ஷியாக்கள்
முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-3)
முஸ்லிம்களிடையே ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களின் தரப்பைச் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டு ஒரு பிரிவினர் தோன்றினர். அவர்களே தங்களை ஷியாக்கள் என்று கூறிக் கொண்டனர். ஷியா என்றாலே கட்சி என்று தான் பொருள். காரிஜிய்யின்களைப் போலவே இவர்களும் அரசியல் காரணங்களினாலேயே தனிப் பிரிவாகப் பிரிந்தனர்.
பொருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் கலீபாவாக வேண்டிய உரிமை, ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கே உரியது என்று சில சஹாபாக்கள் (நாயகத் தோழர்கள்) கருதினர். இந்தக் கருத்திலிருந்தே ஷியா பிரிவினர் தோன்றினர்.
எமன் நாட்டிலுள்ள ஸன்ஆ என்ற நகரைச் சேர்ந்த இப்னு ஸவாதா என்ற யூதன், தான் முஸ்லிமாகி விட்டதாகக் கூறிக் கொண்டு தனது பெயரையும் அப்துல்லா பின் ஸபா என்று வைத்துக் கொண்டு, முஸ்லீம்களிடையே குழப்பம் ஏற்படும் முறையில் பஸ்ரா நகரில் வஞ்சகமாகப் பிரச்சாரம் நடத்தினான். நாவண்மை மிக்க அவன், அப்போது கலீபாவாக இருந்த ஹஜ்ரத் உஸ்மான்(ரழி) அவர்களுக்கெதிராக முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு “நபி பெருமானார் (ஸல்) அவர்களின் சந்ததியினரே கலீபாவாக இருக்க வேண்டும். குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அலீ (ரழி) அவர்கள் இருக்க, உமையா குலத்தைச் சேர்ந்த உஸ்மான் எப்படி கலீபாவாக இருக்க முடியும்? கிலாபத்தை நடத்தும் உரிமை பெருமானார் (ஸல்) அவர்களின் குலத்தவரிடமே இருக்க வேண்டும்” என்று மறைமுகமாகப் பிரச்சாரம் செய்தான்.
பெருமானார் (ஸல்) அவர்களிடத்திலும், அவர்களது சந்ததியினரிடத்திலும் அதிக மரியாதையுடைய முஸ்லிம் பொதுமக்களிடையே அவனது வஞ்சகப் பிரச்சாரம் பரவியது. ஹஜ்ரத் உஸ்மான் (ரழி) அவர்கள் ”தனது உமையா குலத்தவருக்கே உயர் பதவிகளெல்லாம் வழங்குகிறார். குறைஷி குலத்தைச் சேர்ந்த பலரை பதவிகளிலிருந்து நீக்கி இருக்கிறார்.” என்று குற்றம் சுமத்தித் தனக்கு ஆதரவாக குறைஷி குலத்தினரை திருப்ப முயன்றான். இதையறிந்த பஸ்ராவின் கவர்னர் அவனை அழைத்து, இத்தகைய குழப்பமுண்டாக்கும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினார். அவன் பஸ்ராவை விட்டு கூபாவுக்கு வந்து தனது வஞ்சகப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தினான்.
இலகுவில் பற்றிக் கொள்ளும் பதவி மோகமும், புகழாசையும் ஹஜ்ரத் உஸ்மான் (ரழி) அவர்களுக்கெதிராகக் குறைஷிக் குலத்தவரைத் திரட்டி விட்டன. எந்த பெருமையைத் தம் “காலடியிலிட்டு மிதித்து” விட்டதாகப் பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்களோ, அந்தக் “குலப்பெருமை” உணர்ச்சியை உயிர் பெறச் செய்து, குறைஷிக் குலத்தவரையும், உமையா குடும்பத்தினரையும் நேரடியாக மோதவிட அப்துல்லா பின் ஸபா பதவி ஆசையையும் ஆதிக்கப் போட்டியையும் தோற்றுவித்தான். இதன் விளைவாக, அமைதியாக நடந்து கொண்டிருந்த உஸ்மான் (ரழி) அவர்களின் கிலாபத் ஆட்சியில் ஆங்காங்கேயும் குழப்பங்கள் எழுந்தன. ஹஜ்ரத் உஸ்மான் (ரழி) அவர்கள் கொல்லப்படலாம் என்று சந்தேகிக்கும் அளவுக்குக் குழப்பக்காரர்கள் பகிரங்கமாகச் செயல் பட்டனர். ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்கள் உட்பட இந்த குழப்பக்காரர்களை அடக்கும் வலிமை யாருக்குமே இல்லை. கடைசியில் ஹஜ்ரத் உஸ்மான் (ரழி) அவர்களை, இவர்கள் படுகொலை செய்துவிட்டனர். (இன்னாலில்லாஹி ………..)
(இதன் முழு விபரங்களையும் நான்கு கலீபாக்களின் வரலாற்றுப் பகுதியில் காண இந்த லிங்கில் கிளிக் செய்யவும்)
ஹஜ்ரத் உஸ்மான் (ரழி) அவர்களுக்கு பின் கலீபாவான ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களிடம் இந்தக் குழப்பக்காரர்களும் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்தனர். உஸ்மான் (ரழி) அவர்களைப் படுகொலை செய்தவர்களைக் கண்டு பிடித்துத் தண்டிக்க வேண்டுமென்று உஸ்மான் (ரழி) அவர்களின் உமையா குடும்பத்தினர் ஹஜ்ரத அலீ (ரழி) அவர்களை வற்புறுத்தினர். அப்போது கவர்னராக இருந்த அமீர் முஆவியா இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஹஜ்ரத் அலீ(ரழி) அவர்களின் கிலாபத்தையே எதிர்த்து உமையாக்களின் ஆட்சியை நிலை நிறுத்த முயற்சித்தார். இதன் விளைவு அலீ(ரழி) அவர்களுக்கும், முஆவியாவுக்கும் ஸிரியாவில் ஸிப்பீன் யுத்தமே நடந்தது. இதன் முடிவில் இரு தரப்பினரும் மத்தியஸ்தத் தீர்ப்புக்கு உடன்படுவதாக சம்மதித்தது காரிஜிய்யின்களை தோற்றுவித்தது. இதைப்போலவே, அந்த மத்தியஸ்தம் ஹஜரத் அலீ (ரழி) அவர்களுக்கு பாதகமாக முடிந்ததை அடிப்படையாகக் கொண்டே கிலாபத் பதவி பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஹஜரத் அலீ (ரழி) அவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்குமே உரியதாகும் என்ற கொள்கையில் ஷியா பிரிவினரும் தோன்றினர்.
கலீபா பதவி எப்படி அலீ(ரழி) அவர்களுக்கும், அவர்களின் சந்ததியினருக்குமே உரிமையானது என்று இவர்கள் கருதினார்களோ, அப்படியே இமாம் பதவியும் அவர்களுக்கே சொந்தமாகும் என்றும் கூரினார்கள். ஷியாக்கள் தங்களின் இந்த கொள்கையை இஸ்லாத்தின் ஒரு அங்கமாகவே வளர்த்தனர்.
“இமாம் நியமனம் அல்லாஹ்வினால் செய்யப்படுவது. அத்தகையவர்கள் ரசூலுல்லாஹ்வின் (அலீ-பாத்திமா வழியில்) சந்ததியினர்களாகவே இருக்க முடியும். எவ்விதக் குற்றமுமிழைக்காத மனிதர்களிலேயே புனிதமுடையவர்கள் இமாம்கள். இமாமை ஒப்புக்கொள்வது முஸ்லிம்களின் கடைமையாகும்.” என்று பிரகடனம் செய்து ஆளும் உரிமையும், மார்க்கத்தின் தலைமையுரிமையும் ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களின் சந்ததியினரைச் சார்ந்ததென்று ஷியாக்கள் கூறுகின்றனர்.
காரிஜிய்யின்களிடம் சில உட்பிரிவுகள் தோன்றியது போலவே ஷியாக்களிடமும் சில உட்பிரிவுகள் தோன்றின. இமாம்கள் நியமன விஷயமே இந்தப் பிரிவுக்கும் பிரதான காரணமாகும். மார்க்க செயல் முறைகளில் வேறுபட்ட சில பிரிவுகளும் ஷியாக்களில் முளைத்தன; ஆனால் நிலைக்க வில்லை. இப்போது அவர்களிடையே இரு பெரும் பிரிவுகளிருக்கின்றன. அவற்றில் ஒன்றின் பெயர் ‘ஜைதிய்யா’. மற்றொரு பிரிவின் பெயர் ‘இமாமிய்யா’.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…….. தொடர்-4……...‘ஜைதிய்யா’, ‘இமாமிய்யா’.
முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-1) முன்னுரை
முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-2) காரிஜிய்யின்கள்
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.