Home


முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-2)

காரிஜிய்யின்கள்

        பெருமானார் (ஸல்) அவர்களின் மருமகனும் இஸ்லாமியக் குடியாட்சியின் நான்காவது கலீபாவுமான ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கும், முஆவியாவுக்கும் ஏற்பட்ட அரசியல் நிர்வாக வேறுபாடு காரணமாக சிரியாவில் ஸிப்பீன் யுத்தம் கி.பி.657 ஜுலை இல் ஹிஜ்ரி 37 சபர் மாதம் ஏற்பட்டது.  அந்தப் போர்களத்திலே இரு தரப்புக்குமிடையே சமரசம் செய்து வைக்க - மத்தியஸ்தரின் தீர்ப்புக்குக் கட்டுப் படுவதாக இரு தரப்பினரும் சம்மதித்தனர்.

        ஹஜரத் அலீ (ரழி) அவர்களைச் சேர்ந்த சிலர், முஆவியாவின் சமாதான விருப்பத்தை அரசியல் சூழ்ச்சியாகக் கருதினர். இதன் காரணமாக ‘மத்தியஸ்தர் தீர்ப்புக்கு நம்மைக் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டாம்’ என்று ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களிடம் வற்புறுத்தினர். “நீதி வழங்குவதில் அல்லாஹ்வுக்கு நிகரானவர்கள் இல்லை, அவனது தீர்ப்பைத் தவிர வேறு எவருடைய தீர்ப்புக்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம்” என்றும் கூறினர்.

        ”முஸ்லிம்களுக்கிடையே பிளவேற்படும் போது சமாதானம் செய்து வைப்பது அவசியமாகும். இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் மத்தியஸ்தத்தினால் சமாதானத்திற்கு வழி காண்பது தவறல்ல. சமாதானத்திற்காக செய்து கொண்ட ஒப்பந்தத்தை நான் உடைக்க முடியாது. இந்த ஒப்பந்தத்தின் படி எத்தகைய தீர்ப்பு செய்யப்பட்டாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களே.” என்பதை ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்கள் விளக்கினார்கள். இந்த விளக்கத்தை அந்தச் சிலர் ஏற்கவில்லை. ‘பதவியாசைப் படைத்த முஆவியாவின் அரசியல் சூழ்ச்சி’ என்றே மதித்தனர்.

        அந்த மத்தியஸ்தத் தீர்ப்பு ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களுக்கு  விரோதமாகவே வழங்கப்பட்டது. முஆவியாவே இதில் வெற்றி பெற்றார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களிடமிருந்து பிரிந்து செல்லலானார்கள். இவர்களே காரிஜிய்யின்கள் என்ற பிரிவினர்.

        ”ஆட்சியுரிமை இறைவன் ஒருவனுக்கே உரியது. எனவே மனிதனை மனிதன் ஆள முடியாது. எவருக்கும் ஆட்சியுரிமை கிடையாது. முஸ்லிம் பொதுமக்களால் சுயேட்சையாகத் தேர்ந்தெடுக்கப் படுபவரே கலீபாவாகும். இதை ஏற்பதுதான் முஸ்லிம்களின் கடமையாகும்.” என்று பிரகடனம் செய்து முஆவியாவின் ஆட்சியை எதிர்ப்பதோடு, ஹஜரத் அலீ (ரழி) அவர்களின் ஆட்சியையும் எதிர்க்கலானார்கள் இந்த காரிஜிய்யின்கள்.

        ஹிஜ்ரி 40 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 ல் ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்களைப் படுகொலை செய்ய நஞ்சில் தோய்த்த வாளினால் வெட்டப்பட்டதல்லவா; அந்தக் கொடூரச் செயலைச் செய்தவனே இந்தக் காரிஜிய்யின்களைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் பின் முல்ஜிம் அல் சாரிமி என்பவனேயாகும்.

        இந்த காரிஜிய்யின் கூட்டத்தினரின் தலைவர் பெயர் அப்துல்லா பின் வஹ்ப் ராஜீமீ என்பது. காரிஜிய்யின்களின் முழு நம்பிக்கையும் குர் ஆன் மீதே இருந்தது. இதைச் சேர்ந்தவர்கள் தொழுகையிலும் நோன்பிலும் அதிக கவனம் செலுத்துபவர்களானார்கள். குர் ஆன் விதி முறைகளுக்கு வேறு படுபவர்களின் ஆட்சியை - அதிகாரத்தை எதிர்ப்பது தங்களின் கடமையெனக் கருதி இதற்காகத் தங்களின் அனைத்தையும் தத்தம் செய்யும் உறுதியுடையவர்களானார்கள்.

        மன்னர்களின் படாடோபங்களை இவர்கள் பொருட்படுத்துவதில்லை. கலீபாக்கள், கவர்னர்களிட மெல்லாம் தங்களின் தூதர்களை அனுப்பி வைத்து, “ஆட்சியுரிமை அல்லாஹ்வுக்கே உரியது” என்ற தங்களின் கொள்கைகளை விளக்குவதில் காரிஜிய்யின்கள் பின் வாங்குவதில்லை.

        ஈராக் மாகாணத்தில் அமீர் முஆவியாவின் கவர்னராக இருந்த இப்னு ஜியாத்தின் சிறைகளில் காரிஜிய்யின்கள் நிரம்பி இருந்தனர். அமீர் முஆவியாவின் ஆட்சிக்கு எதிரானவர்களை எல்லாம் தேடிப் பிடித்துச் சித்திரவதை செய்வதில் இப்னு ஜியாத் முதன்மை வகித்தார். சின்னஞ் சிறு விஷயங்களிலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக செயல் பட்ட காரிஜிய்யின்கள், இதன் காரணமாகவே தங்களுக்கிடையேயும் சில உட் பிரிவுகள் தோன்றச் செய்து, தங்களைச் சேராதவர்கள் - அவர்கள் முஸ்லிம்களேயாயினும் வழி கேடர்களே என்று கூறி கொலை செய்யவும் தொடங்கினர். இதனால் இவர்களின் ஆக்க வேலையை விடவும் அழிவு வேலையே அதிகமாயிற்று. எனவே இவர்களை முஸ்லிம் பொதுமக்கள் எதிர்க்கலாயினர்.

        இஸ்லாமிய ஜன நாயகக் குடியாட்சி முறைக்கு மாற்றமாக முடியாட்சி நடத்துவதை எதிர்க்கும் பிரதானப் பணியில் தோன்றிய காரிஜிய்யின்கள், முஸ்லிம்களுக்கிடையே சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு சக்திகளை விரயமாக்கியதால் முடியாட்சி முழு பலத்துடன் நிலை பெற்று விட்டது. கலீபா ஹாரூன் ரஷீத் ஆட்சியோடு காரிஜிய்யின்கள் அழிந்து விட்டனர்.

                                தொடரும் …… தொடர் 3ஷியாக்கள்


வரலாற்று தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.