயங்கிவிடும் பொதுமக்களை”யும் ஈடுபடுத்த முயன்றனர். தங்களின் கொள்கைகளை மாமூன் ரஷீதின் ஆட்சிக் கொள்கையாகச் செய்து நிர்பந்தத்தின் மூலம் அதை நிலை நிறுத்த முயன்றனர். பகுத்தறிவை ஆயுதமாகக் கொண்டு தோற்றுவித்த இவர்கள் கூட்டம், பலாத்காரத்தில் நம்பிக்கைவைத்ததும், தம் அழிவுக்குத் தாமே வழிசெய்து கொண்டு விட்டனர். பலவந்தத்தினால் தங்களின் எதிரிகளை அடக்க முயன்றவர்கள், அதே முயற்சியில் அவர்களை அழித்து விட்டனர்.

இன்ஷா அல்லாஹ் தொடர் - 7 “முர்ஜிகள்” விரைவில்... தொடரும்…….

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 1  (முன்னுரை)

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 2  (காரிஜிய்யின்கள்)

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 3  (ஷியாக்கள்)

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 4  (ஜைதிய்யா - இமாமிய்யா)

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 5  (கோஜாக்கள் - போராக்கள்)

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 6  (முஃதஸிலாக்கள்)

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 7  (முர்ஜிகள்) விரைவில்

வரலாற்று தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.