மரைக்காயர்
முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் -12
தமிழகத்தின் கிழக்குக் கடக்கரையோரத்தில் கடலூரில் இருந்து கன்னியாகுமரி வரை வாழக்கூடிய முஸ்லிம்களில் பெரும் பகுதியினர் மரைக்காயர் என்று அழைக்கப் படுகின்றனர். மரைக்காயர்கள் அநேகமாக, உள்நாடுகளை விட கடலோரப் பகுதியிலேயே அதிகம் வாழ்கின்றனர். உதாரணமாக கடலூர், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, காரைக்கால், நாகூர், நாகப்பட்டணம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டணம், கோட்டைப்பட்டணம், தொண்டி, கீழக்கரை, தூத்துக்குடி, காயல்பட்டணம் முதலிய முக்கிய நகரங்களிலும் அவற்றை யொட்டிய சிற்றூர், கிராமங்கள் ஆகியவற்றிலுமே அதிகம் வாழ்கிறார்கள். இவர்கள் சுன்னத்வல் ஜமா அத்தில் ஷாபி மத்ஹபைப் பின்பற்ற கூடியவர்கள். இவர்களின் தாய் மொழி தமிழேயாகும். அதனால் “மரைக்காயர்” என்ற பெயரும் தமிழின் திரிபாகவே இருந்து வருகிறது.
பெயர் வரக் காரணம்
தமிழில் ‘மரக்கலம்’ என்றால் கப்பலைக் குறிப்பதாகும். ‘ராயர்’ என்பது வீரர், அதிபர், ஆகியோரைக் குறிப்பிடுவதாகும். ஆதலால் கப்பல்களின் வீரர்களாகவும், அதிபர்களாகவும் விளங்கிய அவர்களை “மரக்கலராயர்” என்று அக்காலத்தில் குறிப்பிடப்பட்டு வந்தது. இது நாளடைவில் திரிந்து மரைக்காயராகி, இன்று ‘மரைக்கார்’ என்று வழக்கிலிருந்து வருகிறது.
கடல் கடந்து வணிகம்
மலையாளக் கரையில் ‘மாப்பிள்ளா’க்கள் எப்படி கடற்போர் வீரர்களாக அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கினார்களோ, அவ்விதம் மரைக்காயர்கள் கடல்மார்க்க வணிகத்தில் வேந்தர்களாக விளங்கி வந்ததன்னில், தமிழ் மன்னர்களின் கப்பற்படையின் அதிபர்களாகவும், வீரர்களாகவும் விளங்கி வந்திருக்கிறார்கள். பாய் மரக்கப்பலிலேயே பல்லாயிர மைல்கள் கடல் கடந்து வணிகம் செய்து சிறப்புப் பெற்றிருக்கிறார்கள். ஜாவா, சுமாத்ரா, போர்னியோ, மலாயா, இலங்கை, பர்மா முதலிய தூரக் கீழ் நாடுகளுக்கு முதன் முதல் கப்பல் செலுத்திப் போய் வந்தவர்கள் மரைக்காயர்களே யாவார்கள். இன்றளவும் கீழ் நாடுகளில் மரைக்காயர்கள் வியாபாரத் தொடர்புடையவர்களாகவே இருந்து வருகின்றனர்.
இஸ்லாமிய மார்க்கப் பற்று
வணிகத்தில் எவ்விதம் வல்லவர்களோ அவ்விதம் மார்க்கப் பற்றிலும் மரைக்காயர்கள் சிறந்து விளங்கக்கூடியவர்கள். விரிந்த வெளியுலக அறிவின் காரணமாகவும், அராபிய வியாபாரிகளின் தொடர்புகள் காரணமாகவும் இஸ்லாமிய மார்க்கத்தை சுயமாகவே மேற்கொண்ட மக்கள் இவர்கள். அரபி மொழியின் அவசியத்தை உணர்ந்து அதைக் கட்டாயமாக மக்களை கற்க செய்து, தாய் மொழியில் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள, ‘அரபுத்தமிழ்’ என்று அரபி எழுத்திலும் தமிழ் மொழியிலுமாக ஒரு பாஷையை உருவாக்கிய பெருமை இம்மக்களையே சார்ந்தது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இலக்கிய செழிப்புக்கும் இவர்கள் எண்ணற்ற சேவைகளைச் செய்துள்ளனர். தமிழ் மொழியில் இஸ்லாமிய நற்கருத்துக்களைப் பாடி, தமிழுலகுக்கு அளித்துள்ள சேவையில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.
மேலும் சில சிறப்புப் பெயர்கள்
மரைக்காயர்கள் தங்களுக்குள் சிலரை ‘மாலிம்’ என்றும், ‘நகுதா’ என்றும் குறிப்பிட்டுக் கொள்வார்கள். ‘மாலிம்’ என்பது ‘மாலுமி’யைக் குறிப்பதாகும். அதாவது, கப்பலை செலுத்துவோராக இருந்தவர்களின் சந்ததியினராகும். ‘நகுதா’ என்பது, கரையின் அதிகாரிகளாக இருந்தவர்களைக் குறிப்பிடுவதாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.