காதியானிகள்
முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-9)
இப்போது பாக்கிஸ்தானிலிருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் காதியான் என்ற நகரில் மிர்ஜா குலாம் அஹ்மத் என்பவர், நவீன முறையில் இஸ்லாமிய பிரச்சாரம் நடத்துவதற்காக ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தார். மேல் நாடுகளுக்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரகர்களை அனுப்பி வைத்தார், பல புத்தகங்களையும் எழுதினார். இவரைப் பின்பற்றுவோரை காதியானிகள் என்று அவரது ஊரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
கி.பி.1880ம் ஆண்டில் மிர்ஜா சாஹிப் ஒரு புத்தகம் எழுதி வைத்தார். நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிப்புச் செய்த ‘மஹ்தீ’ என்பவர் தாமே என்று அதில் குறித்திருந்தார். அவரைப் பின்பற்றியவர்கள் 1889-ம் ஆண்டு மார்ச் நான்காம் தேதியன்றே இதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தினர்.
மிர்ஜா சாஹிப், முஸ்லிம்களுக்கு ‘மஹ்தீ’ என்றும், கிருஸ்துவர்களுக்கு ‘மஸீஹ்’ என்றும், ஹிந்துக்களுக்கு ‘கிருஷ்ண அவதாரம்’ என்றும் அந்தப் பிரகடனத்தில் விளக்கம் செய்தனர். தம் கொள்கைகளையும், போதனைகளையும் விளக்கும் முறையில் மிர்ஜா சாஹிப் பல புத்தகங்களை எழுதினார்.
நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்படவில்லை என்றும், காஷ்மீரில் அடக்கமாகி இருப்பதாகவும் காதியானிகள் கூறலாயினர், “எவ்வித ஆயுதமுமின்றி பிற மதத்தினர்களிடம் சமாதானப் போதனை செய்வதே ஜிஹாத்” என்று இவர்கள் விளக்கினர். மெளலா முஹம்மத் ஹுஸைன் என்ற மார்க்க அறிஞர், “மிர்ஜா சாஹிபின் போதனைகள் குர் ஆனுக்கே புறம்பானது” என்று முதன் முதலில் பத்வா (மார்க்கத் தீர்ப்பு) வெளியிட்டார். இந்த காதியானிகள் தங்களின் இயக்கத்தை ’சத்ரே அஞ்சுமனே அஹ்மதிய்யா’ என்ற பெயரில் நிறுவினர்.
கி.பி 1900 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில் இந்த காதியானிகள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களில் தாங்கள் “நவீன முஸ்லிம் பிரிவினர்” என்று தங்களைப் பதிந்து கொண்டனர்.
1908 ஆம் ஆண்டில் மிர்ஜா குலாம் அஹ்மத் காலமானார். அவர் காலமாகு முன்பே, நூருத்தீன் என்பவரை தனக்குப் பின் முதல் கலீபாவாக நியமித்து விட்டார். அவர் 1914 ஆம் ஆண்டில் காலமாகி விட்ட பின் மீர்ஜா சாஹிபின், குமாரரான மிர்ஜா பஷீருத்தீன் மஹ்மூத் அஹமத் இரண்டாவது கலீபாவானார். இதன் பின்னர் காதியானிகளிலிருந்து மற்றொரு பிரிவினர் பிரிந்தனர்.
இந்தப் பிரிவினர் மிர்ஜா சாஹிபை நபியென்று கூறப்படுவதை மறுத்து, அவரை ‘முஜத்தித்’ (சமூக சீர்திருத்தக்காரர்) என்பதை மட்டுமே ஒப்புக் கொண்டனர். இவர்களை “லாகூர் கட்சியினர்” என்று அழைக்கப்பட்டது.
அஹ்மதிய்யாக்கள்
’லாகூர் கட்சி’யினர் ‘சத்ரே அஞ்சுமனே அஹ்மதிய்யா’ இயக்கத்திலிருந்து பிரிந்து “அஹ்மதிய்யா அஞ்சுமனே இஷா அத்துல் இஸ்லாம்” என்ற பெயருடன் ஒரு தனி இயக்கத்தையே லாகூரில் துவக்கினர். இதன் தலைவர்கள் மெளலானா முஹம்மதலி எம். ஏ. எல். எல். பி. அவர்களும், குவாஜா கமாலுத்தீன் அவர்களுமாவார். இவர்கள் திட்டமிட்டு தம் கொள்கைகளை வெளி நாடுகளிலும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். இதன் காரணமாக இவர்களைப் பின் பற்றுபவர்களும் பெருகினர்.
மெளலானா முஹம்மதலி சாஹிப் ஆங்கிலத்தில் குர் ஆனுக்குப் புதிய விரிவுரை எழுதி 1920 ம் ஆண்டில் வெளியிட்டார். பின்னர் அவரது விரிவுரை பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. இந்த அஹ்மதியாக்கள், லண்டனில் தங்களின் அஹ்மதிய்யா அஞ்சுமனின் கிளையைத் துவக்கி ஒரு பள்ளி வாசலையும் கட்டியுள்ளனர். அங்கிருந்து ஒரு ஆங்கில மாதப் பத்திரிக்கையும் வெளியிட்டனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.