சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 4)
பகத் கான்
அங்கு (பாரில்லியில்) ஆங்கிலேயர் கொடி இறங்கி தேசீயக் கொடி ஏறிய பின், பீரங்கிப் படையின் சுபேதாரான பகத் கான், பாரில்லியிலுள்ள சகல படைகளுக்கும் தளபதியாக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அவர் மிகுந்த வாசாலக சக்தியும் தேச பக்தியும் உள்ளவராதலின், விடுதலை பெற்ற பின் சிப்பாய்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புதிதாக அமைக்கப் பெற்றுள்ள சுயராஜ்யத்தை நிலை நிறுத்த அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளென்ன என்பதையும் உருக்கமாகவும் உற்சாகத்துடனும் எடுத்துரைத்தார். எனவே அத்தகைய நெருக்கடியான ஒரு சமயத்தில் ரோஹில்கந்திலிருந்து அனுபவசாலியும் சிறந்த வீரருமான பகத்கான் தமது துருப்புகளுடனும், பொக்கிஷத்துடனும் டில்லிக்கு வந்தது ஓர் வரப்பிரசாதமாகக் கருதப் பட்டது.
பகத்கான் வந்த சமயத்தில் டில்லி ஜனங்களிடையே நிம்மதியேயில்லை, அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு இராததே அதற்குக் காரணம். ரோஹில் கந்திலிருந்து படைகள் எதிர் பார்க்கப் பட்டனவாதலால், யமுனையின் பாலத்தைத் தேச பக்தர்கள் சீர்படுத்தியிருந்தனர். ரோஹில் கந்த் படை வெகு தூரத்தில் வந்து கொண்டிருந்த போது, சக்கரவர்த்தி பூதக் கண்ணாடியால் அதைப் பரிசீலனை செய்ய ஆரம்பித்தார். அந்தப் படையை எதிர் கொண்டு அழைப்பதற்காக நவாப் அஹமது குலிகான் மற்ற பல பிரமுகர்களுடனும் ஜுலை மாதம் 2 ம் தேதி புறப்பட்டுச் சென்றார். ஹகீம் அஸதுல்லா கான், ஜெனரல் ஸனத்கான், இப்றாஹீம் அலிகான், குலாம் அலிகான் முதலிய பல பிரமுகர்களும் அவருடன் கூடச் சென்றார்கள்.
ரோஹில் கந்த் ராணுவத்தின் தளபதியான முஹம்மது பகத் கான் தனது தொண்டை அங்கீகரிக்கும் படி சக்கரவர்த்தியைக் கேட்டுக் கொள்ளவே அன்னார் கூறியதாவது “ஜனங்களுக்குப் பூரண பாதுகாப்பு ஏற்பட வேண்டும். அவர்களின் உயிருக்கும் சொத்துக்கும் எவ்விதத் தீங்கும் நேரக் கூடாது. பகைவர்களான ஆங்கிலேயர்களை அழிக்கும் கைங்கர்யம் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட வேண்டும். இது தான் எனது ஆர்வம்.”
பகத்கானும் அவ்விதமே செய்வதாக உறுதி கூறி தேசிய ராணுவத்தின் பிரதம தளபதியாக இருந்து கொண்டு சக்கரவர்த்தியின் கட்டளைகளை நிறைவேற்றுவதாகக் குறிப்பிடவே, சக்கரவர்த்தி உள்ளம் உருகி அவரது கையைப் பிடித்து தமது அன்பைத் தெரிவித்தார். உடனே பல்வேறு படைப் பிரிவினர்களின் தலைவர்களுமடக்கிய ஒரு மகா சபை நடந்தது. பகத்கானை பிரதம தளபதியாகத் தேர்ந்தெடுக்க அவர்களெல்லோரும் இசைந்து அவரிடம் விசுவாசப் பிரமாணமும் செய்து கொண்டனர். மகா சபை முடிந்தவுடன் பிரதம தளபதி பகத்கானுக்கு சக்கரவர்த்தி பேட்டி அளித்தார். அவ்வமயம் அவருக்கு சக்கரவர்த்தியால் கேடயம், வீரவாள், “ஜெனரல்” என்ற பட்டம் முதலியவை வழங்கப் பட்டன. பகத் கான் பிரதம தளபதியாக இருந்து ராஜாங்க சம்பந்தமான சகல அலுவல்களையும் கவனிப்பாரென்று சக்கரவர்த்தியின் பிரகடனமும் வெளியாயிற்று.
“ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களுட்பட யாராயினும் கொள்ளையில் சம்பந்தப் பட்டதாகத் தெரிந்தால் அவருக்குக் கடுமையான தண்டனை விதித்தே தீருவேன்” என்று பகத்கான் கூறியதற்கு “உங்களுக்குப் பூரண அதிகாரம் அளிக்கப் பட்டிருக்கிறது. சிறிதும் தயக்கமின்றி உங்கள் உசிதப்படி செய்யுங்கள்” என சக்கரவர்த்தி பதிலளித்தார்.
டில்லியில் முக்கால் பாகம் வீழ்ச்சியுற்றதும் பிரதம தளபதியான பகத்கான் சக்கரவர்த்தியிடம் சென்று இவ்வாறு கூறலானார். “டில்லி மாநகர் நம் கையிலிருந்து நழுவி விட்டது. எனினும் நாம் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பங்களெல்லாம் நழுவி விட்டன என்று கூறுவதற்கில்லை. இப்போது கூட நாம் வெளியிடங்களுக்குச் சென்று பகைவர்களைக் கலங்க வைக்கலாம். அடைபட்டுக் கிடக்கும் இந்த பிரதேசத்தை பாதுகாக்க முற்படுவதைக் காட்டிலும், வெளி இடங்களுக்குச் சென்று பகைவர்களுக்கு இடைவிடாது கஷ்டங்களை விளைவித்து வருவதன் மூலம் நாம் இறுதியில் நிச்சயமாக வெற்றி பெற வழியுண்டு. இந்த சுதந்திர யுத்தத்தில் இறுதி வரையில் வாளேந்திப் போர் புரியத் தயாராகயிருக்கும் வீரர்களுடன் நான் டெல்லியில் இருந்து வெளிச் சென்று யுத்தம் செய்யத் தீர்மானித்துள்ளேன். பகைவர்களிடம் சரண் புகுவதைக் காட்டிலும் போர் செய்த வண்ணம் வெளியேறுவதுதான் சிறந்ததென எனக்குத் தோன்றுகிறது. இந்த சமயம் நீங்களும் எங்களுடன் கூட வர வேண்டும். உங்களுடைய தலைமையில் சுயராஜ்யத்துக்காக நாங்கள் இறுதி வரையில் போரிட்டே தீருவோம்.” (பக்கம் 140, 254, 255, 295)
குறிப்பு :
நன்கு கண்ணுக்கு தெரியும் உண்மைகளை மறைக்கும் விதத்தில், இப்பொழுது நாட்டில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முதல் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டிருந்தார்களா? என இப்பொழுதுள்ள தலைமுறையினர் கேட்கக் கூடிய அளவுக்கு, உண்மை ஒழிக்கப்படுகிறது.
அந்தப் பொய்திரையைக் கிழித்தெறிய, முஸ்லிம் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும், முஸ்லிம் சமுதாய ஸ்தாபனங்களுக்கும் பரம விரோதியாக இருந்த ஒருவருடைய வாக்கு மூலத்தை ஆதாரப்பூர்வமாக இங்கு வெளியிட உள்ளோம். அவர் தமது நூலில் முஸ்லிம்களைப் பற்றிய உண்மையை எவ்வளவோ மறைத்தும், மேலும் அவரால் மறைக்க முடியாத சில முஸ்லிம் தியாகிகளைப் பற்றிய உண்மைகளை, அவர் எழுதிய படி, எவ்வித திருத்தமும் மாறுதலும் இன்றி அப்படியே எடுத்து இடம் பெறச் செய்திருக்கின்றோம். அந்த நூலை எழுதியவர், முன்னால் ஹிந்து மகாசபைத் தலைவர் திரு. வீர சாவர்க்கர். அவர் எழுதிய நூல் “முதல் இந்திய சுதந்திர யுத்தம்” (தமிழாக்கம்)
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 1)...
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் (தொடர் - 2)
மருது பாண்டியர் (சிவகங்கை சீமை) வரலாற்றுச் சுருக்கம்
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) வரலாற்றுச் சுருக்கம் ....