ஜைதிய்யா
முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-4)
ஷியாக்களில் இமாம் ஜைத் அவர்களைப் பின் பற்றியொழுகுபவர்கள் ‘ஜைதிய்யா’ என்ற பிரிவினர். ஷியாக்களில் நடுநிலைக் கொள்கையை அனுஷ்டிப்பவர்கள் இப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சுன்னத் ஜமா அத்தாருடன் நெருக்கமான கொள்கையுடையவர்கள் இந்த ஜைதிய்யா பிரிவினரே.
நாயகத் தோழர்களான சஹாபாக்கள் அனைவரிலும் மேலானவர் ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களே என்பது இவர்களது நம்பிக்கை. இருப்பினும் ஹஜ்ரத் அபூபக்ர் (ரழி), ஹஜ்ரத் உமர் (ரழி) முதலியவர்களின் கிலாபத்தை நேர்மையானதென்றே இவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களின் சந்ததியினர்களில் அறிஞராகவோ, பக்தியாளராகவோ, வீரராகவோ, கொடையாளியாகவோ எந்தப் பண்பு மிகைத்தவராயினும் அவர் இமாம் உரிமை கோருவாரேயானால் அவரும் இமாமேயாகும் என்பது இவர்களது கொள்கை.
நாவளவில் இமாமை ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது, அவருக்காக அனைத்தையும் அர்ப்பணிக்கவும் தயாராக இருக்க வேண்டும். போரிடும் அவசியம் மேற்பட்டாலும் அவருக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்பது ஜைதிய்யாக்களின் கருத்து.
ஹிஜ்ரி 122ம் ஆண்டில் ஹிஷாம் பின் அப்துல் மலிக் என்ற கலீபாவுக்கு எதிராகக் கலகம் எழுந்த போது இந்த ஜைதிய்யாக்கள் முதல் இரண்டு கலீபாக்களையும் ஒப்புக் கொண்டதால், ஹஜ்ரத அலீ (ரழி) அவர்களுக்கே கலீபத்து உரிமையாகும் என்றும், இமாமத்தும் அவர்களுக்கே சொந்தமாகும் என்றும் கருத்துடையவர்கள் ஜைதிய்யாக்களிலிருந்து பிரிந்து சென்றனர். அந்த பிரிவினரே கலிபாக்களை நிராகரிக்கும் “ராப்ஜிகள்” என்று குறிப்பிடப் படுகிறது.
இந்த ஜைதிய்யாக்கள் இப்போதும் எமன் தேசத்தில் பெரும்பான்மையினராக இருக்கின்றனர். இவர்களுக்கும் சுன்னத்ஜமா அத்தினருக்கும் அதிக வேறுபாடில்லை.
இமாமிய்யா
ஷியாக்கலில் மற்றொரு பிரிவின் பெயர் இமாமிய்யா. மதப்பிரச்சினைகள் - போதனைகள் அனைத்திற்கும் முழு ஆதாரம் இமாமே என்பது இவர்களது அடிப்படைக் கொள்கை. இதன் பேரிலேயே இந்தப் பிரிவினரை இமாமிய்யா என்று குறிப்பிடப் படுகிறது.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் உறவு வழியிலும் தகுதி முறையிலும் ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களே கலீபாவாக உரிமையுடையவர்கள். இமாம் பதவியும் அலீ (ரழி) அவர்களின் சந்ததியினர்களுக்கே உரியதாகும். என்பது இவர்கள் நம்பிக்கை. இது அவர்களது மத நம்பிக்கையாகவே கொள்கின்றனர். இவர்களிலிருந்தும் இரு பிரிவினர் பிரிந்தார்கள்.
இஸ்மாயீலிய்யா, அஸ்னா அஷரிய்யா
ஷியாக்களின் பிரிவுகளில் இமாம்கள் நியமன விஷயத்தில் எழுந்த தகராறுகளின் விளைவாகப் பிரிந்தவர்களில், இஸ்மாயீலிய்யா ஒரு பிரிவினர், அஸ்னா அஷ்ரிய்யா என்பது மற்றொரு பிரிவினர்.
ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களின் சந்ததியில் ஆறாவது இமாமாகிய ஜஃபர் சாதிக்கின் புதல்வர்களில் மூஸாகாசிம் என்பவரே இமாமாகத் தகுதியுடையவர்கள் என்று கூறியவர்கள் அஸ்னாஅஷரிய்யா பிரிவினராயினர். அதே ஜஃபர்சாதிக் சந்ததியில் தோன்றிய இஸ்மாயீல் என்பவரே இமாமாக தகுதி உடையவர் என்று கூறியவர்கள் இஸ்மாயீலிய்யா பிரிவினராயினர். இமாமிடத்தில் போதிய வலிமை இல்லாதிருப்பின் அவர் மறைமுகமாகவே மதப்போதனை மட்டும் செய்யலாம் என்பது இஸ்மாயீலிகளின் நம்பிக்கையாகும். இதற்கேற்பவே இவர்களின் இமாம்கள் மறைந்திருந்தே பிரச்சாரம் செய்தனர்.
இவர்களில் இறுதியாக அப்துல்லா அல்மஹ்தி என்பவர் இமாமாக பகிரங்கமாகச் செயலாற்றும் வலிமையுடையவரானார். இதனால் ஹிஜ்ரி 295-ல் ஆப்பிரிக்காவில் “பாத்திமீ” என்ற கிலாபத்தை இவரே அமைத்தார். இவர்களின் ஜமாஅத்தை “பாத்திமீ” என்றே அழைக்கப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் அடுத்த தெடர் எண் : 5 கோஜாக்கள் - போராக்கள் தொடரும்…..
முந்தைய கட்டுரைகள் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
தொடர் எண் 4 : ஜைதிய்யா - இமாமிய்யா
தொடர் எண் 5 : கோஜாக்கள் - போராக்கள்
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.