அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்
ரழியல்லாஹு அன்ஹு
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) (கி.பி. 586 - கி.பி.625) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அத்தை உமைமாவின் மகனாவார். இவரின் சகோதரி ஜைனப் இப்னு ஜஹ்ஷையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பின்னர் மணமுடித்துக் கொண்டனர். நபித் தோழர்களில் ஒருவரான இவர், குறைஷி கோத்திரத்தைத் தவிர மற்ற கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர்.
முதன் முதலில் “அமீருல்மூமினின்” என்று அழைக்கப்பட்டவர்
ஓர் இரவில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை அழைத்து வரச் செய்து வைகறையில் வெளியூர் புறப்படத் தயாராகுமாறு கூற அடுத்த நாள் ஹிஜ்ரி 2, ரஜப் (கி.பி. 624 ஜனவரி) மாதம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 12 முஹாஜிர்களுடன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்களை ‘நக்லா’ என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இருவருக்கு ஓர் ஒட்டகம் வீதமாக இவர்கள் ஒருவர் மாறி ஒருவர் பயணம் செய்தனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி இரண்டு நாட்கள் கழிந்த பின் தான் கடிதத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று கூறி, அதை அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷிடம் கொடுத்தார்கள். இவரே இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக “அமீருல்மூமினின்” என்று அழைக்கப்பட்டவர்.
நக்லா என்ற இடத்தை அடைய சொல்லிய கடிதம்
அப்துல்லாஹ் (ரழி) அப்படையை அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, கடிதத்தைப் படித்துப் பார்த்தார்கள். அக்கடிதத்தில் “நீர் எனது இந்தக் கடிதத்தைப் படித்த பிறகு, மக்கா மற்றும் தாயிஃபிற்கு மத்தியிலுள்ள ‘நக்லா’ என்ற இடத்தை அடையும் வரை தொடர்ந்து செல்லுங்கள். அந்த இடத்தை அடைந்து விட்டால் அங்குத் தங்கி குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்திருங்கள், அவர்களின் வருகையை அறிந்து எனக்கு செய்தி அனுப்புங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் படித்த அப்துல்லாஹ் (ரழி) “செவிமடுத்தோம் வழிப்பட்டோம்!” என்று கூறியவராக, இச்செய்தியை தங்கள் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.
“நான் உங்களை நிர்பந்திக்கவில்லை. யார் வீரமரணம் அடைய விரும்புகிறாரோ அவர் என்னுடன் வரலாம். யார் மரணிப்பதை வெறுக்கிறாரோ அவர் திரும்பிவிடலாம். ஆனால், நான் போர் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று அப்துல்லாஹ் (ரழி) தங்கள் தோழர்களிடம் கூறினார். அவர்களது தோழர்கள் “போருக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்கள். இவ்வாறு இவர்கள் தங்களதுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த போது வழியில் ஸஅது இப்னு அபீவக்காஸும், உத்பா இப்னு கஸ்வானும் தாங்கள் வாகனித்த ஒட்டகத்தைத் தவற விட்டதால், அதைத் தேடுவதில் ஈடுபட்டு படையிலிருந்து பின்னடைந்து விட்டனர்.
நக்லா என்ற இடத்தை அடைந்த பின்
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) படையுடன் ‘நக்லா’ என்ற அந்த இடத்தை வந்தடைந்தார்கள். அங்குக் குறைஷிகளில் அம்ர் இப்னு ஹழ்ரமீ, உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா, நவ்ஃபல் இப்னு அப்துல்லாஹ் இப்னு முகீரா மற்றும் முகீரா கிளையினரின் அடிமையான ஹகம் இப்னு கைஸான் ஆகியோருடன் வியாபாரக் குழு ஒன்று உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தங்களது தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். “நாம் சங்கைமிக்க மாதமாகிய ரஜப் மாதத்தின் கடைசித் தேதியில் இருக்கிறோம். இப்போது அவர்களுடன் நாம் சண்டையிட்டால் சங்கைமிக்க மாதத்தின் கண்ணியத்தைப் பாழ்படுத்தியவர்களாகி விடுவோம். ஆனால், போர் செய்யாமல் இன்றிரவு விட்டுவிட்டால் இவர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைந்து விடுவார்கள்” - இவ்வாறு விவாதம் நடைபெற்ற பின்பு, அவர்களிடம் சண்டையிடலாம் என்று முடிவானது. அதன் பிறகு முஸ்லிம்களில் ஒருவர் அம்ர் இப்னு ஹழ்ரமியை அம்பெய்துக் கொன்றார்.
அடுத்து, முஸ்லிம்கள் உஸ்மான் மற்றும் ஹகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆனால் நவ்ஃபல் தப்பித்துவிட்டார். பின்பு இரண்டு கைதிகள், வியாபாரப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மதீனா வந்தனர். இந்த கனீமாவில்” அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கினார்கள். இதுதான் இஸ்லாமில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கப்பட்ட முதல் கனீமா பங்காகும். இப்போரில்தான் முதன் முதலில் ஒரு எதிரி கொலை செய்யப்பட்டான். மேலும், இப்போரில்தான் முதன் முதலாக எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.
கைதிகள் மற்றும் வியாபாரப் பொருட்கள் விஷயத்தில் மௌனம் காத்தார்கள்
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக வெறுத்தார்கள். மேலும், “சங்கைமிக்க மாதத்தில் போர் செய்ய நான் உங்களுக்குக் கட்டளையிடவில்லையே!” என்று கண்டித்து விட்டு கைதிகள் மற்றும் வியாபாரப் பொருட்கள் விஷயத்தில் மௌனம் காத்தார்கள்.
இந்நிகழ்ச்சியை முஸ்லிம்கள் மீது பழிசுமத்த நல்லதொரு சந்தர்ப்பமாக இணைவைப்போர் பயன்படுத்தினர். முஸ்லிம்கள் மீது பலவாறு பழி சுமத்தினாலும் அந்த அனைத்துப் பழிகளையும் பொய்யான கூற்றுகளையும் முற்றிலும் தகர்த்தெறியும்படி ஒரு வசனத்தை அல்லாஹ் குர்ஆனில் இறக்கினான். அந்த வசனத்தில் முஸ்லிம்கள் செய்ததை விட இணைவைப்போரின் செயல் மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றம் என்று தெளிவுபடுத்தினான்.
இதுபற்றி திருமறை அல் குர்ஆனில் இறைவன்…
(நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்ப)வர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவைகளில் போர் புரிவது பெரும் பாவம்(தான்.) ஆனால், (மனிதர்கள்) அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜுக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. (2:217.)
அதாவது, முஸ்லிம்கள் விஷயத்தில் இணைவைப்போர் ஏற்படுத்திய இந்தக் குழப்பங்களும் கூச்சல்களும் அடிப்படையற்றவை. ஏனெனில், முஸ்லிம்கள் விஷயத்தில் இவ்வாறு கூறுவதற்கு அந்த இணைவைப்போருக்குத் தகுதியே கிடையாது. இஸ்லாமை எதிர்ப்பதற்கும் முஸ்லிம்கள் மீது அநியாயமிழைப்பதற்கும் இந்த இணைவைப்போர் எவ்விதத்திலும் தயக்கம் காட்டவில்லை. முஸ்லிம்கள் சங்கைமிக்க மக்காவில் தங்கியிருந்த போது அவர்களது பொருட்கள் அபகரிக்கப் பட்டன. நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வெறியுடன் அலைந்தனர். இன்னும் புனிதமிக்க எத்தனையோ கடமைகளையும் உரிமைகளையும் பாழாக்கிய இவர்களுக்கு புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? புனிதங்களையே மதிக்காத இவர்களுக்கு இப்பொழுது மட்டும் புனிதத்தைப் பற்றி பேசுவதற்கு தகுதி எங்கிருந்து வந்தது? எனவே, முஸ்லிம்கள் இந்தப் புனிதத்தைப் பாழாக்கியது எந்த வகையிலும் அசிங்கமோ குற்றமோ இல்லை. ஆகவே, இணைவைப்பவர்கள் பரப்பிய இந்த வதந்திகள் முற்றிலும் கேவலமான ஒன்றே! என்று இறைவன் அருண்மொழி பகர்ந்தான். அதன் பின் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அப்துல்லாஹ்வும், அவருடைய தோழர்களும் கவலை நீங்கியிருந்தனர்.
இவ்வசனம் இறக்கப்பட்டதற்குப் பின்பு நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைதிகளையும் விடுவித்தார்கள். மேலும், கொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடும் வழங்கினர்கள். (ஜாதுல் மஆது)
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் இந்த சம்பவத்திற்குப் பின்பு ஹிஜ்ரி 2, ஷஅபான் மாதத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்குப் போர் புரிவதை கடமையாக்கினான். இவ்விஷயத்தில் பல தெளிவான வசனங்களை இறக்கினான்.
உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) அத்து மீற வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்து மீறுபவர்களை நேசிப்பதில்லை.
ஆகவே (உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்துப் போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே!
(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்துப் போர் புரியாது) விலகிக் கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.
அன்றி, (இஸ்லாமிற்கு எதிராகச் செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு), அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்து மீறக்கூடாது. (அல்குர்ஆன் 2:190-193)
பத்ரு போர் மற்றும் உஹதுப் போரில் இவரின் போர் திறமை
பின்னர் பத்ரு போரில் கலந்து வீரப் போர் செய்தார்கள். அடுத்து உஹதுப் போரில் கலந்து போரிட்ட இவருடைய வாள் முறிந்து விட, வேறு வாள் கிடைக்காது தயங்கிய இவரிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஈத்தம்பாளை ஒன்றைக் கொடுக்க அதனை ஆயுதமாகக் கொண்டு வீரப்போர் செய்த அப்துல்லாஹ் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் உஹதுப் போரில் வீர மரணம் எய்தினார்.
அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஸா (ரழி) அவர்களின் நல்லுடலுடன் உஹது போர் களத்தில் ஒரே குழிக்குள் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் உடலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.