ஒவ்வொரு ஸஹாபாவின் பெயரின் பின்னால் (ரழி) என குறிப்பிட்டுள்ளதை ரழியல்லாஹுஅன்ஹு எனவும், முஹம்மது நபியின் பெயருக்கு பின் (ஸல்) என குறிப்பிட்டுள்ளதை ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் எனவும் தொடர்ந்து படித்து கொள்ள வேண்டுகிறோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அகபா உடன்படிக்கையின் பிறகு நபியவர்களிடம் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அன்சாரித் தோழர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் அபூ லுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்கள். மதீனாவின் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்களின் இயற்பெயர் ரிபா அத் இப்னு அப்துல் முன்திர் என்பதாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழர்களில் இவரும் ஒருவர். இஸ்லாத்தை ஏற்ற தருணத்திலிருந்து அதில் சிறந்து விளங்கி, நபியவர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிய அபூ லுபாபாவுக்கு தொழில் வியாபாரம். அதில் அவர் தம் குடும்பத்தை பராமரித்து வந்தார். மூன்று யூத கோத்திரத்தினர் மதீனாவில் வாழ்ந்து வந்தார்கள் அதில் ஒன்றான பனூ குரைளா கோத்திரத்தினர் குடியிருப்பின் அருகே தான் அபூலுபாபாவின் வீடு. அவர்களுக்கு மத்தியில்தான் இவரது தொழில் வியாபாரம் அமைந்திருந்தது. இஸ்லாத்திற்கு முந்தைய காலங்களில் அவ்ஸ் கோத்திரத்தினருக்கு பனூ குரைளாவுடன் நெருங்கிய நட்பும் நெருக்கமும் இருந்து வந்தன. விரிவு
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) (கி.பி. 586 - கி.பி.625) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அத்தை உமைமாவின் மகனாவார். இவரின் சகோதரி ஜைனப் இப்னு ஜஹ்ஷையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பின்னர் மணமுடித்துக் கொண்டனர். நபித் தோழர்களில் ஒருவரான இவர், குறைஷி கோத்திரத்தைத் தவிர மற்ற கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். விரிவு
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ்பெற்ற தோழராகவும், மதீனாவின் அன்சாரிகளில் ஒருவராகவும் இருந்தார். இஸ்லாமிய ஆரம்ப காலத்தின் வீரம் மிக்க போராளி மற்றும் திறமையான வில் வீரராக அறியப்பட்டார். அல்-அகாபாவில் நடந்த விசுவாசப் பிரமாணத்தின் போதும், பத்ர், உஹுத் மற்றும் கந்தக் போர்களிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பக்கத்தில் இருந்தார். இவர்களின் இயற்பெயர் ஜைது என்பதாகும். எனினும் இவர்களின் காரணப் பெயராகிய அபூதல்ஹா என்பதே இவர்களின் இயற்பெயரைவிடப் புகழ் பெற்று விளங்குகிறது. அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களின் அன்னை உம்மு ஸலீமின் இரண்டாவது கணவரான இவர்கள் உம்மு ஸலீமை மணக்க விரும்பிய பொழுது, “நீர் இஸ்லாத்தைத் தழுவினால் தான் உம்மை மணப்பேன்” என்று உம்மு ஸலீம் கூறியதற்கிணங்கி இஸ்லாத்தைத் தழுவினார்.விரிவு
ஸஅத் இப்னு முஆத் (ரழி) (கி.பி. 590 - கி.பி. 627) அவர்கள் மதீனாவில் இருந்த பனூ அப்துல் அஷ்ஹல் என்ற கிளையின் தலைவரும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முக்கிய தோழர்களில் ஒருவரும் ஆவார். திருக்குர் ஆனின் அழகால் கவரப்பட்டு, முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் கைபிடித்து இஸ்லாத்தைத் தழுவியதோடு தம் கூட்டத்தினரிடமும் சென்று இஸ்லாத்தின் மேன்மையைப் பற்றி எடுத்துரைத்து அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினாலொழிய தாம் அவர்களுடன் பேசப் போவதில்லை என்று கூறினார் இவர். பலன், அன்று பொழுது படுவதற்குள் அக்கூட்டத்தினர் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்தனர். பத்ருப்போரில் அன்சார்கள் சார்பாக இஸ்லாத்தின் கொடியைத் தாங்கி சென்ற இவர் உஹதுப் போரிலும் கலந்து கொண்டார். இவர் அகழ்ப்போரில் கையில் படுகாயமுற்று பள்ளிவாயிலில் இருந்து மருத்துவம் செய்து கொண்டார். மேலும் இவரது காயம் பெரிதாகி இரத்தம் பெருக்கெடுத்தோடியது. அதனை நிறுத்த எவராலும் இயலாது ஷஹீதானார்.விரிவு
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான பரா இப்னு மஃரூரின் மகனான இவர் கி.பி. 622 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது அகபா உடன்பாட்டில் தம் தந்தையுடன் வந்து இஸ்லாத்தை தழுவியவர். மேலும் இவர் பத்ர், உஹத், அகழ்ப்போர் ஆகியவற்றிலெல்லாம் கலந்து கொண்டார். கைபர் போரில் கலந்து கொண்ட இவர், அதன் முடிவில் ஜைனப் இப்னு ஹாரித் என்ற யூதப் பெண், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்வில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன் நஞ்சூட்டப்பட்ட இறைச்சியை அன்பளிப்பாகக் கொண்டு வந்து வைத்த பொழுது, இவரும் அதனை உண்டார். உடனே அண்ணல் அவர்கள் அதில் ஒரு துண்டை எடுத்துக் கடித்ததும் இவரை நோக்கி,”உண்ணாதே! அது நஞ்சூட்டப் பட்டிருப்பதாக என்னிடம் கூறுகிறது” என்று கூறினார். ஆனால் அதற்குள் அவ்விறைச்சித் துண்டுகளின் ஒன்றை பிஷ்ர் இப்னு பரா (ரழி) அவர்கள் கடித்து விழுங்கி விட்டார்.விரிவு
அஸ்மா பின்த் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹா (கி.பி.595 - கி.பி.692) அவர்கள் அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்ர் (ரழி) அவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களின் மனைவியும் மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி)யின் அன்பு அன்னையுமான இவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று சுமார் 17 பேர் மட்டுமே இரகசியமான முறையில் இஸ்லாத்தைத் தழுவியிருந்த காலத்திலேயே 18வது நபராக அஸ்மா (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். விரிவு
மதீனாவின் பனூ நஜ்ஜார் எனும் அன்ஸாரிக் குலத்தைச் சேர்ந்த ரமீஸா எனும் இந்தப் பெண்மணி தான் வரலாற்றில் உம்மு ஸுலைம் (ரழி) என்று கூறப்படுகின்ற பிரபலமான நபித்தோழியர் ஆவார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலீபின் அன்னை ஸல்மாவின் பேர்த்தியாவார் இவர். இவரே அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உதவியாளராக பணிபுரிந்த நபித் தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களின் அன்னையாவார். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் போர்களத்திற்கு சென்று வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். உஹத், கைபர், ஹுனைன் போரிலும் கலந்து கொண்டார். விரிவு
அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழியரில் இவரும் ஒருவர். இவர் கினானா வம்சத்தைச் சேர்ந்தவர். இவரின் அன்னையின் பெயர் ஹிந்த். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியார் மைமூனா (ரழி) அவர்களுக்குச் சகோதரி முறையில் உள்ளவர். அர்க்கமின் இல்லத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவக்கு முன்னரேயே இவர் இஸ்லாத்தைத் தழுவியவர். இஸ்லாத்திற்கு முக்கியத் தூண்களாக விளங்கிய நபியவர்களின் பிரத்தியேக அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நபித்தோழர்கள் மூவருக்கு – ஒருவர் இறந்தபின் மற்றொருவருக்கு எனும் முறையில் - அஸ்மா (ரழி) அவர்கள் வாழ்க்கைத் துணைவியாய் இருந்தார்கள். முதலில் நபியவர்களின் பெரிய தந்தையாகிய அபூ தாலிபின் மகனார் ஜஅஃபர் (ரழி) அவர்களைக் கணவராகப் பெற்றார்கள். குறைஷிகளின் கொடுமை தாங்க இயலாது இவரும், இவருடைய கணவரும் அபிசீனியாவில் குடியேறிப் பல்லாண்டுகள் வாழ்ந்தனர். ஜஅஃபர் (ரழி) அவர்கள் மரணமான பிறகு அபூபக்ர் ஸித்தீக் (ரழி) அவர்களுக்கும். அவர்களும். மரணம் அடைந்த பிறகு மூன்றாவதாக அலீ (ரழி) அவர்களுக்கும் மணமுடிக்கப்பட்டார்கள்.விரிவு
ஸஹாபி பெண்மணியான இவரின் பட்டப் பெயர் உம்மு ஸல்மா என்பதாகும். இவர் மதீனாவில் வாழ்ந்த அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் அஷ்ஷால் குலத்தைச் சேர்ந்தவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த பின் இவர் பெண்கள் குழுவுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினார். விரிவு
அம்ர் இப்னு ஆஸ்(ரழி) (கி.பி. 573 – கி.பி.664) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். இவர் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்திற்குப் பெரும் எதிர்ப்புச் செய்தார். பின்னர் அபிசீனியாவில் நஜ்ஜாஷி மன்னரால் அறிவுத் தெளிவு பெற்று கி.பி.629 இல் மதீனா வந்தார், வரும் வழியில் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக மதீனா சென்று கொண்டிருந்த காலித் இப்னு வலீத் (ரழி) மற்றும் உஸ்மான் இப்னு தல்ஹா (ரழி) ஆகியரோடு இணைந்து சென்று இஸ்லாத்தை தழுவினார். இவர் இளமையிலேயே அறிவிற் சிறந்து விளங்கினார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது. இவரின் தலைமையில் தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது. கலீபா அபூபக்ர் (ரழி), கலீபா உமர் (ரழி), கலீபா உஸ்மான் (ரழி) ஆகியோர்களின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய படை தளபதி மற்றும் எகிப்தின் ஆளுநராக பணியாற்றிய இவர், அலீ (ரழி) அவர்களுக்கு எதிர் அணியில் முஆவியா (ரழி) அவர்களுடன் இணைந்து தம்முடைய தொண்ணூறாவது வயதில் இறக்கும் வரை எகிப்தின் ஆளுநராக இருந்தார். விரிவு
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) (கி.பி.550(disputed)-கி.பி.663) அவர்கள் துவக்கத்தில் யூத அறிஞராக இருந்த இவர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரானார். இவர் யூசுஃப் (அலை) அவர்களின் வழி வந்தவர். யத்ரிப் நகரில் வசித்த இவர் இஸ்லாமிய தூது மதீனாவில் பரவிய போது அது பற்றிய சரியான தெளிவை பெற தனது சந்தேகங்களை போக்கி உரிய தீர்வுகளை காண அண்ணல் நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்தவர், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தை முதன் முதலாக இவர் தரிசித்ததும் ‘இது ஒரு பொய்யரின் முகமல்ல’ என்று தமக்குள்ளே கூறிக் கொண்டார். பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “நான் உங்களிடம் மூன்று கேள்விகளை கேட்கப் போகிறேன். அதற்கான பதில்களை ஒரு நபியை தவிர வேறெவரும் அறிய மாட்டார்.” என கூறி இவர் கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற, இவர் பெரிதும் திருப்தியுற்று இஸ்லாத்தை தழுவினார். விரிவு