Home


அஸ்மா பின்த் யஸீத்

ரழியல்லாஹு அன்ஹா

        ஸஹாபி பெண்மணியான இவரின் பட்டப் பெயர் உம்மு ஸல்மா என்பதாகும். இவர் மதீனாவில் வாழ்ந்த அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல் அஷ்ஷால் குலத்தைச் சேர்ந்தவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த பின் இவர் பெண்கள் குழுவுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினார்.

இஸ்லாத்தைத் தழுவுமுன் இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட வினா?

        இஸ்லாத்தைத் தழுவு முன்  இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “தாங்களோ ஆண், பெண் ஆகிய இரு பாலாருக்கும் நபியாக வந்துள்ளீர்கள். நாங்களோ வீட்டில் முடங்கிக் கிடந்து, வீட்டு அலுவல்களைக் கவனித்தும் குழந்தைகளை வளர்த்துக் கொண்டுமிருக்கிறோம். ஐவேளைத் தொழுகைகளிலோ, ஜும்ஆ தொழுகையிலோ, ஜனாஸாத் தொழுகையிலோ, மார்க்கப் போரிலோ ஆண்களை போன்று நாங்கள் கலந்து கொள்ள இயலாதிருக்கிறது. ’ஹஜ்’ கடமையையும் ஆண்கள் இலகுவாகச் செய்கிறார்கள். அவர்களை போன்று எங்களால் நன்மை செய்ய இயலவில்லையே. இந்த ஏற்றத்தாழ்வு ஏன்?” என்று வினவிய பொழுது, “மனைவி, கணவனின் விருப்பப்படி நடந்து தன் கடமையைச் செவ்வனே செய்து வருவாளாயின் அதுவே அவளுக்குப் போதுமானதாகும். கணவனுக்கு கிடைக்கும் நன்மையைப் போல் அவளும் வீட்டிற்குள்ளே இருந்து பெற்றவளாவாள்” என்று விடையிறுத்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அது கேட்டு மனநிறைவு பெற்றார் இவர்.

ஜகாத் வரி கொடுக்கின்றீரோ?

        அப்பொழுது இவரின் அத்தை கைகளில் தங்கக் காப்புகளையும், விரல்களில் தங்க மோதிரங்களையும் அணிந்திருப்பதைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “இவற்றிற்கு ஜகாத் வரி கொடுக்கின்றீரா?” என்று வினவ, “இல்லை” என்றார் அவர். அவ்விதமாயின் அல்லாஹ் உமக்கு நெருப்பாலான காப்புகளையும், மோதிரங்களையும் அணிவிக்க விரும்புகின்றீரோ?” என்று கேட்டனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். உடனே அஸ்மா, தம் அத்தையை நோக்கி அவற்றைக் கழற்றி விடுமாறு கூற அவ்விதமே செய்தார் அவர்.

        அதன் பின் இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “நாங்கள் நகைகள் அணியாவிடின் எங்களின் கணவர்கள் எங்களை இழிவுக் கண்களுடன் நோக்குவார்களே” என்று கூறிய பொழுது, “வெள்ளியால் நகை செய்து அதன் மீது குங்குமத்தைத் தடவித் தங்கம் போன்று அதனைப் பளபளப்பாக்கிக் கொள்ளுங்கள்!” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

அந்நியப் பெண்ணின் கரத்தைத் தீண்டேன்

        பின்னர் உறுதிப் பிரமாணம் செய்யக் கையை நீட்டுமாறு இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூற, “நான் எனக்குரியவரல்லாத அந்நியப் பெண்ணின் கரத்தைத் தீண்டேன்” என்று கூறினர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இதன் பின் ஒரு சட்டியில் தண்ணீர் கொணரச் செய்து அதில் தம் கரங்களை முக்கி எடுத்து பெண்களையும் அவ்விதமே செய்யுமாறு கூறி, இது தம் கரம் பற்றி உறுதிப் பிரமாணம் செய்தது போலாகும் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“பசியோடு பொய்யைக் கலவாதீர்” என்றனர்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களுடன் இல்லறம் நடத்த அவரின் இல்லத்திற்கு முதன்முதலாக வந்த பொழுது அவருடன் இருந்தவர்களில் இவரும் ஒருவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாலை அருந்தி விட்டு ஆயிஷா (ரழி) அவர்களிடம் கொடுக்க, நாணத்தால் தலை குனிந்திருந்த ஆயிஷா (ரழி) அவர்களை அதனைப் பெற்று அருந்துமாறு கண்டித்தார் இவர். அதன் பின்னர் ஆயிஷா (ரழி) அவர்கள் அதனை வாங்கி அருந்தினர். சற்று நேரம் கழித்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரை நோக்கி, “ஆயிஷா உமக்கும் பால் அருந்தத் தந்தாரா?” என்று வினவிய  பொழுது, “வேண்டாம், இப்பொழுது பசியில்லை” என்றார் இவர். அது கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “பசியோடு பொய்யைக் கலவாதீர்!” என்றனர். “நான் அதனை அருந்த விரும்பினேன் தான். எனினும் பசியில்லை என்று கூறின் அது பொய்யாகி விடுமா?” என்று இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடன் வினவிய பொழுது, “ஆம்; அது சிறிய பொய்யாயினும் நீர் சிறிது பொய்யுரைத்தீர் என உம்முடைய பதிவேட்டில் பொறிக்கப்படும் என்றனர்” அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

இவர்கள் அறிவித்த நபிமொழி(ஹதீஸ்)கள்

        அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நபிமொழிகளில் ஏறத்தாழ 81 ஹதீஸ்களை இவர்கள் அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

        “நபியவர்களின் ஒட்டகமான அத்பாவின் சேணைக் கயிற்றை நான் பிடித்துக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கு சூரா அல்-மாயிதா முழுவதுமாய் அருளப்பட்டது. அதன் கனம் எந்தளவு இருந்ததென்றால் ஒட்டகத்தின் கால்கள் அனேகமாய் ஒடிந்துவிடும் அளவிற்குப் பளு ஏற்பட்டுப் போனது” என்று அறிவித்துள்ளார் அஸ்மா (ரழி)

நபியவர்களுடன் சென்று பலமுறை போரில் கலந்து கொண்டவர்

        நபியவர்களுடன் சென்று பலமுறை இவர் போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். மக்காவிற்கு நபியவர்கள் உம்ரா சென்ற போது அந்தக் குழுவில் அஸ்மாவும் ஒருவர்.

        ஹுதைபியா உடன்படிக்கை நிகழ்விற்கு முன்னர், உதுமான் ரழியல்லாஹு அன்ஹு கொல்லப்பட்டதாய்ச் செய்தி பரவிக் குழப்பம் தோன்றிய நேரத்தில், ‘உயிரைக் கொடுத்தும் போராடுவோம்’ என்று மரத்தினடியில் சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்தனர் தோழர்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பைஅத்துர் ரிள்வான்’ எனும் அந்தப் பிரமாணம் அளித்தவர்களில் இவரும் ஒருவர்.

        ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டில் நடந்த யர்மூக் போரில் இவர் கலந்து கொண்டார். இக்கட்டான போர்ச் சூழ்நிலையில், ரோமவீரர்களின் அணி பெண்களின் பகுதிவரை வந்துவிட்டிருக்க, கூடாரம் அமைக்க நாட்டப்பட்டிருந்த பெரும் கோலை எடுத்துக்கொண்டு தனி ஆளாய் ஒன்பது ரோமப் போர் வீரர்களைக் அடித்து கொன்று விட்டுத்தான் ஓய்ந்தார் இவர்.

இறுதி காலம் மற்றும் மரணம்

        யர்மூக் போரின் வெற்றிக்குப் பிறகு, முஸ்லிம்கள் வசம் ஸிரியா வந்ததும் அங்கேயே தங்கிவிட்டார் அஸ்மா (ரழி) அவர்கள். மேலும் பெண்களுக்கு இஸ்லாமியப் பாடங்களைக் கற்றுத் தருவது அவரது தலையாய பணியாகிப் போனது. நீண்ட ஆயுளுடன் ஏறத்தாழ 90 வயது வரை வாழ்ந்திருந்தார்.

        ஹிஜ்ரி 69 ஆம் ஆண்டு மரணம் அவரைத் தழுவியது. டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ‘பாபுஸ்ஸகீர்’ என்னும் அடக்கத்தலத்தில் இவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.