சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 3)
பீர் அலி
1857 ஜுலை 3 ம் தேதியன்று பீர் அலி என்ற தலைவரின் வீட்டுக்குப் பல முஸ்லிம்கள் வந்து மேற்கொண்டு செய்ய வேண்டிய அலுவல்களை நிர்ணயம் செய்த பின், அவர்கள் எல்லோரும் சுமார் 200 பேர்கள் தேசியக் கொடிகளுடனும் தேசியக் கோஷங்களுடனும் அவ்வீட்டிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அதைக் கேள்வியுற்ற லயால் சில துருப்புக்களுடன் அவர்களை எதிர்க்க வந்த போது, ஊர்வலத்துக்குத் தலைமை வகித்து வந்த பீர் அலி அவனை நோக்கிச் சுட்டதில் அவன் வீழ்ந்து மாண்டான். ஆனால் பிறகு ராட்ரே துரோகிகளடங்கிய ஒரு பெரும் படையுடன் வந்து தேச பக்தர்களை உக்கிரமாகத் தாக்கவே தேச பக்தர்கள் சிதறுண்டனர். உடனே ஆங்கிலேயர்கள், லயாலைச் சுட்டு வீழ்த்திய பீர் அலி உள்பட சகல தலைவர்களையும் கைது செய்தார்கள்.
பீர் அலி லக்ஷ்மணபுரியில் பிற்ந்து வளர்ந்தவராயினும், பின்னர் பாடலீபுரத்திற்கு வந்து அங்கேயே வசிக்கலானார். அவர் ஒரு புத்தக வியாபாரி, தாம் விற்கும் தேசிய புத்தகங்களை இடை விடாது வாசித்து வந்ததன் மூலம், அவரது ஹிருதயத்தில் சுதந்திர உணர்ச்சி பொங்க ஆரம்பித்தது. தேசத்தின் அடிமைத்தனத்தையும் ஆங்கிலேயர்களை அண்டி வாழும்படியான நிலைமையையும் அவரால் சகிக்க முடியவில்லை. எனவே டில்லியிலும் லக்ஷ்மணபுரியிலு முள்ள புரட்சித் தலைவர்களுடன் அவர் கடிதப் போக்குவரத்து நடத்தி வந்தார்.
பிறரது மனதில் தேசீய உத்வேகமும் உணர்ச்சியும் பொங்கி யெழும்படி பிரச்சாரம் செய்வதில் அவருக்கு விசேஷத் திறமையுண்டு. அவர் சாதாரண புத்தக வியாபாரியே ஆயினும் பாடலீபுர தேச பக்தர்களின் சபைகளில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்து வந்தது. அவர் ஆயுதங்களுடன் ஏராளமான தேசிய வீரர்களையும் தயாராக வைத்திருந்தார். குறிப்பிட்ட சமிக்ஞை கிடைத்ததும், ஆங்கிலேயர்களுக்கு விரோதமாக போருக்கு எழுவதாய் அவர்களெல்லோரும் பீர் அலியிடம் பிரமாணம் செய்து கொடுத்திருந்தனர்.
பாடலீபுரத்திலிருந்த ஆங்கில அதிகாரியான டெய்லர் தேச பக்தர்களைச் சித்திரவதைக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்க முற்படவே, பீர் அலியால் அதை யெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவர் இயற்கையாகவே கண்டிப்பான குணமும், உத்வேகமும், மகத்தான தைரியமும் வாய்ந்தவர். தமது தேச சகோதர்கள் ஆங்கிலேயர்களிடம் அல்லலுறுவதைக் கண்டு சகியாதவராய் உற்ற காலத்துக்கு முன்னரேயே புரட்சியை ஆரம்பித்து விட்டார். பீர் அலி ஆங்கிலேயர்களுக்கு மிக மிக ஆபத்தான ஒரு விரோதியாயினும், அவரது கண்டிப்பும், உறுதியும், கண்ணியமும், கம்பீரமும், அபாரமான மனோபலமும், ஆச்சரியமானவை என்பதையும் மதிப்பிற்குரியவை என்பதையும், பாட்லீபுரக் கமிஷனராக இருந்த டெய்லரே ஒப்புக்கொண்டிருக்கிறான்.
கைதியான பீர் அலிக்கு ஆங்கிலேயர்கள் மரண தண்டனை விதித்தனர். இறுகிய விலங்குகளால் ஏற்பட்ட காயத்தினால் அவரது கைகளிலிருந்து உதிரம் வடிந்து கொண்டிருந்தது. அவரைத் தூக்கு மேடைக்கு ஆங்கில அரக்கர்கள் கொண்டு வந்த போது அவரது முகத்தில் பிறவி வீரனுக்குரிய புன்முறுவல் தவழந்து கொண்டிருந்தது. எனினும் பீர் அலிக்கு அவரது புதல்வனைப் பற்றிய ஞாபகம் ஒரு க்ஷண நேரம் துக்கத்தைக் கொடுத்ததால், அதை யறிந்த ஆங்கில அதிகாரி அது தான் சமயமென அவரையணுகி, “பீர் அலி! மற்றத் தலைவர்களின் பெயர்களை வெளியிடுவதன் மூலம் நீர் இப்போது கூட உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம்” என்றான். உடனே பீர் அலி அந்த அதிகாரியை நிதானமாகப் பார்த்து, மிகுந்த தைரியத்துடன் கம்பீரமான தொனியில் கூறியதாவது, “ஒருவருடைய வாழ்க்கையில் உயிரைப் பாதுகாத்துக் கொள்வது தான் சிறந்ததென்ற நிலைமையும் சில சந்தர்ப்பங்களில் ஏற்படுவதுண்டு. ஆனால் இப்போது மரணத்தை வரவேற்றுத் தழுவிக்கொள்வது தான் சிரஞ்சீவியாக வாழ்வதற்கு வழியாகும். ஆங்கிலேயர்கள் எங்களுடைய தாய் நாட்டில் செய்து வரும் அட்டூழியங்களையும் அநீதிகளையும் எதிர்த்துப் போருக்கு எழுந்ததைத் தவிர நானும் எனது சகாக்களும் வேறொரு குற்றமும் பாவமும் செய்யவில்லை. உலகில் அட்டூழியங்களையும் அநீதிகளையும் எதிர்ப்பது கூடத் தவறா? நீங்கள் இப்போது என்னைத் தூக்கிலிடலாம். என்போன்ற மற்றும் பலரையும் தூக்கிலிடலாம். ஆனால் எங்களுடைய புனித லட்சியத்தை நீங்கள் ஒரு காலத்திலும் தூக்கிலிட்டு விட முடியாது! நான் இறந்தால் எனது இரத்ததிலிருந்து ஆயிரகணக்கான வீரர்கள் உதித்து உங்கள் சாம்ராஜ்யத்தையே அழித்து விடுவார்களென்பது நிச்சயம்.”
தீர்க்கதரிசியும் வீரருமான பீர் அலி அவ்வாறு கூறிய பின், எக்காலத்திலும் மறக்க முடியாத தேசிய வீரர்களின் ஜோதிவானில் இடம் பெற்றார்.! “எனது உதிரத்திலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் உதிப்பார்கள்” என்று அவர் கூறிய வார்த்தைகள் பொய்யாக முடியாது! பொய்த்துப் போகவும் இல்லை!. [பக்கம்: 272, 273, 274]
குறிப்பு :
நன்கு கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைக்கும் விதத்தில், இப்பொழுது நாட்டில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முதல் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தார்களா? என இப்பொழுதுள்ள தலைமுறையினர் கேட்கக் கூடிய அளவுக்கு, உண்மை ஒழிக்கப்படுகிறது.
அந்தப் பொய்திரையைக் கிழித்தெறிய, முஸ்லிம் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், முஸ்லிம் சமுதாய ஸ்தாபனங்களுக்கும் பரம விரோதியாக இருந்த ஒருவருடைய வாக்கு மூலத்தை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட உள்ளோம். அவர் தமது நூலில் முஸ்லிம்களைப் பற்றிய உண்மையை எவ்வளவோ மறைத்தும், மேலும் அவரால் மறைக்க முடியாத சில முஸ்லிம் தியாகிகளைப் பற்றிய உண்மைகளை, அவர் எழுதிய படி, எவ்வித திருத்தமும் மாறுதலும் இன்றி அப்படியே எடுத்து இடம் பெறச் செய்திருக்கின்றோம். அந்த நூலை எழுதியவர், முன்னால் ஹிந்து மகாசபைத் தலைவர் திரு. வீர சாவர்க்கர். அவர் எழுதிய நூல் “முதல் இந்திய சுதந்திர யுத்தம்” (தமிழாக்கம்)
இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...
இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை
இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்
இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.