Home


அஸ்மா பின்த் உமைஸ்

ரழியல்லாஹு அன்ஹா

        அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழியரில் இவரும் ஒருவர். இவர் கினானா வம்சத்தைச் சேர்ந்தவர். இவரின் அன்னையின் பெயர் ஹிந்த். இவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவியார் மைமூனா (ரழி) அவர்களுக்குச் சகோதரி முறையில் உள்ளவர். அர்க்கமின் இல்லத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவக்கு முன்னரேயே இவர் இஸ்லாத்தைத் தழுவியவர். இஸ்லாத்திற்கு முக்கியத் தூண்களாக விளங்கிய நபியவர்களின் பிரத்தியேக அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நபித்தோழர்கள் மூவருக்கு – ஒருவர் இறந்தபின் மற்றொருவருக்கு எனும் முறையில் - அஸ்மா (ரழி) அவர்கள் வாழ்க்கைத் துணைவியாய் இருந்தார்கள். முதலில் நபியவர்களின் பெரிய தந்தையாகிய அபூ தாலிபின் மகனார் ஜஅஃபர் (ரழி) அவர்களைக் கணவராகப் பெற்றார்கள். குறைஷிகளின் கொடுமை தாங்க இயலாது இவரும், இவருடைய கணவரும் அபிசீனியாவில் குடியேறிப் பல்லாண்டுகள் வாழ்ந்தனர். ஜஅஃபர் (ரழி) அவர்கள் மரணமான பிறகு அபூபக்ர் ஸித்தீக் (ரழி) அவர்களுக்கும். அவர்களும். மரணம் அடைந்த பிறகு மூன்றாவதாக அலீ (ரழி) அவர்களுக்கும் மணமுடிக்கப்பட்டார்கள்.

ஹிஜ்ரத்தில் முதன்மை அந்தஸ்தில் உள்ளவர்கள் யார்?

        ஆரம்பத்தில் இரகசியமாய்ப் பிரச்சாரம் செய்து வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்தின் நான்காம் ஆண்டில் தம் அழைப்புப் பணியை பகிரங்கப் படுத்தினார்கள். அதனைக் கண்ட எதிரிகள், வரம்பு மீறி இழைத்த கொடுமைகளுக்கு இலக்காகிய சாமானிய, ஏழை முஸ்லிம்கள் பொறுமை இழந்தனர். அப்போது தான் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்ய அந்த முஸ்லிம்களுக்கு அண்ணலாரின் அனுமதி கிடைத்தது. நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் அபிசீனியா நாட்டில் தஞ்சம் புகுந்தார்கள், அதில் அஸ்மா பின்த் உமைஸும் அவரின் கணவர் ஜஅஃபர் (ரழி) அவர்களும் இருந்தனர்.

        பின்னர் இறைவனின் ஆணைப்படி அண்ணல் நபி (ஸல்) அவர்களும் பிற முஸ்லிம்களும் மதீனா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அங்கு சென்ற முஸ்லிம்கள் பல யுத்தங்களைச் சந்தித்தார்கள். பத்ரு, உஹது மற்றும் அகழ்போர்கள் நடைபெற்றன. ஹிஜ்ரி 7ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் கைபர் யுத்தமும் நடந்து முடிந்தது. இந்த நேரத்தில் அபிசீனியாவில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் மதீனா திரும்பினார்கள்.

        அப்போது ஒருநாள் உமர் (ரழி) அவர்கள் தம்முடைய மகள் ஹஃப்ஸாவைச் சந்திப்பதற்காக அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அங்கே அஸ்மா (ரழி) அவர்கள் ஹஃப்ஸா (ரழி) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார், இவரை நோக்கி உமர் (ரழி) அவர்கள் (மகிழ்ச்சித் தோரணையில்) “நாங்கள் தான் ஹிஜ்ரத்தில் உங்களைவிட முதன்மை அந்தஸ்தில் உள்ளவர்கள்! எனவே உங்களை விட நாங்களே இறைத்தூதரின் அன்புக்கு உரித்தானவர்களாவோம்.” என்று கூற,  “அப்படியன்று; தங்களுடன் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இருந்தனர். ஆனால் நாங்களோ ஆதரவற்ற நிலையில் அந்நிய நாடு சென்று சொல்லொணா இன்னல்களுக்கு ஆளாகி வந்திருக்கிறோம்” என்று பதிலுரைத்தார் இவர்.

        இதன் பின் இவர் இச்செய்தியை அங்கு வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூற, “உமரைப் போன்றவர்கள் ஒரு ஹிஜ்ரத் செய்துள்ளார்கள். ஆனால் உம்மைப் போன்றவர்களோ இரண்டு ஹிஜ்ரத் செய்துள்ளீர்கள். எனவே அவர்களை விட உமக்கே அதிக மேன்மையும், சிறப்பும் உண்டு” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர். அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார் இவர். அபிசீனியாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்து திரும்பியவர்கள் இவரிடம் வந்து இச்செய்தியைக் கேட்ட வண்ணமாக இருந்தனர்.

முஃதா போரில் ஜஅஃபர் (ரழி) அவர்கள் ஷஹீத்

        நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர்  முஃதா போரேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது ஒரு தொடக்கமாக அமைந்தது. இப்போர் ஹிஜ்ரி 8, ஜுமாதா அல்ஊலா, கி.பி. 629 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடைபெற்றது.

        நபி (ஸல்) அவர்கள் இப்படைக்கு முதலாவதாக ஜைது இப்னு ஹாரிஸாவை (ரழி) தளபதியாக ஆக்கிவிட்டு “ஜைது கொல்லப்பட்டால் ஜஅஃபர் தளபதியாக இருப்பார் ஜாஃபரும் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக இருப்பார்” என்று கூறி வெள்ளை நிறக் கொடியை ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) கையில் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

        நபியவர்களின் விருப்பத்திற்குரிய தோழரான ஜைது (ரழி) முதலில் கொடியை ஏந்தி கடுமையான யுத்தம் புரிந்தார். அவர் அன்று காட்டிய வீரத்திற்கு என்ன உதாரணம் சொல்ல முடியும்! அவரைப் போன்ற இஸ்லாமிய வீரனிடமே தவிர வேறு எங்கும் அந்த வீரதீரத்தைப் பார்க்க முடியாது. இறுதியில் எதிரிகளின் ஈட்டிக்கு இரையாகி வீரமரணம் எய்தினார்.

        அடுத்து இஸ்லாமியப் படையின் கொடியை ஜஅஃபர் (ரழி) கையில் எடுத்துக் கொண்டு மின்னலாகப் போர் புரிந்தார். போர் உச்சக்கட்டத்தை அடைந்தவுடன் தனது ‘ஷக்ரா’ என்ற குதிரையிலிருந்து கீழே இறங்கி, அதை வெட்டி வீழ்த்திவிட்டு, படைக்குள் புகுந்து எதிரிகளின் தலைகளை வாளால் சீவலானார். அவரது வலது கை வெட்டப்பட்டு விட்டது. கொடியை இடது கையில் பிடித்தார். இடது கையும் வெட்டப்படவே புஜத்தால் பிடித்தார். பின்பு எதிரி ஒருவனால் கொல்லப்பட்டு வீரமரணம் எய்தினார். அவரை ரோமைச் சேர்ந்த எதிரி ஒருவன் இரண்டாக பிளந்து விட்டான் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.

ஜஅஃபர் (ரழி) வீட்டினர் துயரத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆறுதல்

        முஃதா போரில் ஜஅஃபர் (ரழி) அவர்கள் இறந்ததும் அவர்களின் இல்லம் சென்று அவர்களின் மக்களான முஹம்மதையும், அப்துல்லாஹ்வையும் அழைத்து கட்டித் தழுவிக் கண்ணீர் உகுத்தனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். நபி (ஸல்) அவர்களின் கண்கலங்கிய நிலையைக் கண்டு அஸ்மா (ரழி), “இறைத்தூதரே, என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தாங்கள் ஏன் கவலையடைந்துள்ளீர்கள்? ஜஅஃபர் அவர்களைப் பற்றி ஏதேனும் செய்தி வந்ததா?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “ஆம், ஷஹீதாகி விட்டார்” என்றார்கள். இந்த செய்தியைக் கேட்டதுமே அஸ்மா (ரழி)க்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. “அய்யகோ!” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அழுது புலம்பவதைக் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ள பெண்கள் எல்லாம் கூடிவிட்டார்கள்.

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள், பின்னர் தம் இல்லம் வந்து, “ஜஅஃபரின் வீட்டினர் துயரத்தில் இருக்கின்றனர். எனவே எதாவது உணவு தயாரித்து அனுப்புங்கள்” என்றனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அடுத்த நாள் அங்கு சென்று அவ்விரு குழந்தைகளுக்காகவும் இறைவனிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைஞ்சினர். அப்பொழுது அஸ்மா துக்கம் தாளாது அழ, “இம்மையிலும் மறுமையிலும் இறைவன் உமக்குப் பாதுகாவலனாக இருக்கும் பொழுது உமக்கு வறுமை பற்றிய பயமேன்?” என்று ஆறுதல் கூறினர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

அபூபக்ர் (ரழி) அவர்களுடன் மறுமணம்

        இதற்கு ஆறு மாதங்களுக்குப் பின் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டில் இவரை அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு மணமுடித்து வைத்தனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இரண்டு வருடம் கழித்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜு செய்ய மக்கா சென்ற பொழுது, இவர்களும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு சென்றனர். செல்லும் வழியில் துல்ஹுலைபா என்னும் இடத்தில் இவர் முஹம்மது இப்னு அபூபக்ரை ஈன்றார். அப்பொழுது தாம் என்ன செய்ய வேண்டுமென்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனுப்ப, குளித்துவிட்டு இஹ்ராம் அணிந்து கொள்ளுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பணித்தனர்.

நபியவர்கள் மரணம் அடைந்தபோது

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது நடந்த நிகழ்ச்சியை இமாம் புகாரியும், இப்னு ஸஃதும் எழுதியுள்ளார்கள்; நபி (ஸல்) அவர்கள் மரணமாவதற்கு ஒரு தினம் முன்னர் அவர்களுக்கு மார்பில் ஒரு வித வலி ஏற்பட்டது. உம்மு சல்மா (ரழி) அவர்களும் அஸ்மா (ரழி) அவர்களும் இன்ன காரணத்தால் தான் அந்த வலி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு அதற்கான மருந்தை நபியவர்களுக்கு ஊட்ட விரும்பினார்கள். ஆனால் நபியவர்கள் மறுத்து விட்டார்கள். அதற்குள் நபியவர்களுக்கு மயக்கம் வந்து விட்டது. உடனே அவ்விருவரும் நபியவர்களின் புனித வாயைத் திறந்து அம்மருந்தைப் புகட்டினார்கள். கொஞ்ச நேரத்தில் அவர்களுக்கு மயக்கம் தெளிந்தது. அப்போது நபியவர்கள், இந்த மருந்தை அஸ்மா தான் தயார் செய்திருப்பார்கள். அவர்கள் அபிசீனியாவிலிருந்து இதனை அறிந்திருக்க வேண்டும்,“ என்று கூறினார்கள்.

        ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்தார்கள். அப்போது அஸ்மா (ரழி) அவர்கள் அளவுகடந்த வேதனையில் ஆழ்ந்தார்கள். அவர்களை விடவும் அதிகமான துக்கத்தில் ஃபாத்திமா (ரழி) மூழ்கினார்கள். அஸ்மா (ரழி) அவர்கள் மனத்தைத் தேற்றிக் கொண்டு ஃபாத்திமா (ரழி) அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் மனத்தைத் தேற்றுவதில் அதிக நேரங்களைக் கழித்தார்கள்.

        ஹிஜ்ரி 13-ம் ஆண்டு அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது, “நான் இறந்ததும் அஸ்மாதான் என் உடலைக் குளிப்பாட்ட வேண்டும்” என்று ஆணையிட்டடார்கள். அவ்விதமே இறந்துவிட்ட தம் கணவரின் உடலை அஸ்மா (ரழி)தான் குளிப்பாட்டினார்கள்.

அலீ (ரழி) அவர்களின் மனைவியாக

        அபூபக்ர் (ரழி) அவர்கள் இறந்த பின் இவர் அலீ (ரழி) அவர்களை மணமுடித்து யஹ்யா என்ற மகனை ஈன்றெடுத்தார். ஒரு நாள் முஹம்மது இப்னு ஜஅஃபரும், முஹம்மது இப்னு அபூபக்ரும் தத்தம் பெருமையைப் பற்றி வாதாடிக் கொண்டிருப்பதைக் கண்ட அலீ (ரழி) அவர்கள் அஸ்மாவை நோக்கி, “இவர்களின் தர்க்கத்தைத் தீர்த்துவிடுவீராக!” என்று கூறிய பொழுது, “இளைஞர்களில் ஜஅஃபரும், வயோதிகர்களில் அபூபக்ரும் மாண்பு பெற்றவர்கள்” என்றனர் அஸ்மா, அது கேட்ட அலீ (ரழி) அவர்கள் புன்முறுவல் பூத்த வண்ணம், “எனக்கு ஒன்றும் இல்லையா?” என்று கேட்டனர்.

        பிற்காலத்தில் தம் மகன் முஹம்மது இப்னு அபூபக்ர் எகிப்தில் கொல்லப்பட்டு அவருடைய உடல் கழுதைத் தோலால் போர்த்தி எரிக்கப்பட்டது என்பதைக் கேள்வியுற்ற அஸ்மா துக்கம் தாள இயலாது அல்லாஹ்வைத் தொழத் துவங்கிவிட்டார்.

        இவர் கனவு விளக்க வல்லுநராக விளக்கினார். எனவே உமர் (ரழி) அவர்கள் கூட தாம் காணும் கனவுகளுக்கு இவரிடம் விளக்கம் கோரி வந்தனர். இவர் மூலம் அறுபது நபி மொழிகள் கிடைத்துள்ளன. அலீ (ரழி) அவர்களின் இறப்பிற்குப் பின் இவரும் இறப்பெய்தினார்.

        


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.