Home


சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 1)

        “சிப்பாய்க் கலகம்” என்று வெள்ளையர்களால் எழுதி வைக்கப்பட்ட “இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம்” 1857ம் ஆண்டில் நம் நாடு முழுவதும் நடந்தது. மொகலாய கடைசி பேரரசரான பகதுர்ஷா தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று, வெள்ளையனை எதிர்த்துப் போராடினர். இப்போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு, ஆவேசமிக்கதாகவும், தியாகம் நிறைந்ததாகவும் இருந்தது. ‘ஆண்ட வர்க்கம் அடிமை வர்க்கமாவதா?’ என்ற ஆவேச உணர்ச்சியால், அழிவைப் பற்றி அஞ்சாது, ஆங்கில ஏகாதிபத்தியத்தை அலறடித்தனர். ஆலிம்களும் உலமாக்களும் ஆங்கிலேயர்களை ‘நஜீஸ்’ (அசுத்தம்) எனப் பெயரிட்டு, அதை நாட்டை விட்டு சுத்தப்படுத்த கர்ஜித்தனர். ஆங்கில மொழியைக் கற்பது ‘ஹராம்’ என ‘பத்வா’ (மார்க்கத் தீர்ப்பு) விடுத்து, பள்ளிக்கூடங்களில் இருந்து பிள்ளைகளை வெளியாக்கினர். இதனால் தான் அந்த முதல் சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு, வெள்ளையர்கள் பழிக்கு பழியாக முஸ்லிம்களையே நசுக்கினர். 1906ல் முஸ்லிம் லீக் ஸ்தாபனம் தோற்றுவிக்கப் படும் வரை, முஸ்லிம்கள்  வெள்ளையர்களாளும், அவர்களின் அடிவருடிகளாலும் ஒடுக்கப்பட்டே வந்தனர்.

        இந்த நன்கு கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைக்கும் விதத்தில், இப்பொழுது நாட்டில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முதல் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தார்களா? என இப்பொழுதுள்ள தலைமுறையினர் கேட்கக் கூடிய அளவுக்கு, உண்மை ஒழிக்கப்படுகிறது.

        அந்தப் பொய்திரையைக் கிழித்தெறிய, முஸ்லிம் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், முஸ்லிம் சமுதாய ஸ்தாபனங்களுக்கும் பரம விரோதியாக இருந்த ஒருவருடைய வாக்கு மூலத்தை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட உள்ளோம். அவர் தமது நூலில் முஸ்லிம்களைப் பற்றிய உண்மையை எவ்வளவோ மறைத்தும், மேலும் அவரால் மறைக்க முடியாத சில முஸ்லிம் தியாகிகளைப் பற்றிய உண்மைகளை, அவர் எழுதிய படி, எவ்வித திருத்தமும் மாறுதலும் இன்றி அப்படியே எடுத்து இடம் பெறச் செய்திருக்கின்றோம். அந்த நூலை எழுதியவர், முன்னால் ஹிந்து மகாசபைத் தலைவர் திரு. வீர சாவர்க்கர். அவர் எழுதிய நூல் “முதல் இந்திய சுதந்திர யுத்தம்” (தமிழாக்கம்)

அஸிமுல்லாகான்

        “1857ம் வருஷத்திய சுதந்திர யுத்தத்துக்குக் காரணஸ்தர்களான முக்கிய தலைவர்களுள் அஸிமுல்லாகானும் ஒருவர். முதாலாவது சுதந்திர யுத்தத்தை உருவாக்கிய மகா மேதாவிகளுள் அஸிமுல்லாகானுக்குத் தான் முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும். அந்த யுத்தத்தை நடத்துவதற்கான பல திட்டங்களிலும் அஸிமுல்லாகான் வகுத்த திட்டம் தான் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கது. அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவராயினும், தம்முடைய அபார புத்திக் கூர்மையால் உயர்ந்த ஸ்தானத்துக்கு  வந்து, இறுதியில் நானா சாஹிபின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மந்திரியும் ஆனார்.

        மிகுந்த வறுமை காரணமாக அவர் முதலில் ஓர் ஆங்கிலேயரின் குடும்பத்தில் கையாள் வேலை பார்த்து வந்தார். அவ்வளவு தாழ்ந்த நிலையிலும் கூட, தாம் உயர்ந்த பதவிக்கு வர வேண்டுமென்ற தாபமானது அவரது ஹிருதயத்தில் சுடர் விட்டுக் கொண்டிருந்தது. அந்த வேலையை அவர் தமக்கு சாதகமாக உபயோகித்துக் கொண்டு அன்னிய பாஷைகளைக் கற்க ஆரம்பித்தார். அதன் பயனாக ஆங்கில, பிரஞ்சு பாஷைகளில் நன்கு பேசும் திறமை அவருக்கு வெகு சீக்கிரத்தில் ஏற்பட்டு விட்டது. பிறகு அவர் அவ்வேலையிலிருந்து விலகி கான்பூரிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வசிக்க முற்பட்டார். அவரது ஒப்பற்ற திறமை அதிசீக்கிரத்தில் வெளியானதால் அவரையே அப்பள்ளிக்கூடத்திற்கு உபாத்தியாராக நியமித்தனர். அவரது அறிவையும் ஆற்றலையும் கேள்விப்பட்ட நானா சாஹிப், அவரை பிரம்மா வர்த்தத்துக்கு அழைத்து வர கட்டளையிட்டார். பிரம்மவர்த்த சபையில், அஸிமுல்லாகானின் அரிய யோசனைகள் எல்லோராலும் பாராட்டப்பட்டன. அந்த யோசனைகளின் சிறப்பை நானா நன்கு அறிந்து கொண்டதால், பின்னர் அஸிமுல்லாகானுடன் கலந்து யோசிக்காமல் நானா சாஹிப் எவ்வித முக்கிய தீர்மானமும் செய்வதில்லை. அவ்விதமிருக்க 1854ம் வருஷம் அஸிமுல்லாகான் நானா சாஹிபின் முக்கிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார்.

அஸிமுல்லாகான் வசீகரமான தோற்றம் உடையவர்; இனிமையாகப் பேசும் ஆற்றல் படைத்தவர். அவர் ஏற்கனவே ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்தவராதலால் லண்டனில் கூட, அவர் சில நாட்களில் மிகுந்த கீர்த்தியும் செல்வாக்கும் பெற்றார். அவர்து பேச்சு வன்மையையும், தோற்றத்தையும் திடகாத்திரத்தையும் கண்டு பல ஆங்கில யுவதிகளும் அவர் மீது காதல் கொண்டனர். லண்டன் நந்தவனங்களிலும், பிரிட்டன் கடற்கரையிலும் அவரைக் காண ஜனங்கள் கூடி விடுவார்களாம்.! அவரை எல்லோரும் ‘இந்திய ராஜா’ என்று சொல்லுவார்களாம். அவரிடம் காதல் கொண்ட உயர் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள், அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகும் கூட தங்களுடைய காதற் பெருக்கைத் தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதி வந்தார்கள். ஹாவ்லாக் என்ற ஆங்கிலேயரின் படைகள் பிரம்மாவர்த்தத்தைக் கைப்பற்றிய போது, ‘கண் போன்ற அன்பார்ந்த அஸிமுல்லாவுக்கு’ என விளித்து வெள்ளை பெண்கள் எழுதியிருந்த பல காதற் கடிதங்கள் அவர் கையில் சிக்கின.” [பக்கம் 29 - 30]

அஸிமுல்லாகான்

“லண்டனிலிருந்து புறப்பட்ட அஸிமுல்லாகான் நேராக ஹிந்துஸ்தானத்துக்கு வரவில்லை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மண் இராத இடமே இல்லையாதலாலும் பிரிட்டிஷார் சூழ்ச்சியில் கை தேர்ந்தவர்களானதாலும். எத்தனை இடங்களிலிருந்து சாத்தியமோ அத்தனை இடங்களிலிருந்தும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைக் காக்க வேண்டியது அவசியமென்பதை அவர் உணர்ந்தார். வரப்போகும் சுதந்திர யுத்தத்தில் ஐரோப்பாவிலுள்ள எந்த இடங்களிலிருந்து நேரடியான உதவியும் அனுதாபமும் கிடைக்கக் கூடுமென்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது. எனவே அஸிமுல்லாகான் இந்தியாவுக்கு திரும்பி வருமுன், அந்த நோக்கத்துடன் ஐரோப்பா முழுவதும் யாத்திரை செய்தார்.

முஸ்லிம் உலகத்தின் கலீபா என்று உலக பிரசித்தி பெற்ற துருக்கி சுல்தானின் தலைநகருக்கு அவர் சென்றார். அப்போது நடந்து வந்த ருஷ்ய துருக்கி யுத்தத்தில் ஆங்கிலேயர்கள் செபாஸ்டபூலில் நடந்த முக்கியமான போரில் தோல்வியுற்றனரென்ற செய்தி கிடைத்த பின், அவர் ருஷ்யாவில் சிறிது காலம் தங்கியிருந்தார்.

ஆசியாவில் இங்கிலாந்துக்கு விரோதமாக ருஷ்யா யுத்தத்தைத் தொடர்ந்து நடத்த முன் வருமா? சாத்தியமாயின் இங்கிலாந்துக்கு விரோதமாக இந்தியாவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளுமா? இவ்விஷயங்களை நிர்ணயமாக அறிந்து கொள்வதற்காகவே அவர் ருஷ்யாவுக்குச் சென்றார் என்பது பல ஆங்கில சரித்திராசிரியர்களின் சந்தேகமாகும். ருஷ்ய ஜார்ஜ் சக்கரவர்த்தியுடன் நானா ஓர் உடன்படிக்கை செய்து கொண்டிருப்பதாகவும் வெள்ளையர்களை  எதிர்த்துப் போராட ருஷிய இராணுவம் முழுவதும் தயாராக இருக்கிறதென்றும் இந்திய தேசிய யுத்த பேரிகை முழங்க ஆரம்பித்தவுடன் ஜனங்கள் பகிரங்கமாகக் கூறியதைக் கவனிப்போமாயின், வெள்ளை சரித்திராசிரியர்களின் சந்தேகத்துக்குக் காரணம் உண்டென்று தோன்றுகிறது.

அஸிமுல்லா ருஷ்யாவிலிருந்த போது லண்டன் “டைம்ஸ்” பத்திரிக்கையின் ராணுவ நிருபரும், பிரபல எழுத்தாளருமான ரஸ்ஸெல் என்பார் அவரைப் பேட்டி கண்டார். ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்ததையும், ஆங்கில பிரஞ்சுத் துருப்புக்கள் சேர்ந்தும் கூட ருஷ்யர்களைத் தோற்கடிக்க முடியாமற் போனதையும், ஜுன் மாதம் 18ம் தேதி ருஷ்யா வெற்றி பெற்றதையும் கேள்விப் பட்ட அஸிமுல்லா, வெள்ளையர் இராணுவ முகாமுக்குச் சென்றார். அவர் நடையுடை பாவனையில் ஓர் இந்திய மன்னர் போன்றிருந்ததைக் கண்டு ரஸ்ஸெல் வெளியே வரவே, அவரிடம் அஸிமுல்லா “இந்தப் பிரபல நகரையும் பிரஞ்சு ஆங்கில இராணுவம் இரண்டையும்  தோற்கடித்த ருஷ்யர்களையும் பார்க்க விரும்புகிறேன்.” என்றார். குத்தலாகவும் ஹிருதயத்தில் தைக்கும்படி கிண்டலாகவும் பேசுவதில் அஸிமுல்லா மிகுந்த சாமர்த்தியசாலி யென்பது அதிலிருந்து தெரிகிறது.

வெள்ளையர்களுக்கும் ருஷ்யர்களுக்கும் நடந்த பீரங்கி யுத்தத்தை அஸிமுல்லா நேரில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பீரங்கிக் குண்டு அவர் காலின் அருகில் பூமியில் பாய்ந்ததாம். அந்த ஆபத்தான சமயத்தில் கூட அவர் கலங்கவோ அவ்விடத்தை விட்டு நகரவோ இல்லையாம். இவ்விவரங்களை ரஸ்ஸெல் தம்முடைய பிரபல நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அன்று மாலை அஸிமுல்லா தமது ஜாகைக்குத் திரும்புகையில் ரஸ்ஸெலிடம் “பலமான கோட்டை போன்ற இப்பிரதேசத்தை நீங்கள் ஒரு போதும் கைப்பற்ற முடியாதென்றே எனக்குத் தோன்றுகிறது.” என்று துணிச்சலாகத் தமது கருத்தைத் தெரிவித்தார். அஸிமுல்லா அன்றிரவு ரஸ்ஸெலின் கூடாரத்திலேயே படுத்துத் தூங்கினார். பின்னர் அவர் விடியற் காலம் எழுந்து சென்று விட்டார். ரஸ்ஸெலின் மேஜை மீது  அஸிமுல்லாவினால் கீழ்வருமாறு ஒரு சீட்டு எழுதி வைக்கப்பட்டிருந்தது. “தன்னை அன்புடன் உபசரித்ததற்காக அஸிமுல்லாகான் ஸ்ரீ ரஸ்ஸெலுக்கு தன் மனமார்ந்த வந்தனத்தை தெரிவித்துக் கொள்கின்றார்.”

ருஷ்யாவிலிருந்து புறப்பட்ட பின் அஸிமுல்லா எங்கு சென்றாரென்பது தெரியவில்லை எனினும் கான்பூர் பிரகடனத்திலிருந்து அதன் சம்பந்தமான இரகசியம் தெரிய வருகின்றது. அதாவது ஏதோ அரசியல் தந்திர திட்டமொன்றை அமுலுக்குக் கொண்டு வருவதற்காக அவர் எகிப்து சென்றிருந்தாரென்று தெரிகிறது. ஹிந்துஸ்தானத்தில் நிகழ்ந்து வரும் கொடுங்கோன்மையைக் குறித்து துருக்கி சுல்தானுக்கு அஸிமுல்லா, எழுதிய கடிதம் ராபர்ட்ஸ் என்ற வெள்ளையரின் கைக்கு கிடைத்ததிலிருந்தே அவ்விஷய்ம் வெளியாயியிற்று.

அதை யொட்டி ராபர்ட்ஸ் கூறியிருப்பதாவது “அஸிமுல்லா வின் காதலிகளான ஆங்கில பெண்களிடமிருந்து அவருக்கு வந்த பல கடிதங்களும், ஒரு பிரஞ்சுக் காரரிடமிருந்து அவருக்கு வந்த இரண்டு கடிதங்களும் அகப்பட்டன. பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்கும் விஷயமாக சந்திர நாகூரிலிருந்த பிரஞ்சுக் காரர்களின் உதவியை நாடியது போன்ற சில விஷயங்கள் அந்த கடிதங்களிலிருந்து வெளியாகின்றன.  கான்ஸ்டாண்டிநோபில் உமர்பாஷாவுக்கு அஸிமுல்லா தமது கையால் எழுதியிருந்த கடிதத்தில் பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக சிப்பாய்களிடையும் ஏற்பட்டிருந்த  அதிருப்தியையும் அமைதியின்மையையும் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

அஸிமுல்லா தமது ஐரோப்பிய யாத்திரையை முடித்துக் கொண்டு பிரம்மாவர்த்தத்துக்கு திரும்பி வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் அங்கு அரசியல் நிலைமை அடியோடு மாறத் துவங்கியது. ஏற்கனவே இந்தியா முழுவதும் வெகு காலமாக கம்பீரமாகவும் ஜெயத்துடனும் அசைந்து கொண்டிருந்த கொடி அரண்மனையில் தூசி படிந்து கிடந்தது. பீஷ்வாக்களின் மகிமை பொருந்திய யுத்த பேரிகையின் தீனமான சப்தம் கேட்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது. ஒரு காலத்தில் அந்த பேரிகையின் வீர முழக்கத்தைக் கேட்டு ஆயிரக்கணக்கான மகாராஷடிரர்களின் பட்டாக்கத்திகள் போர்க் களங்களில் புரிந்த அற்புதமான தீரச் செயல்களெல்லாம் கனவு போல் தோன்றின. மொகலாய சாம்ராஜ்யத்தை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை பெற்றிருந்த ராஜ முத்திரையானது பதியை இழந்த பத்தினியைப் போல் அரண்மனையில் சோபையற்றுக் கிடந்தது.

ஆனால் அஸிமுல்லா திரும்பி வந்ததும் அவற்றிற்கெல்லாம் புத்துயிர் உண்டாகி விட்டது போல் தோன்றியது. தூசி படிந்து கிடந்த கொடியானது மீண்டும் பிரகாசத்துடன் பறக்கலாயிற்று. வீர சப்தத்தை இழந்து கிடந்த பேரிகைகளிலிருந்து மீண்டும் கம்பீரமான ராணுவ ஒலிகள் கிளம்பின. ராஜா முத்திரையோ அன்னியர்களின் குருதியைக் குடித்து, சுதந்திரமாகிய குங்கும திலகத்துடன் விளங்கத் துடித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. அன்னியர்களின் அநீதிகள் காரணமாக மனம் புழுங்கிக் கொண்டிருந்த நானா சாஹிபின் கண்கள் தீப்பொறியைக் கக்க ஆரம்பித்தன.” [பக்கம்:54 - 58]

சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர்கள் அனைத்தும்)

விரைவில்…..


சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் தொடர்கள் அனைத்தும்


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முக்கியமான வெளியீடுகள்

Islamic Culture-1

இஸ்லாத்தில் உண்ணுவது - பருகுவது பற்றிய வழிமுறைகள்...

I C-2

இஸ்லாத்தில் உறங்கும் வழிமுறைகள் பற்றிய கட்டுரை

I C-4

இஸ்லாத்தில் நகச்சுத்தம், முடி களைதல் பற்றிய வழிமுறைகள்

I C-5

இஸ்லாத்தில் ஆடை அணியும் முறைகள் பற்றிய கட்டுரை....


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.