Home


சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 8)

பேகம் ஹஸ்ரத் மஹால்

        சக்கரவர்த்தி பஹதூர்ஷாவின் வயோதிகம் காரணமாக டில்லி ராஜ்ய நிர்வாகமானது, சக்கரவர்த்தியின் பெயரில் பேகம் ஜீனத் மஹாலிடம் ஒப்புவிக்கப் பட்டிருந்தது போலவே, லக்ஷ்மணபுரியிலும் நவாபின் இளமைப் பருவம் காரணமாக ராஜ்ய நிர்வாகத்தை பேகம் ஹஜ்ரத் மஹால் மேற்பார்வையிட்டு வந்தார்….

        இந்த ராணி சுதந்திர ஆர்வமும் தைரியமும் படைத்தவரென்பதில் சந்தேகமில்லை. அவர் ஸ்தாபனங்களையும் இயக்கங்களையும் உருவாக்கும் சக்தியும் வாய்க்கப் பெற்றிருந்தார். அயோத்தி தர்பாரிலிருந்த மஹ்பூப்கான் என்ற கனவானிடம் அவருக்குப் பூரண நம்பிக்கையிருந்து வந்தது. அப்பெண் திலகம் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டதும், நீதி, வரிவசூல், போலீஸ், ராணுவம் முதலிய பல இலாக்காக்களிலும் தகுந்த அதிகாரிகளை நியமித்தார். சிப்பாய்களின் பிரதிநிதிகள், மஹபூப்கான் முதலிய பிரபல சர்தார்கள், ஏராளமான ஜனங்கள் முதலியோருடைய  நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களையே ராணி ஹஸ்ரத் மஹால் அதிகாரிகளாக நியமித்தார்.

        அவ்வமயம் சுதந்திர யுத்தத்தில் சேருவதற்காக அயோத்தியைச் சேர்ந்த பல விடங்களிலிருந்தும் ஏராளமான ஜனங்கள் லக்ஷ்மணபுரிக்குக் கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். அயோத்தி விடுதலைப் பெற்று விட்டது என்பதையும், அங்கு ஆங்கில ஆட்சியின் அறிகுறி சிறிதளவுமில்லை என்பதையும் தெரிவித்து பேகத்தின் முத்திரையிட்ட கடிதமொன்றும் டில்லி சக்கரவர்த்திக்கு அனுப்பப் பட்டது.        [பக்கம் 299]

        இவ்விதக் குழப்பமான நிலைமையிலும், உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர்வாகத்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகின்றது. அவருடைய நிர்வாக சாமர்த்தியத்தை ஆங்கில சரித்திராசிரியர்களும் வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார்கள்.        [பக்கம் 353]

        ஆங்கிலேயர்களை ஆலம்பாக்கிலிருந்து எட்டே நாட்களில் விரட்டுவதாக 60-வது படைப்பிரிவின் சுபேதார் சபதம் செய்து அதை நிறைவேற்றுவதற்காகப் போர்க் களத்தை விட்டகலாது மிகுந்த தைரியத்துடன் போர் புரிந்து வந்தார். ஒரு நாள் பேகமே தமது படைகளுடன் நேரில் போர்க்களத்துக்கு வந்தார். எனினும் துரதிர்ஷ்டம் வாய்ந்த லக்ஷ்மணபுரி வெற்றி பெற முடியவில்லை. மகா வீரர்களின் பெரு முயற்சிகளும் கோழைகளின் விபரீதமான போக்கால் வியர்த்தமாயின.        [பக்கம் 354}

குறிப்பு :

        நன்கு கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைக்கும் விதத்தில், இப்பொழுது நாட்டில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முதல் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தார்களா? என இப்பொழுதுள்ள தலைமுறையினர் கேட்கக் கூடிய அளவுக்கு, உண்மை ஒழிக்கப்படுகிறது.

        அந்தப் பொய்திரையைக் கிழித்தெறிய, முஸ்லிம் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், முஸ்லிம் சமுதாய ஸ்தாபனங்களுக்கும் பரம விரோதியாக இருந்த ஒருவருடைய வாக்கு மூலத்தை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட உள்ளோம். அவர் தமது நூலில் முஸ்லிம்களைப் பற்றிய உண்மையை எவ்வளவோ மறைத்தும், மேலும் அவரால் மறைக்க முடியாத சில முஸ்லிம் தியாகிகளைப் பற்றிய உண்மைகளை, அவர் எழுதிய படி, எவ்வித திருத்தமும் மாறுதலும் இன்றி அப்படியே எடுத்து இடம் பெறச் செய்திருக்கின்றோம். அந்த நூலை எழுதியவர், முன்னால் ஹிந்து மகாசபைத் தலைவர் திரு. வீர சாவர்க்கர். அவர் எழுதிய நூல் “முதல் இந்திய சுதந்திர யுத்தம்” (தமிழாக்கம்)

பேகம் ஹஸ்ரத் மஹாலின் வாழ்க்கை வரலாறு

        பேகம் ஹஸ்ரத் மஹால் (கி.பி 1820 - 7 ஏப்ரல் 1879) இவரின் இயற் பெயர் முஹம்மதி கானும், ஆனாலும் அவாத்தின் பேகம் எனவும் அழைக்கப்பட்டார். ஆங்கிலேயரை எதிர்த்து வீர சுதந்திரம் வேண்டி நின்ற வீரப் பெண்களின் வரலாற்றுப் பட்டியலை வரிசைப் படுத்தும்போது நிச்சயமாக பேகம் ஹஜ்ரத் மாஹலுக்கு முக்கிய இடமுண்டு.

நவாப் வாஜித் அலி ஷாவின் இரண்டாவது மனைவி தான் பேகம் ஹசரத் மாஹல், அவரது கணவர் வாஜித் அலி ஷா கல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர், அவாத்தின் மாநில விவகாரங்களை பொறுப்பேற்றார் மற்றும் லக்னோவின் கட்டுப்பாட்டை கைப்பற்றினார். அவரது மகன் இளவரசர் பிரிஜிஸ் காதரை அவாத்தின் ஆளுநர் பொறுப்பில் நியமித்து ஆட்சியை திறம்பட நடத்தினார். அப்பொழுது 1857 ம் ஆண்டு இந்திய சிப்பாய் கலகத்தின் போது பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக தலைமை ஏற்று தாக்குதல் நடத்தி பின்னடைவு ஏற்பட்டதால்  நேபாளில் புகலிடம் பெற்ற அவர் 1879 ல் நேபாளில் இறந்தார்.

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்வு

        இன்றைய இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த அவாத்தின் பைசாபாத்தில் 1820 ஆம் ஆண்டு பிறந்தவர், ஒரு முறை மன்னனுடைய கையாட்களின் கண்களில் சிக்கினார் பேகம். பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டி பெற்றோரை மயக்கி சம்மதிக்க வைத்து, மன்னனின் ஆசைநாயகியாக்க அவளை அழைத்துச் சென்றனர் காவலர்கள். அவாத் மன்னரின் அரச மறுமனையாட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அவர் ஒரு பேகம் ஆனார். பின்னர் “தாஜ்தார்-இ-அவாத்” என்னும் பட்டம் வழங்கினார் நவாப் வாஜித் அலி ஷா. மற்றும் இளைய மனைவியாகி அவர்களின் மகன் இளவரசர் பிரிஜிஸ் காதர் பிறந்த பிறகு இவருக்கு  'ஹஜ்ரத் மஹால்' என்ற பட்டத்தை வழங்கி அரசியாக்கினார் நவாப்.

 பதவியேற்பு

        1856-இல் நவாப் வாஜித் அலிஷா பட்டத்தை இழந்தார், கல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டார், பிறகு தலைநகர் லக்னோவில் இருந்த பிரிட்டிஷ் கமிஷனர் சர் ஹென்றி லாரன்ஸ் கைக்கு அதிகாரம் மாறியது. நாடே கொந்தந்தளித்தது. ஆங்காங்கே பிரிட்டிஷாரைக் கொன்று குவித்தவாறே சிப்பாய்கள் தலைநகரம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆங்கிலேயப் பெண்களையும் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக ஒரு கோட்டைக்குள் இருத்தி விட்டு சிப்பாய்களை லக்னோவின் எல்லையிலேயே முறியடிக்கப் புறப்பட்டான் ஹென்றி லாரன்ஸ். இந்திய சிப்பாய்களிடம் படுதோல்வியுற்று கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான் ஹென்றி லாரன்ஸ்.

வெற்றி பெற்ற சிப்பாய்களுக்கோ சரியான தலைவனில்லை, அடுத்து என்ன செய்வதென்றும் புரியவில்லை மன்னனும் கல்கத்தாவில் சிறையில். பட்டத்தரசிகளும் பயந்திருந்த நேரம் மன்னரின் பிள்ளைகளில் யாரையேனும் மன்னனாக அறிவிக்குமாறு மன்றாடினார்கள். நடுங்கிய அரசிகள் மறுத்தனர். ஆனால் அந்த பொறுப்பை துணிந்து ஏற்க ஹஜ்ரத் மஹால் முன் வந்தார். தன் 10 வயது மகனை மன்னனாக்கித் தானே காப்பாளராகப் பெறுப்பேற்றுக் கொண்டாள்.

1857 இந்திய சிப்பாய் கலகம் 

        1857 இந்தியக் கிளர்ச்சியின் போது , பேகம் ஹஸ்ரத் மஹாலின் ஆதரவாளர்கள் குழு, ராஜா ஜலால் சிங் தலைமையில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தது; அவர்கள் லக்னோவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர், மேலும் இவர் அவாத்தின் ஆட்சியாளராக ( வாலி ) தன்னை அறிவித்து, அவரது மைனர் மகன் இளவரசர் பிர்ஜிஸ் காதரின் பாதுகாவலராக அதிகாரத்தை எடுத்துக் கொண்டார் .  மேலும் பிரிட்டிஷுக்கு எதிரான கிளர்ச்சியில் தானாகவே ஒரு தலைமைப் பொறுப்பு ஏற்று திறமையுடன் செயல்பட்டார்.

        பேகம் ஹஸ்ரத் மஹாலின் முக்கிய புகார்களில் ஒன்று, கிழக்கிந்திய கம்பெனி சாலைகள் அமைப்பதற்காக கோவில்கள் மற்றும் மசூதிகளை சாதாரணமாக இடித்தது .  கிளர்ச்சியின் இறுதி நாட்களில் வெளியிடப்பட்ட ஒரு பிரகடனத்தில், வழிபாட்டு சுதந்திரத்தை அனுமதிப்பதாக பிரிட்டிஷ் கூற்றை அவர் கேலி செய்தார்:

        பன்றிகளை சாப்பிடவும், மது குடிக்கவும், பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்களை கடிக்கவும் மற்றும் பன்றியின் கொழுப்பை இனிப்புடன் கலக்கவும், தேவாலயங்கள் கட்டவும், கிறிஸ்தவ மதத்தை போதிக்க மதகுருமார்களை தெருக்களில் அனுப்பவும், சாலைகள் அமைக்க என்று இந்து மற்றும் முஸ்லிம்களின் கோவில்களை அழிக்கவும் செய்கின்றனர். ஆங்கிலப் பள்ளிகள் மற்றும் ஆங்கில அறிவியலைக் கற்றுக்கொள்வதற்காக மக்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை வழங்குகின்றன, அதே சமயம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் கல்விகூடங்கள் இன்றுவரை முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன; இதையெல்லாம் பார்க்கும் மக்களிடம், மதம் தலையிடாது என்று கூறினால் அதை மக்கள் எப்படி நம்புவார்கள்?  என கேள்வி எழுப்பினார்.

பெரும் பகுதியை பிரிட்டிஷாரின் படைகள் கைபற்றியதால்

முதலில் பிரிட்டிஷாரை எதிர்த்து  ஹஜ்ரத் மஹால் நானா சாஹிப்புடன் இணைந்து பணியாற்றினார், ஆனால் பின்னர் ஷாஜகான்பூர் மீதான தாக்குதலின் போது பைசாபாத்தின் மெளலவியுடன் சேர்ந்து பணியாற்றினார்.

 பிரிட்டிஷாரின் தலைமையிலான படைகள் லக்னோவையும், அவாத்தின் பெரும்பகுதியையும் மீண்டும் கைப்பற்றியபோது, அவள் பின் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடைசி கால வாழ்க்கை மற்றும் மரணம்

  1. இறுதியில், அவர் நேபாளத்திற்கு பின்வாங்க வேண்டியிருந்தது, அங்கு முதலில் ராணா பிரதமர் ஜங் பகதூரால் புகலிடம் மறுக்கப்பட்டது, ஆனால் பின்னர் நேபாளத்தில் தங்க அனுமதிக்கப்பட்டு அங்கு வசித்தார்.
  2. அவர் 1879 இல் காத்மாண்டுவில் இறந்தார் அவரது உடல் காத்மாண்டுவின் ஜும்மா மசூதி மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்கள்.

  • பேகம் ஹஸ்ரத் மஹாலின் அடக்கவிடம் காத்மண்டுவின் மையப் பகுதியில், கந்தகார், ஜும்மா மசூதிக்கு அருகில், புகழ்பெற்ற தர்பார் மார்க்கிலிருந்து தொலைவில் உள்ளது. அதை ஜும்மா மசூதி மத்திய குழு கவனித்து வருகிறது.

  • 15 ஆகஸ்ட் 1962 அன்று , லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் உள்ள பழைய விக்டோரியா பூங்காவில் மஹால் பெரும் கிளர்ச்சியில் பங்கு பெற்றதற்காக  கெளரவிக்கப்பட்டார். லக்னோவில் ஹஸரத் பேகமின் நினைவாக பளிங்குக் கல்லால் ஆன நினைவகத்தை உத்திரபிரதேச மாநில அரசு அமைத்துள்ளது.

  • 10 மே 1984 அன்று, இந்திய அரசு மஹாலின் நினைவாக ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது.

  • சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம், இந்திய அரசு, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த புகழத்தக்க பெண் பேகம் ஹஸ்ரத் மஹால் பெயரில் தேசிய உதவித்தொகை ஒன்றை தொடங்கியது. இந்திய அரசு இந்த உதவித்தொகையை மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் செயல் படுத்தப்படுகிறது .

        


சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Freedom Fighter-1

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 1)...


I C-2

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 2)


Maruthu Pandiyar

மருது பாண்டியர் (சிவகங்கை சீமை) வரலாற்றுச் சுருக்கம்


Khan Shahib

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) வரலாற்றுச் சுருக்கம் ....