சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 9)
மெளலவி லியாகத் அலி
அலாகாபாத்தில் அராஜக ஆபத்துகளெல்லாம் மறைந்து புரட்சி கட்டுக்கோப்பான முறையில் உருவாகத் தொடங்கியது. புரட்சி மூண்ட மற்றவிடங்களைப் போல் அங்கும் தகுந்த தலைவர்கள் கிடைப்பதில் கஷ்டம் ஏற்பட்டது. எனினும் அந்நகரில் அந்தக் கஷ்டம் அதி சீக்கிரத்தில் நிவர்த்தியாகி விட்டது. தீவிர சுதந்திரப் பிரியரான லியாகத் அலி என்பவர் தலைமை வகித்துப் புரட்சியை நடத்த முன் வந்தார்.
நெசவுத் தொழிலாளர்களிடையே அவர் ஒரு மத போதகராகவும், பள்ளிக்கூட உபாத்தியாராகவும் இருந்து வந்தார் என்பதைத் தவிர விசேஷ மகத்துவம் பொருந்திய அவரைப் பற்றி வேறெதுவும் தெரியவில்லை. அவர் மிகவும் பரிசுத்தமான வாழ்க்கை நடத்தி வந்ததால் எல்லோரும் அவரிடத்தில் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அலகாபாத் மாகாணம் விடுதலை பெற்றதும் சில ஜமீன்தார்கள் தங்கள் பகுதியிலிருந்த அவரை அலகாபாத்துக்கு அழைத்து வந்து அம்மாகாணத்தின் பிரதம அதிகாரியாக நியமித்தார்கள். அவர் டில்லி சக்கரவர்த்தியின் பிரதிநிதியென்று பிரகடனம் செய்வதற்காக மகத்தான வைபவமொன்றும் நடந்தது.
மதில்களால் சூழப்பட்ட ‘குஸ்ருபாக்’ என்ற பாதுகாப்பான ஒரு தோட்டத்துக்குள் அவர் தமது தலைமைக் காரியாலயத்தை ஸ்தாபித்துக் கொண்டு, அந்த மாகாணத்தில் புரட்சியை உருவாக்கும் வேலையை வெகு தீவிரமாகக் கவனிக்கலானார். அவர் அரசாங்க அலுவல்களை யெல்லாம் அதி சீக்கிரத்தில் வெகு ஒழுங்காகச் சீர்படுத்தினார். தம்மை சக்கரவர்த்தியின் சுபேதாரென்று வாயளவில் சொல்லிக் கொள்வதுடன் தமது கடமை முடிந்து விட்டதாகக் கருதாது. அலகாபாத் நிலை பற்றி டில்லி சக்கரவர்த்திக்கு இறுதி வரையில் விவரமான அறிக்கைகள் அனுப்பி வந்தார். மெளலவி லியாகத் அலி பதவி யேற்றுக் கொண்டதும் அலகாபாத் கோட்டையைக் கைப்பற்றுவதே தமது முதல் வேலை யென்று கருதினார். [பக்கம்: 164-165]
குறிப்பு :
நன்கு கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைக்கும் விதத்தில், இப்பொழுது நாட்டில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முதல் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தார்களா? என இப்பொழுதுள்ள தலைமுறையினர் கேட்கக் கூடிய அளவுக்கு, உண்மை ஒழிக்கப்படுகிறது.
அந்தப் பொய்திரையைக் கிழித்தெறிய, முஸ்லிம் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், முஸ்லிம் சமுதாய ஸ்தாபனங்களுக்கும் பரம விரோதியாக இருந்த ஒருவருடைய வாக்கு மூலத்தை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட உள்ளோம். அவர் தமது நூலில் முஸ்லிம்களைப் பற்றிய உண்மையை எவ்வளவோ மறைத்தும், மேலும் அவரால் மறைக்க முடியாத சில முஸ்லிம் தியாகிகளைப் பற்றிய உண்மைகளை, அவர் எழுதிய படி, எவ்வித திருத்தமும் மாறுதலும் இன்றி அப்படியே எடுத்து இடம் பெறச் செய்திருக்கின்றோம். அந்த நூலை எழுதியவர், முன்னால் ஹிந்து மகாசபைத் தலைவர் திரு. வீர சாவர்க்கர். அவர் எழுதிய நூல் “முதல் இந்திய சுதந்திர யுத்தம்” (தமிழாக்கம்)
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 1)...
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 2)
மருது பாண்டியர் (சிவகங்கை சீமை) வரலாற்றுச் சுருக்கம்
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) வரலாற்றுச் சுருக்கம் ....