Home


‘மாப்பிள்ளா’க்கள்

முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் -11

ஆதாரம்: மர்ஹும் கே.எம். சீதி சாஹிப் பி.ஏ., பி.எல். அவர்களின் ஆங்கில கட்டுரை தமிழாக்கம்

கேரள நாட்டில் வசிக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள் மாப்பிள்ளாக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். பூகோள ரீதியில் கேரள நாடு அமைந்திருக்கும் அமைப்பின் காரணமாக, உலகின் மத்தியபகுதி நாடுகள், ஐரோப்பா மற்றும் மேல்திசை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரக்கூடியவர்கள், முதன் முதலாக கேரளாவுடன் தான் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. இம்முறையில், எகிப்தியர்கள், ரோமர்கள், அரபுகள், போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகிய அனைவரும் ஆரம்ப காலத்தில் இந்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர். எனினும் அரபுகளின் தொடர்பு தான் பூர்வீகமானது. அரபுநாடு இந்தியாவுக்கு சமீபத்தில் இருந்தாலும், கடல் வாணிபத்தில் அரபுகள் சிறந்து விளங்கியதாலும், கேரளாவுக்கு அடிக்கடி வந்து போகக் கூடியவர்களாக இருந்தனர். அப்போதெல்லாம் அவர்கள் கேரள மக்களால் அதிகம் மதிக்கப்படவில்லை. அரபு நாட்டில் பெருமானார் (ஸல்) அவர்கள் நேர்வழி தீபச் சுடரைக் ஏற்றிய பிறகு தான் அரபு மக்களின் வாழ்வில் புதிய ஒளி பிறந்தது. அந்த ஒளியின் சாயல், அரபு வியாபாரிகளிடமிருந்து கேரள பூமியில் பட்டபோது, கேரளாவில் புதிய தொரு சரித்திரம் பிறக்கத் தொடங்கியது.

இஸ்லாத்தினை ஏற்ற சேரமான்

மலபாரை சீரும் சிறப்புடன் ஆட்சி செய்து கொண்டிருந்த கீர்த்தி வாய்ந்த சேரமான் பெருமாள் என்ற இந்து அரசர் இஸ்லாத்தின் பால் தன் மனதைப் பறிகொடுத்து, அச்சரித்திரத்துக்குப் புத்துயிர் கொடுத்தார். தனது மன மாற்றத்தை நாட்டில் பகிரங்கப்படுத்தினால், அரசு பரம்பரையிலும் மக்களுக்கிடையிலும் பெரிய கொந்தளிப்பும் மாறுதலும் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சிய அவர், தனது மந்திரிகளான நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டிலும் அறிவித்துவிட்டு, ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டார். அரபு நாட்டில் இஸ்லாத்தின் ஒப்புயவர்வற்ற சிறப்பைக் கண்ட மன்னர் தனது நாட்டிலும் இப்புனிதமான மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஆனால் முதுமையின் காரணமாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டதால் இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆகையால், தன்னுடைய ஆசையை நிறைவேற்றி வைக்க அரேபிய சகாக்களை கேரளாவிற்கு புறப்படும் படி வற்புறுத்தினார். தன் இராஜப் பிரதிநிதி, மந்திரி முதலானவர்களுக்கு தான் இஸ்லாத்தை தழுவிக் கொண்ட விபரங்களும், தன் ராஜ்ஜியத்தில் இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என்றும், பல மஸ்ஜித்களைக் கட்ட வேண்டும் என்றும், தபால்கள் எழுதி அவற்றை அரேபிய சகாக்களிடம் கொடுத்து பின் இறைவனடி சேர்ந்து விட்டார், அவற்றைப் பெற்று அரேபியர்கள் சிலர் கேரளத்திற்கு வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் மாலிக் பின் தினார், மாலிக் பின் ஹபீப், ஷாரப் பின் மாலிக் ஆவர். இச் சம்பவம் கி.பி. 8-ம் நூற்றாண்டில் நடைபெற்றது.

மஸ்ஜித் கட்டப்பட்டது

அரசரின் கடிதத்துடன் வந்த அரேபிய குழுவினரை கேரள மக்கள் நன்கு மதித்ததுடன், மஸ்ஜித்கள் கட்டவும் அரசாங்கத்தால் அனுமதிக்கப் பட்டன. கொச்சி, கிரங்கனூர், சாலியம், மதயி, காசர்கோடு முதலிய ஊர்களில் இன்றுள்ள பழமையான மஸ்ஜிதுகள் அக்காலத்தில் அரசாங்க அனுமதியின் பேரில் கட்டப்பட்டவையாகும். அரபிய குழுவினர் இஸ்லாத்தைப் பற்றி பிரசாரம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். அதன் பயனாக பலர் இஸ்லாத்தை தழுவினர்.

சக்தி வாய்ந்த சமுதாயமாக

இந்நாட்டில் குடியேறிய அரேபியர்களுக்கும், அரேபிய வியாபாரிகளுக்கும் கேரள நாட்டின் பெண்மணிகளுக்கும் திருமணம் மூலம் ஏற்பட்ட சந்ததியினர் தான் இன்று மாப்பிள்ளாக்கள் என அழைக்கப்படுபவர்கள். கேரளா முழுவதிலும் இவர்கள் பரவியிருந்த போதிலும், ஏறக்குறைய ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், முதலியவைகளில் ஒற்றுமை உடையவர்களாகத் திகழ்கின்றனர். கி.பி.8-வது நூற்றாண்டு முதல் 15-வது நூற்றாண்டு வரை கேரளாவின் வியாபாரம் முழுவதும் மாப்பிள்ளாக்களின் கைகளில் தானிருந்தது. போர்ச்சுகீசியர்கள் கேரள நாட்டை அடையும் பொழுது மாப்பிள்ளா சமுதாயம் ஒர் சக்தி வாய்ந்த சமுதாயமாக இருந்தது. கள்ளிக்கோட்டையில் அக்காலத்தில் ஹிந்து மன்னரின் ஆட்சியே நடந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளாக்களும், அரேபியர்களும் ஆட்சியின் பாதுகாவலர்களாகத் திகழ்ந்தனர். போர்த்துகீசியர் படையெடுப்பின் போது, முஸ்லிம்களே முன்னோடியாக எதிர்த்து நின்று விரட்டினர்.

அலி ராஜா

        கண்ணூரிலிருக்கும் அலி ராஜா வீடு மாப்பிள்ளாக்களில் முக்கியத்துவம் பெற்றது. கோலத்திரி என்ற இந்து அரசரின் சபையிலிருந்த ஹிந்து மந்திரி ஒருவர் இஸ்லாத்தின் பால் விருப்பம் கொண்டு முஸ்லிமானார். அவர் தம் பெயரை முஹம்மது அலி என சூட்டிக்கொண்டார். 11-வது நூற்றாண்டின் இறுதியில் இச்சம்பவம் நடைபெற்றது. இதற்கு பின்பு இவர் சந்ததியார்கள் அலி ராஜா என அழைக்கப் பட்டார்கள். மற்ற முறையில் பார்க்கும் பொழுது “ஆழி” என்ற மலையாள சொல்லிற்கு கடல் என்று பொருள் படுவதால், ஆழி ராஜாவாகவும் இவர் விளங்கினார்.  விரைவில் அலி ராஜாக்கள் படைபலம் வாய்ந்த  அரசர்களானார்கள். இவர்களின் கடல் வியாபாரம் முக்கியத்துவம் பெற்றது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோலத்திரி அரசர்களுக்கு கப்பம் செலுத்துவது நிறுத்தப்பட்டு, சுதந்திர அரசர்களானார்கள். இதற்கு முன்பே, லக்க தீவு, மினிக்காய் தீவு இவர்களின் ஆதிக்கத்திற்குக் கீழ் இருந்தன. இந்த அலி ராஜா குடும்பத்தினருக்கு அதிகார பூர்வமான பெயர் அரக்கல் குடும்பம் எனப்படும்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திர போராட்டம்

        ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி மலையாளத்தில் தன் ஆதிக்கத்தை சன்னம் சன்னமாக நிலை நிறுத்த முயற்சித்தது. சுதந்திர வீரர்களான மாப்பிள்ளாக்கள், தங்கள் தாய் நாட்டின் மீதிருந்த அளவற்ற அன்பினால் அந்நியனின் ஆதிக்கத்தை விரட்டியடிக்க பல முறைகள் போராடினார்கள். மாப்பிள்ளாக்கள் அதிகமாக வாழும் பகுதிகளான தெற்கு பிரதேசங்களான ஏர நாடு, வள்ளுவ நாடு முதலிய இடங்களில் இச்சுதந்திரப் போராட்டங்கள் பெருமளவில் நடைபெற்றன. 19-வது நூற்றாண்டில் ஆரம்பமான போராட்டங்கள் 20-வது நூற்றாண்டு வரை விடாமல் தொடர்ந்து நடைபெற்றது என்றால் மாப்பிள்ளாக்களின் சுதந்திர தாகத்தை எத்தகையது என அறிந்து கொள்ளலாம். இதனால் இவர்களின் சமுதாயம் எவ்வளவு பாதிக்கப் பட்டிருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

மாப்பிள்ளாக்களின் புரட்சி

        1921-ல் நடைபெற்ற மாப்பிள்ளாக்களின் புரட்சி சரித்திரத்தில் மறைக்கவோ - மறுக்கவோ முடியாதவையாகும். அப்பொழுது கலீபத்தின் கேந்திரமான துருக்கிக்கு பிரிட்டிஷாரால் பல தீங்குகள் இழைக்கப்பட்டதை கண்ட மாப்பிள்ளாக்கள் தங்களின் வருத்தத்தையும், அனுதாபத்தையும் தெரிவித்தார்கள். இதனால் பல மாப்பிள்ளா தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதை கண்டு கொதித் தெழுந்த மக்கள் மீது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் துப்பாக்கி குண்டுகளைப் பாய்ச்சியது. பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களையும் சுட்ட செய்தி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. (திரூரங்காடியில் இன்றளவும் அத்துப்பாக்கி குண்டுகள் பள்ளிவாசல் தூண்களில் பதிந்திருக்கின்றன.)

பிரிட்டிஷாரின் கொடுமைகள்

ஆறு மாதங்கள் தொடர்ந்து நடந்த இந்த போராட்டத்தில் அழிந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. ராணுவ ஆட்சியைப் பிரகடனப் படுத்தி பிரிட்டிஷார் முஸ்லிம்களை ஒரேயடியாக நசுக்கினர். அப்பொழுது நடைபெற்றவைகளில் ஒர் முக்கிய துக்ககரமான சம்பவத்தை எளிதில் மறந்துவிட முடியாது. ஒர் நூறு மாப்பிள்ளா கைதிகளை திரூரிலிருந்து கோயம்புத்தூர் கொண்டு போக மூடப்பட்ட கூட்ஸ் வண்டியில் அடைத்து அனுப்பினார்கள். சுவாசிக்க காற்று இல்லாத காரணத்தினால் கூட்ஸ் வண்டியை கோயம்புத்தூரில் திறந்து பார்த்த பொழுது 65 பேர்கள் பிணமாகக் கிடந்தார்கள்.

புரட்சிகளை ஒடுக்க புதிய சட்டம்

        மாப்பிள்ளாக்களின் புரட்சிகளை ஒடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் இரு சட்டங்களை கொண்டு வந்தது. முதலாவது மாப்பிள்ளா அவுட்ரேஞ் சட்டம். இச் சட்டத்தினால் புரட்சியில் கலந்து கொண்ட யாராவது ஒருவர் ஒரு கிராமத்தில் குடியிருந்தால் கிராம முழுவதற்கும் கூட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டன. இரண்டாவது மாப்பிள்ளா கத்திச் சட்டம். இதனால் 1855 பிப்ரவரி முதல் தேதி முதல் மாப்பிள்ளாக்கள் எவ்விதமான கத்தியும் வைத்திருப்பது சட்டப்படி தடை செய்யப் பட்டது. மீறுபவர்கள் கொடுமையாகத் தண்டிக்கப் பட்டார்கள்.

இவர்களின் கல்வி மற்றும் சேவைகள்

        மாப்பிள்ளாக்கள் அவர்களது மத வழிபாடுகளிலும், இஸ்லாமிய சட்டதிட்டங்கள் படி நடப்பதிலும் சிறந்தவர்கள் என்று புகழ் பெற்றவர்கள். முன்பு மஸ்ஜித் மூலமாகத் தான் மதக் கல்வி கற்பிக்கப்பட்டது. இப்பொழுது மதரசாக்களின் மூலமாகவும், பள்ளிகூடங்கள் மூலமாகவும் மத போதனை கற்பிக்கப் படுகிறது.

        மாப்பிள்ளாக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், ஷாபி இமாமை பின்பற்றக் கூடியவர்களாக இருக்கின்றனர். இஸ்லாத்தின் அரும் பெரும் கொள்கைகளை பரப்பும் பணியில் இவர்கள் முன்மாதிரியானவர்கள் என்பதற்கு கேரளாவில் நடைபெறும், பல மத ஸ்தாபனங்களே சான்றுகளாகும். திரூரங்காடி, பொன்னானி முதலான ஊர்களில் பூர்விகமான எத்தீம்கானக்களும் மதப் பணிபுரியும்  ஸ்தாபனங்களும் இன்றளவும் இருந்து பணியாற்றுகின்றன.

அரசியல் விழிப்புணர்ச்சி

        இந்தியாவில் கிலாபத் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தான் மாப்பிள்ளாக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. 1917-ல் கள்ளிக்கோட்டை, தலைச்சேரி இவ்விருவிடங்களில் முதன் முதலாக முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப் பட்டன.

        அன்றிலிருந்து மலபார் முழுவதும் முஸ்லிம் லீகின் கொடியின் கீழ் கட்டுப்பாடாகத் திரண்டு நின்று காயிதே ஆஜம் முஹம்மதலி ஜின்னா அவர்களைப் பின்பற்றியது. 1947-க்குப் பின்னும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்களை பின்பற்றி, கேரளா முழுவதும் கட்டுப்பாடாக முஸ்லிம் லீகைத் தோற்றுவித்த பெருமை மாப்பிள்ளாக்களுக்கே சாரும்.

வரலாற்று தொடர்கள் அனைத்தும்



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.