அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி)
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) (கி.பி.550(disputed)-கி.பி.663) அவர்கள் துவக்கத்தில் யூத அறிஞராக இருந்த இவர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரானார். இவர் யூசுஃப் (அலை) அவர்களின் வழி வந்தவர். யத்ரிப் நகரில் வசித்த இவர் இஸ்லாமிய தூது மதீனாவில் பரவிய போது அது பற்றிய சரியான தெளிவை பெற தனது சந்தேகங்களை போக்கி உரிய தீர்வுகளை காண அண்ணல் நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்தவர், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தை முதன் முதலாக இவர் தரிசித்ததும் ‘இது ஒரு பொய்யரின் முகமல்ல’ என்று தமக்குள்ளே கூறிக் கொண்டார். பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “நான் உங்களிடம் மூன்று கேள்விகளை கேட்கப் போகிறேன். அதற்கான பதில்களை ஒரு நபியை தவிர வேறெவரும் அறிய மாட்டார்.” என கூறி இவர் கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற, இவர் பெரிதும் திருப்தியுற்று இஸ்லாத்தை தழுவினார்.
கேட்ட கேள்விகளும் அதற்களித்த பதில்களும்
அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி இவர், “கியாம நாளின் முதலாவது அடையாளம் யாது? என்று வினவினார். “நெருப்பு! அது கிழக்கில் தோன்றி மேற்கில் பரவும்” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
அதன் பின் இவர், “சுவனத்தில் முதலாவது உண்ணப்படும் உணவு யாது?” என்று வினவினார். “மீன் சினை” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
அதன் பின் இவர், “குழந்தை தந்தையின் சாயலிலோ தாயின் சாயலிலோ இருக்க காரணம் என்ன?” என்று வினவினார். “தந்தையின் இந்திரியம் முந்தினால் தந்தை போன்றும் தாயின் சுக்கிலம் முந்தினால் தாய் போன்றும் குழந்தை பிறக்கும்” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அது கேட்ட இவர், “இத்தகு விடைகள் நபிமார்களுக்கேயன்றி வேறெவருக்கும் தெரியாது” என்று கூறி இஸ்லாத்தைத் தழுவினார்.
இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இரவைப் பற்றி வினவிய பொழுது, “அது பெண்களை ஆண்கள் மருவும் காலம்; ஓய்வு கொள்ளும் நேரம்” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். பகலைப் பற்றி வினவிய பொழுது, “அது உணவு தேடுவதற்காக முயற்சியாற்றும் காலம்” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். “சூரியனும் சந்திரனும் மூமின்களா (இறை நம்பிக்கையாளர்களா?), காஃபிர்களா? (இறை மறுப்பவர்களா?) என்று இவர் வினவ, ”இறை நம்பிக்கையாளர்கள், இறை ஆணைப்படி செயலாற்றுபவர்கள்” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். “அவை இரண்டும் ஏன் ஒளியில் வேற்றுமையுடன் இருக்கின்றன?” என்று இவர் வினவ. “மக்கள் தன்னுடைய மகத்துவத்தை உணரவும், பகலிலிருந்து இரவை வேற்றுமை காண்பதற்காகவுமாகும்” அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அது கேட்டு, நீர் உண்மை உரைத்தீர்” என்று இவர் கூறியதாகவும் மற்றொரு வரலாறு உள்ளது.
ஆயிரம் மசலாவென்று வழங்கும் அதிசய புராணம்
இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஆயிரம் கேள்விகளைக் கேட்டார் என்றும் அவற்றிற்கெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சரியான மறுமொழி பகர்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த ஆயிரம் கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் கவிதை உருவில் மதுரை வண்ணப் பரிமளப்புலவர் ‘ஆயிரம் மசலாவென்று வழங்கும் அதிசய புராணம்’ என்னும் பெயரில் ஹிஜ்ரி 980 ஆம் ஆண்டில் இயற்றி மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றியிருக்கிறார்.
அதில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “சுவர்க்கவாசிகளின் வயது என்ன?” என்று வினவ, “அங்கு பெண்கள் பதினாறு வயதுடையோராயும், ஆண்கள் முப்பத்திரண்டு வயதுடையோருமாய் எப்பொழுதும் இருந்து கொண்டிருப்பர்” என்று அவர்கள் மறுமொழி கூறியதாகவும், இவ்வாறு இவர் கேட்ட ஆயிரம் கேள்விகளுக்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சரியான பதில் கூறியுள்ளதாக மதுரை வண்ணப் பரிமளப்புலவர் பாடலாக பதிவு செய்துள்ளார்.
யூதர்களுக்கு பயந்து இவர் வெளியிடாது மறைத்தது
இவர் பெரிதும் திருப்தியுற்று இஸ்லாத்தைத் தழுவிய போதினும் யூதர்களுக்குப் பயந்து அதனை வெளியிடாது மறைத்து வைத்திருந்தார். ஒரு முறை சில யூதர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்த பொழுது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸலாமைப் பற்றி அவர்களிடம் வினவ, அவர்கள் “அவர் நல்லவர்; நல்லவரின் மகனுமாவார்” என்று புகழ்ந்துரைத்தனர். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அவர் இஸ்லாத்தைத் தழுவி விட்டால் என்ன செய்வீர்கள்!” என்று வினவ, “அல்லாஹ் அதனை விட்டும் அவரைக் காப்பானாக” என்றனர் அவர்கள். அப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அவர்களின் முன் தோன்றித் தாம் இஸ்லாத்தைத் தழுவியதைப் பகிரங்கப்படுத்தினார். அப்பொழுது அந்த யூதர்கள், “அவர் தீயவர்; தீயவரின் மகனுமாவார்” என்று இழித்துரைத்தனர்.
இவரது பணிவும் சிறப்புகளும்
ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “இவ்வாசலில் முதன்முதலாக நுழைபவர் சுவனவாசிகளில் ஒருவர்” என்று கூறினர். அப்துல்லாஹ் இப்னு ஸலாம் முதன்முதலாக நுழைந்ததைக் கண்ட மக்கள், “இப்பேற்றினை நீர் அடையக் காரணம் என்ன” என்று வினவிய பொழுது, “நானோ பலவீனன். எனினும் என் இதயம் களங்கமற்றதாக உள்ளது. எனக்குத் தேவையில்லாதவற்றை நான் எண்ணியும் பார்ப்பதில்லை” என்று இவர் கூறினார்.
ஒருமுறை இவர் தம் தலைமீது விறகுக் கட்டையைக் சுமந்து கொண்டு தெரு வழியே செல்வதைக் கண்ட மக்கள், “தாங்களோ செல்வர், ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று வினவிய பொழுது, “ஒருவனுடைய உள்ளத்தில் அனுவத்தனை பெருமையும் இல்லாது நீக்குவதற்காக இவ்வாறு செய்கிறேன்” என்றார் இவர்.
இறுதி கால வாழ்வும், இவரது இறப்பும்
பிற்காலத்தில் நடந்த உள்நாட்டுப் போரில் இவர் எக்கட்சியிலும் சேரவில்லை. “இறை தூதரின் மேடையின் அண்மையிலேயே இருங்கள். அதைவிட்டுப் போனீர்களோ தாங்கள் மீண்டும் அதனை ஒருபோதும் காண மாட்டீர்கள்” என்று இவர் அலீ (ரழி) அவர்களிடம் கூறி அவர்களை இராக் செல்லாது தடுத்தார் என்றும் எனினும் அலீ (ரழி) அவர்கள் அதனைக் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நபியவர்களுக்குப் பிறகு நீண்ட நாள் குன்றாப் புகழுடன் வாழ்ந்திருந்து மிக முதிய வயதில் ஹிஜ்ரி 43-இல் மதீனாவில் இறப்பெய்தினார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.