Home


ரமீஸா பின்த் மில்ஹான் (உம்மு ஸுலைம்)

ரழியல்லாஹு அன்ஹா

        மதீனாவின் பனூ நஜ்ஜார் எனும் அன்ஸாரிக் குலத்தைச் சேர்ந்த ரமீஸா எனும் இந்தப் பெண்மணி தான் வரலாற்றில் உம்மு ஸுலைம் (ரழி) என்று கூறப்படுகின்ற பிரபலமான நபித்தோழியர் ஆவார்.  அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலீபின்  அன்னை ஸல்மாவின் பேர்த்தியாவார் இவர். இவரே அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உதவியாளராக பணிபுரிந்த நபித் தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களின் அன்னையாவார். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் போர்களத்திற்கு சென்று வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். உஹத், கைபர், ஹுனைன் போரிலும் கலந்து கொண்டார்.

        “நான் சுவர்க்கம் சென்ற போது அங்கு ஒரு மெதுவான குரலைக் கேட்டேன். அது எவருடைய குரல் என்று வினவினேன். அது ரமீஸா பின்த் மில்ஹானின் குரல் என்று எனக்குக் கூறப்பட்டது.” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இவரின் உயர்வினை அறியலாம்.

இஸ்லாத்தைத் தழுவுதல்

        மதீனத்து முஸ்லிம்களில் முதன் முதலாக இஸ்லாத்தைத் தழுவியவர்களில் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தது குறித்து அவருடைய கணவர் மாலிக் இப்னு நள்ர் என்பவருக்கு பெரிதும் கவலை ஏற்பட்டது. அவர் சிலை வழிபாடு செய்பவராக இருந்தார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

        உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் குழந்தைக்குத் தினமும் இஸ்லாத்தின் ஏகத்துவக் கலிமாவை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் ஆவார்கள் என்பதை – கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ணுற்ற மாலிக் கோபத்துடன் “நீ என்னுடைய மகனையும் கெடுப்பதற்காகவா இதையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கின்றாய்?” எனக் கூறினார்.

        மேலும் அவரை இஸ்லாத்தைத் தழுவுமாறு கூறியதைக் கேளாது, இவர் மீது வெறுப்புற்று சிரியா சென்றார். அங்கு அவருடைய பரமவிரோதி ஒருவனால் கொல்லப்பட்டு இறந்தார்.

மறுமணம் தொடர்பாக பலரிடமிருந்தும் வந்த தூது 

        உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் அழகிலும் குணத்திலும் அறிவுத் திறனிலும் மதீனா முழுவதும் புகழ் பெற்றிருந்தார்கள். அவர்கள் விதவை ஆனதும் மறுமணம் தொடர்பாக பலரிடமிருந்தும் தூது வந்தது. அதற்கு அவர்கள், “என்னுடைய மகன் சான்றோர்களின் அவைகளில் உட்காருவதற்கும் பேசுவதற்கும் தகுதி பெற்று வளரும் வரை நான் மறுமணம் செய்ய மாட்டேன்.” என்றார்கள். மேலும் தம்முடைய மகனை நல்ல முறையில் பயிற்றுவித்து ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும் என்பதில்தான் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் அதிகமாக அக்கரை கொண்டிருந்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பணிவிடைக்காக அனஸ் (ரழி) அவர்கள்

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வருகை தந்திருந்தார்கள். அங்கு உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் தம் மகன் அனஸைப் பணிவிடைக்காக வைத்துக் கொள்ளுமாறு| நபியவர்களிடம் கோரிக்கை சமர்ப்பித்தார்கள்.

        அண்ணல் நபி (ஸல்) அவர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் அனஸை தங்களிடம் வைத்துக் கொண்டார்கள். அனஸுக்கு அப்போது வயது எட்டு. இவ்வாறு தம் தாயார். அண்ணலாரின் திருச்சமூகத்தில் தன்னை ஒப்படைத்து உபகாரம் செய்ததை அனஸ் (ரழி) என்றென்றும் நினைத்து தாயாருக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தார்கள். இதன் பிறகும் - தன் மகனின் நடைமுறைப் பழக்கங்களைக் கண்காணிப்பதில் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

அழைப்புப் பணி

        அறிவுக் கூர்மையும் உத்வேகமும் கொண்ட உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சத்திய இஸ்லாத்தின் அடிப்படைகளை எல்லோரிடமும் தெளிவாக எடுத்துக் கூறி வந்தார்கள். தம்முடைய கோத்திரத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் அனைவரிடேயேயும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அதிலும் இப்போது தம் மகன் அண்ணலாரிடம் பணிவிடையாகச் சேர்ந்தபிறகு அழைப்புப் பணிக்காக அதிக நேரம் அவர்களுக்குக் கிடைத்தது, அத்துடன் அவர்களுக்குப் பெரிதும் மன நிம்மதி ஏற்பட்டிருந்தது.

அபூ தல்ஹா இஸ்லாத்தை ஏற்று பின்னர் திருமணம் முடித்தது

        இந்த நிலையில், அதே பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த அபூ தல்ஹா என்பவர் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களை மணமுடிக்க முன்வந்தார். அவரோ இணைவைப்பாளராய் இருந்தார். எனவே அவருடைய கோரிக்கையை மறுத்த உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், அறிவார்ந்த முறையில் இப்படிக் கூறினார்கள்.

        அபூ தல்ஹாவே, “நான் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் என்று சாட்சியம் அளித்துள்ளேன். ஆனால் அறிவுத் தெளிவுடைய மனிதராகிய நீங்கள் இன்னும் முஸ்லிம் ஆகவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. பூமியில் முளைத்த மரத்தால் அபிசீனியத் தச்சனால் செய்யப்பட்ட தொழு உருவத்தை வணங்குபவரை நான் எவ்வாறு மணப்பது? எனவே நான் உம்மை மணமுடிக்க இயலாது” என்று கூறினார்.

உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் இந்த அறிவுரை அவரின் மனத்தைத் தொட்டது! அவர்கள் கூறியவை பற்றிப் பரிசீலனை செய்தார். உம்மு ஸுலைமின் கொள்கைதான் சத்தியம் என்பதை உணர்ந்தார். நேரிய மார்க்கம் அவருக்குப் புலப்பட்டு விட்டது! மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடம் வந்து இஸ்லாத்தில் இணைந்தார்.

        அவர் இஸ்லாத்தைத் தழுவியது குறித்து உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு அளவிலா மகிழ்ச்சி! வறியவரான அபூ தல்ஹா (ரழி) அவர்களின் வறுமை நிலையையும் பொருட்படுத்தாமல் அவரை மணந்து கொள்ள சம்மதித்தார். ஆனால் திருமணத்திற்கு மஹராக அளிப்பதற்குக் கூட அபூ தல்ஹாவிடம் எதுவும் இல்லை! எனவே அவர் இஸ்லாத்தைத் தழுவியதையே மஹராகக் கொண்டு அவரை மணமுடித்துக் கொண்டார் இவர்.

அபூ தல்ஹா உம்மு ஸுலைம் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தார்.

        இப்போது அபூ தல்ஹா உம்மு ஸுலைம் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு அபூ உமைர் என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரின் இல்லத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. அப்பொழுது அவர்கள் குழந்தை அபூ உமைருடன் சிரித்து விளையாடுவார்கள். அங்கு மத்தியானம் சற்று உறங்கிவிட்டும் செல்வர்.

        ஒரு நாள் இவரின் கணவர் அபூ தல்ஹா நோன்பு நோற்றிருந்தார். பிணிவாய்ப்பட்டிருந்த அவர்களின் குழந்தை அபூ உமைர் இறந்து விட்டது. இதனைத் தம் கணவரிடம் கூறின் அவர் உணவு உண்ணமாட்டார் என்பதையுணர்ந்த இவர் குழந்தையைக் குளிப்பாட்டி ஓரிடத்தில் மூடி வைத்துத் தாம் உணவு சமைத்து நறுமணம் பூசி வெளியில் சென்றிருந்த தம் கணவரை வரவேற்கத் தயாராக இருந்தார். கணவர் வந்ததும் குழந்தையின் நலன் விசாரிக்க “நேற்றைவிட குழந்தை நலமாக இருக்கிறது” என்று கூறி விட்டு கணவருக்கு உணவு படைத்து உண்ணச் செய்து அன்றிரவு தம் கணவருடன் உறங்கி கழித்தார். அடுத்த நாள் காலையில் குளித்துவிட்டுத் தம் கணவரை அணுகி “ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு பொருளை இரவல் கொடுத்தான். இரவல் கொடுத்தவன் பின்னர் அதனைக் கேட்பின் அவனிடம் கொடுத்து விட வேண்டுமல்லவா?” என்று வினவினார். “ஆம் கண்டிப்பாகக் கொடுத்து விட வேண்டும்.” என்றார் அவர். அதன் பின் “குழந்தையைத் தமக்குத் தந்தவன் திரும்பவும் அதனைப் பெற்றுக் கொண்டான்” என்று கூறிக் குழந்தையின் இறப்பைத் தெரிவித்தார் இவர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் துஆ

        காலையில் அபூ தல்ஹா (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து நடந்த நிகழ்ச்சி முழுவதையும் எடுத்துச் சொன்னார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் பொறுமையையும் உளத்திண்மையையும் சிறப்பித்துக் கூறினார்கள். பிறகு அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபூ உமைருக்குப் பகரமாக ஒரு நல்ல குழந்தையை வழங்குவானாக! என்று துஆ செய்தார்கள்.

                இதன்பிறகு அவ்விருவருக்கும் அப்துல்லாஹ் என்றொரு மகன் பிறந்தார். அனஸ் (ரழி) அவர்களைப் போன்று அப்துல்லாஹ்வும் அண்ணல் நபியவர்களின் கண்காணிப்பில் வளரும் பாக்கியம் பெற்றார். அவர்களின் நற்பிரார்த்தனைகளும் அவருக்குக் கிடைத்தன.

விருந்தோம்பல்

        ஒருமுறை ஒரு மனிதர் கடும் பசியுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உணவு அளிக்கும்படி வேண்டி நின்றார். நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் ஆள் அனுப்பி, வீட்டில் உண்பதற்கு ஏதேனும் உண்டா? எனக் கேட்டார்கள். இன்று எதுவும் இல்லை என்றே பதில் வந்தது.

        நபியவர்கள் தம் அன்புத் தோழர்களின் பக்கம் பார்வையைத் திருப்பி, அல்லாஹ்வின் இந்த அடிமையை அழைத்துச் சென்று விருந்தளிப்பவர் உங்களில் யாரேனும் உண்டா? என வினவினார்கள்!

        இதனைக் கேட்டதும் அபூ தல்ஹா (ரழி) எழுந்து இறைத்தூதரே! இவரை, எனது வீட்டிற்கு விருந்தாளியாய் அழைத்துச் செல்கிறேன் என ஏற்றார்கள்.

        வீட்டிற்குச் சென்று ஏதேனும் உணவு உள்ளதா? என்று தம் அருமை மனைவியார் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களை நோக்கிக் கேட்டார்கள், பிள்ளைகளுக்காக உணவு சமைத்துள்ளேன். அதைத் தவிர அல்லாஹ்வின் மீது ஆணையாக வேறு உணவு எதுவும் இல்லை.

        பரவாயில்லை குழந்தைகளைத் தாலாட்டித் தூங்கச் செய்துவிடுங்கள். அவர்கள் தூங்கி விடுவார்கள்! அப்போது நாம் இந்த உணவை விருந்தாளிக்கு முன்னால் வைத்து விடுவோம், பிறகு நீங்கள் எழுந்து விளக்கைச் சரி செய்வது போன்று பாவனை செய்து அணைத்துவிட வேண்டும்! இருளில் விருந்தாளியே உணவு முழுவதையும் திருப்தியாக உண்ணும் வகையில் நாம் வெறுமனே வாயை அசைத்து உண்பதாகக் காட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

        இவ்வாறே, இருந்த கொஞ்ச உணவையும் அந்தப் பசியாளி வயிறாற உண்பதற்கு அளித்துவிட்டு – குழந்தைகளை பசியோடு தூங்கச் செய்துவிட்டு ஒருவாறு விருந்தாளியை மகிழ்வித்தோம் என்ற திருப்தியுடன் கணவனும் மனைவியும் இரவைக் கழித்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் போர்க்களத்தில் இவர்கள்

        இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் போர்க்களத்திற்குச் சென்று வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். உஹத் போரின் போது இவர் காயம் அடைந்தவர்களுக்குத் தண்ணீர் அருந்தக் கொடுத்ததோடு  நெருக்கடியான கட்டம் ஏற்பட்ட பொழுது வில்லும் அம்பும் கொண்டு எதிரிகள் மீது தாக்குதலும் நடத்தினார் என்று கூறப்படுகிறது.

        இவர் கைபர் போரிலும் ஹுனைன் போரிலும் கலந்து கொண்டார். அப்பொழுது இவர் வாளேந்தி நிற்பதைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் “என்ன செய்யப் போகிறீர்?” என்று வினவ “உருவத்தொழுபம்பர் எவரேனும் என்னருகில் வரின் அவர்களின் வயிற்றை இவ்வாளால் கீறிக் கிழித்து விடுவேன்” என்றார் இவர். அது கேட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முறுவலித்தனர். உடனே இவர் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இப்பொழுது மக்கா வாசிகள் ஓடிப் போய் விட்டார்களல்லவா? அவர்களையெல்லாம் கொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்! அதன் பின் நான் என்ன செய்கின்றேன் என்பதைப் பாருங்கள்” என்று கூறினார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “இறைவன் அவர்களுக்கான ஏற்பாட்டினைச் செய்து விட்டான். நாம் ஒன்றும் அவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டாம்” என்று கூறினர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது இவர்கள் காட்டிய அளவற்ற மரியாதை

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது இவருக்கு அளவற்ற அன்பும் மரியாதையும் இருந்தன. அவர்களின் உதிர்ந்த உரோமங்களையும் பொறுக்கிச் சேகரித்து வருவார். மினாவில் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்து தங்களின் தலைமுடியை மழித்த போது இவர்கள் தம் கணவரிடம் கூறினார்கள், “நாவிதனிடமிருந்து அந்த முடிகளை வாங்குங்கள்.” என்று, அபூ தல்ஹா (ரழி) அவ்வாறு செய்யவே, அண்ணலாரின் திருமுடிகளை ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைத்துப் பாதுகாப்பாய் வைத்துக் கொண்டார்கள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள்!

        மற்றொரு நிகழ்ச்சி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் வீட்டில் இருக்கும்போது தொழுகை நேரம் வந்து விட்டால் அங்கேயே கட்டிலின் மீது தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஒருமுறை உம்மு ஸுலைமின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது நபியவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அங்கிருந்த தண்ணீர்ப் பையில் அப்படியே தம் திருவாயினை வைத்துத் தண்ணீர் அருந்தினார்கள்! இதனைக் கண்ணுற்ற உம்மு ஸுலைம் (ரழி) உடனே எழுந்து சென்று தோல்பையின் வாய்ப் பகுதியை வெட்டி வைத்துக் கொண்டார்கள். நபியவர்களின் புனித உதடுகள் அதனை முத்திமிட்டன என்பதற்காக.

இவர்களின் இறுதி காலம் மற்றும் மரணம்

        உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் அண்ணலாரிடமிருந்து தீன் சம்பந்தமான நுணுக்கங்களையும் ஏராளம் கற்றுக் கொண்டார்கள். பிற்காலத்தில் நபித் தோழர்கள் இருவரிடையே ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடம் வந்து அதுபற்றி விளக்கம் பெறுவது வழக்கமாய் இருந்தது! இத்தகைய அறிவுக்கூர்மையான தீனைக் கற்றுணர்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார்கள்

        அனஸ் (ரழி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), ஜைத் இப்னு ஸாபித் (ரழி) மற்றும் அமர் இப்னு ஆஸிம் (ரழி) ஆகியோர் அன்னை உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமிருந்து சில நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.

        இவர் அபூபக்ர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது காலமானார் என்று தெரிய வருகிறது.

     


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.