கோஜாக்கள் - போராக்கள்
முஸ்லிம்களிடையே செயல் பிரிவுகள் (தொடர்-5)
ஷியா - இஸ்மாயீலிகளின் இமாம் இஸ்மாயீல் அவர்கள் காலஞ் சென்ற பிறகு முஹம்மத் என்பவரை இமாமாக ஒப்புக் கொண்டவர்கள் கோஜாக்கள் - போராக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். இந்தப் பிரிவினர் கோஜிஸ்தான், ஈராக், சிரியா, ஏமன், எகிப்து, வட மேற்கு ஆப்ரிக்காமுதலிய நாடுகளில் அதிகம் பரவினர். இஸ்லாமிய நாடுகளில் மட்டுமன்றி மத்திய ஆசியா, சீனாவிலும் பரவினர். ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாவது நூற்றாண்டு வரையில் இவர்களின் பிரச்சாரம் வலுவடைந்திருந்தது. பின்னர் இவர்களது தலைவர் - இமாம்களிடையே ஏற்பட்ட பதவிப் போட்டிகளினாலேயே அவர்களும் வீழ்ச்சி யடைந்தனர்.
நம் இந்திய நாட்டில் ஹிஜ்ரி மூன்றாவது நூற்றாண்டில் நடைபெற்ற இஸ்மாயீலி பிரச்சாரத்தின் வன்மையால் அனேக ஹிந்துக்களும் அதில் சேர்ந்தனர். ஹிஜ்ரி ஐந்தாவது நூற்றாண்டில் மூல்த்தான் பகுதியில் ஆதிக்கம் பெற்ற இஸ்மாயீலிகள், பின்னர் டில்லியிலும் செல்வாக்குடையவர் களானார்கள்.
பாத்திமி இமாம்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், குஜராத்திலும், காஷ்மீரிலும்: பஞ்சாப் - சிந்து மாகாணங்களின் வடபகுதியிலும் தங்களின் கொள்கைகளைத் திறமையாகப் பிரச்சாரம் செய்தனர். பார்ஸிகள், ஹிந்துக்கள், இஸ்லாமியர்களின் மத அனுஷ்டானங்களைக் கலப்படம் செய்து “தீனே இலாஹி” என்ற புதிய மதத்தையே தோற்றுவித்து இதன் மூலம் தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள அக்பர் முயற்சித்தது போலவே இந்த இஸ்மாயீலிகளும் ஹிந்துத் தத்துவக் கொள்கைகளுக்கேற்பத் தங்களின் கொள்கைகளை சூபிக் கொள்கையென வகுத்துக் கொண்டு இதுவே “உண்மை வழி” எனக் கூறிச் செயல் பட்டனர். இதனால் அந்த இயக்கம் தெற்கேயும் சிறிது பரவியது. இருப்பினும் நிலைக்கவில்லை.
அக்பரின் தீனே இலாஹி எப்படி அவரது ஆட்சியோடு அழிந்ததோ, அப்படியே இவர்களது “உண்மை வழி”யும் சிதைந்தது. வேறு சில புதிய பிரிவாகவும் அவதார மெடுத்தது.
கி.பி. 14 வது நூற்றாண்டில் ஈரானிலிருந்து இந்தியாவுக்கு வந்த இஸ்மாயீலி மதப் போதகரான பீர் சதுருத்தீன் என்பவரது ஆற்றல் மிக்கப் பிரச்சாரத்தினால் குஜராத், கச், சிந்தின் தென் பகுதிகளிலுள்ள இந்தியர்கள், முஸ்லிம்களாயினர். இவர்களை “கோஜா” என்று அந்தப் பீர் சதுருத்தீன் அவர்களே ஆக்கினார்.
கோஜாக்களிலிருந்து மூன்று பிரிவினர் பிரிந்தனர். ஒரு பிரிவார் ”நிஜாரி இஸ்மாயீலிகள்” என்று குறிப்பிடப்படுகிறது. ருஷ்யா, சீன துருக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்காப்பிரிக்கா, முதலிய நாடுகளிலும் இந்தியாவில் சிந்து, குஜராத், பம்பாயிலும் இவர்கள் பரவி வாழ்கின்றனர்.
இரண்டாவது பிரிவினர் “ஸுன்னி கோஜா” களாயினர். பம்பாயில் வாழ்ந்த கோஜாக்களில் ஒரு கூட்டத்தினர் சுன்னத் ஜமா அத்தில் சேர்ந்து விட்டனர். இதனாலேயே இவர்களை ‘ஸுன்னி கோஜாக்கள்’ என்று அழைக்கப்பட்டது.
மூன்றாவது பிரிவினர், “இஸ்னா அஷரி” கோஜாக்கள், இவர்கள் பம்பாயில் சில நூறு பேர்களும் ஆப்ரிக்காவிலுள்ள சான்சிபாரில் சில நூறு பேர்களுமாக வாழ்கின்றனர். இவர்களும் ஸுன்னி கோஜாக்களும் ஆகாகானைப் பின் பற்றுவதில்லை. நிஸாரி இஸ்மாயீலிகளின் தலைவரும் ஆகாகானே யாகும்.
போராக்கள் என்று அழைக்கப் படுபவர்களும் இதே இஸ்மாயீலீ பிரிவினரே. இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய இவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். பெரும் வியாபாரிகளாக வாழ்ந்தவர்கள். இப்போதும் இப் பிரிவினர்கள் பெரும் பெரும் வியாபாரிகளாகவே இருக்கின்றனர். குஜராத்தி மொழியில் வியாபாரிகளை “போஹ்ரா” என்றே அழைக்கப் படுகிறது. அந்த போஹ்ராவே போராவாக வழங்கி வருகிறது.
இஸ்மாயீலி போராக்களின் இப்போதைய ஜனத் தொகை ஏறக்குறைய நான்கு லட்சம் என்று குறிப்பிடப் படுகிறது. இவர்கள் அனைவரும் வியாபாரிகளாகவே பல நாடுகளிலும் வாழ்கின்றனர். இவர்களின் முழு நம்பிக்கையும் இமாம்களிடமே இருக்கிறது. தங்களின் இமாம்களிடத்தில் சகல அறிவுமிருக்கிறது என்பது இவர்களின் நம்பிக்கை. மற்றவர்களால் உணர முடியாத மறைவான வற்றையும் அறியும் ஆற்றல் தங்கள் இமாமுக்கு உண்டு என்பதைச் சிறிது சந்தேகித்தாலும்., அவர்கள் இஸ்மாயீலி கோஜாக்களாக இருக்க முடியாது.
சுன்னத் ஜமாஅத் தார்களின் தெளிவான கொள்கை
கலீபாக்களைப் பற்றியும், இமாம்களைப் பற்றியும் சுன்னத் ஜமா அத்தார் தெளிவான கொள்கை கொண்டுள்ளனர். இவர்களும் பிற மனிதர்களைப் போலவே பிறந்து, வளர்ந்து, கல்வி பயின்று, ஒழுக்கம் பேணி இவற்றால் பெறும் உயர்வைத் தவிர, பிறப்பு வளர்ப்பால் யாரும் கலீபா பதவியையோ, இமாம் பொறுப்பையோ பெற முடியாது. மற்றவர்களை ஆத்மீக ஆதிக்கம் செய்யும் உரிமையை எந்த முஸ்லிமும் தனிப்பட்ட முறையில் கோர முடியாது. கலீபாக்கள் இமாம்களின் பணி அல்லாஹ்வின் ஆணைகளை அமுல் நடத்தி வைப்பதேயாகும். இதில் இவர்கள் தவறிழைத்தால் அத்தகையவர்களை நீக்கி விடுவதற்கும் முஸ்லிம் பொது மக்களுக்கு உரிமையுண்டு.
சுன்னத் ஜமாஅத்தாரின் இத் தெளிவான கொள்கைக்கு, முற்றிலும் வேறுபட்ட கொள்கையுடையவர்கள் ஷியாக்கள். அல்லாஹ்வின் குர் ஆனையும் அது “அனைவருக்கும் அழகிய முன்மாதிரி” என்று சிறப்பிக்கும் பெருமானார் (ஸல்) அவர்களின் வழி முறைகளையும் ஒழுகும் சுன்னத் ஜமாஅத்தாரைப் போலவே இஸ்லாத்திற்காக என்ற ஒரே கொள்கையுடையவர்களாக ஷியாக்களும், காரிஜிய்யின்களும் செயல் பட்டிருப்பின் இன்றைய இஸ்லாமிய உலகம் இதைவிடச் சிறப்புடையதாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
இன்ஷா அல்லாஹ் தொடர் - 6 “முஃதஸிலாக்கள்” விரைவில் தொடரும்…….
முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 1 (முன்னுரை)
முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 2 (காரிஜிய்யின்கள்)
முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 3 (ஷியாக்கள்)
முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 4 (ஜைதிய்யா - இமாமிய்யா)
முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 5 (கோஜாக்கள் - போராக்கள்)
முஸ்லிம்களிடையே செயல்பிரிவுகள் தொடர் - 6 (முஃதஸிலாக்கள்) விரைவில்u
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.