அபூ தல்ஹா ஜைத் இப்னு ஸஹ்ஸினில் அன்ஸாரி
ரழியல்லாஹு அன்ஹு
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ்பெற்ற தோழராகவும், மதீனாவின் அன்சாரிகளில் ஒருவராகவும் இருந்தார். இஸ்லாமிய ஆரம்ப காலத்தின் வீரம் மிக்க போராளி மற்றும் திறமையான வில் வீரராக அறியப்பட்டார். அல்-அகாபாவில் நடந்த விசுவாசப் பிரமாணத்தின் போதும், பத்ர், உஹுத் மற்றும் கந்தக் போர்களிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பக்கத்தில் இருந்தார். இவர்களின் இயற்பெயர் ஜைது என்பதாகும். எனினும் இவர்களின் காரணப் பெயராகிய அபூதல்ஹா என்பதே இவர்களின் இயற்பெயரைவிடப் புகழ் பெற்று விளங்குகிறது. அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களின் அன்னை உம்மு ஸலீமின் இரண்டாவது கணவரான இவர்கள் உம்மு ஸலீமை மணக்க விரும்பிய பொழுது, “நீர் இஸ்லாத்தைத் தழுவினால் தான் உம்மை மணப்பேன்” என்று உம்மு ஸலீம் கூறியதற்கிணங்கி இஸ்லாத்தைத் தழுவினார்.
உஹத் போரின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்களை அரண் போல் காத்தது
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடத்திய எல்லாப் போர்களிலும் இவர்கள் பங்கு கொண்டுள்ளனர். உஹத் போரின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்களை இலக்குக் கண்டுபிடித்துக் கொண்டு எதிரிகள் சூழ்ந்த சமயம் அண்ணல் நபி (ஸல்) அவர்களை அரண் போல் காத்து இவர்கள் வீரப் போராடினர்.
“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தலையை வெளியே நீட்டாதீர்கள்!! தங்களின் உயிரைக் காக்க என் உயிர் இருக்கிறது. தங்களின் மார்பைக் காக்க என் மார்பு இருக்கிறது. நான் தங்களுக்கு அர்ப்பணம்” என்று கூறிக் கொண்டு இவர்கள் போராடினர். அம்பெய்துவதில் நிபுணராயிருந்த இவர்கள் அப்பொழுது வில்லை வலுவாகப் பிடித்து இழுத்து அம்பெய்ததனால் இரண்டு, மூன்று வில்கள் உடைந்து விட்டன. இவர்களின் அம்பெய்யும் ஆற்றலைக் கண்டு வியந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் எவரேனும் அவ்வழியே அம்பறாத்தூணியுடன் செல்லின், “உம்முடைய அம்புகளை அபூதல்ஹா முன் போடுவீர்!” என்று கூறுபவர்களாக இருந்தனர். அப்பொழுது எதிரிகளின் அம்பொன்று அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் குறிபார்த்துச் சென்ற பொழுது அதனைத் தம் கையினால் அபூதல்ஹா தடுத்ததனால் அவர்களின் விரல்கள் பின்னர் எப்பொழுதுமே பயன்படா வண்ணம் படுகாயமுற்றன. போர் முடிந்ததும் அபூபக்ர் (ரழி) அவர்கள் அபூதல்ஹாவின் உடலைப் பார்த்த பொழுது அதில் எழுபது காயங்கள் இருந்தன. கையில் மட்டும் இருபத்து நான்கு காயங்கள் காணப்பட்டன.
கலந்து கொண்ட போர்களும் அதில் பெற்ற சிறப்புகளும்
உஹத் போரில் வைத்தே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அபூ தல்ஹாவை ‘தல்ஹதுல் கைர்’ (நல்ல தல்ஹா) என்றும், ஹுனைன் போரில் இவர்களை ‘தல்ஹதுல் ஜூத்’ (தயாளமுள்ள தல்ஹா) என்றும், தாத்துல் அஷீரா போரில் ‘தல்ஹதுல் ஃபையால்’ (உதவும் தல்ஹா) என்றும் அழைத்தனர். “போரில் அபூதல்ஹா இடும் பெரும் சப்தம் ஒரு படையினரின் சப்தத்தைவிட மிகைத்தது” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களைப் பற்றிக் கூறியுள்ளனர்.
உஹத் போரில் இவர்களின் பங்களிப்பு
பிற்காலத்தில் இவர்களின் நண்பர் ஒருவர் இவர்களிடம், “விரல்கள் காயமுற்றதும் தங்களுக்குப் பெரும் வேதனை ஏற்படவில்லையா?” என்று வினவிய பொழுது, “ஆம்; எனினும் வேதனையைத் தாங்கிக் கொண்டு நான் என் கைகளால் அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காத்து நின்றேன். சிறிதேனும் நான் என் கையை அசைத்தால் கூட எதிரிகளின் அம்பு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முகத்தைத் தாக்கி விடுமே” என்று கூறினர் இவர்கள். உஹத் போரில் இவர்கள் தம் கையை இழந்தனர் என்று மற்றொரு வரலாறு கூறுகிறது. அலீ (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது நடந்த கிளர்ச்சியில் ஒருவர் இவர்களைக் கையில்லாதவர் என்று இழித்துரைத்த சமயம் அருகிருந்த இவர்களின் நண்பர் ஒருவர், “ஆம்; உஹத் போரில் அண்ணல் நபி (ஸல்) அவர்களைக் காப்பதற்காக அவர் தம் கையை இழந்தார் என்பதை நினைவு வைத்துக் கொள்ளும்!” என்று அவருக்கு வாயாப்புக் கொடுத்தார்.
பெரிய நிலக்கிழாராக இருந்த இவர்களின் பேணுதல்
மிகுந்த பேணுதலையுடைய இவர்கள் ஒரு முறை தம் தோட்டத்தில் தொழுது கொண்டிருந்த பொழுது ஒரு பறவை அங்குமிங்கும் பறந்ததால் தம் கவனம் சிதறி, தாம் தொழுதது எத்தனை ரகஅத்துகள் என்பதை மறந்து விட்டார்கள். எனவே இவர்கள் மறதிக்குக் காரணமாகவிருந்த அந்தத் தோட்டத்தைத் தம்மிடம் வைத்திருக்க விரும்பாது தர்மம் செய்து விட்டார்கள்.
பெரிய நிலக்கிழாராக இருந்த இவர்களுக்கு ‘பைரஹா’ என்னும் பெரிய தோட்டம் ஒன்றும் இருந்தது. அதில் அமுதனைய நீர் ஊற்று இருந்ததால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அங்கு அடிக்கடிச் சென்று நீர் அருந்தி வருவதுண்டு. அத்தோட்டத்தை இவர்கள் பெரிதும் விரும்பினார்கள். “நீங்கள் அதிகமாக விரும்புவதைச் செலவு செய்யும் வரை நீங்கள் புண்ணியத்தைப் பெற மாட்டீர்கள்” என்னும் கருத்தமைந்த இறைவசனம் அருளப் பெற்றதும் அத்தோட்டத்தை அல்லாஹ்வின் வழியில் அறம் செய்துவிட எண்ணினர் இவர்கள். எனினும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆலோசனையின் படி அதனைத் தம் உறவினர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தனர்.
இவர்களைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
இவர்களைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுது, “சுவர்க்க வாசிகளை இப்பூவுலகில் காண விரும்புவோர் அபூதல்ஹாவைக் கண்டு கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர்.
அபூதல்ஹா நோற்ற நோன்புகளும் அலாதியானவை. வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளின் படி அவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மறைவிற்கு முன்னர் பல போர்களில் பங்கெடுத்துக் கொண்டதால் நோற்க முடியாமல் போன ஸுன்னத்தான நோன்புகளை நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இரு பெருநாள்கள் தவிர ஓராண்டின் பெரும்பாலான நாட்களிலும் அவர் நோன்பிருந்திருந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன.
தள்ளாத வயதை அடைந்த பின்னரும் இறைவனின் பாதையில் போரிடுவதை அவர் விடவில்லை. வெகு தொலைவிலுள்ள ஊர்களுக்கெல்லாம் பிரயாசையுடன் பிரயாணித்து இஸ்லாமியப் பிரச்சாரம் புரிவது, அல்லாஹ்வின் வார்த்தைகளை மக்களுக்குத் தெரிவிப்பது, அறப்போர் புரிவது என்று ஓய்வு ஒழிச்சலின்றி தான் தொடர்ந்து கொண்டிருந்தது அவரது வாழ்க்கை.
மரணம் மற்றும் அவரின் உடல் நல்லடக்கம்
மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் கடல் தாண்டிய படையெடுப்பிற்கு அழைப்பு வந்த போது மகன்களின் பாசத் தடையை மீறிக் கிளம்பிவிட்டார் இவர். கடலில் முன்னேறிக் கொண்டிருந்தது முஸ்லிம்களின் படை. அப்பொழுது அபூதல்ஹாவை வந்துத் தழுவியது நோய்!. வயோதிகம்; நடுக்கடல் என்பதால் பெரிய அளவில் சிகிச்சை ஏதும் அளிக்க இயலாத நிலையில்; பிரயாணத்தின் கடுமை வேறு. அவருடைய உடல் நிலை மோசமடைந்து கொண்டே வந்து இறுதியில் இறைவனின் பாதையில் மரணமடைந்தார் அபூதல்ஹா.
முஸ்லிம் கடல் படையில் இவருடன் இருந்தவர்கள், அவரை நல்லடக்கம் செய்ய அருகில் ஏதும் நிலம் தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். இறுதியில் தீவு ஒன்று தென்பட்டது. ஆனால் அதற்குள் ஏழு நாட்கள் கழிந்துவிடடன. அந்த அத்தனை நாட்களும், கப்பலில் இருந்த அவரது உடல், அப்படியே உறங்கிக் கொண்டிருப்பவரைப் போல், கெடாமல் பத்திரமாக இருந்துள்ளது! நடுக் கடலில், மதீனாவை விட்டு வெகு தொலைவிலுள்ள ஏதோ ஒரு தீவில், குடும்பத்தினர் தோழர்கள் அனைவரையும் விட்டு தூரமாய், நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும், அது வரை கெடாதிருந்ததாகவும் பஸராவாசிகள் கூறுகின்றனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.