Home


ஸஅத் இப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு

        ஸஅத் இப்னு முஆத் (ரழி) (கி.பி. 590 - கி.பி. 627) அவர்கள் மதீனாவில் இருந்த பனூ அப்துல் அஷ்ஹல் என்ற கிளையின் தலைவரும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முக்கிய தோழர்களில் ஒருவரும் ஆவார். திருக்குர் ஆனின் அழகால் கவரப்பட்டு, முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் கைபிடித்து இஸ்லாத்தைத் தழுவியதோடு தம் கூட்டத்தினரிடமும் சென்று இஸ்லாத்தின் மேன்மையைப் பற்றி எடுத்துரைத்து அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினாலொழிய தாம் அவர்களுடன் பேசப் போவதில்லை  என்று கூறினார் இவர். பலன், அன்று பொழுது படுவதற்குள் அக்கூட்டத்தினர் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்தனர். பத்ருப்போரில் அன்சார்கள் சார்பாக இஸ்லாத்தின் கொடியைத் தாங்கி சென்ற இவர் உஹதுப் போரிலும் கலந்து கொண்டார். இவர் அகழ்ப்போரில் கையில் படுகாயமுற்று பள்ளிவாயிலில் இருந்து மருத்துவம் செய்து கொண்டார். மேலும் இவரது காயம் பெரிதாகி இரத்தம் பெருக்கெடுத்தோடியது. அதனை நிறுத்த எவராலும் இயலாது ஷஹீதானார்.

ஆரம்ப கால வாழ்வு மற்றும் இவரது குடும்பம்

        மதீனாவில் இருந்த அவ்ஸ் பழங்குடியினரின் அப்துல்-அஷ்ஹல் குலத்தைச் சேர்ந்த முஆத் பின் அல்-நுமான் என்பவருக்கும், கஸ்ராஜ் கோத்திரத்தைச் சேர்ந்த யூத பனூ அல்-ஹரித் குலத்தைச் சேர்ந்த கப்ஷா பின்த் ரஃபிய் என்ற அன்னைக்கும் மகனாக மதீனாவில் கி.பி. 590 இல் பிறந்தார். இவரது உடன்பிறப்புகள் அவ்ஸ் (மூத்தவர்), இயாஸ், 'அம்ர், இக்ராப் மற்றும் உம்மு ஹிஜாம் ஆகியோர்.

        கி.பி.617 இல் புஆத் போரில் கொல்லப்படும் வரை அவரது சகோதரர் அவ்ஸ் கோத்திரத்தின் தலைவராக இருந்தார். பின்னர் இவர் அவ்ஸ் கோத்திரத்தின் தலைவரானார். இவர் தனது சகோதரர் அவ்ஸின் விதவையான மனைவி ஹிந்த் பின்த் சிமாக்கை மணந்தார்,

யத்ரிபில் அல்லாஹ்வின் மார்க்கத்தை பரப்பிய முஸ்அப்

        அகபாவில் முதல் ஒப்பந்தம் நல்ல முறையில் முடிந்ததும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் முஸ்அப் இப்னு உமைர் (ரழி), அவர்களை யத்ரிப்க்கு அனுப்பினர்.

        ஒரு நாள் அஸ்அத் இப்னு ஜுராரா (ரழி) முஸ்அபை அழைத்துக் கொண்டு அப்துல் அஷ்ஹல், ளஃபர் ஆகிய கோத்திரத்தார்களின் இல்லங்களுக்குச் சென்றார். வழியில் ளஃபர் கோத்திரத்தாரின் தோட்டத்திற்குள் சென்று ‘மரக்’ என்ற கிணற்றுக்கருகில் அமர்ந்தனர். அவர்களுடன் பல முஸ்லிம்களும் அங்கு சேர்ந்து கொண்டனர். ஸஅது இப்னு முஆத் என்பவரும் உஸைத் இப்னு ஹுழைர் என்பவரும் அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இணைவைப்பில்தான் இருந்தனர். இவ்விருவரும் தங்களின் கூட்டத்தினருக்குத் தலைவர்களாக இருந்தனர். முஸ்அபும், அஸ்அதும் தங்களின் தோட்டங்களில் அமர்ந்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டவுடன் ஸஅத், உஸைதிடம் “நீ நமது எளியோர்களை ஏமாற்றும் இந்த இருவரிடமும் சென்று, அவர்களை எச்சரிக்கை செய்! நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்து விடு! நான் அவர்களிடம் கூற முடியாததற்குக் காரணம் அஸ்அத் இப்னு ஜுராரா எனது சிறிய தாயின் மகனாவார். இந்த உறவு மட்டும் இல்லாதிருந்தால் நானே இக்காரியத்தை செய்திருப்பேன்” என்று கூறினார்.

        இதைக் கேட்ட உஸைத் தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு இருவரையும் நோக்கி விரைந்து வந்தார். இதைப் பார்த்துவிட்ட அஸ்அத் இப்னு ஜுராரா தனது நண்பர் முஸ்அபிடம் “இதோ தனது கூட்டத்தின் தலைவர் வருகிறார். நீங்கள் அவரிடம் அல்லாஹ்வுக்காக உண்மையான வற்றைக் கூறிவிடுங்கள்!” என்று கூறவே அதற்கு முஸ்அப், “அவர் என்னுடன் அமர்ந்தால் நான் அவருடன் பேசுவேன்” என்று கூறினார்.

உஸைத் இப்னு ஹுழைர் இஸ்லாத்தைத் தழுவியது

        அங்கு வந்த உஸைத் அவருக்கருகில் நின்றுகொண்டு “நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்! எங்களில் எளியோர்களை ஏமாற்றவா? உங்களுக்கு உயிரின் மீது ஆசை இருந்தால் இங்கிருந்து சென்று விடுங்கள்” என்று கோபமாகப் பேசினார். அதற்கு முஸ்அப் அவரிடம் “நீங்கள் அமர்ந்து நான் சொல்வதைக் கேளுங்கள்! உங்களுக்கு விருப்பமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் விரும்பாவிட்டால் விட்டுவிடுங்கள்!” என்று கூறவே உஸைத் “நீங்கள் சொல்வது சரிதான்!” என்று கூறித் தனது ஈட்டியை நட்டுவைத்து அதற்கருகில் உட்கார்ந்து கொண்டார்.

        முஸ்அப் (ரழி) உஸைதுக்கு இஸ்லாமின் விளக்கங்களை கூறி குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே உஸைதின் முகத்தில் மாற்றத்தை, அதாவது, இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அனைவரும் கண்டனர். இதைக் கேட்டதற்குப் பிறகு உஸைத் “ஆஹா! இது எவ்வளவு அழகிய உரைநடையாக இருக்கின்றது. இம்மார்க்கத்தில் சேர விரும்பினால் நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அவ்விருவரும் “நீங்கள் குளித்து, தூய்மையான ஆடை அணிந்து ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ என மொழிந்து, பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும்” என்று கூறினார்கள். உஸைத் எழுந்துச் சென்று குளித்து, தூய்மையான ஆடை அணிந்துகொண்டு இஸ்லாமை ஏற்று, இரண்டு ரகஅத் தொழுதார். பிறகு கூறினார் “எனக்குப் பிறகு ஒருவர் இருக்கிறார். அவரும் உங்களைப் பின்பற்றி உங்களது மார்க்கத்தை ஏற்றுக் கொண்டால் அவரது கூட்டத்தினர் அனைவரும் உங்களை ஏற்றுக் கொள்வார்கள். அவர்தான் ஸஅது இப்னு முஆத். அவரை உங்களுக்கு நான் காட்டுகிறேன்” என்று கூறினார். பிறகு தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு ஸஅது இப்னு முஆதிடம் சென்றார். ஸஅது தனது கூட்டத்தாருடன் சபையில் அமர்ந்திருந்தார்.

ஸஅது இப்னு முஆத் இஸ்லாத்தை தழுவியது

        உஸைதை பார்த்த ஸஅது “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவரது முகத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது. இங்கிருந்து செல்லும்போதிருந்த அவருடைய முகம் அவர் திரும்ப வரும்போது இல்லையே” என்று கூறினார்.

        சபையில் வந்து நின்ற உஸைதிடம் “உஸைதே! அங்கு சென்று என்ன செய்தாய்?” என்று ஸஅத் கேட்டார். அதற்கு உஸைத், தான் இஸ்லாமைத் தழுவியதை வெளிப்படுத்தாமல் “நான் அவ்விருவரிடமும் பேசினேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்விருவரிடமும் எந்தத் தவறையும் நான் காணவில்லை. இருப்பினும் நான் அவர்களை அவர்களது செயல்களிலிருந்து தடுக்கவும் செய்தேன். அதற்கு அவ்விருவரும் எனது விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்வதாக கூறினார்கள்” என்றார்.

        மேலும், “ஹாஸா கூட்டத்தார் உங்களுடன் உள்ள உடன்படிக்கையை முறிக்க வேண்டும் என்பதற்காகவே உங்கள் சிறிய தாயின் மகனான அஸ்அதை கொலை செய்யச் சென்றிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது.” என்று ஸஅதிடம் உஸைத் கூறினார். இதைக் கேட்டவுடன் ஸஅத் சினமடைந்தவராக தனது ஈட்டியை எடுத்துக்கொண்டு அவ்விருவரிடம் வந்தார்.

        அவ்விருவரும் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து உஸைத் கூறிய நோக்கத்தைப் ஸஅது புரிந்துகொண்டார். இவர்களின் பேச்சை நான் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் உஸைத் இவ்வாறு செய்திருக்கிறார் என்று ஸஅத் விளங்கிக் கொண்டார். அவர்களுக்கருகில் நின்றுகொண்டு அஸ்அத் இப்னு ஜுராராவைப் பார்த்து “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அபூ உமாமாவே! உனக்கும் எனக்கும் உள்ள உறவின் காரணத்தால்தான் நீ இவ்வாறு செய்வதற்கு துணிந்திருக்கிறாய்! உனக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்!! எங்களது வீட்டிற்கு வந்து எங்களுக்கு விருப்பமற்ற முறையில் நடந்து கொள்கிறாயா?” என்று கேட்டார்.

        அஸ்அத் இப்னு ஜுராரா இதற்கு முன்பு ஸஅத் இப்னு முஆதைப் பற்றி முஸ்அபிடம் கூறியிருந்தார். அதாவது முஸ்அபே! நம்மிடம் வருகிற இவர் தனது கூட்டத்தின் தலைவர். இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் இவரது சமூகத்தினர் அனைவரும் ஒருவர் கூட பின்வாங்காமல் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியிருந்தார். முஸ்அப் (ரழி) அவர்கள் அமைதியாக “ஸஅதே! அமர்ந்து நான் கூறுவதைக் கேட்க மாட்டீர்களா? உங்களுக்கு நாங்கள் கூறுவது பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாங்கள் கூறுவது வெறுப்பாக இருந்தால் உங்களுக்கு விருப்பமற்றதிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று கூறினார். சரி! என்று கூறி தனது ஈட்டியை நட்டுவைத்து ஸஅத் அமர்ந்துகொண்டார். முஸ்அப் (ரழி) அவருக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்திக் குர்ஆனை ஓதிக் காட்டினார். அடுத்து ஸஅத் பேசத் துவங்கும் முன்பே அவரது முகத்தில் இஸ்லாம் பிரகாசிப்பதை அனைவரும் கண்டனர்.

பிறகு ஸஅது, இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமென்று வினவினார். குளித்து, தூய்மையான ஆடை அணிந்து, ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ எனக் கூறி இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று கூறினார்கள். உடனே அவரும் அவ்வாறே செய்தார். பிறகு தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு தனது சமூகத்தினர் அமர்ந்திருந்த சபைக்கு வந்தார். அவரைப் பார்த்த அவன் சமூகத்தினர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவரது முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று பேசிக்கொண்டனர்.

அப்துல் அஷ்ஹல் கிளையினர் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவியது

ஸஅத் சபைக்கருகில் வந்து “அப்துல் அஷ்ஹல் கிளையினரே! என்னைப் பற்றி உங்களது கருத்தென்ன?” என்று கேட்டார். அதற்கவர்கள் “நீங்கள் எங்கள் தலைவர் எங்களில் சிறந்த அறிவாளி; எங்களில் மிக பாக்கியம் பெற்றவர்” என்று கூறினர். அப்போது அவர் “நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கும் வரை நான் உங்களில் எந்த ஆண்களிடமும், பெண்களிடமும் பேசமாட்டேன்” என்று கூறினார். அன்று மாலைக்குள் அவரது கூட்டத்தினரில் உஸைம் என்பவரைத் தவிர அனைத்து ஆண்களும் பெண்களும் முஸ்லிமாகிவிட்டனர். உஸைம் உஹுத் போர் நடந்தபோதுதான் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.

அபூஜஹ்லின் அச்சுறுத்தல்

        உமய்யா பின் கலஃபின் நெருங்கிய நண்பராக ஸஅத் இப்னு முஆத் இருந்தார், மேலும் உமய்யா மதீனா வழியாக செல்லும் போதெல்லாம், அவர் ஸஅத் உடன் தங்குவார், மேலும் ஸஅத் மக்காவிற்கு செல்லும் போதெல்லாம், அவர் உமய்யாவுடன் தங்குவார்.

        இந்நிகழ்ச்சிக்குப் பின்பு ஸஅது இப்னு முஆத் (ரழி) உம்ரா செய்வதற்காக மக்கா சென்று உமய்யா இப்னு கலஃபிடம் தங்கினார்கள். உமய்யாவிடம் “நான் கஅபாவை வலம் வருவதற்காக மக்கள் யாருமில்லாத நேரமாகப் பார்த்து அழைத்துச் செல்” என்று கூறினார்கள். உமய்யா மதிய நேரத்திற்குச் சற்று முன் அவர்களை அழைத்துக் கொண்டு கஅபாவிற்குச் சென்றான்.

அந்த இருவரையும் வழியில் அபூஜஹ்ல் சந்தித்தான். அவன் உமய்யாவிடம் “அபூ ஸஃப்வானே!” உன்னுடன் இருப்பவர் யார்?” என்று கேட்டான். அதற்கு உமய்யா “இவர் ஸஅது” என்றான். அப்போது அபூஜஹ்ல் ஸஅதிடம் “நீ மக்காவில் நிம்மதியாக தவாஃப் செய்ய வந்துவிட்டாயா? மதீனாவாசிகளாகிய நீங்கள் மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றீர்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் செய்வோம் என்றும் கூறுகின்றீர்களா? அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ அபூ ஸஃப்வானுடன் வந்திருக்கவில்லை என்றால் உனது குடும்பத்திற்கு நீ பாதுகாப்புடன் திரும்ப முடியாது” என்று கூறினான். இதைக் கேட்ட ஸஅது, அவனது சப்தத்தை விட தனது சப்தத்தை உயர்த்தி “நீ அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தவாஃப் செய்வதிலிருந்து என்னைத் தடுத்தால், இதை விட உமக்கு மிகக் கடினமாக இருக்கும் ஒன்றை நான் தடுத்து நிறுத்துவேன். நீ வியாபாரத்திற்காக மதீனாவின் வழியை பயன்படுத்த விடமாட்டேன்” என்று எச்சரித்தார். (ஸஹீஹுல் புகாரி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்

        மக்காவில் இருக்கும்போது ஸஅத் இப்னு முஆத் (ரழி) அவர்கள் உமய்யாவைப் பார்த்து “முஸ்லிம்கள் உன்னை நிச்சயம் கொலை செய்து விடுவார்கள் என்று நபி (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள். இதைத் கேட்ட உமய்யாவுக்கு மரண பயம் ஏற்பட்டு மக்காவை விட்டு வெளியேறவே மாட்டேன் என்று தனக்குத் தானே உறுதி செய்து கொண்டான். பத்ர் போர் அன்று அபூஜஹ்ல் தன்னுடன் வந்தே ஆக வேண்டும் என்று அவனை நிர்ப்பந்தித்த போது போரிலிருந்து தப்பிப்பதற்கு வசதியாக மக்காவில் உள்ள ஒட்டகங்களில் மிகச் சிறந்ததை வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். அவனுடைய மனைவி “ஏ! அபூஸஃப்வான். மதீனாவில் உள்ள சகோதரர் உனக்கு கூறியதை நீ மறந்துவிட்டாயா?” என்று கேட்டாள். அவன் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களுடன் சிறிது தூரம்தான் செல்ல நாடுகிறேன்” என்று கூறினான். (ஸஹீஹுல் புகாரி)

பத்ருப் போரில் ஸஅத் (ரழி) அவர்களின் பங்களிப்பு

 பத்ருப் போரில் இஸ்லாத்தின் அன்ஸாரிகளின் படை பிரிவு கொடியைத் தாங்கிச் சென்ற இவர், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் சிறந்த ஆலோசனையையும் நல்கினர்.

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்காக உயரமான ஒரு பரணி வீட்டை கட்டுகிறோம் அதில் நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் உங்களுக்குத் தேவையான வாகனங்களையும் அதற்கருகில் ஏற்பாடு செய்கிறோம் பின்பு நாளை எதிரிகளை நாங்கள் சந்திக்கும்போது அல்லாஹ் நம்மை மிகைக்க வைத்தால், நமக்கு வெற்றி அளித்தால், அது நாம் விரும்பியவாறே நடந்ததாக இருக்கட்டும். இல்லை! அதற்கு மாற்றமாக ஏதாவது நடந்தால் நீங்கள் இந்த வாகனத்தில் அமர்ந்து எங்களுக்குப் பின்னுள்ள எங்களது கூட்டத்தனரிடம் சேர்ந்து கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதரே! இன்னும் பலர் இங்கு வரவில்லை எங்களை விட அவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் நீங்கள் போரைச் சந்திப்பீர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை விட்டு ஒருக்காலும் அவர்கள் பின்தங்கியிருக்க மாட்டார்கள். அவர்களிடம் நீங்கள் சென்றால் அவர்கள் மூலம் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான். அவர்கள் உங்களிடம் உண்மையுடன் நடந்து, உங்களுக்கு ஆதரவாக போரும் புரிவார்கள்.” இவ்வாறு ஸஅது (ரழி) தங்களின் சிறந்த ஆலோசனையை நபி (ஸல்) அவர்கள் முன் வைத்தார்.

ஸஅது (ரழி) அவர்களின் இந்த யோசனையை நபி (ஸல்) அவர்கள் கேட்டு, அவரைப் புகழ்ந்து அவருக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். முஸ்லிம்கள் போர் மைதானத்திற்கு வடக்கிழக்கில் இருந்த உயரமான ஒரு திட்டின் மீது பரணி வீட்டை, அதில் இருந்து கொண்டு போர் மைதானத்தைப் பார்க்கும்படியாக அமைத்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களை சுற்றி பாதுகாப்பிற்காக ஸஅது இப்னு முஆத் (ரழி) தலைமையில் சில அன்சாரி வாலிபர்களின் குழு ஒன்று தேர்வு செய்யப்பட்டது.

உஹதுப் போரில்

        மதீனாவிற்கு வெளியில் இருந்து போர் புரிய நபி (ஸல்) அவர்களின் ஆணைக்கிணங்க இஸ்லாமியப் படை மதீனாவின் வடக்கு நோக்கிப் புறப்பட்டது. ஸஅது இப்னு உபாதா, ஸஅது இப்னு முஆத் ஆகியோர் கவச ஆடை அணிந்து, நபி (ஸல்) அவர்களுக்கு முன் நடந்து சென்றார்கள்.

        அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சிங்கம் என்று பெயர் பெற்ற மாவீரர் ஹம்ஜா (ரழி) கொலை செய்யப்பட்டதால் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டிருந்தாலும் முஸ்லிம்கள் நிலைமைகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பின்னர் ஏற்பட்ட குழப்பத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை சுற்றி கேடயமாக இருந்த நபித் தோழர்களில் இவர்களும் ஒருவர்.

தீனார் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை முஸ்லிம்கள் வழியில் சந்தித்தார்கள். அந்தப் பெண்ணின் கணவரும், சகோதரரும், தந்தையும் போரில் கொல்லப்பட்டிருந்தார்கள். இவர்களின் மரணச் செய்தியை முஸ்லிம்கள் அவருக்குக் கூறினார்கள். ஆனால், அப்பெண்மணி “அல்லாஹ்வின் தூதர் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டார்.

வழியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி: நபி (ஸல்) அவர்களை ஸஅது இப்னு முஆதின் தாயார் சந்தித்தார்கள். ஸஅது நபியவர்களுடைய குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவாராக நடந்து வந்து கொண்டிருந்தார். “அல்லாஹ்வின் தூதரே! இதோ... எனது தாய் வருகிறார்” என்றார். நபியவர்கள் “நல்லபடியாக வரட்டும்” கூறி அவருக்காக நின்றார்கள. அவர் அருகே வந்தவுடன் அவரது மகன் அம்ர் இப்னு முஆத் (ரழி) இறந்ததற்கு ஆறுதல் கூறினார்கள். அதற்கு அப்பெண்மணி “நபியே! உங்களை நல்ல நிலையில் பார்த்தவுடன் மற்ற அனைத்து சோதனைகளையும் நான் சிறியதாகவே கருதுகிறேன்” என்று கூறினார். பின்பு நபியவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரார்த்னை செய்துவிட்டு “ஸஅதின் தாயே! நீர் நற்செய்தி பெற்றுக்கொள்! உஹுதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார்களுக்கு நற்செய்தி சொல்! அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் தோழர்களாக உலவுகின்றனர். அவர்கள் குடும்பத்தார்களுக்காகவும் அவர்களின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்” என்றார்கள். இதை கேட்ட ஸஅதின் தாயார் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பொருந்திக்கொண்டோம். மகிழ்ச்சி அடைந்தோம். இதற்க்குப் பின் யார் அவர்களுக்காக அழுவார்கள்! என்று கூறி, மேலும் “அல்லாஹ்வின் தூதரே! எஞ்சியிருக்கும் அவர்களது உறவினர்களுக்காக நீங்கள் பிரார்த்னை புரியுங்கள்” என்றார். நபியவர்கள் “அல்லாஹ்வே! இவர்களின் மனக் கவலையைப் போக்குவாயாக! இவர்களது சோதனைகளை நிவர்த்தி செய்வாயாக! எஞ்சி உள்ளவர்களுக்கு அழகிய பகரத்தைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)

அகழ்ப் போரில் கையில் ஏற்பட்ட காயம்

        இவர் அகழ்ப் போரில் கையில் படுகாய முற்றுப் பள்ளிவாயிலில் இருந்து மருத்துவம் செய்து கொண்டார். பின்னர் துரோகிகளான பனூ குரைலாக்களின் கோட்டை முற்றுகையிடப் பட்ட பொழுது அவர்கள் இறுதியில் தாங்கள் ஸஅத் இப்னு முஆத் கூறும் தீர்ப்புக்கு இணங்குவதாய்க் கூறினார்கள். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.

தெளராத்தின் சட்டப்படி தீர்ப்பு

        இவர் தெளராத்தின் சட்டப்படி தீர்ப்பு வழங்கினார். பனூ குரைலாக்களிலுள்ள அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பதும் பெண்களும் குழந்தைகளும் முஸ்லிம்களின் உடைமைகளாக வேண்டும் என்பதே அத்தீர்ப்பு. அது கேட்டு அங்கிருந்த அனைவரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அதிர்ந்து போனார்கள். “ஏழு வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹ்வால் இது விதியாக்கப்பட்ட தாகும்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வருத்தத்துடன் கூறினார்கள்.

மரணம் மற்றும் நல்லடக்கம்

இதன் பின் இவரது காயம் பெரிதாகி இரத்தம் பெருக்கெடுத்தோடியது. அதனை நிறுத்த எவராலும் இயலவில்லை. கி.பி. 627 இல் இவர் மரணமடைந்தார்.

இவர் இறந்ததும் இவரது சவப்பெட்டியை அண்ணல் நபி (ஸல்) அவர்களும் சற்றுத் தொலைவரை சுமந்து சென்றார்கள். அது கனக்காதிருந்ததைக் கண்ட நயவஞ்சகர்கள், “அவர் பனூ குரைலாக்கள் மீது கடுமையாய்த் தீர்ப்பளித்ததே இதற்குக் காரணம்” என்று கூற, “இல்லை; வானவர்களும் அதனைச் சுமக்கின்றார்கள். அர்ஷும் அவருக்காக நடுங்குகிறது” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர்.

குழியில் இவரின் உடலம் வைக்கப்பட்ட பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உரத்துத் தக்பீர் கூற ஏனையோரும் அவ்விதமே செய்தனர். அதற்கான காரணம் பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட பொழுது, “மக்களைப் புதைகுழி நெருக்கும். அதன் நெருக்கிலிருந்து தப்பியவர் எவரும் இருந்தாரென்றால் அவர் ஸஅத் இப்னு முஆதேயாவார்” என்று கூறினார்கள் அவர்கள்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.