Home


முதுகுளத்தூர் மண்ணின் மைந்தன்

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) 

        மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான், (பிறப்பு கி.பி 1725- இறப்பு கிபி 1764) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாக பணிபுரிந்தார். அவர் பிரிட்டிஷ் இந்தியாவில் முதுகுளத்தூர் தாலுகா மேலபனையூர் என்ற கிராமத்தில் வீர சைவ வெள்ளாளர் குலத்தில் சாதரண விவசாய குடும்பத்தில் கி.பி 1725 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் இஸ்லாமியராக மாறி முஹம்மது யூசுப் கான் என்ற பெயரில் முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். மதுரையின் ஆட்சியாளராக பணி செய்த வேளை அவர் கான் சாகிப் என பிரபலமாக அறிய படுகிறார்.

ஆற்காட்டு படை தளபதியாகவும், பின்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாகவும் பணி செய்தார். பிரிட்டிஷ் மற்றும் ஆற்காட்டு கூட்டு படையின் பணியாளராக தென் இந்தியா முழுவதும் படையெடுத்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவர்களை அடக்கி வெற்றி மேல் வெற்றி ஈட்டிக்கொடுத்தார். அதற்கு கான் சாகிப் பட்டமளித்தனர். அந்த சமயத்தில் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவுறு நிலையில் கான் சாகிப்பை மதுரை ஆட்சியாளராக (கவர்னராக) நியமித்தனர். அவர் மக்களுக்கு நல்லவற்றை செய்து மக்கள் செல்வாக்கு பெறுகி வரும் வேளையில், கான் சாகிப்பை கண்டு பொறாமை கொண்ட ஆற்காட்டு நவாப் ஆங்கிலேயர்களை தன் வயப்படுத்தி கான் சாகிப்பை கட்டு படுத்த  முயன்று தோல்வி கண்டு, போர் பிரகடனம் செய்தும் தோல்வி கண்டனர்.

கான் சாகிபின் உதவியாளர்கள் முன்று பேரை இரகசியமாக துரோக சதி வேளைக்கு உட்படுத்தி அதிகாலையில் சுபுஹு தொழுகையில் ஈடுபட்டிருந்த சமயம் தலைபாகை கட்டும் டர்பன் துணிகள் கொண்டு கட்டி இரகசியமாக கைது செய்து இரண்டு முறை தூக்கிட்டும் மரணமடையாத கான் சாகிப்பை கண்டு நடுங்கிய ஆற்காட்டு நவாப் முன்றாவது முறை தூக்கிட்டு வெட்டி ஆறு கூறு போட்டு ஆறு ஊரில் புதைத்தனர்.

ஆரம்ப கால வாழ்வு

        வானம் பார்த்த பூமி என்றழைக்கப்படும் வறட்சியான இராமநாதபுர மாவட்டம், பின் தங்கிய முதுகுளத்தூர் பகுதியில் வேலைவாய்ப்போ, அடிப்படை கல்வி பெற வசதியில்லாததால், வேலையும் கல்வியும் இன்றி வளர் இளம் பருவத்தில் மிகுந்த மனக்குழப்பத்தில் பிறந்த கிராமத்தை விட்டு வேலை தேடி வெளியேறிய,  யூசுப் கான் பாண்டிச்சேரிக்கு சென்றார். அங்கு மல்யுத்தம் மற்றும் தற்காப்பு கலைகள் பயின்றார். அந்த தற்காப்பு கலை பயிற்சியாளரின் வழிகாட்டுதலால் இஸ்லாமியராக மாறி முஹம்மது யூசுப் கான் என்றழைக்கப் பட்டார். அதே சமயம் பாண்டிச்சேரியின் அன்றய  ஃபிரன்ச் கவர்னர் ஜெக்ஃஉயஸ் லா (Jacques Law) வின் வீட்டு பணியாளராக வேலை செய்தார். பின்னர் அதில் இருந்து விலகி அல்லது விலக்கப்பட்டாரா? என தெளிவாக இல்லை. அவர் தஞ்சாவூர் சென்று அங்கு ஆர்மியில் ஒரு சாதாரண சிப்பாயாக வேலையில் சேர்ந்தார்.

கல்வி மற்றும் உயர் பதவிகள்

        அந்த காலகட்டத்தில் ஒரு ஆங்கிலேய தளபதி ப்ருண்டன் (Brunton) என்பவர் யூசுப் கானுக்கு ஆங்கிலம் தெளிவாக தெரியும் அளவிற்கு கற்றுக் கொடுத்தார். ஃபிரன்ச் காரர்களிடம் முன்னர் பணி செய்த இடத்தில் ஃபிரன்ச் மொழியை கற்று இருந்தார். தஞ்சாவூரிலிருந்து நெல்லூரு(ஆந்திராவு)க்கு மாறுதல் ஆகினார். அங்கு உருது மொழியை கற்று தேர்ந்தார். இவ்வாறு அவர் தமிழ், ஆங்கிலம், ஃபிரன்ச், போர்ச்சுக்கீஸ், உருது ஆகியவற்றை சுய முயற்சியால் கற்றார். அங்கு தண்டல்காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி வகித்தார்.

போர்களில் பங்கு பெறுதல்

        கி.பி. 1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடிக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் கி.பி 1751 ல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும், சந்தா சாஹிப்பிற்கும் இடையே போட்டியும், போரும் மூண்டன. முகமது அலி வாலாஜா திருச்சிக்குத் தப்பித்துச் சென்று ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட் கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர்.

சந்தா சாஹிப்பிற்கு ஆதரவாக ஃபிரன்ச் படைத் தளபதி டியூப்ளே இருந்தார். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினார். ஆங்கிலேயர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தார். யுத்தத்தில் ஃபிரன்ச்க்கு ஆதரவளித்த சந்தா சாஹிப்பின் படை தோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரையிலும் நெல்லையிலும், வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தார் நவாபு. யுத்தக்களத்தில் முஹம்மது யூசுப் கானின் திறமைக் கண்டு வியந்த இராபர்ட் கிளைவ், தனது படையுடன் அவரை இணைத்தார். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தார்.

'கமாண்டோ கான் சாஹிப்'

        கி.பி.1752 இல் கான்ட் கிளைவின் ஆற்காடு முற்றுகையின் போது கிளைவ் பெற்ற மகத்தான வெற்றிக்கு யூசுப் கான் முக்கிய காரணமாக இருந்தார். ஃபிரன்சுக்காரர்களுடன் நடந்த பல்வேறு போர்களில் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு யூசுப் கான் பங்கு மகத்தானது. அதனால் ஆங்கிலத் தளபதி மேஜர் லாரன்ஸ் கான் சாஹிபை சிப்பாய் படைகளுக்குத் தளபதி ஆக்கி   கான் சாஹிப்  எனும் பட்டமும் முன்று அவுன்ஸ் எடை உள்ள  தங்கப் பதக்கம் பரிசும் வழங்கினார். அது முதல் அவர் 'கமாண்டோ கான் சாஹிப்' என அழைக்கப்பட்டார்.

        கி.பி.1755 ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களுடன் போரிட தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டார். கட்டாலங்குளத்தின் மன்னராக இருந்த வீர அழகுமுத்துக்கோனையும் அவரது ஆறு தளபதிகளையும் நடுக்காட்டூரில் முஹம்மது யூசுப்கான் பீரங்கியால் சுட்டுக்கொன்றார். இவரது வீரமரணம் பாளையக்காரர்களுக்குள் எழுச்சியை ஏற்படுத்தியது. மறவர் பாளையத்தை தாக்கி வெற்றி கொண்டார். பாளையக்காரர் பூலித்தேவனை தோற்கடித்தான். தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர்க்கும் ஆற்காடு நவாபுவுக்கும் உதவி புரிந்தார்.

கவர்னர் கான் சாஹிப்

        கி.பி.1757இல் மதுரை கவர்னர் ஆக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார். அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலிக்கும் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார்.

        இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டார். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை கி.பி.1758 இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி தோற்கடித்தார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.

        முஹம்மது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரையின் கவர்னராக பதவியேற்றதும், ஆங்கிலேய கூட்டணிக்கு எதிராக கலகம் செய்தவர்களை ஒடுக்க ஆரம்பித்தார். சமூக நல்லுறவை ஏற்படுத்தினார். கள்ளர் சமுதாயத்தார் இவரை பெரிதும் மதித்து இவர் படையில் அணியணியாய்ச் சேர்ந்தனர். கொலை குறைந்தது. வேளாண்மைக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் கான்சாஹிப் செய்தார். செளராஸ்டிரர்களுக்கு உதவி, ஆடை உற்பத்தியை ஊக்குவித்தார். இன்றைய பெரியாறு நீர்ப்பாசனத் திட்டத்திற்கு அடிக்கால் இட்டவர் கான் சாஹிபு தான். இவர் பல சாலைகளை நிருமாணித்தார், ஊர்களை உண்டு பண்ணினார். பல சத்திரம் சாவடிகளை ஏற்படுத்தினார். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மானியம் வழங்கினார்.

மதுரை சுல்தான் கான் சாஹிப்

        மதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினார். இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தார். நிதித்துறை, வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினார். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது.

        இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர். பொறாமை கொண்ட ஆற்காடு நவாபு முகமது அலி, முகமது யூசுப்கானின் செல்வாக்கைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முயற்சித்தான். கான் சாஹிப் வசூலிக்கும் வரித்தொகையைத் தன்னிடமே செலுத்த வேண்டுமெனவும் வணிகர்களும், மற்றவர்களும் தன் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் எனவும் நவாபு புதிய உத்தரவைப் பிறப்பித்தான். கம்பெனியரிடம் வாதாடி அனுமதியும் பெற்றான்.

கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தியது. நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத கான் சாஹிப் ஆற்காடு நவாபிற்கும் கம்பெனிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கி அவர்களது பகைமையினைப் பெற்றார். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஆட்சியாளர் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் அலியும், யூசுப்கான் தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், ஆர்காட்டு நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7 லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட யூசுப்கான் முன்வந்தார். ஆனாலும் நவாபும், கம்பெனியும் ஏற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை.

பாளையக்காரர் பலரையும் கான் சாஹிப் தம் நண்பர்களாக்கிக் கொண்டு ஆங்கிலேயரின் உத்தரவுகளை அலட்சியம் செய்யத் தொடங்கினார். ஆங்கிலேயர் இவரை அடக்க ஆயத்தம் செய்தனர். ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்து சுட்டு விட்டுத் தம் கொடியை ஏற்றினார். இவரது கொடியில் நடனமிடும் கொடியும் முரசும் பொறிக்கப் பட்டிருந்தன. இவரின் சுதந்திரப் பிரகடனத்தை மதுரை, திருநெல்வேலி மக்கள் விழாவாகக் கொண்டாடினார்கள்.

கான் சாஹிப் தன்னிச்சையாக மதுரை சுல்தானாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக் கொண்டு, படைதிரட்டினார் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தார். அவருக்கு ஆதரவாகப் பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.

        இவர் மாஸா என்னும் போர்ச்சுக்கீஸிய மங்கையை மணந்திருந்தார். அவர்களுக்கு கி.பி1762 இருதியில் ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்குப் பாளையக்காரர் அன்பளிப்புகள் அனுப்பினர்.

        கான் சாஹிபை அடக்க ஆங்கிலேயர்கள் ஆயத்தமாயினர். ஐரோப்பியர்களோ, சுதேச மன்னர்களோ கான் சாஹிபுக்கு உதவக்கூடாது என்றனர். ஆங்கிலேயர்களின் அச்சுறுத்தலுக்குச் சிலர் பணிந்தனர். அவர்களுள் ஒருவர் சேதுபதி மன்னர்.

        இங்கிலாந்திலிருந்து வந்து இறங்கிய பீரங்கிகளுடன் உள்நாட்டில் கிடைத்த துரோகக் கும்பலுடனும் சேர்ந்து கொண்டு மதுரையை கி.பி.1763 செப்டம்பர் மாதம் முற்றுகையிட்டனர் ஆங்கிலேயர். ஆங்கிலப் படையணியின் தளபதியாக காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர். தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கம்பெனியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கம்பெனியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது. மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர்.

        முதலில் நத்தம் கள்ளர் நாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கான் சாஹிபின் மதுரைக் கோட்டைமீது கம்பெனிப் படைகளும் நவாபின் படைகளும் முற்றுகையிட்டன. கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் சாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படையினருக்கும் மக்களுக்கும் சோர்வும் குழப்பமும் ஏற்பட்டன.

        கான் சாஹிப் தம் கோட்டைச் சுவர் மீது மஞ்சள் கொடியை ஏற்றினார். அதன் பொருள் இறக்கும் வரை போரிடப் போகிறோம் என்பதாகும். இவரை நேரிடையாகத் தாக்கி வெல்ல முடியாது எனக் கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சியில் இறங்கினர்.

ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி

        ஆர்காட் நவாப், மேஜர் சார்லஸ் காம்ப்பெலுடன் சிவகங்கை ஜெனரல் தண்டவராய பிள்ளை, கலந்து பேசி யூசுப் கானின் நெருங்கிய கூட்டாளிகளில் மூன்று பேருக்கு லஞ்சம் கொடுக்க சதித்திட்டம் தீட்டினார்: திவான் சீனிவாச ராவ், பிரெஞ்சு கூலிப்படை கேப்டன் மார்ச்சண்ட் மற்றும் கானின் மருத்துவர் பாபா சாஹிப் ஆகியோர், 1764 அக் 13இல் அதிகாலை யூசுப் கான் தனது வீட்டில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அவரை மூவரும் சேர்ந்து அழுத்தி பிடித்து அவரை அவரது சொந்த தலைப்பாகையால் பிணைத்து கட்டினர். விபரம் அறிந்து யூசுப் கானின் மனைவி வீட்டுக் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார், ஆனால் நன்கு ஆயுதம் ஏந்திய கூலிப்படையினரிடம் வெற்றி பெற முடியவில்லை. இருளின் மறைவின் கீழ், மார்சண்ட் யூசுப் கானை காம்ப்பெல்லின் முன் கொண்டு வந்து ஒப்படைத்தான். யூசுப் கானின் பெரும்பாலான படைகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

        மாஸா தன் குழந்தையுடன் தப்பி திருவனந்தபுரம் ஓடினாள். 15-10-1764ல் மதுரையில் உள்ள கம்பெனியாரின் ராணுவ முகாம் முன்பு ஆற்காட்டு நவாபால் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார். இரண்டு முறை தூக்கிலிட்டு உயிர் பிரியாமல் முன்றாவது முறை தூக்கிலிட்டனர்.  அவரைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவரது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், திருவிதாங்கூருக்கும் கால்களை தஞ்சைக்கும், பெரியகுளத்திற்கும் அனுப்பி அங்காங்கே புதைத்தனர். தலை இல்லாத சுறுசுறுப்பான உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர்.

பெயர் சொல்லும் நினைவிடங்கள்

  • முஹம்மது யூசுப்கான் மக்களால் கான்சாகிப் என்று அழைக்கப்பட்டார். மதுரையில் சில தெருக்கள் அவரது பெயரால் அமைந்தன.
  • மதுரை தெற்கு மாசி வீதிக்கும், தெற்கு வெளி வீதிக்கும் இடையில் உள்ள கான்சா மேட்டுத்தெரு இவரின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கிறது.
  • மதுரை கீழவெளி வீதிக்கும் இராமநாதபுரம் சாலைக்கும் மூன்று சாலைக்கும் இடையில் உள்ள இடம் இவர் பெயரால் 'கான்பாளையம்' என்றழைக்கப்படுகிறது.
  • வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக வெட்டப்பட்ட இடம் இவர் பெயரால் 'கான்சாகிப் வாய்க்கால்' என்று அழைக்கப்பட்டது.

கட்டுரையாளர் : முதுவை ஹுமாயூன்.


ஆதாரம் காண இங்கு கிளிக் செய்யவும்

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...

Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Khan

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.