அம்ர் இப்னு ஆஸ்
(ரழியல்லாஹு அன்ஹு)
அம்ர் இப்னு ஆஸ்(ரழி) (கி.பி. 573 – கி.பி.664) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். இவர் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்திற்குப் பெரும் எதிர்ப்புச் செய்தார். பின்னர் அபிசீனியாவில் நஜ்ஜாஷி மன்னரால் அறிவுத் தெளிவு பெற்று கி.பி.629 இல் மதீனா வந்தார், வரும் வழியில் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக மதீனா சென்று கொண்டிருந்த காலித் இப்னு வலீத் (ரழி) மற்றும் உஸ்மான் இப்னு தல்ஹா (ரழி) ஆகியரோடு இணைந்து சென்று இஸ்லாத்தை தழுவினார். இவர் இளமையிலேயே அறிவிற் சிறந்து விளங்கினார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது. இவரின் தலைமையில் தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது. கலீபா அபூபக்ர் (ரழி), கலீபா உமர் (ரழி), கலீபா உஸ்மான் (ரழி) ஆகியோர்களின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய படை தளபதி மற்றும் எகிப்தின் ஆளுநராக பணியாற்றிய இவர், அலீ (ரழி) அவர்களுக்கு எதிர் அணியில் முஆவியா (ரழி) அவர்களுடன் இணைந்து தம்முடைய தொண்ணூறாவது வயதில் இறக்கும் வரை எகிப்தின் ஆளுநராக இருந்தார்.
ஆரம்பகால வாழ்வு
அம்ர் இப்னு அல்-ஆஸ் கி.பி. 573 இல் மக்காவில் பிறந்தார். இவரது தந்தை, அல்-ஆஸ் இப்னு வாயில், மக்காவின் குரைஷி பழங்குடியினரின் பனு சாம் குலத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார நில உரிமையாளர் ஆவார். அம்ரின் தாய் அனாசா பழங்குடியினரின் பனு ஜல்லான் குலத்தைச் சேர்ந்த அல்-நபிகா பின்த் ஹர்மலா ஆவார்.
இவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒட்டகங்களை அறுத்துக் கொடுத்து ஊதியம் பெற்றதோடு நறுமண வாணிபமும் செய்து வந்தார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்திற்குப் பெரும் எதிர்ப்புச் செய்த இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது வசைக்கவிகள் பாடுவதிலும், அதனைச் சிறுவர்களிடம் கொடுத்துத் தெருக்களில் பாடிக் கொண்டு செல்லுமாறு செய்வதிலும் முனைந்து வேலை செய்தார். முஸ்லிம்கள் அபிசீனியாவில் அடைக்கலம் புகுந்த பொழுது அவர்களுக்கெதிராக அபிசீனிய மன்னரின் உள்ளத்தில் நச்சு வித்தை தூவுவதற்காக அனுப்பப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் ஏற்கெனவே அங்கு சென்று அந்நாட்டு மன்னருக்கு அறிமுகமாயிருந்ததனால் இவர் அபிசீனியாவுக்கு அனுப்பத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சிலர் கருதுகிறார்கள்.
அகழ்ப் போருக்குப் பின் இவர் குறைஷிகளை அணுகி, தங்களின் காலம் முடிந்து விட்டது என்றும் எனவே அபிசீனியாவுக்குச் சென்று குடியேறி விடுவோம் என்றும் கூறி அவ்விதமே அபிசீனியா சென்று அங்குக் குடியேறினார்.
இஸ்லாத்தை தழுவ இவர் கேட்ட கோரிக்கை
அபிசீனியாவில் இவர் நஜ்ஜாஷி மன்னரால் அறிவுத் தெளிவு பெற்று கி.பி. 629-இல் மதீனா வந்தார். வரும் வழியில் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக மதீனா சென்று கொண்டிருந்த காலித் இப்னு வலீத் (ரழி) அவர்களையும் உஸ்மான் இப்னு தல்ஹா (ரழி) அவர்களையும் இவர் சந்தித்துக் கொண்டார். அவர்களின் வருகையை உணர்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சி மீக்குற்று, “குறைஷிகள் தங்களின் ஈரல் குலையையே அனுப்பி வைத்துள்ளனர்” என்று கூறினர். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருமுன் காலித் இப்னு வலீது (ரழி) அவர்களுக்கு பின் சென்ற அம்ரு இப்னு ஆஸ் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “என் முந்தைய பாவங்கள் எல்லாம் பொறுக்கப்பட்டால் தான் நான் இஸ்லாத்தைத் தழுவுவேன்” என்று கூறினார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “நீர் இஸ்லாத்தைத் தழுவின் ஹிஸ்ரத் செய்தவரின் முந்தைய பாவ அழுக்குகள் துடைக்கப்பட்டது போன்று நீரும் தூய்மை பெற்றுவிடுவீர்” என்று கூறினர். அது கேட்டு இவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
படையெடுப்புக்கு தளபதியாக நியமித்தல்
பின்னர் இவர் வேண்டிக் கொண்டதன் பேரில் பனூ குத்ஸா என்ற கூட்டத்தினரை எதிர்த்து நடத்தப்பட்ட படையெடுப்புக்கு இவரைத் தளபதியாக நியமித்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினர். இவருக்கு உதவியாகப் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரழி) அவர்களின் தலைமையில் அனுப்பிய படையணியில் அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரும் இருந்தனர்.
ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரை நோக்கி இல்லம் சென்று ஆயுதமணிந்து வருமாறும் தாம் இவரை ஒரு படையெடுப்புக்குத் தலைவராக நியமித்து அனுப்பப் போவதாகவும் அதில் ஏராளமான கொள்ளைப் பொருள்கள் இவருக்குக் கிடைக்கும் என்றும் கூறிய பொழுது தாம் பொருளை விரும்பி இஸ்லாத்தில் சேரவில்லை என்று பதிலுரைத்தார் இவர். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரை நோக்கி, “நல்ல மனிதருக்குப் பொருள் கிடைப்பது நல்லதேயாகும்” என்று கூறினர். இதன் பிறகு இவர் உம்மான் மீது படையெடுத்துச் சென்ற பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறப்புச் செய்தியைக் கேள்வியுற்று மதீனா திரும்பினார்.
படையணிக்கு தலைவராக அனுப்பிய கலீபா அபூபக்ர் (ரழி), உமர் (ரழி)
இவரை பலஸ்தீனை நோக்கி அனுப்பி வைக்கப்பட்ட ஒரு படையணிக்கு தலைவராக ஆக்கினர் அபூபக்ர் (ரழி) அவர்கள். ஆங்கு வெற்றி முரசு கொட்டிய இவர், பைத்துல் முகத்தஸுக்கு வந்த கலீபா உமர் (ரழி) அவர்களிடம் எகிப்தின் மீது படையெடுத்துச் செல்வதற்கான அரை மனதுடன் கூடிய அனுமதியைப் பெற்றார். பின்னர் மதீனா சென்று உஸ்மான் (ரழி) அவர்களுடன் ஆலோசனை கலந்த உமர் (ரழி) அவர்கள் அப்படையெடுப்பைச் சற்று நிறுத்தி வைக்குமாறு இவருக்குக் கட்டளை அனுப்ப, “எகிப்து நாட்டு எல்லைக்குள் நுழைவதற்கு முன் என் கடிதம் உமக்கு கிடைப்பின் படையெடுப்பை நிறுத்தி வையும்! நுழைந்த பின் கிடைப்பின் அல்லாஹ்வின் உதவியை இறைஞ்சிய வண்ணம் முன்னேறிச் செல்லும்!” என்று உமர் (ரழி) அவர்களின் முந்தைய கட்டளையை மனத்திற் கொண்டு கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்பதை ஒருவாறு உய்த்தறிந்து கடிதத்தைத் திறக்காமலேயே எகிப்தின் மீது படையெடுத்துச் சென்று அலெக்ஸாண்ட்ரியாவை வென்றார் இவர்.
அலெக்ஸாண்ட்ரியாவை முற்றுகையிடும் பொழுது நடந்த சம்பவம்
அலெக்ஸாண்ட்ரியாவை முற்றுகையிடும் பொழுது இவரும், இவருடைய கிரேக்க அடிமையும், மற்றும் சிலரும் சிறை செய்யப்பட்டு அதன் ஆளுநரின் முன் கொண்டு வரப் பட்ட பொழுது அவர் இவர்களை நோக்கி, “ஏன் எங்களின் நாட்டின் மீது படையெடுத்து வந்தீர்கள்?” என்று வினவிய பொழுது, “உங்களை இஸ்லாத்தைத் தழுவுமாறு செய்ய; இல்லையேல், உங்களிடமிருந்து ஜிஸ்யா வசூலித்துச் செல்ல” என்று துணிச்சலுடன் கூறினார் இவர். அது கேட்டு வெகுண்ட அவ்வாளுநர் இவரைச் சிரச்சேதம் செய்யுமாறு தம்முடைய ஊழியனுக்குக் கிரேக்க மொழியில் ஆணையிட, அதனை விளங்கிக் கொண்ட இவரின் கிரேக்க அடிமை இவரின் கன்னத்தில் பளாரென அறைந்து, “அற்பப்பயலே! பெரியவர்கள் இருக்கும் பொழுது, நீ முந்திரிக் கொட்டை போன்று முன் வந்து பேசுகின்றாயே, போ, வெளியே” என்று கூறி இவரைப் பிடர் பிடித்துத் தள்ளினான்.
அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு முஸ்லிம் அவ்வாளுநரை நோக்கி, “அந்த சாமான்யனின் வார்த்தையைப் பொருட்படுத்தாதீர்கள். எங்களின் கலீபா உமர் (ரழி) அவர்கள் உங்களுடன் ஓர் இணக்கத்திற்கு வர ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைப்பதாக எழுதியுள்ளனர். நீங்கள் எங்களை விடுதலை செய்து அனுப்பின் எங்களை அன்புடன் நடத்திய விதத்தை அத்தூதுக் குழுவினரிடம் கூறி நம் இருவரிடையே நல்லுறவு ஏற்பட வழிகோலுவோம்” என்று சொன்னார். அவர் கூறியதை உண்மையென நம்பி அவ்வாளுநர் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்தார் என்றும் இவ்வாறு இவருடைய உயிர் மயிரிழையில் தப்பியது என்றும் கூறுவர்.
எகிப்தில் முஸ்லிம் ஆட்சிக்கு வரவேற்பு
முன்னர் எகிப்தை ஆண்டவர்கள் கொடுமையுடன் ஆட்சி செய்ததனால் அலெக்ஸாண்ட்ரியாவின் பெரிய மதகுரு, முஸ்லிம்களின் ஆட்சியை வரவேற்றதோடு அவர்களுக்கு யாதொரு எதிர்ப்பும் செய்யக்கூடாது என்று தம் மக்களுக்குக் கட்டளையிட்டார். இக்காலை ஆங்கிருந்த இயேசுநாதரின் சிலையின் மூக்கை எவரோ ஒருவர் உடைத்து விட்டதற்குப் பகரமாக கிருஸ்தவர்கள் ஒன்று கூடி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிலை ஒன்று செய்து அதன் மூக்கை உடைக்கத் தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று கூறிய பொழுது அதற்கு அனுமதி வழங்க மறுத்த இவர். அதற்குப் பகரமாகத் தம் மூக்கையே துணிக்குமாறு கூறினார். பெரும் திரளான மக்களிடையே இவருடைய மூக்குத் துணிக்கப் பெறும் நேரத்தில், குற்றவாளி முன் பாய்ந்து வந்து தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு தன் மூக்கைத் துணிக்குமாறு கூறினான். அப்பொழுது வாளுடன் நின்ற பாதிரியார் முஸ்லிம்களின் பெருந்தன்மையை வாயாரப் புகழ்ந்து உருவச் சிலையின் மூக்கைத் துணிப்பதிலும் உயிருள்ள மனிதரின் மூக்கைத் துணிப்பது மிகப்பெரும் தவறு என்று கூறித் தம் வாளை உறையிலிட்டார்.
இவர் பாளையம் இறங்கிய இடம் தான் இன்றைய எகிப்து தலைநகர் கெய்ரோ
இவர் ஒரு முறை கூடாரமடித்து தங்கி இருந்த பொழுது அதன் உச்சியில் புறா கூடு கட்டி இருப்பதைக் கண்டு அப்புறாவின் மீதும் அதன் குஞ்சுகளின் மீதும் இரங்கி அக்கூடாரத்தை அவிழ்க்காமல் அவ்விடத்திலேயே விட்டு விட்டுச் சென்றார் என்றும் கூறப்படுகிறது.
எகிப்து மண்ணில் இவர் பாளையம் இறங்கிய இடம் ஃபுஸ்தாத் என்னும் பெயருடன் பெருநகரமாகியது. அதுவே இன்று பழைய கெய்ரோ என்னும் பெயருடன் விளங்குகிறது. அங்கு இவர் கட்டிய முதல் பள்ளிவாசல் இன்றும் உள்ளது. அதுவே ஆப்பிரிக்க மண்ணில் முதன் முதலாக எழுப்பப்பட்ட பள்ளிவாயிலாகும். அதில் மிஹ்ராபும் இல்லை; மினாராவும் இல்லை. கி.பி.969 ஆம் ஆண்டு வரை அதாவது பாத்திமிகளின் ஆட்சி வரை இதுவே எகிப்தில் தலைநகராக இருந்தது.
கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் எகிப்து ஆளுநரை மாற்றியது
இவர் போதுமான வரி வசூலித்து அனுப்பவில்லை என்பதற்காக அப்துல்லாஹ் இப்னு ஸஅத் என்பவரைக் கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் எகிப்தின் ஆளுநராக நியமித்து அனுப்பி வைத்தார். இச்சமயம் மீண்டும் அலெக்ஸாண்ட்ரியா ரோமானியர் கைவசமானது. அதனை மீட்ட பெருமை இவரையே சாரும். இதன் பின் அப்துல்லாஹ் இப்னு ஸஅத்தின் கீழ் பணியாற்ற இவர் மறுத்து விட்டார்.
அலீ (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது முஆவியாவை ஆதரித்தது
அலீ (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது இவர் முஆவியா (ரழி) அவர்களை ஆதரித்தார். ஸிஃப்ஃபீன் சண்டையில் அலீ (ரழி) அவர்கள் படை வெற்றியடையும் தருவாயில் இருந்ததை அறிந்த இவர் ஈட்டி முனையில் திருக்குர் ஆனைக் கட்டிக் காண்பித்து அல்லாஹ்வின் வார்த்தைக்குக் கட்டுப்படுவதாகக் கூறி சமாதானம் கோரினார். அலீ (ரழி) அவர்களின் பிரதிநிதியான அபூமுஸா அல் அஷ் அரீயுடன் இவர் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது இவர் ஆற்றிய ‘அரசியல் சாகசச் செயல்’ அரபு நாட்டின் நான்கு அரசியல் மேதை (துஹாத்)களில் இவரும் ஒருவர் என்னும் புகழ்ப் பெயரை இவருக்கு ஈட்டித்தந்தது.
ஒரே நாளில் மூவரைக் கொல்லச் சதி அதிலிருந்து இவரை காப்பாற்றிய வயிறு
அலீ (ரழி) அவர்கள் முஆவியா (ரழி) அவர்களுடன் செய்த உடன்பாட்டை ஒரு கூட்டத்தினர் எதிர்த்து அவர்களை விட்டும் பிரிந்து சென்று அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்தனர். அவர்களை அடக்கி ஒடுக்கினர் அலீ (ரழி) அவர்கள். எனினும் அவர்களில் சிலர் அலீ (ரழி), முஆவியா (ரழி), அம்ர் இப்னு ஆஸ் ஆகிய மூவரையும் கொன்றால் தான் அரசியல் நெருக்கடி தீரும் எனக் கருதி இம்மூவரையும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கொல்லச் சதி செய்தனர்.
அவ்வாறே அலீ (ரழி) அவர்கள் இப்னு முல்ஜாம் என்பவரால் ஹிஜ்ரி 40 ரமலான் பிறை 17 (கி.பி. 661 ஜனவரி 24 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை வைகறையில் கொல்லப்பட்டனர். அல் புராக் அஸ்ஸரீமி என்பவன் திமிஷ்கிற்குச் சென்று முஆவியா (ரழி) வைகறைத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் பொழுது அவர்களை ஈட்டியால் குத்தினான். அது தவறி அவர்களின் ஜனனேந்திரிய நரம்பை வெட்டியதால் அதற்குப் பின் அவர்களுக்கு மகப்பேறு ஏற்படாமல் போய் விட்டது. அன்று இரவு அம்ர் இப்னு ஆஸுக்கு வயிற்றுக் கோளாறாய் இருந்ததால் காரிஜா என்பவரை வைகறைத் தொழுகையைத் தொழுவிக்குமாறு கூற அவரையே அமர் இப்னு ஆஸ் என எண்ணி ஸாதாவைஹ் என்ற கொடியோன் குத்திக் கொன்று விட்டான். பின்னர் அவன் கூறும் பொழுது, “நான் அம்ரைக் குறி வைத்தேன். ஆனால் இறைவனோ காரிஜாவைப் பலியாக்கி விட்டான்.” என்று கூறினான். தாம் தம்முடைய வயிற்றுக் கோளாறினால் உயிர் காக்கப் பெற்றதைப் பிற்காலத்தில் அம்ர் குறிப்பிடும் பொழுது, “என்னுடைய வயிறு அன்றிரவு எனக்கு உதவி செய்ததைத் தவிர்த்து வேறு யாதொரு உதவியையும் எனக்குச் செய்யவில்லை” என்று வேடிக்கையாகக் கூறினார்.
மீண்டும் எகிப்தின் ஆளுநர் பதவி
முஆவியா (ரழி) அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் இவர் அவர்களை அணுகித் தமக்கு எகிப்தின் ஆளுநர் பதவி தருமாறு வேண்டினார். அப்பொழுது இவர் அவர்களை நோக்கி, “தாங்கள் அதனை எனக்குத் தரின் தாங்கள் அறிவார்ந்த செயல் செய்ததாகக் கருதப்படும். ஏனெனில் நான் தங்களின் விரோதிகளைக் கருவழிப்பவனாகவும் தங்களுடைய நண்பர்களுக்கு உதவியாளனாகவும் இருப்பேன்” என்று கூறினார். அவ்விதமே இவரை எகிப்தின் ஆளுநராக நியமித்தார் முஆவியா (ரழி). இவர் தம்முடைய தொண்ணுறாவது வயதில் இறக்கும் வரை எகிப்தின் ஆளுநராக இருந்தார்.
இவருடைய இறுதி காலம் மற்றும் மரணம்
இவருக்கு இறப்பு வேளை நெருங்கியதும் அரிகண்டத்தாலும், விலங்காலும் தம் கழுத்தையும் கைகளையும் கட்டிக் கொண்டு, “ஆதமுடைய மகனின் உயிர் தொண்டைக்கும் வாய்க்கும் வரும் வரை அவனுக்குப் பாவமன்னிப்பின் வாயில் திறந்திருக்கிறது என்னும் நபிமொழி இருக்கிறது” என்று கூறி இறைவனிடம் அழுது கெஞ்சிப் பாவமன்னிப்புக் கேட்டார். அப்பொழுது இவர், “இறைவனே! நீ கட்டளையிட்டாய். நான் கீழ்படிய மறுத்தேன். நீ தடுத்தாய். நான் அதைச் செய்தேன். மன்னிப்பைப் பெறும் வண்ணம் நான் நிரபராதியுமல்ல; உன் விருப்பத்தை எதிர்த்து நிற்கும் வண்ணம் நான் பலசாலியுமல்ல” என்று கூறி அழுதார். அப்பொழுது அங்கிருந்த இவருடைய மகன் அப்துல்லாஹ், “தாங்கள் இஸ்லாத்திற்காக ஆற்றிய போர்களும், பெற்றுத் தந்த வெற்றிகளுமே தங்களுக்கு சுவனப் பெரு வாழ்வை ஈட்டித்தருமே. ஏன் வீணே அழுகிறீர்கள்” என்று ஆறுதல் கூறிய பொழுது, ”இல்லை; இல்லை. நான் அவற்றைவிட மேலான ஒன்றைப் பெற்றுள்ளேன். அதுவே ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முகம்மதர் ரசூலுல்லாஹ்’ என்னும் திருக்கலிமாவாகும். இது ஒன்றே எனக்குச் சுவனப் பெருவாழ்வை ஈட்டித்தரவல்லது” என்று கூறிக் கண்களை மூடிக் கொண்டார்.
இது ஹிஜ்ரி 43 ஆம் ஆண்டு ஷவ்வால் முதல் பிறை (கி.பி. 664 ஜனவரி 6) அன்று நிகழ்ந்தது. முகத்தம் மலையின் அடிவாரத்தில் இவர் நல்லடக்கம் செய்யப்பட்டார். இவரின் ஜனாஸாத் தொழுகையை நடத்திய இவரின் மகன் பின்னர்ப் பள்ளிவாயில் திரும்பி ஆளுநர் என்ற முறையில் ஈதுல்ஃபித்ர் தொழுகையை நடத்தினார்.
உமர் (ரழி) அவர்கள் இவரின் அறிவாற்றலைப் பெரிதும் வியந்தனர் என்றும், ஒருவர் அறிவு மந்தமாக இருப்பின் அதனை அவரிடம் எடுத்துரைக்கும் பொழுது, “அம்ரு இப்னு ஆஸைப் படைத்த இறைவன் தான் உம்மையும் படைத்துள்ளான்” என்று கூறுவர் என்றும் ஒரு வரலாறு இருக்கிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.