Home


சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 5)

சக்கரவர்த்தி பஹதூர் ஷா

        உற்ற ராணுவத் தலைவரில்லாத் குறையைச் சக்கரவர்த்தியும் அறிந்து தகுந்த ஒருவரைக் கண்டு பிடிக்கப் பெரு முயற்சி செய்தார். அவ்விஷயமாக அவர் கைக் கொண்ட பரிசோதனைகள் பலனளிக்க வில்லை. அவர் ராணுவ அதிகாரம் முழுவதையும் பகத் கானுக்கு அளித்ததுடன், ராணுவத்தை நிர்வகிப்பதற்காக மூன்று உதவி தளபதிகளையும் நியமித்தார், மற்றும் ராணுவ சம்பந்தமான சகல அலுவல்களையும் மேற்பார்வை யிடுவதற்காக மூன்று பிரமுகர்களும் மூன்று ராணுவத் தலைவர்களுமடங்கிய ஒரு கமிட்டியையும் அமைத்தார்.

        மகத்தான தேச பக்தியும் தியாக புத்தியும் வாய்ந்த சக்கரவர்த்தி அம்முறைகளுடன் திருப்தியடைந்து விடவில்லை. அந்தப் பிரதிநிதி சபையினாலும் கோரிய பலன் கிடைக்காமற் போகவே தமது குறையினால் தான் புரட்சி நசுக்குண்டு வருகிறதென்றும் தாம் தலைமை ஸ்தானத்திலிருப்பதன் காரணமாக சாமர்த்தியசாலிகள் எல்லோரும் தம்மை விட்டுப் போய் விடுகிறார்களென்றும் அவர் கருதி, தம் சகல அதிகாரங்களையும் துறந்து விடத் தயாராயிருப்பதாக  பகிரங்கமாய் அறிவித்தார். இந்தியா மீண்டும் ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் வருவதைக் காட்டிலும் வெகுகாலமாக இந்தியாவின் குடலைக் கிழித்து வரும் அன்னிய ஆதிக்க மாகிற கழுகிற்கு இனியும் இடங் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அடிமைச் சேற்றில் இந்தியா என்றென்றும் அழுந்திக் கிடப்பதைக் காட்டிலும், இந்தியாவின் சுதந்திரத்தையும் சுயாட்சியையும் பாதுகாக்கும் எவர் ஆட்சி புரிவதாயினும் தமக்குச் சந்தோஷமே யென்றும் தமது ஆட்சியை விட அத்தகையாரின் ஆட்சி தமக்கு நூறு மடங்கு அதிக ஆனந்தத்தைக் கொடுக்கு மென்றும் அந்த முஸ்லீம் பெரியார் பிரகடனம் செய்தார்.

        ஜெயபுரி, ஜோதிபுரி, பிகானீர், ஆல்வேய் முதலிய சமஸ்தான மண்டலாதிபதி களுக்கு அவர் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருந்ததாவது. “எப்பாடு பட்டாயினும் இந்தியாவிலிருந்து அன்னியரின் ஆட்சியை அறவே ஒழிக்க வேண்டு மென்பதே எனது அத்தியந்த ஆர்வமாகும். ஹிந்துஸ்தானம் முழுவதும் விடுதலை பெற்று விளங்க வேண்டும். தேசீய இயக்கத்தின் முழுப் பளுவையும் தாங்கும் சக்தி வாய்ந்த மகா சாமர்த்திய சாலியான ஒருவர் இதை நடத்த முன் வந்தாலன்றி, புரட்சிப் போர் வெற்றி பெறுவது முடியாத காரியம். அவர் தேசத்தின் பல்வேறு சக்திகளையும் ஏகோபித்த முறையில் உருவாக்கும் ஆற்றலுள்ளவராகவும் தேச ஜனங்களெல்லோருக்கும் பிரதிநிதியாக விளங்கும் யோக்கியதை யுடையவராகவும் இருக்க வேண்டும். ஆங்கிலேயர்களை இந் நாட்டிலிருந்து விரட்டிய பின் என் சொந்த நலனுக்காக இந்தியாவை ஆட்சி புரிய வேண்டு மென்ற ஆசை எனக்கு அணுவளவு மில்லை. பகைவர்களை விரட்டுவதற்காகச் சுதேசி ராஜாக்க ளெல்லோரும் கத்தியை உறுவுவார்களாயின், நான் எனது ராஜ்யாதிகாரம் முழுவதையும் அந்த மன்னர்களடங்கிய ஒரு மகா சபையிடம் ஒப்பு விக்கத் தயாரா யிருக்கிறேன்.”

        டில்லி சக்கரவர்த்தியும் இந்திய முஸ்லீம்களின் மாபெரும் தலைவருமான பஹதூர் ஷா இந்திய மன்னர்களுக்கு எழுதிய கடிதம் அது தான். அப்போது ஹிந்துஸ்தானம் முழுவதும் நிலவிய தேச பக்தியையும் சுதந்திர உணர்ச்சியையும் அன்னாரின் புனித வார்த்தைகள் பிரதி பலிக்கின்றன. அடிமைத்தனத்தில் ஆழ்ந்து கிடந்த ஜனங்களிடையே ஏற்பட்ட அத்தகைய எதிர் பாராத, ஆச்சரியகரமான, மகத்தான மன மாறுதல் உலக சரித்திரத்திலே கண்டறியாத விஷயமென சரித்திராசிரியரான சார்லஸ் பால் கூரியுள்ளார். அத்தகைய மன மாற்றம் சில குறிப்பிட்ட மாகாண ஜனங்களிடை மாத்திரமே ஏற்பட்டிருந்ததால் சக்கரவர்த்தியின் கோரிக்கை பூரண பலனை அளிக்கவில்லை.          (பக்கம் 286, 287, 288)

குறிப்பு :

        நன்கு கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைக்கும் விதத்தில், இப்பொழுது நாட்டில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முதல் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தார்களா? என இப்பொழுதுள்ள தலைமுறையினர் கேட்கக் கூடிய அளவுக்கு, உண்மை ஒழிக்கப்படுகிறது.

        அந்தப் பொய்திரையைக் கிழித்தெறிய, முஸ்லிம் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், முஸ்லிம் சமுதாய ஸ்தாபனங்களுக்கும் பரம விரோதியாக இருந்த ஒருவருடைய வாக்கு மூலத்தை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட உள்ளோம். அவர் தமது நூலில் முஸ்லிம்களைப் பற்றிய உண்மையை எவ்வளவோ மறைத்தும், மேலும் அவரால் மறைக்க முடியாத சில முஸ்லிம் தியாகிகளைப் பற்றிய உண்மைகளை, அவர் எழுதிய படி, எவ்வித திருத்தமும் மாறுதலும் இன்றி அப்படியே எடுத்து இடம் பெறச் செய்திருக்கின்றோம். அந்த நூலை எழுதியவர், முன்னால் ஹிந்து மகாசபைத் தலைவர் திரு. வீர சாவர்க்கர். அவர் எழுதிய நூல் “முதல் இந்திய சுதந்திர யுத்தம்” (தமிழாக்கம்)


சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Freedom Fighter-1

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 1)...


I C-2

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 2)


Maruthu Pandiyar

மருது பாண்டியர் (சிவகங்கை சீமை) வரலாற்றுச் சுருக்கம்


Khan Shahib

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) வரலாற்றுச் சுருக்கம் ....