“மேமன்”கள் - “Memon”
(எம்.எம். மேனன் எம்.எஸ்ஸி (அலீகர்) அவர்களின் ஆராய்ச்சியை ஆதாரமாகக் கொண்டு தமிழாக்கம்)
மேமன் சேட் என்று குறிப்பிடப்படும் இந்திய முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தார் இல்லாத, உலகத்தின் எந்த முக்கிய வியாபார நகரமும் இல்லை என்று கூறி விடலாம். இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, பர்மா, தென்னாப்பிரிக்கா, மலேஷியா, இந்தோனேஷியா, ஹாங்காங், சீனா, ஜப்பான் முதலிய கீழ்த்திசை நாடுகளிலும், சவூதிஅரேபியா, ஈரான், ஈராக், எகிப்து முதலான மத்திய கேந்திர நாடுகளிலும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா முதலான மேற்றிசை நாடுகளிலும் மற்றும் உலகத்தின் பல பகுதிகளிலும் அவர்கள் வியாபார சமுதாயமாகப் பரவி வாழ்ந்து வருகின்றனர்.
பாக்கிஸ்தானில் மேமன்கள்
பாக்கிஸ்தானிலே மேமன்களுக்குப் பெருமளவு மதிப்புண்டு. 1947-ல் தேசப்பிரிவினை ஏற்பட்டவுடன், வியாபாரத்துறையில் பலவீனமடைந்த அப்புதிய நாட்டில், தங்கள் சொத்து சுதந்திரங்களோடு குடியேறி, வியாபாரத்தை செழிப்புறச் செய்தவர்கள் என்ற மதிப்பை அவர்களுக்கு பாக்கிஸ்தான் அரசாங்கமே அளித்திருக்கிறது. அவர்கள் மேற்கு பாக்கிஸ்தானில், கராச்சி, ஹைதராபாத், சுக்கூர், நவாப்ஷா, மீர்பர்காஸ் முதலிய நகரங்களிலும், கிழக்கு பாகிஸ்தானில் டாக்கா, சிட்டகாங் முதலான நகரங்களிலும் குடியேறி வியாபாரத் துறையில் அந்நாட்டை முன்னேறச் செய்திருக்கிறார்கள்.
இந்தியாவில் மேமன்கள்
இந்தியாவில் மேமன்கள் அனேகமாக எல்லா நகரஙகளிலும் வாழ்ந்தாலும், அவர்கள் அதிகமாக வாழும் பூர்விகப் பகுதி, கட்ச், கத்தியாவார் (செளராஷ்ட்ரா) குஜராத், பம்பாய் மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் தான். அவர்களின் குடும்பங்களும், உற்றார், உறவினர்களும் இப் பகுதிகளில் தான் பாரம்பர்யமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பூர்வீக வரலாறு மிகவும் ருசிகரமானது.
புதுமையைச் செய்தவர்கள்
ஹிந்துமத புராண, இதிகாசங்களின் படி க்ஷத்திரிய வகுப்பினர் யுத்தப் பிரியர்களாகக் கூறப்படுகின்றனர். முற்கால இந்திய வரலாற்றை ஆராயும் போது க்ஷத்திரியர்களே, யுத்தங்களில் வல்லவர்களாக இருந்து வந்திருக்கின்றனர். வியாபாரத் துறையில் ‘வைஸ்யர்கள்’ தான் ஈடுபடுவதுண்டு. ஆனால் க்ஷத்திரியர்கள் வியாபாரிகளாகிய வைஸ்யர்களை தோற்கடித்தார்கள் என்று சரித்திரம் கூறத்தக்கப் புதுமையைச் செய்தவர்கள் இந்த மேமன்களேயாவார்கள்.
இஸ்லாத்தை தழுவியது
பூர்வீக ஹிந்துக்களில் மோட்டா, லொஹானா என்ற க்ஷத்திரியப் பிரிவைச் சேர்ந்தவர்களே, சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் மேமன் முஸ்லிம்களாக மாறினார்கள். இவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு மூல காரணமாக இருந்தவர் ஹஸ்ரத் ஸையத் யூசுபுத்தீன் ஆவார்கள். ஹஸ்ரத் ஷேக் அப்துல்காதர் முஹிய்யித்தீன் ஜைலானி (ரஹ்) அவர்களின் ஆறாவது வாரிசாவார்கள். பக்தாதில் வாழ்ந்த இவர்கள் ஒரு நாள் தமது கனவில் ஹஜ்ரத் ஷேக் அப்துல் காதர் முஹிய்யித்தீன் ஜைலானி (ரஹ்) அவர்களைக் கண்டதாகவும், சிந்துவுக்குச் சென்று அங்கு வாழும் மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்குமாறு கனவில் அவர்கள் உத்தரவிட்டதாகவும், அதனால் ஹஜ்ரத் யூசுபுத்தீன் அவர்கள் கி.பி. 1422-ம் ஆண்டில் சிந்து துறைமுகம் வந்தடைந்ததாகவும் சரித்திரம் கூறுகிறது.
அந்தக் காலத்தில் நாகர்தத்தா சிந்துவின் அரசாங்கத் தலைநகராக விளங்கியது. சம்மா பரம்பரையின் தலைவரான ஜாம்ராய்தன் என்பவர் அப்போது அப்பகுதியின் மன்னராக விளங்கி வந்தார். ஹஜ்ரத் யூசுபுத்தீன் அவர்கள் சிந்துவை வந்தடைந்த சில நாட்களில், அவர்களுடைய பரிசுத்த தன்மையும், தெய்வீக அருள் சக்தியும் மக்களை கவர ஆரம்பித்தன. அவர்கள் இதய சுத்தியோடு மக்களுக்குச் செய்த சேவை, அவர் மீது பெருமதிப்பையும், புகழையும் உண்டாக்கியது. ஒரு அயல் நாட்டு பக்கீரைப் பற்றி மக்களெல்லாம் புகழ்ந்து பேசுவதையும், கொண்டாடுவதையும் கண்ட மன்னர், அவரைப் பரீட்சிக்க விரும்பினார்; தர்பாருக்கு அழைத்தார். மன்னரும் பிரதானிகளும் ஹஜ்ரத் அவர்களை எப்படிப் பரீட்சித்தார்களோ, ஹஜ்ரத் எவ்விதம் அவற்றில் வெற்றி கண்டார்களோ என்பது தெரியவில்லை. ஹஜ்ரத் செய்து காட்டிய அற்புதங்களைப் பற்றி எவ்வித சரித்திர குறிப்புகளும் இல்லை. ஆனால் ஒரு அற்புதம் மட்டும் நிகழ்ந்து விட்டது. மன்னர் ஜாம்ராய்தன்னும் அவர் குடும்பத்தினரும் பகிரங்கமாக இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். மன்னர் மர்க்கப்கான் என்ற பெயர் பெற்று ஹஜ்ரத் அவர்களின் மெய்யான சிஷ்யராகி விட்டார். ஹஜ்ரத் யூசுபுத்தீன் அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைப் பற்றி பூரண விபரம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் விசேஷமாகக் குறிப்பிடப் படுகிறது.
துவாரகையில் (கத்தியாவாரில்) உள்ள ரஞ்சோடுரால் கோயில் அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய புண்ணிய தலமாகும். லட்சக்கணக்கான மக்கள் வருடந்தோறும் அங்கு செல்வதுண்டு. பிரயாண வசதிகள் குறைந்த அக்காலத்தில் மிகுந்த சிரமத்தோடு மக்கள் அங்கு போய் வருவதுண்டு. ஹஜ்ரத் சிந்துவுக்கு வந்த முதல் வருடத்தில், துவாரகை புனித தலத்தில் மிகப்பெரிய விழாவொன்று நடந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். துவாரகை செல்லும் பிரதான ரஸ்தாவின் ஒரு இடத்தில் முகாமிட்டிருந்த ஹஜ்ரத் அவர்கள், அவ்வழியாகச் சென்ற ஒரு பெருங்கூட்டத்தை அழைத்து “எங்கே செல்கின்றீர்கள்?” என கேட்டார்கள். அவர்கள், “ஆண்டவனை தரிசிக்கச் செல்கிறோம்” என்று கூறினார்கள்.
”நீங்கள் இவ்வளவு கஷ்டமான பிரயாணத்தை அதற்காகச் செய்ய வேண்டாம். மற்றும் உங்கள் நண்பர்களை யெல்லாம் அழைத்துக் கொண்டு வாருங்கள். நீங்கள் எதை இறைவனென நம்பிச் செல்கிறீர்களோ அதையும், உங்கள் புனித தலமான கோயிலையும், அங்கு நடக்கும் விழாக்களையும் இங்கேயே உங்களை காணச் செய்கிறேன்.” என்று கூறினார்கள்.
துணிவான இந்தச் சவாலைக் கேட்டு, பெரிய கூட்டம் திரண்டு விட்டது. குறிப்பாக, லொஹானா, பனியா, பாத்தியா, ராஜபுத்திரர்கள் ஆகிய வகுப்பினர் பெருங் கூட்டமாகத் திரண்டு விட்டார்கள். ஹஜ்ரத் எல்லோரையும் குளித்துமுழுகி சுத்தமாக வரச்சொல்லி, பெரிய மைதானமொன்றில் உட்காரச் சொன்னார்கள். அவ்விதம் உட்கார்ந்தவுடன் ஹஜ்ரத் அவர்கள் அம்மக்களின் முன் நின்று, “நான் இப்போது தொழப்போகிறேன்; நான் தொழுதுகொண்டே இருப்பில் உட்காருவேன். அந்த சமயத்தில், நீங்கள் எல்லாம் உங்கள் கண்களை மூடிக் கொண்டு, “அல்லாஹ்வே எங்கள் கண்களுக்கு, துவாரகை கோயிலையும், அதிலுள்ள விக்ரஹத்தையும் காணச் செய்” என்று நிய்யத் செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டுத் தொழத் தொடங்கினார்கள். கூடியிருந்த மக்களும் அவ்விதமே செய்தார்கள். சில விநாடிகளில் அற்புதம் நிகழ்ந்து விட்டது. எல்லா மக்களும் உற்சாகத்தோடு கூக்குரலிட்டார்கள். ஹஜ்ரத் ஜீக்கு ‘ஜே’ என கோஷமிட்டார்கள். எல்லோரும் கோயிலையும் விக்ர்ஹத்தையும் பிரத்தியட்சமாகக் கண்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார்கள். அந்த விநாடியிலேயே எல்லோரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இஸ்லாத்தின் புகழ் அன்றிலிருந்து மிக வேகமாகப் பரவத் தொடங்கியது.
லொஹானாக்கள்
ஹஜ்ரத் யூசுபுத்தீன் அவர்களின் ஒப்பற்ற சேவையால் இஸ்லாத்தைத் தழுவிய ஹிந்து மக்களில் பெருங்கூட்டத்ஹ்டார் க்ஷத்திரியர்களில் ஒரு பிரிவினரான லொஹானாக்கள்தான். இவர்களில் முதன் முதலாக இஸ்லாத்தைத் தழுவியவர் மாணிக்ஜீ என்பவராவார். இவர் லொஹானாக்களின் 84 மஹால்லாக்களின் ‘படேல்’ (தலைவர்) ஆவார். முதலாவதாக மாணிக்ஜீயும் அவரது மூன்று குமாரர்களில் இருவரும் ஹஜ்ரத் யூசுபுத்தீன் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றனர். மாணிக்ஜீக்கு அஹ்மத் என்றும் அவருடைய் இரு புத்திரர்களான சுந்தர்ஜீ, ஹன்ஸ்ராஜ் ஆகிய இருவருக்கும் முறையே, ஆதம், தாஜ் முஹம்மது என்றும் பெயரிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, லொஹானா சமூகமே தொடர்ந்து இஸ்லாத்தைத் தழுவத் தொடங்கியது. சுமார் பத்து வருட காலத்தில் லொஹானா வகுப்பில் மட்டும் 700 குடும்பங்கள், ஹ்ஜ்ரத் அவர்களின் முன்னால் இஸ்லாத்தைத் தழுவினர்.
’மேமன்’ பெயர் வர காரணம்
இஸ்லாத்தைத் தழுவியது மட்டுமல்லாமல், மார்க்கத்தில் மிகவும் பற்றும், உறுதியும் காட்டிய இம்மக்களை ஹிந்து மதத்திலிருந்து பிரித்துக் காண்பதற்காக ஹஜ்ரத் அவர்கள் “முஃமின்” (உண்மையான முஸ்லிம்கள்) என்று குறிப்பிட்டார்கள். இந்த முஃமின் என்ற வார்த்தையே நாளா வட்டத்தில் திரிந்து “மேமன்” என்று ஆகிவிட்டது. ஹஜ்ரத் யூசுபுத்தீன் அவர்கள் இந்த முஃமின்களுக்குத் தலைவராக, அஹ்மதின் மூத்த மகனார் ஆதமை நியமித்தார்கள். தலைவருடைய உத்தரவுக்கு சமுதாயமனைத்தும் கட்டுப் பாடாகக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றும், அவரே மார்க்கத்தின் வழிகாட்டியாக இருப்பாரென்றும் ஹஜ்ரத் அவர்கள் போதித்து விட்டு, ஈரானுக்குப் புறப்பட்டு விட்டார்கள். இதிலிருந்தே மேமன்களின் தலைவர் பரம்பரை ஆரம்பமாகியது. 1886-ம் ஆண்டில் பம்பாயில் இறைவனடி சேர்ந்த பீர் புஸர்க் அலி காதிரி அவர்கள் இந்தப் பரம்பரையில் வந்த 18-வது தலைவராவார்.
கஷ்டமும் சுகமும்
முஃமின்களான லொஹனாக்களுக்கு ஆரம்ப காலத்தில் நேர்ந்த கஷ்ட நஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஹிந்து மதத் தலைவர்கள், தங்கள் மதத்தை விட்டுப் பிரிந்தவர்களை சமூகப் பிரஷ்டம் செய்தார்கள். மதம் மாறியவர்களோடு உள்ள கல்யாணத் தொடர்புகளை ரத்து செய்தார்கள். இதற்கு முன்பு நடந்திருந்த கல்யாணங்களெல்லாம் விவாக ரத்துக்குள்ளாயின; வியாபார கொள்வினை கொடுப்பினைகளை நிறுத்தினார்கள். மற்றும் பலாத்காரமான சம்பவங்கள் பலவும் நேர்ந்தன.
இந்த கஷ்ட நஷ்டங்களினால் நாகர்தத்தாவில் (சிந்துவில்) இருந்து ஏராளமான முஃமின்கள் வெளியேறி பூஜ் (கட்ச்) பகுதியிலும், கத்தியாவார், குஜராத் பகுதியிலும் குடியேறினர். இப்பகுதியில் உள்ள மக்கள், முஃமின்களின் பரிசுத்தத்தையும் நல்லொழுக்கத்தையும் கண்டு மிகவும் அன்புடன் நேசித்தார்கள். “மேமன் சேத்” என்று மரியாதையுடன் அழைத்தார்கள். இங்கு குடியேறிய முஃமின்களின் பெரும்தன்மையின் காரணமாக அப்பகுதி மக்கள் பலர் இஸ்லாத்தைத் தழுவத் தொடங்கினார்கள்.
குணப்பண்புகள்
மேமன்களை மூன்று வித அடைமொழிகளோடு குறிப்பிடுவதுண்டு. “சிந்தி மேமன்” என்பவர்கள் சிந்துப் பிரதேசத்திலேயே தங்கிவிட்டவர்கள். “கச்சி மேமன்” எனக்குறிப்பிடப் படுவோர் கட்ச் பிரதேசத்தை தங்கள் இருப்பிடமாகச் செய்து கொண்டவர்கள். “ஹலாய் மேமன்” என்போர் கத்தியாவார் பிரதேசத்தில் ஹலார் பிராந்தியத்தின் பூர்வீகக்குடிகளாக இருந்தவர்கள்.
இறைவன் மீது பக்தியின் காரணமாகத் தொழுகையைத் தவறாமல் கடைபிடிப்பதில் மேமன்கள் புகழ் பெற்றவர்கள். எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் தொழுகையின் ‘வக்து’ வந்தால், உடனே தொழுகையை நிறைவேற்றச் சென்று விடுவார்கள். நோன்பு, ஜக்காத்து, ஹஜ் முதலிய கடமைகளை நிறைவேற்றுவதில் அவர்களுக்குத் தனிச் சிறப்புண்டு. ‘ஹஜ்’ காலங்களில் தங்களைச் சுற்றி வாழ்வோருக்குப் பெருமளவு தான தர்மங்கள் செய்வதும், தங்களில் வசதியற்றவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதும், தங்கள் கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். மக்கா செல்லும் போது, பக்தாதும் (ஈரான்) சென்று, தங்கள் குருநாதருக்கும் குருநாதரான ஹஜ்ரத் ஷேக் அப்துல் காதர் முஹிய்யத்தீன் ஜைலானி அவர்களின் அடக்கஸ்தலத்தில் ஜியாரத் செய்து விட்டு வருவதை அவர்கள் முக்கியமாகக் கடைபிடிப்பார்கள்.
மேமன்களின் தனிச் சிறப்பு
மேமன்களின் தனிச் சிறப்பு, அவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும், தங்களைச் சுற்றியுள்ள மக்களை அவர்கள் எந்த மதத்தினர், வகுப்பினராக இருந்தாலும் சரி - கவர்ச்சி செய்து விடுவார்காள். மேமன்களின் எல்லையற்ற தான தருமம், நற்காரியங்களுக்கு நன்கொடைகள், ஏழைகளுக்கு உதவிகள் ஆகியவை எல்லா சமூகத்தாரையும் அவர்கள் மீது அன்பு கொள்ளச் செய்து விடுகின்றன.
தர்மங்கள்
மதசம்பந்தமான காரியங்களுக்கும், கல்வி, சமூக சேவை, முதலானவைகளுக்கும் வாரி வாரி வழங்குவதில் மேமன்கள் நிகரற்றவர்கள். இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் அவர்கள் வியாபாரம் செய்யும் நகரங்களிலெல்லாம் அவர்கள் பல பள்ளிவாசல்களைக் கட்டியிருக்கிறார்கள். ‘மேமன் பள்ளி’ எனக் குறிப்பிடப்படும் பள்ளிவாசல்கள் அனைத்தும் அநேகமாக மேமன்களுடைய பணத்தைக் கொண்டே கட்டப்பட்டதாக இருப்பதைக் காணலாம். தனி மனிதர்கள் கூட தங்கள் சொத்திலிருந்து பெரும் பெரும் பள்ளிகளை நிர்மாணித்திருக்கிறார்கள். மேமன்களின் உதவியால் கட்டப்பட்டுள்ள அனாதை விடுதிகள், பெண்கள் பராமரிப்பு நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், தங்கும் விடுதிகள், ஹாஸ்டல்கள், ஆஸ்பத்திரிகள் முதலானவை ஒவ்வொரு நாட்டிலும் ஏராளமாக இருக்கின்றன. பொதுவாக செய்யும் இந்த தர்மங்கள் நீங்கலாக தங்கள் சமூகத்துக்கெனவும் விஷேச தர்மங்கள் செய்து கொள்வார்கள். ஆண்டவனுடைய காரியங்களுக்காகத் தாங்கள் தாராளமாக செய்வதினாலேயே, இறைவன் தங்கள் சமூகத்திற்கு ஏராளமான செல்வத்தை வாரிக் கொடுப்பதாக அவர்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது. (பம்பாயிலுள்ள பிரம்மாண்டமான ஜக்கரியா பள்ளிவாசல், ஹாஜி ஜக்கரியா சாஹிப் என்பவரால் கட்டப்பட்டதாகும். அலிகார் சர்வகலாசாலைக்குப் பெரும் பகுதி நிதி உதவியவர்கள் மேமன்களே.)
மொழி
சிந்தி மேமன்களைத் தவிர மற்ற மேமன்கள் அனைவரும் ‘கச்சி’ மொழியே பேசுவார்கள். இது சிந்தியிலிருந்து திரிந்த மொழியாகும். அதோடு மார்வாரி, குஜராத்தி ஆகிய மொழிகளையும் நன்கு பேசுவார்கள். மொழித்துறையில் மேமன்களுடைய அறிவு உலகத்திலேயே புதுமையானது. அவர்களுடைய நாக்குக்கு உலகத்திலுள்ள மொழிகள் எல்லாம் வெகு சுலபமாக வந்து விடும் போலும்! தங்கள் குல மொழியாக ‘கச்சி’யைப் பேசுவதோடன்னியில், சிந்தி, மார்வாரி, குஜராத்தி ஆகிய பிராந்திய மொழிகளிலும் ஞானமுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்களாக இருப்பதால், இளவயதிலேயே அரபி, உர்தூ, பார்ஸியைக் கட்டாயமாகக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள். அதோடு கல்வி மூலம் ஆங்கிலத்திலும் ஞானம் பெற்று விடுகிறார்கள். இதல்லாமல் அவர்கள் உலகத்தில் எந்தெந்த நாடு, பிரதேசங்களில் குடியேறுகிறார்களோ, அந்த மொழியையும் சுலபமாகக் கற்றுக் கொண்டு விடுகின்றார்கள்.
மதத்துறையில் சுன்னத்-வல்-ஜமா அத்தாராகிய மேமன்கள், குர் ஆன்ஷரீப், ஹதீஸ் ஷரீப், மற்றும் இஜ்மாஉ, கியாஸ் முதலான ஆதாரங்களுக்குப் பெரு மதிப்பளிப்பதோடு, பேணி ஒழுகுவதிலும், ஹனபி மத்ஹபை பின்பற்றுவதிலும், முஸ்லிம்களிலேயே ஒரு குறிப்பிடத் தக்க கூட்டமாவார்கள்.
குறிப்பு:
மேமன்களின் இன்றைய உலக அளவிலான விபரங்கள் மற்றும் சேவைகள் பற்றி அறிய https://wmoworld.org என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.