Home


மருது பாண்டியர் (சிவகங்கை சீமை)

மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில்ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1779 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும்.

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்வு

        இராமநாதபுர மாவட்டத்தில் நரிக்குடிக்கு அருகில் முக்குளம் என்ற பெயரில் ஓர் ஊர் உள்ளது. அந்த முக்குளத்தில் பொன்னாத்தாள், பழனியப்பச் சேர்வைக்காரர் என்ற தம்பதிகள் இருந்தனர்.. அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். கி.பி.1748 ஆம் ஆண்டில் பிறந்த முதற்பிள்ளையின் பெயர் வெள்ளைமருது. வெள்ளை மருது பிறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கி.பி.1753 ஆம் ஆண்டில் பிறந்த பிள்ளையின் பெயர் தான் இளைய மருது. வெள்ளை மருதுவைப் பெரிய மருது என்றும், இளைய மருதுவை சின்ன மருது என்று அழைத்து வரலாயினர்.

        இருவரில் பெரிய மருது நன்கு வேட்டையாடக் கூடியவர். கைகளில் எந்த ஆயுதமுமில்லாமல், வெறும் கையோடு புலியிடம் சண்டையிட்டு அப்புலியைக் கொன்று விடக் கூடிய வீரம் அவரது வீரம். சின்ன மருதுவும் அறிவிலும், வீரத்திலும் சிறந்து விளங்கினார். தம்பியுடையான் படைக்கஞ்சான், என்ற பழமொழிக்கேற்ப விளங்கினர்.

        வீரத்தோடு விளங்கிய மருதிருவரிடமும் நல்ல பல அருங்குணங்களும் இருந்தன. ஆண்டவனிடத்தில் பக்தியும், வறியவரிடத்தில் அன்பும், ஆன்றோரிடத்து மதிப்பும் கொண்டு வாழ்ந்தனர். படை வீரர்களாக இருந்தனர். இவர்களின் எண்ணத்தில் சுதந்திர உணர்ச்சி எழுந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. இவர்களின் புகழ் சிவகங்கை சீமை வரை எட்டியது.

தமிழகம்

        தமிழகம் தொன்று தொட்டு சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்றே அழைக்கப்பட்டு வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் ஆண்டு கொண்டிருந்தனர். புலவர் புகழிலே பெருமையுற்ற பாண்டிய நாட்டினை நாயக்க மன்னர்கள் எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்திருந்தனர்.

        பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆற்காடு நவாபு தமிழ் நாட்டினைக் கைப்பற்றித் தன்னாட்சியின் கீழ்க் கொண்டு வந்தான். பாளையங்களில் உள்ள குறுநிலத் தலைவர்கள் தனித் தனியே ஆட்சி புரியத் தலைப் பட்டனர். இவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாது, சண்டைகள் புரிந்து பூசலும் பொறாமையும் கொண்டு பிரிந்து நின்றனர்.

தமிழகத்தில் ஆங்கிலேயர்கள்

        ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வாணிபம் புரிய இங்கு வந்த ஆங்கிலேயர், தமிழகத்திலும் தம் வலையை வீசினர் ஆற்காடு நவாபு வெள்ளையர் விரித்த வலையில் வீழ்ந்தார். வெள்ளையருடன் ஓர் உடன் படிக்கையும் செய்து கொண்டார்.

        நவாபு தாம் பெற்ற கடனுக்காக வெள்ளையர் தமிழக மன்னர்களிடம் வரி வசூலித்துக் கொள்ளுகின்ற உரிமையளித்தார். வெள்ளையர்கள் தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்களைக் கொடுமைப் படுத்தி வரி வசூல் செய்தனர். வெள்ளையர் வரி வசூலிக்கும் ஆதிக்கத்தைச் செலுத்தப் படை பட்டாளங்களை அமைத்துக் கொள்ள இவர்கள் இடம் கொடுத்தார்கள். தங்கள் படைகளையும் வெள்ளையருக்கு அனுப்பி உதவி செய்தார்கள். இத்தனை உதவிகளையும் பெற்ற வெள்ளையக் கிழக்கிந்தியக் கம்பெனியர் சும்மாயிருப்பார்களா? தமிழ் நாட்டில் பல இடங்களில் தம் படைகளையும், ஆயுதச்சாலைகளையும் நிறுவிக் கொண்டார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

        இவர்களின் ஆதிக்க வெறியினை அறிந்து கொண்ட பாஞ்சாலங் குறிச்சி, வீரபாண்டிய கட்ட பொம்மன் வரி செலுத்த மறுத்து விட்டார். கட்டபொம்மனை அடிமைப் படுத்த ஆங்கிலேயர் விரும்பினர். சுதந்திர உணர்ச்சி கொண்ட கட்டபொம்மன் சிறு நரிகளின் கூட்டத்தில் சேராது வீர முழக்கமிட்டுக் கொண்டிருந்தனன். சில பாளையக்காரரின் உதவியோடும், தம் வலிமையான படையோடும் ஆங்கிலேயர் போரிட்டு கட்டபொம்மனை சிறைப்பிடித்து “கயத்தாறு” என்னுமிடத்தில் தூக்கிலிட்டனர். கட்டப்பொம்மனின் உயிர் பிரிந்தது. ஆனால், அவரது சுதந்திர உணர்வு வீறு கொள்ளத் தொடங்கியது. கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரை சிறையிலிருந்து தப்பி விட்டார். வெள்ளையருக்கு அதிர்ச்சி ஆயிற்று.

வேலு நாச்சியார்

        இராமநாதபுரத்து அரச குடும்பத்தினராகிய தேவர்கள். சிவகங்கையினை ஆண்டு வந்தனர். முதலில் சசிவர்னத் தேவர் இருபத்தைந்து ஆண்டுகள் ஆண்டார். அதன் பிறகு அவரது மகன் முத்து வடுக நாதத்தேவர் ஆண்டார். முத்து வடுக நாதத்தேவரின் மனைவி பெயர் வேலு நாச்சியார். வேலு நாச்சியாரும் கைகளில் வாள் பிடித்து போர் செய்யும் அளவிற்கு ஆற்றல் பெற்றவர்.

        முத்து வடுக நாதத்தேவர் சீவகங்கை சீமையை ஆண்டு கொண்டிருந்த போது ‘ஜெனரல் ஸ்மித்து’ படையெடுத்து வந்து இராமநாதபுரத்தைக் கைப்பற்றினார். ‘ஸ்மித்து’ சிவகங்கை சீமையைக் கைப்பற்ற கருதினாலும், முத்து வடுக நாதரின் வீரத்தைக் கண்டு அஞ்சினார். இந்த சமயத்தில் தான் முத்து வடுக நாதர் மருதிருவரையும் தம் அமைச்சர்களாக வைத்துக் கொண்டார். அமைச்சரான மருதிருவர் பதினாயிரக்கணக்கான போர் வீரர்களை உருவாக்கினர்.

சிவகங்கை சீமை சுற்றி வளைப்பு

        வடுக நாதர் சீரோடு சிவகங்கையை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் தான் ‘ஸ்மித்’ எப்படியும் சிவகங்கையைப் பிடித்தே தீர வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆற்காடு நவாபுவின் சேனைகளையும், கூலிப் படைகளையும் திரட்டி, திரண்ட படைகளுடன் சிவகங்கை சீமையினைச் சுற்றி வளைத்துக் கொண்டார்.

        அந்நியப் படைகள் தம் நகரைச் சுற்றி வளைத்த செய்தி கேட்டு முத்து வடுகநாதர் துடித்தார். கண்கள் சிவந்தன. வெள்ளையன் படை மேலும் மேலும் பெருகின. முத்து வடுக நாதர், மருது சகோதரர்களைப் பார்த்தார். “அரசே! கவலை எதற்கு? பயிற்சி பெற்ற படைகள் நம்மிடம் உள்ளன. போருக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை. பரங்கியர்களின் தலையைக் கொய்து சிவகங்கை அரண்மனை வாசலில் மக்கள் பார்வைக்கு வைப்போம்” என்று கர்ஜனை புரிந்து இளைய மருது போருக்குப் புறப்பட்டான்.

காளையார் கோவில்

        வீர வனிதை வேலு நாச்சியாரும் வீர மொழிகளை வாரி வழங்கிப் படைகளைப் போருக்கு ஆய்த்தமாக்கினாள். காட்டரண் சூழ்ந்த காளையார் கோவில் தான் சிவகங்கை சீமையை விட பாதுகாப்பான இடமெனத் தெரிந்து அங்கு புறப்பட்டனர். வெள்ளையர் படைகள் காளையார் கோவிலுக்குள் எளிதில் நுழைய முடியாது என்பதும் அவர்களின் கருத்து. ஆற்காடு நவாபும், வெள்ளையர் படைத் தலைவனும் புதுக்கோட்டை மன்னரின் உதவியையும் நாடினர். புதுக்கோட்டை மன்னரும் அவர்களுக்கு உதவ முன் வந்தார். இதற்கிடையில் முத்து வடுகநாதர், வீர் வேலுநாச்சியார், பெரிய மருது, சின்ன மருது முதலியோர் காளையார் கோவிலில் இருக்கும் செய்தியினை ஒற்றன் ஒருவன் ஸ்மித்துக்கு தெரியப் படுத்தி விட்டான்.

மும்முனைத் தாக்குதல்

        கர்னல் பான்ஷோர் தலைமையில் நவாபும், ஆங்கிலப் படைகளும் காளையார் கோவில் நோக்கி வந்தன. முத்து வடுகநாதர் படைகளின் ஊடே பாய்ந்து பகைவர் படைகளை வெட்டி வீழ்த்தினார். வீர வேலு நாச்சியார் படை மறவர்களிடையே புகுந்து போராடியும் தம் படை வீரர்களுக்கு வீர உரை கூறியும் போர் நடுவே சென்றார். மருது சகோதரர்கள் பகைவர்களைக் கொன்று குவித்தனர். வடுக நாதர் படைகளின் முயற்சிகள் வீணாகிக் கொண்டே வந்தன. மும்முனைத் தாக்குதல்களில் ஆற்காடு நவாபுவின் படைகள், ஆங்கிலேயர்களின் படைகள், புதுக்கோட்டை மன்னரின் படைகள் ஈடுபடுத்திக் கொண்டன. கோட்டை மதில் சுவர்கள் இடிந்தன.

முத்து வடுக நாதர் மரணம்

        பெரிய மருது வடுக நாதரிடம் வந்து, “அரசே! குதிரைகள் தயாராக உள்ளன, புறப்படுங்கள், மறுமுறை நாம் படை நடத்தி வெற்றி சேர்க்கலாம்” என்றான்.

        வடுக நாதரோ, “மருது! என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். என் உடலில் ஒரு சொட்டு இரத்தம் உள்ளவரை எதிரிப்படையோடு போரிட்டுக் கொண்டிருப்பேன். இராணி வேலு நாச்சியாரைக் காப்பாற்று” என்று கேட்டுக் கொண்டார்.

        முத்து வடுக நாதரை ஆங்கிலப் படைகள் சுற்றி வளைத்தன. தன்னால் முடிந்தவரை போராடினார். பகைவரின் குண்டு பாய்ந்தது. அவரின் தொடையினைத் துளைத்தது. கடைசி வரை பகைவரோடு போரிட்டபடியே அந்த மாவீரர் மரணத்தைத் தழுவினார்,

ஹைதர் அலியின் உதவி

        ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

        வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கலில் ஆட்சி செய்த ஹைதர்அலியின் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்கை நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசி வேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.

மீண்டும் வேலு நாச்சியார் ஆட்சி

        கி.பி.1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை  கி.பி.1779 இல் தொடங்கி ஆற்காட்டு நவாப், புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை வெற்றி கொண்டு கி.பி.1780 இல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

        இராணி வேலு நாச்சியார் சிவகங்கையின் அரச பதவியினை ஏற்றார். மருதிருவர் மந்திரிகளாகப் பணி புரிந்தனர். கி.பி.1800 இல் இராணி வேலு நாச்சியார் இறந்து விட்டார். மருது பாண்டியரே சிவகங்கைச் சீமையின் அரசராயினர். இருபது வருடங்கள் நலத்தோடும் வளத்தோடும் நாட்டை ஆண்டனர்.

வழிபாட்டுத் தலங்களும் சமய ஒற்றுமையும்

        மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர்.

இவர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் கட்டியதுடன் குன்றக்குடி, திருமோகூர் கோயில்களுக்கும் திருப்பணி செய்தனர்.

மானாமதுரை சோமேசர் கோயிலுக்கு கோபுரம் கட்டித் தேரும் செய்தளித்துள்ளனர். மருது பாண்டியர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இத்திருக்கோயிலின் பெருமை பற்றிப் சிவகங்கைக் கவிஞர் வேதாந்தம் சுப்பிரமணியம் வானர வீர மதுரைப் புராணத்தை இயற்றியுள்ளார். இந்நூலின் இறுதி பாடல் மருது சகோதரர்களை “யதுகுல மருது பூபன் மைந்தர்கள் ” என்று குறிப்பிடுகிறது.

இளையவரான “சின்ன மருது” அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.

சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்

        மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, மறைந்த திப்புவின் தளபதி தூந்தாகி வாக் ஆகியோருடன் ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.

1801 சூன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.

1857 சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டிற்குமுன் நடந்த இந்திய தென்னிந்திய புரட்சியே முதல் ஒருங்கிணைந்த விடுதலைப் போராட்டமாக பல வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் போர்

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறி 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது.

காளையார்கோவில் காடுகளில் கொரில்லா முறையில் போர் நடந்தது. புதுக்கோட்டை தொண்டைமான், ஆங்கிலேயருக்கு படை அனுப்பி உதவி செய்தார்.

மருது சகோதரர்கள் மற்றும் பிற விடுதலை வீரர்களைப் பிடித்துக் கொடுப்போர்க்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் காட்டினை அழிப்பவர்க்கு, அழிக்கப்படும் நிலம் 20 வருடத்திற்கு இலவச குத்தகையாக வழங்கப்படும் என ஆங்கிலேயர் அறிவித்தனர்.

ஒக்கூர் காட்டில் பதுங்கியிருந்தபோது, தன் உதவியாளன் கருத்தானால் சின்ன மருது சுடப்பட்டார். இதற்காக கருத்தானுக்கு ஆங்கிலேயர் வெகுமதி அளித்தனர்.

காளையார்கோவிலில் களோனல் அக்னியூ மருது சகோதரர்களை கைதுசெய்தார். கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் இஸ்திமிராக நியமித்தார். சிவகங்கையின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. சிவகங்கை அரசர் வெங்கம் உடையனத்தேவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பாகனேரி அரசர் வாளுக்குவேலி அம்பலம், மருது சகோதரர்களை மீட்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன

தூக்குத் தண்டனை.

மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். மருதுக்களுடன் அவர்கள் ஆண் வாரிசுகள் அனைவரும் ( "துரைச்சாமி" சின்ன மருதுவின் மகன் ஒருவரைத் தவிர) தூக்கிலிடப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது தலையை காளையார்கோயில் காளீஸ்வரர் கோவில் முன்பு புதைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

நினைவு

மருது சகோதரர்களின் மறைவு மற்றும் ஒட்டுமொத்த குடும்ப அழிப்பு சிவகங்கை மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை சரித்திரக் கும்மி, சிவகங்கை சரித்திர அம்மானை, நாட்டுப்புறப் பாடல்களின் வழியாக இதனை அறியமுடிகிறது.

நினைவிடம்

மருது சகோதரர்களின் முழு உருவ கற்சிலைகள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் காளீஸ்வரர் கோயிலின் உட்புறமும், மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்ப்புறமும் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு :

உண்மையை உலகறிய செய்வோம். 

இந்தியாவில் உண்மையான வரலாறுகளை மாற்றி எழுதி வரும் இந்த காலத்தில் வாசகர்களாகிய தாங்கள், www.historybiography.com இல் வெளிவரும் உண்மையான வரலாறுகளை நமது உறவுகளிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கொண்டு செல்லும் பணியை செய்ய, இத்துடன் உள்ள Share Button களை Click கிளிக் செய்து Share (பகிர) செய்யவும். நன்றி.

English Overview: Here we have a Marudhu Pandiyars (Periya Marudhu and Chinna Marudhu)  biography in Tamil. Marudhu Pandiyars (Periya Marudhu and Chinna Marudhu) were chieftains of Sivagangai, Tamil Nadu, India. Above we have Marudhu Pandiyars (Periya Marudhu and Chinna Marudhu) history in Tamil. We can also say it asMarudhu Pandiyars (Periya Marudhu and Chinna Marudhu) varalaru in Tamil or Marudhu Pandiyars (Periya Marudhu and Chinna Marudhu) essay in Tamil or Marudhu Pandiyars (Periya Marudhu and Chinna Marudhu) Katturai in Tamil.



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

சிறப்பு வெளியீடுகள்

Hyder Ali

ஹைதர் அலீ - மைசூர் மன்னர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Tippu Sulthan

திப்பு சுல்த்தான் - மைசூர் புலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Akbar

அக்பர் முகலாய பேரரசர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Aurangzeb

ஒளரங்கஜீப் முகலாய பேரரசர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Khan

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha

ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.