சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 2)
முன்னுரை
நன்கு கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைக்கும் விதத்தில், இப்பொழுது நாட்டில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முதல் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தார்களா? என இப்பொழுதுள்ள தலைமுறையினர் கேட்கக் கூடிய அளவுக்கு, உண்மை ஒழிக்கப்படுகிறது.
அந்தப் பொய்திரையைக் கிழித்தெறிய, முஸ்லிம் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், முஸ்லிம் சமுதாய ஸ்தாபனங்களுக்கும் பரம விரோதியாக இருந்த ஒருவருடைய வாக்கு மூலத்தை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட உள்ளோம். அவர் தமது நூலில் முஸ்லிம்களைப் பற்றிய உண்மையை எவ்வளவோ மறைத்தும், மேலும் அவரால் மறைக்க முடியாத சில முஸ்லிம் தியாகிகளைப் பற்றிய உண்மைகளை, அவர் எழுதிய படி, எவ்வித திருத்தமும் மாறுதலும் இன்றி அப்படியே எடுத்து இடம் பெறச் செய்திருக்கின்றோம். அந்த நூலை எழுதியவர், முன்னால் ஹிந்து மகாசபைத் தலைவர் திரு. வீர சாவர்க்கர். அவர் எழுதிய நூல் “முதல் இந்திய சுதந்திர யுத்தம்” (தமிழாக்கம்)
மெளல்வி அஹமத் ஷா
மீரத் ராணுவ முகாகுக்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த ஒரு பக்கிரியை, சர்க்கார் அவ்விடத்தை விட்டுச் சென்று விடும்படி உத்தரவிட்டார்கள். சர்க்காரின் உத்தரவு கிடைத்ததும் அந்த பக்கிரி ஒன்று அறியாத ஒரு சாதுவைப் போல யாதொரு பதிலும் கூறாமல் தன் யானை மீதேறி, பக்கத்திலுள்ள கிராமத்துக்குச் சென்று சிப்பாய்களின் வீடுகளில் சொஸ்தமாக வசித்துக் கொண்டு தமது அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார்.
அவர் தான் அதி தீவிர தேச பக்தரான மெளல்வி அஹமத் ஷா என்பவர். அவரது புனிதமான பெயரானது ஹிந்துஸ்தானத்துக்கே ஒரு ஜோதியைக் கொடுத்திருக்கிறது. தேசத்துக்காக அவர் புரிந்த அற்புத சாகஸங்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. புரட்சி யுத்த விதையை தேசமெங்கும் விதைப்பதற்காக யாத்திரை சென்று வந்த அவர், லட்சுமணபுரியில் நடந்த பொதுக் கூட்டங்களில் பதினாயிரக்கணக்கான ஜனங்களுக்கு முன்னிலையில் பகிரங்கமாக தேசியப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்கள் பூண்டையே ஒழித்தாலன்றி, தாய் நாட்டையோ, மதத்தையோ பாதுகாக்க முடியாதென்பது தான் அவர் செய்த உபதேசம். அவ்விதம் உபதேசம் செய்ததற்காக அவர் மீது ராஜத்துவேஷ குற்றம் சாட்டி, ஆங்கிலேயர்கள் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தனர். [ஆனால் அத்தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை.] [பக்கம் 65]
மகானும் ஞானியுமான அஹமதுஷா சுதந்திர யுத்தத்துக்கான வலைகளை வெகு திறமையுடன் வீசி வந்தார். அந்த வலை லட்சுமணபுரியிலும், ஆக்ராவிலுமுள்ள மூலை முடுக்குகளிலும் கூடப் பரவிக் கிடந்தது. [பக்கம் 69]
இந்திய சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்றுள்ள மெளல்வி அஹமதுஷாவும், ஆங்கிலேயர்களின் கொடுங் கோன்மைக்காளான பைஜாபாத் தாலுக்தார்களில் ஒருவர். மற்றவர்களைப் போலவே அவரும் தமது சொத்துக்களை ஆங்கிலேயர்களிடம் பறி கொடுத்தார். இந்தியாவில் அவதரித்த இணையற்ற தியாக வீரர்களிலும் தேச பக்தர்களிலும் அவரும் ஒருவர். ஆங்கிலேயர்கள் அபகரித்துக் கொண்ட தமது தாலுக்தாரியை மீண்டும் பெற்றே தீருவதென்று மாத்திரமல்ல, தமது தேசத்தையும் அவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்தே தீருவதென்று பிரதிக்ஞை செய்து கொண்டு, அன்னியர்களைத் தமது தேசத்திலிருந்து விரட்டுவதற்காக வாளை உறுவினார்.
அயோத்தியை ஆங்கிலேயர்கள் ஆக்ரமித்துக் கொண்டதிலிருந்து, அஹமதுஷா தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தேசத்துக்காகவும் மதத்துக்காகவும் அர்ப்பணம் செய்வதென உறுதி கொண்டார். பின்னர் அவர் மெளல்வியாகி, புரட்சிப் பிரச்சாரத்துக்காக ஹிந்துஸ்தானம் முழுவதும் யாத்திரை செய்யப் புறப்பட்டார். இந்த அரசியல் துறவி சென்றவிடம் எல்லாம் ஜனங்களிடையே அதற்கு முன்னிராத மகத்தான விழிப்பு ஏற்படத் துவங்கியது புரட்சிக் கட்சியின் அரும் பெரும் தலைவர்களையும் அவர் நேரில் கண்டு பேசி வந்தார்.
அயோத்தி ராஜ குடும்பத்தில் அவர் கூறியது தான் சட்டம்.! ஆக்ராவில் இரகசிய சங்கத்தின் கிளை ஸ்தாபன மொன்றையும் அமைத்தார். ஆங்கில ஆதிக்கத்தை அழிக்க வேண்டிய அவசியம் பற்றி லட்சுமணபுரியில் பகிரங்கமாக உபதேசித்தார். அயோத்தி ஜனங்களுக்கு அவர் கண்ணாக இருந்து வந்தார். தனது தேசம், மனம், பேச்சு, புத்தி எல்லாவற்றையும் உபயோகித்து தேசத்துக்காக சதா உழைத்து வந்ததுடன், ஜனங்களுக்கு சுதந்திர உபதேசம் செய்து, புரட்சி வலையையும் ஒழுங்காகப் பின்னி முடித்தார்.
பிறகு அவர் தேசத் தொண்டில் தமது எழுத்து வன்மையையும் உபயோகிக்கலானார். ஏராளமாக புரட்சி பிரசுரங்களை எழுதி அவற்றை அயோத்தி மாகாணம் முழுவதும் விநியோகம் செய்தார். ஒரு கையில் வாளையும் மற்றொரு கையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத் தியாகி புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை. அவரது சலியா உழைப்பின் பயனாக சுயராஜ்ய தீபமானது மங்காத ஒளியுடன் எரியத் தொடங்கியது.
இதையெல்லாம் கண்டு ஆங்கிலேயர்கள் கோபமும் திகிலும் கொண்டு அவரைக் கைது செய்யயும் படி உத்தரவிட்டார்கள். எனினும் அவ்வளவு சீரும் சிறப்பும் செல்வாக்கும் பொருந்திய ஒரு தலைவரைக் கைது செய்ய போலீசார் அதிகாரிகளுக்கு உதவி புரியவில்லை.! எனவே அவரைக் கைது செய்ய ராணுவத்தை அனுப்பும் படி நேர்ந்தது.! பின்னர் அவர் மீது நடந்த ராஜத் துரோக வழக்கில், கொடிய ஆங்கில அதிகாரிகள் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்து, சிறிது காலம் வரையில் அவரை பைஜாபாத் சிறையில் வைத்திருந்தார்கள்.
மெளல்வி அஹமதுஷா திறமையைப் பற்றி ஆங்கில சரித்திராசிரியர்கள் புகழ்ந்து கூறியிருக்கிறார்களெனினும், அவர்களுடைய ஜன்ம புத்தியை அனுசரித்து இதர அரும் பெரும் தலைவர்களைப் போல அவரையும் “கலகக்காரர்”களின் கோஷ்டியில் சேர்த்துள்ளனர், அஹமதுஷா, சென்னையில் ஒரு பிரபல குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கப்பின்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆங்கில அதிகார அரக்கனும் மெளல்வியும் ஒருவரை ஒருவர் தூக்கிலிடுவதற்காகப் போட்டி போட்டனர்.! ஆங்கில அதிகாரத்தை தூக்கிலிட மெளல்வி முயற்சித்து வருகையில், மெளல்வியைத் தூக்கிலிடுவதற்காக ஆங்கிலேயர்கள் வெகு அவசரமாகத் தூக்கு மேடையை அமைத்தனர். ஆயினும் ஆங்கிலேயர்கள் ஒன்று நினைக்க ஆண்டவன் ஒன்று நினைத்து விட்டார்.! ஆங்கிலேயர்கள் தக்களுடைய அவசரத்தில் மெளல்வியை பைஜாபாத் சிறையிலேயே இருக்கும் படி விட்டு விட்டு, தங்களுக்குத் தாங்களே தூக்கு மரங்களை நாட்டிக் கொண்டார்கள்.!
ஏனெனில் பைஜாபாத்திலிருந்த புரட்சி மருந்துக் குவியலுக்கு, அஹமதுஷா சிறைப்பட்டது ஒரு தீப்பொறி போலாகியது. அந்த பொறி தெறித்ததால், பேரிடி முழக்கத்துடன் புரட்சி மருந்துக் குவியல் பற்றிக் கொண்டது. உடனே ராணுவமுள்பட அந்நகர ஜனங்கள் யாவரும் யுத்த கர்ஜனையுடன் பொங்கியெழுந்தனர். சிப்பாய்களை ஒழுங்காக அணிவகுத்து நிற்கும்படி செய்வதற்காக ஆங்கில அதிகாரிகள் அணிவகுப்பு மைதானத்துக்குச் சென்ற போது, இனி தாங்கள் அன்னியர்களின் உத்தரவுக்கு கீழ்படிய முடியாதென்றும், தங்களுக்கு கட்டளையிட இந்திய அதிகாரிக்கு மாத்திரமே உரிமை யுண்டென்றும், தங்களுடைய தலைவர் சுபேதார் தூலிப் சிங்கென்றும் சிப்பாய்கள் தைரியமாகவும் தெளிவாகவும் கூறிவிட்டார்கள்.
பின்னர் சுபேதார் தூலிப் சிங் ஆங்கில அதிகாரிகளை யெல்லாம் சிறைப்படுத்தினார். ஜனங்களும் சிப்பாய்களும் பொது ஜன வீரரால் புனிதமடைந்துள்ள சிறைக்குச் சென்றனர். சிறைக் கதவுகள் உடைத்தெறியப்பட்டன. ஜனங்களின் சந்தோஷ ஆரவாரத்தினிடையே மெளல்வி அஹமதுஷா விலங்குகள் தூள் தூளாயின. மெளல்வி புனர் ஜென்மமடைந்ததைக் கண்டு ஜனங்கள் ஆனந்தம் கொண்டனர். அவரைத் தூக்கிலிடத் தயாராக இருந்த ஆங்கில அதிகாரமானது இறுதியில் அவரால் தூக்கிலிடப்பட்டது.! அஹமதுஷா பைஜாபாத்தில் புரட்சி இயக்கத்துக்குத் தலைமை வகிக்க இசைந்தார். அவர் விடுதலை அடைந்ததும் செய்த முதற் காரியம் என்னவெனில், தனக்குத் தூக்குத் தண்டனை விதித்தவன் மீது வஞ்சம் தீர்த்ததுதான். ஆனால் அவர் தீர்த்த வஞ்சம் மிகவும் விசித்திரமானது. அதாவது தாம் சிறையிலிருந்த போது தாம் “ஹுக்கா” பிடிக்க (புகைபிடித்தல்) அனுமதித்ததற்காக கர்னல் லெனாக்ஸிற்கு வந்தனமளித்து ஒரு செய்தியனுப்பினார்! அப்போது சிறையிலிருந்த லெனாக்ஸிற்கு அச்செய்தி அறிவிக்கப்பட்டது. மற்றும் தம்மைத் தூக்கிலிடுவதற்காகத் தூக்குமேடை அமைத்த ஆங்கில அதிகாரிகளைப் பலியிடும் படி அவர் உத்திரவிடவில்லை. கம்பீரமும் பெருந்தன்மையும் வாய்ந்த அஹமதுஷா, பைஜாபாத்திலிருந்து உடனே ஓடிவிடுமாறு ஆங்கில அதிகாரிகளை எல்லாம் எச்சரித்தார். [பக்கம் : 214, 215, 216]
அன்னிய ஆதிக்கம் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்லேயே இரத்தம் கொதித்த தேச பக்தர்களுள் - சுயராஜ்யக் கொடியை நாட்டில் கம்பீரமாய்ப் பறக்க விடுவதற்காக, தங்களுடைய சகலவற்றையும் தியாகம் செய்து விட்டு போர்க் களத்தில் குதித்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமீந்தார்கள், தாலுக்தார்களுள் ஒரு வீரரை நாம் எக்காலத்திலும் மறப்பதற்கில்லை. லட்சுமணபுரி சிம்மாசனத்தைப் பாதுகாப்பதற்காக முதன் முதலாகப் போரில் குதித்தவர் அவர் தான். ராணுவ மந்திராலோசனை சபையிலும் மிகத் திறமை வாய்ந்தவர் அவர் தான். அந்த மேதாவி நான்கு மாத காலமாகப் போர்க்களத்திற்கும் மந்திராலோசனை சபைக்குமாக நடமாடிக் கொண்டிருந்தார். அந்த வீரர் தான் பைஜாபாத் தேச பக்தரான அஹமதுஷா மெளல்வி யாவார்.!
அன்னார் புரட்சிப் பந்தத்தைத் கையிலேந்திச் சென்று, தேசம் முழுவதும் சுதந்திரத் தீயை மூட்டினார். அப்போது தான் ஆங்கில அதிகாரிகள் அவரைக் கைது செய்து, தூக்கிலிடும் படி உத்தரவிட்டனர். தூக்கிலிடு முன் அவரை பைஜாபாத் சிறையில் வைத்திருந்தார்கள். ஆனால் அங்கு ஏற்பட்ட புரட்சி சண்ட மாருதத்தின் போது சிறை தகர்க்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். ஆங்கிலேயர்களால் சிறைப்பட்ட சில தினங்களில் அவர் சுயராஜ்ய சிம்மாசனத்தில் இடம் பெற்றார்.! போர்க்களத்தில் அவர் வீரர்களுக்கெல்லாம் வீரராகத் திகழ்ந்தது போலவே, அரசியலிலும் மகா நிபுணராக இருந்து வந்தார். மந்திராலோசனை சபையில் அவர் தமது வாசாலக சக்தியால் எல்லோரையும் வசீகரித்தது போலவே, போர்க் களத்திலும் அவர் காட்டிய தைரியத்தால் நண்பர்கள், விரோதிகள் எல்லோருடைய புகழுரைக்கும் பாத்திரரானார்.
“அஹமதுஷா மெளல்வியின் முயற்சிகள் மிகுந்த நம்பிக்கையை அளித்தன. அவரது வாசாலக சக்தியும், கம்பீரமான தோற்றமும் பலருடைய ஹிருதயத்திலும் தேச பக்தியை யுண்டு பண்ணியது. எல்லோரும் ஏகோபித்து உறுதியுடன் தாக்கும் பட்சத்தில், அந்நிலைமையிலும் கூட ஆங்கிலேயர்களைத் தோற்கடிக்க முடியுமென்று அவர் திட்டமாகக் கூறினார். அவ்விஷயமாக அவர் லட்சுமணபுரி தர்பாரிலும் மிகுந்த நம்பிக்கை யுண்டாகும்படி செய்ததுடன், குழப்பமாக இருந்த ராணுவத்திலும் சிறிது ஒழுங்கு நிலவும் படி செய்தார்.
அவ்வமயம் அவர் பல கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. லட்சுமணபுரி தர்பாரில் அவரது செல்வாக்கையும், திறமையையும் கண்டு பொறாமை கொண்ட சில மட்டிகள் அவர் மீது ஆதாரமற்ற கோட்களைச் சொல்லி அவர் கைதியாகும் படி செய்துவிட்டனர். எனினும் சிப்பாய்களிடம் பீகத்தைவிட மெளல்விக்கு அதிக செல்வாக்கு இருந்ததாலும் மற்றும் டில்லியிலிருந்து வந்திருந்த துருப்புகள் அவரிடம் பூரண நம்பிக்கை வைத்திருந்த தாலும், அவருடைய வற்புறுத்தல் காரணமாக பீகம் இறுதியில் மெளல்வியைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். விடுதலையான பின் ராணுவ நிலைமை பற்றி அவரது அபிப்பிராயத்தைக் கேட்ட போது அவர் கூறியதாவது “சுப வேளை தவறி விட்டது. இப்போது எல்லாம் தாறுமாறாகக் கிடக்கின்றது. இனி வெற்றி பெறுவது கஷ்டமெனினும், நமது கடமையைச் செய்ய வேண்டுமல்லவா? அதற்காகவாவது நாம் போராடியே தீர வேண்டும்.”
சிறையிலிருந்து வெளிவந்த பின்னரும், லட்சுமணபுரி ஜனங்களிடையே அவருக்கிருந்த செல்வாக்கு சிறிதும் குறையவில்லை. துருப்புகளிடையிருந்து வந்த சில்லறைச் சச்சரவுகளை அவர் ஒழித்து, அவர்களின் மனதில் ஒரு புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும், தங்களை ஆக்கிரமிக்க முயற்சித்து வரும் பகைவர்களை அழிக்க வாட்களை உறுவ வேண்டுமென்ற ஆர்வத்தையும் உண்டு பண்ணினார். மற்றும் அப்பெரியார் அத்துடன் திருப்தியடையாது துருப்புக்களுக்குத் தாமே தலைமை வகித்துப் பல யுத்தங்களையும் நேரில் நடத்தினார். தேச பக்தர்கள் ஆலம்பாக்கைத் தாக்கிய போதெல்லாம் மெளல்வி போர் முனையின் முன்னணியிலேயே நின்று போர் புரிந்தார். [பக்கம் : 349, 350, 351]
கோடிக்கணக்கான தம் தேச ஜனங்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், கெளரவத்திற்காகவும் தமக்கு எத்தனை கஷ்டங்கள் நேர்ந்தாலும் சிறிதும் சோர்வின்றிப் பறங்கியர்களை எதிர்த்து போராடி வந்த மெளல்வி அஹமது ஷாவை நாம் எக்காலத்திலும் மறப்பதற்கில்லை. தங்களுடைய ஆக்கிரம ஆசைக்குப் பெரும் முட்டுக் கட்டையாக இருந்த மெளல்வியை ஒழிக்கும் முயற்சியில் தாங்கள் மீண்டும் தோல்வியுற்றதைக் கண்டு ஆங்கிலேயர்கள் அடியோடு நம்பிக்கை யிழந்தனர். மிகவும் சக்தி பொருந்திய அப்புரட்சித் தலைவரைக் கொல்ல வல்லவர் யார் என்று ஆலோசிக்கலாயினர். அந்த நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது பற்றி காலினின் மூளை தீவிரமாக வேலை செய்யத் துவங்கியது.
அதை நிறைவேற்றுவதற்குற்ற சிறந்த வழியென்ன? அவ்விஷயமாக ஆங்கிலேயர்கள் கலங்க வேண்டிய அவசியமே இல்லை! இந்தியாவில் ஆங்கில ஆதிக்கத்துக்கு விரோதிகளான தேச பக்தர்களை ஒழிக்கப் பல தடவைகள் முயற்சி செய்தும் ஆங்கிலேயர்கள் தோல்வியே அடைந்தனர். அவ்விதமிருந்தும், இறுதியில் அவர்களின் அக்கொடிய நோக்கம் நிறைவேறுவதற்காக அவர்களுக்கு உதவியளிக்க துரோகிகள் முன் வரவில்லையா? அதுபோலவே மெளல்வியை வீழ்த்தும் சக்தி ஆங்கிலேயர்களின் வாட்களுக்கில்லை யெனில், அவர்களுக்காக எதையும் சாதிக்கத் தயாராயிருக்கும் துரோகிகளின் வாட்கள் அதை நிறைவேற்றக் கூடுமல்லவா? எனவே ஆங்கிலேயர்கள் ஏன் கலங்க வேண்டும்?.
மெளல்வி அயோத்திக்குள் பிரவேசித்த பின், தம்மால் இயன்ற வரையில் பகைவர்களை எதிர்த்து வந்ததுடன், அவர்களை அம் மாகாணத்திலிருந்து விரட்டுவதற்குற்ற சிறந்த வழி என்னவென்பது பற்றியும் யோசிக்கலானர். அயோத்தியில் மீண்டும் புரட்சிச் சூறாவளியைக் கிளப்பி விடுவதற்கான திட்டமொன்று அவரது மனதில் உருவாகி வந்தது. அவ் விஷயமாக பாவன் ராஜா தமக்கு ஒரளவு உதவி புரியக் கூடுமென்று அவருக்குத் தோன்றியதால், அந்நியர்களை நாட்டிலிருந்து விரட்டத் தமக்கு சகாயம் செய்யுமாறு வேண்டிக் கொண்டு அயோத்தி பீகம் முத்திரை யிட்ட கடிதமொன்றை அவனுக்கு அனுப்பினார்.
சோம்பேறித் தனமும், மடத்தனமும், கோழைத்தனமுமே உருவாகி தொந்தி விழுந்து கிடந்த பாவன் ராஜாவுக்கு ‘யுத்தம்’ என்ற வார்த்தையே பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.! அவன் சம்பந்தப்பட்ட வரையில் அந்நியர்களை எதிர்த்துப் போர் செய்வதென்ற பேச்சிற்கே இடமில்லை! அக்கடிதத்தை பார்த்ததும் அவனது மனதில் துரோக சிந்தனைகள் எழத் தொடங்கின உடனே மெளல்வியைத் தாம் நேரில் பார்க்க விரும்புவதாக அவன் பதில் கடிதம் அனுப்பினான். அவனது துரோக சிந்தனையை அறியாத மெளல்வி, எப்படியாவது தேசத்தை அன்னியர்களிடமிருந்து விடுவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தால் அந்த ராஜாவின் அழைப்பைக்கு இணங்க உடனே யானை மீதேறிப் புறப்பட்டுச் சென்றார்.
அவர் நகருக்குள் சென்றதும் நகர வாயிற்கதவுகளெல்லாம் திடீரென்று மூடப்பட்டன.! கோட்டை சுவரின் மீது காவலர்கள் சூழ ராஜா ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு பக்கத்தில் அவனுடைய தம்பியும் இருந்தான். அவர்களைப் பார்த்த விநாடியே, தாம் துரோக வலையில் அகப்பட்டுக் கொண்டதை மெளல்வி உணர்ந்தார். கதவுகள் மூடப்பட்ட தன் அர்த்தத்தையும் தெரிந்து கொண்டார். திடுக்கிடத் தக்க அந்நிலையிலும் அவர் தைரியத்தை யிழக்காமல், அத் துரோகியுடன் சமரசப் பேச்சை ஆரம்பித்தார்.!
ஆனால், கல்லையும் கரைக்க வல்ல அந்தக் கர்ம வீரரின் கனிமொழிகள், கல்லினும் கடிய அக்கொடியர்களின் மனதை உருக்கவில்லை. கழுதையறியுமா குங்குமப்பூ வாசனையை.! ஒன்று அன்னியர்களை நாட்டிலிருந்து விரட்ட வேண்டும். அல்லது அம்முயற்சியில் தன் உயிரைத் தியாகம் செய்ய வேண்டு மென்ற மெளல்வியினுடைய புனித சித்தாந்தத்தின் மகிமையை அந்த ஆடுதன் ராஜா அறிவதெங்ஙனம்.! கதவுகளைக் திறக்க அக் கோழை இசைய மாட்டானென்பது நிச்சயமாகத் தெரிந்ததும், தமது யானை கதவை முட்டித் தள்ளிக் கொண்டு போகட்டுமென மாவுத்தனுக்கு கட்டளையிட்டார். அந்த பிரம்மாண்ட யானையும் அவ்வாறே முட்டியது.
இன்னும் ஒரே தடவை முட்டினால் போதும், கதவு தடாலென்று விழுந்து விடும். ஆனால், அந்தோ! அதற்குள் அந்த துரோகியின் தம்பி மெளல்வியைக் குறி வைத்துச் சுடவே, அப்பெரியார் தோட்டா பாய்ந்து வீரஸ்வர்க்க மடைந்தார். இணையற்ற தேச பக்தரும், எண்ணிக்கையற்ற ஆங்கில வீரர்களை அலற அடித்தவரும், மகா வீரருமான மெளல்வி அஹமதுஷா, துரோகியான ஒரு கோழையின் கையால் மரணம் அடையவேண்டுமென்பது பாழும் விதியின் கட்டளை போலும்.!
மன்னனின் மன்னனான மெளல்வி கீழே வீழ்ந்ததும் ஆடுதன் ராஜாவும் அவன் தம்பியும் கோட்டைச் சுவரிலிருந்து கீழே இறங்கி வந்து, அவரது தலையை வெட்டி ஒரு துணியால் மூடி எடுத்துக் கொண்டு, பதின்மூன்று மைல்கள் தூரத்திலுள்ள பிரிட்டிஷ் தாணாவிற்கு ஓடினர். அவ்வமயம் அங்கு ஆங்கில அதிகாரிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரும் தாங்கள் கொண்டு சென்ற பொக்கிஷத்தை அவிழ்த்து, உதிரம் பெருகிக் கொண்டிருந்த மெளல்வியின் தலையை ஆங்கில அதிகாரிகளின் காலடியில் உருளவிட்டனர். “நாகரிக முதிர்ச்சி” பெற்ற ஆங்கிலேயர்கள் மறுநாள் அதைக் கொத்தவாலியில் எல்லோரும் பார்ப்பதற்காக ஒரு கம்பத்தில் சொருகி வைத்தார்கள்.! அதைக் கொண்டு வந்த கொழுத்த மிருகத்திற்கு (ராஜா ஜகன்னாத சிங்) வெறுக்கத்தக்க அத்துரோகச் செய்கைக்காக அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் வெகுமதியும் அளித்தனர்.!
மெளல்வி மாண்ட செய்தி இங்கிலாந்திற்கு எட்டியதும் ஆங்கிலேயர்களெல்லோரும் பெருமூச்சு விட்டு ஆனந்தக் கூத்தாடினர். “வட இந்தியாவிலே பிரிட்டிஷாரின் பயங்கர விரோதியான மெளல்வி அஹமதுஷா மரணமடைந்ததைக் குறித்து ஆங்கிலேயர்கள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர்” என்று சரித்திராசிரியரான ஹோமஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆஜானபாகு - பருமனற்ற தேகம், தசை முறுக்கேறிய இரும்பு போன்ற அங்கங்கள். ஊடுருவிப் பாயும் ஆழ்ந்த கண்கள் - வெற்றிலை வரம்பு போல் வளைந்த புருவங்கள். கம்பீரத்தன்மைக்கு அறிகுறியான கூர்மையான மூக்கு. இவை தான் மெளல்வியின் சாமுத்திரிகா லட்சணமாகும். அவ்வீரத்தியாகியின் களங்க மற்ற தேச பக்தியால், இந்திய சரித்திரத்தின் பக்கங்கள் இணையற்ற சோபையுடன் விளங்குகின்றன. தாய் நாட்டின் மீது ஆழ்ந்த, எவராலும் அசைக்கமுடியாத பற்றுதல், இஸ்லாம் மதோபதேசங்களுக்கு எவ்விதத்திலும் முரணல்ல என்பது அவ்வீர முஸ்லிமின் வாழ்க்கையிலிருந்து வெளியாகின்றது. ஆத்துமார்த்த விஷயங்களில் அசாதாரணமான பற்றுதலுள்ள ஒரு சிறந்த முஸ்லிம், சீரிய தேசபக்தராகவும், தாய் நாடு விடுதலை பெற்றுச் சுதந்திரத்துடன் விளக்குவதற்காக தனது ஜீவ இரத்தத்தை பாரத அன்னையின் பலி பீடத்தில் அர்ப்பணம் செய்பவராகவும் இருக்க முடியுமென்பதை அவரது வாழ்க்கை பிரகடனப்படுத்துகின்றது. இஸ்லாம் மதத்தில் உண்மையான நம்பிக்கையுடையவர், தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்வதைப் பெருமையாகவும் ஒரு விசேஷ உரிமையாகவும் கருதுவாரென்பதையும் அவரது வாழ்க்கை நிரூபிக்கின்றது.
புரட்சித் தலைவர்களின் உத்தம குணங்களை உள்ளபடி குறிப்பிட வேண்டுமென்ற உயர்ந்த நோக்கமற்ற ஆங்கில சரித்திராசிரியரான மாலிஸன் கூட உணர்ச்சி மிகுதியால், தாம் ஆங்கிலேயர் என்பதைச் சிறிது நேரம் மறந்து, மெளல்வியைப் பற்றி வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “மெளல்வி அஹமதுஷாவை ஓர் அசாதாரண மனிதரென்றே கூற வேண்டும். ராணுவத் தலைவரென்ற முறையில் அவரது இணையற்ற திறமை, புரட்சிப் போர் நடந்த போது பற்பல தடவைகளிலும் ருஜுவாகியிருக்கிறது. உதாரணமாக, காலின் காம்பெலைப் போர்க்களத்தில் இரு முறை முறியடித்த பெருமை அவர் ஒருவருக்கே உரியதாகும். பைஜாபாத் மெளல்வி அஹமதுஷா அவ்வாறு கீர்த்தியுடன் மாண்டார். அக்கிரமமாக அழிக்கப்பட்ட தமது தேசத்தின் சுதந்திரத்தை மீண்டும் பெருவதற்காகத் தந்திர முறைகளிலும் போரிலும் ஈடுபடும் ஒருவர் தேச பக்தரெனில், மெளல்வி ஒரு சிறந்த தேசபக்தர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவர் யாரையும் மறைந்திருந்து கொல்ல வில்லை. கொடிய கொலைகளிலும் ஈடுபடவில்லை. தேசத்தைக் கைப்பற்றிய அன்னியர்களுக்கு விரோதமாகப் போர்களத்தில் பகிரங்கமாகவும், கெளரவமாகவும், ஆண்மையுடனும், உருதியுடனும் வீரப் போர் புரிந்தார். உலகில் சத்தியசீலர்களும் தைரியசாலிகளுமான சகலருடைய மதிப்பிற்கும் அவர் என்றென்றும் உரியவராகத் திகழ்கின்றார்.” [பக்கம் 394, 395, 396, 397]
குறிப்பு :
இவருடைய பெயர் மெளல்வி என்றும், மெளல்வி அஹமதுஷா என்றும், அஹமதுல்லாஹ்ஷா என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Maulavi Ahmadullah Shah அல்லது Ahmadullah Shah என்று குறிப்பிடப்படுகிறார்.
இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...
இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை
இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்
இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.