அஸ்மா பின்த் அபூபக்ர்
ரழியல்லாஹு அன்ஹா
அஸ்மா பின்த் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹா (கி.பி.595 - கி.பி.692) அவர்கள் அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்ர் (ரழி) அவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களின் மனைவியும் மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி)யின் அன்பு அன்னையுமான இவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று சுமார் 17 பேர் மட்டுமே இரகசியமான முறையில் இஸ்லாத்தைத் தழுவியிருந்த காலத்திலேயே 18வது நபராக அஸ்மா (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் ஹிஜ்ரத் செய்து புறப்பட்டு சென்ற அன்று அவர்களுக்கு பயணத்தில் சாப்பிட, இவர்கள் உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்த உணவு பொட்டலத்தை ஒட்டகத்தில் கட்ட கயிறு இல்லாததால் அஸ்மா (ரழி) அவர்கள் தம் அரைநாண் கயிறை இரண்டாக்கி ஒன்றைத் தாம் அணிந்து மற்றொன்றால் உணவுப் பொருட்களை கட்டியதால் இவர்களுக்கு ‘இரண்டு அரை நாண்காரர்’ (தாத்துன் நித்தாகைன்) என்னும் புகழ் பெயர் ஏற்பட்டது. ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களின் வாழ்க்கை துணைவியாக வாழ்ந்து பின்னர் ஸுபைர், இவர்களை மண விடுதலை (தலாக்) செய்து விட, இவர்கள் தம் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்களுடன் வாழ்ந்து வந்தனர்.
ஆரம்பகால வாழ்வு
இவர்கள் கி.பி.594 அல்லது 595 ஆம் ஆண்டு அபூபக்ர் (ரழி) அவர்களின் மூத்த மகளாக பிறந்தார். ஆயிஷா (ரழி) அவர்களும், அஸ்மா (ரழி) அவர்களும் மாற்றாந் தாய் மக்களாவர். ஆயிஷா (ரழி) அவர்களை விட இவர்கள் பத்து வயது மூத்தவர்கள். இவர்களும், அப்துல்லாஹ் இப்னு அபூபக்ர் (ரழி) அவர்களும் குதைலா பின்த் அப்துல் உஸ்ஸா என்னும் பெண்ணின் வயிற்றிலுதித்தவர்கள். குதைலா இஸ்லாத்தைத் தழுவ மறுத்ததால் அபூபக்ர் (ரழி) அவர்கள் அவரை மணவிடுதலை செய்து விட்டார்கள். [மற்றொரு வரலாறு அபூபக்ர் (ரழி) இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் அவரை மண விடுதலை செய்து விட்டார்கள் என்று கூறுகிறது]
இஸ்லாத்தை தழுவுதல்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆரம்ப இஸ்லாமிய அழைப்பை ஏற்று சுமார் 17 பேர் மட்டுமே இரகசியமான முறையில் இஸ்லாத்தைத் தழுவியிருந்த காலத்திலேயே இவர்கள் 18வது நபராக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். மக்காவில் இஸ்லாத்தின் அழைப்புப் பணி பகிரங்கமாக மேற்கொள்ளப்படத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் குறைஷி காபிர்களின் உள்ளத்தில் கோபக்கனல் பொங்கி பயங்கரமான கொடுமைகள் தலைவிரித்தாடின பொழுது அனைத்தையும் கண்ணுற்ற சிறுவயதுப் பெண்ணாய் இருந்த அஸ்மா (ரழி) அவர்களின் உள்ளத்தில் ஈமான் மென்மேலும் உறுதிப்பட்டது.
நபியவர்கள் ஹிஜ்ரத் பயணம் புறப்படுகிறார்கள்
குறைஷிகள் தங்களது தீய திட்டத்தில் எவ்வளவுதான் சுதாரிப்புடனும், விழிப்புடனும் இருந்தாலும் கூட படுதோல்வி அடைந்தனர். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கூட்டத்தைப் பிளந்து கொண்டு தரையிலிருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அங்கிருந்தவர்களின் தலையின் மீது தூவிவிட்டுச் சென்றார்கள். எதிரிகள் நபி (ஸல்) அவர்களை பார்க்க முடியாதவாறு அல்லாஹ் செய்துவிட்டான்.
அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதனையும்) பார்க்க முடியாது. (அல்குர்ஆன் 36:9)
நபி (ஸல்) அவர்கள் இவ்வசனத்தை ஓதியவர்களாக அங்கிருந்து வெளியேறி சென்றார்கள். அங்கிருந்த ஒவ்வொருவரின் மீதும் நபி (ஸல்) மண்ணை தூவியிருந்தார்கள். பின்பு அபூபக்ர் (ரழி) அவர்களின் வீட்டுக்கு வருகை தந்து அபூபக்ர் (ரழி) அவர்களையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் உள்ள சிறிய கதவின் வழியாக வெளியாகி, மக்காவிலிருந்து யமன் நாட்டை நோக்கிச் செல்லும் பாதையிலுள்ள ‘ஸவ்ர்’ குகையை வந்தடைந்தார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
அண்ணல் நபி (ஸல்) அவர்களை பற்றி விசாரித்த தீயவன் அபூஜஹ்ல்
“நபி (ஸல்) தப்பித்துவிட்டார்கள்’ என்ற செய்தியைக் காலையில் குறைஷிகள் உறுதியாக தெரிந்து கொண்டபோது அவர்களுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அலீ (ரழி) அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சரியாக பதில் கூறாததால், அவர்களை கடுமையாக அடித்து கஅபாவுக்கு இழுத்து வந்து சில மணி நேரம் அங்கேயே பிடித்து வைத்திருந்தனர். (தாரீக் தபரீ)
அலீ (ரழி) அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்காததால் அபூபக்ரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்து வெளியே வந்த அபூபக்ரின் மகளார் அஸ்மாவிடம் “உனது தந்தை எங்கே?” என்றனர். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குத் தெரியாது” என்றார் அவர். இந்தப் பதிலைக் கேட்ட தீயவன் ‘அபூஜஹ்ல்“, அவரது கன்னத்தில் அறைந்தான். இதனால் அவன் காது தோடு அறுந்து கீழே விழுந்தது. (இப்னு ஹிஷாம்)
அந்தகரான தம் பாட்டனார் அபூகுஹாபாவிடம்
தம் மகன் அபூபக்ர் (ரழி) மக்காவை விட்டு ஹிஜ்ரத் செய்து சென்றுவிட்டார் என செய்தி அறிந்த கண் பார்வை இல்லாத அபூகுஹாபா தன் மகன் அபூபக்ர் (ரழி) அவர்கள் வீட்டிற்க்கு வந்து அஸ்மாவிடம் “உங்களுக்கு ஏதேனும் என் மகன் வைத்து விட்டு சென்றுள்ளாரா” என்று வினவிய பொழுது, அவரிடம் ஒரு முட்டி நிறைய பொடிக் கற்களைப் போட்டுக் குலுக்கி, “இதோ வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்” என்று கூறினர் அஸ்மா (ரழி) அவர்கள். அது கேட்டு மனநிறைவுடன் சென்றார் அபூ குஹாபா.
அஸ்மாவிற்கு “தாத்துன் நித்தாகைன்” -இரட்டைக் கச்சுடையாள்- என்று பெயர்
ஹிஜ்ரி முதல் ஆண்டு செப்டம்பர் 16 கி.பி. 622, ரபீவுல் அவ்வல் முதல் பிறை திங்கள் இரவு அப்துல்லாஹ் இப்னு உரைக்கித் இரண்டு ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்து சேர்ந்தார். இதற்கு முன் நபி (ஸல்) அபூபக்ரிடம் அவரது வீட்டில் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இதோ எனது இரண்டு ஒட்டகங்களில் சிறந்ததை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அபூபக்ர் (ரழி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “அதற்குரிய கிரயத்திற்கு பகரமாக நான் அதை வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்கள். அபூபக்ரின் மகளார் அஸ்மா (ரழி) இருவருக்கும் பயண உணவை ஒரு துணியில் மடித்து எடுத்து வந்தார்கள். ஆனால், அதைத் தொங்க விடுவதற்குக் கயிறு எடுத்துவர மறந்து விட்டார்கள்.
அவ்விருவரும் பயணமானபோது உணவு மூட்டையை தொங்கவிட கயிறு இல்லாததால் தங்களது இடுப்பிலுள்ள கயிற்றை அவிழ்த்து அதை இரண்டாகக் கிழித்து ஒன்றின் மூலம் உணவு மூட்டையை வாகனத்தில் கட்டிவிட்டு, மற்றொன்றை தனது இடுப்பில் கட்டிக் கொண்டார்கள். எனவேதான் அஸ்மாவிற்கு “தாத்துன் நித்தாகைன்” -இரட்டைக் கச்சுடையாள்- என்று பெயர் வந்தது. (ஸஹீஹுல் புகாரி)
பின்னர் அபூபக்ர் (ரழி) அவர்கள் மதீனா வந்து சேர்ந்ததும் தம் மனைவி மக்களை மதீனாவுக்கு அழைத்து வரச் செய்தனர். முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவில் குடியேறிய புதிதில் அவர்களுக்கு யாதொரு குழந்தையும் பிறக்காத பொழுது, “நாங்கள் முஸ்லிம்களுக்கு வஞ்சனை செய்து விட்டோம், எனவே முஸ்லிம்களுக்கு யாதொரு குழந்தையும் பிறக்காது” என்று யூதர்கள் பிதற்றித் திரிந்தனர். அப்பொழுது மதீனா வந்த அஸ்மா (ரழி) அவர்களுக்கு குபாவில் வைத்து அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் பிறந்தனர்.
சுவரின் நிழலும் சிறு வியாபாரிக்கு உதவியும்
ஒரு தடவை வீட்டில் ஸுபைர் (ரழி) அவர்கள் இல்லாத போது ஏழை வியாபாரி ஒருவர் வந்து அஸ்மா (ரழி) அவர்களிடம் “உங்கள் வீட்டுச் சுவரின் நிழலில் பொருட்களை வைத்து விற்பதற்கு அனுமதி தாருங்கள்” என்று உதவி கோரினார். அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள் “நான் அனுமதி வழங்கிவிடுவேன் ஆனால் ஸுபைர் (ரழி) அவர்கள் வந்து மறுத்து விடுவார்களாயின் பெரிய சிக்கலாய் போய்விடும். ஆகையால் வீட்டில் எனது கணவர் இருக்கும் போது வந்து கேளுங்கள்!” எனக் கூறினர்.
ஸுபைர் (ரழி) அவர்கள் வீடு திரும்பியபோது மீண்டும் அந்த வியாபாரி வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு தனது கோரிக்கையை வைத்தார். அஸ்மா (ரழி) அவர்கள் “எனது வீட்டை விட்டால் மதீனாவில் உமக்கு வேறு வீடு கிடைக்கவில்லையா?” என்று அதட்டுவது போன்று கேட்டார்கள். இந்தப் பதிலைக் கேட்டுக்கொண்டிருந்த ஸுபைர் (ரழி) அவர்கள், “உனக்கு என்ன நேர்ந்துவிட்டது? ஓர் ஏழை வியாபாரி வியாபாரம் செய்வதைத் தடுக்கின்றாயே?” என்று தம் மனைவியைக் கண்டித்தார்கள்! உடனே அஸ்மா (ரழி) அவர்கள் அந்த சிறு வியாபாரிக்கு அனுமதி வழங்கிவிட்டார்கள்.
துவக்கத்தில் ஏழையாக இவர்கள் பட்ட சிரமங்கள்
இவர்களின் கணவர் ஸுபைர், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மாமியான ஸபிய்யாவுக்கும், கதீஜா (ரழி) அவர்களின் தமயனாகிய அவ்வாமுக்குப் பிறந்தவர். துவக்கத்தில் ஏழையாகவே இருந்தார். எனவே வீட்டு வேலைகள் அனைத்தையும் அஸ்மா (ரழி) செய்து வந்தனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஸுபைருக்குக் கொடுத்த ஒரு தோட்டத்திலிருந்து பேரீத்தங் கொட்டைகளைச் சேகரித்து அவற்றைத் தலையிலே சுமந்து கொண்டு வருவார் அஸ்மா (ரழி) அவர்கள். பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்த பொழுதுதான் இவர்களின் சிரமம் சிறிது குறைந்தது. உலகத்திலேயே சுவர்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்ற ஸுபைர் (ரழி) அவர்கள் பின்னர் பெரும் செல்வரானார். அஸ்மா (ரழி) அவர்களும் வள வாழ்வு வாழ்ந்தனர். ஆனால் இதன் பின் ஸுபைர், இவர்களை மண விடுதலை (தலாக்) செய்த விட இவர்கள் தம் மகன் அப்துல்லாஹ்வுடன் வாழ்ந்து வந்தனர்.
வெட்டப்பட்ட ஆடு தன் தோல் உரிக்கப்படும் பொழுது வருந்துகிறதா?
ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபின் பெரும் படை மக்காவை முற்றுகையிட்ட சமயம் அங்கு (மக்காவை) ஆட்சி செய்த இவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அது பற்றித் தம் அன்னையின் ஆலோசனையை நாடிய பொழுது, “உம்முடைய கடமை வீரப் போராடி இறப்பது தான்” என்று கூறினார் அஸ்மா (ரழி) அவர்கள். “அவ்விதமாயின் என் உடல் மீது அவர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வார்களே” என்று புதல்வர் கூறிய பொழுது, “அதைப்பற்றி உனக்கென்ன? வெட்டப்பட்ட ஆடு தன் தோல் உரிக்கப்படும் பொழுது வருந்துகிறதா?” என்று மறுவினா விடுத்தார்கள் இவர்கள். அது கேட்டு வீர உணர்வு பெற்ற தனயர் தம்முன் ஆயுதம் அணிந்து போருக்குச் செல்லத் தயாராக வந்த பொழுது அவரைக் கட்டித் தழுவிய இவர்கள் அவர் அணிந்திருந்த கவசத்தைச் சுட்டிக்காட்டி, “இறக்கத் துணிந்த ஒருவனுக்கு இது ஏன்?” என்று கேட்டனர். “தங்களுக்கு நான் உயிர் பிழைத்து வருவேன் என்று நம்பிக்கையூட்டுவதற்காக!” என்றனர் தனயர். “அதைக் கழற்றி வீசி எறி! நான் அந்நம்பிக்கையை எப்பொழுதோ இழந்து விட்டேன்” என்றனர் இவர்கள்.
இதன் பின் கஅபா சென்று இறைஞ்சிய அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் போரில் ஈடுபட்டு வீரமரணம் எய்தினார். அவருடைய உடலத்தைத் தலைகீழாய்க் கட்டித் தொங்க விட்டிருந்தார் ஹஜ்ஜாஜ். மூன்று நாட்களுக்குப் பின் அதனைப் பார்க்கத் தம் பணிப்பெண்ணுடன் வந்த இவர்கள், அதனைப் பார்த்துவிட்டு, “இந்த வாகன வீரர் தம்முடைய குதிரையிலிருந்து இறங்க இன்னும் நேரம் வரவில்லையா?” என்று மட்டும் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டும் அகன்றார்கள்.
அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது
இதன் பின் இவர்களை அழைத்து வர ஹஜ்ஜாஜ் ஓர் ஆளை அனுப்ப, இவர்கள் செல்ல மறுத்து விட்டார்கள். “வரவில்லையாயின் உம் தலைமுடியைப் பிடித்து இழுத்து வர ஆள் அனுப்புவேன்” என்று கூறி ஹஜ்ஜாஜ் மறு ஆளை அனுப்ப, “அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது” என்று கூறிவிட்டார்கள் இவர்கள். இது கண்ட ஹஜ்ஜாஜ், தாமே இவர்களைப் பார்க்க வந்து, “நான் அல்லாஹ்வின் எதிரி அப்துல்லாஹ் இப்னு ஸுபைருடன் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதைப் பார்த்தீரா?” என்று வினவ, “நீ அவருடைய இவ்வுலக வாழ்வை நாசப்படுத்தினாய். அவர் உம்முடைய அவ்வுலக வாழ்வைப் பாழ்படுத்தி விட்டார்” என்று கூறிய இவர்கள், ஹஜ்ஜாஜை நோக்கி, “அவரை தாத்துன் நித்தாகைனின் மகன் என்று இழிவாகக் கூறினாயாமே. அதில் என்ன இழிவு இருக்கிறது? தாத்துன் நித்தாகைன் என்பது நான்தான். அப்பட்டம் எனக்குக் கிடைத்தது என்னுடைய மகத்தான பேறு என்று நான் கருதுகிறேன். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ’பனூ தக்கீப் கிளையில் ஒரு பொய்யனும், ஒர் அக்கிரமக்காரனும் தோன்றுவர்’ என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன். பொய்யன் யார் என்பதைப் பார்த்து விட்டேன். (முஸைலமத்துல் கத்தாப்). அக்கிரமக்காரன் யார் என்பதை இப்பொழுது தான் பார்த்தேன். அது நீயே தான்” என்று கூறினர். ஹஜ்ஜாஜ் பேச வாயற்று அவ்விடத்தை விட்டு அகன்றார்.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்களின் உடல் அடக்கம்
சின்னாட்களுக்குப் பின் அப்துல்லாஹ் இப்னு ஸுபைரின் உடலம் யூதர்களின் அடக்கவிடத்தில் வீசி ஏறியப்பட்ட பொழுது அதனை எடுத்து வரச் செய்து இவர்கள் குளிப்பாட்டினர். அப்பொழுது தம் மகனின் உடல் உறுப்புகள் அனைத்தும் கழன்று வருவதைக் கண்ட இவர்கள் சிறிதேனும் மனம் தளராது, “இவருடைய ஒவ்வோர் உறுப்பின் மீதும் இறைவனே! அருள் பொழிவாயாக!” என்று இறைஞ்சிய வண்ணம் அவற்றைக் கழுவிய பின் கஃபனிட்டு ஜனாஸா தொழுகை தொழுவித்து நல்லடக்கம் செய்தார்கள்.
அஸ்மா (ரழி) அவர்களின் சிறப்பு மற்றும் இவர்களின் மரணம்
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்களை நல்லடக்கம் செய்த பின் ஒரு வாரம் கழித்து ஹிஜ்ரி 73 இல் தம்முடைய (சந்திர ஆண்டு கணக்கின்படி) நூறாவது வயதில் இவர்கள் காலமாயினர். இவர்கள் சுவனத்துக் கிழவிகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது.
இவர்கள் உயரமாகவும், பருமனாகவும் இருப்பர். இறுதிவரை பற்கள் விழவில்லை. கண் பார்வை மட்டும் சற்று மங்கிப் போயிருந்தது. இவர்கள் நான்கு ஆண் மக்களையும், மூன்று பெண் மக்களையும் ஈன்றெடுத்திருந்தனர்.
இவர்கள் மிகவும் தாராளத் தன்மை வாய்ந்தவர்கள். துவக்கத்தில் இவர்கள் எதனையும் அளந்து அளந்து உபயோகிப்பதைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “எதனையும் அளந்து அளந்து பயன்படுத்த வேண்டாம். அவ்விதம் செய்யின் இறைவனும் அளந்து அளந்து தான் உமக்கு இரணமளிப்பான்” என்று கூறினர். அன்றிருந்து அவ்வழக்கத்தை விட்டொழித்தனர் இவர்கள். அதிலிருந்து இவர்களுக்கு வள வாழ்வு துவங்க இவர்கள் வாரி வாரி வழங்கினர். ஆயிஷா (ரழி) அவர்கள் இறந்த பொழுது அவர்களுக்கு உரிய நிலம் ஒன்று இவர்களுக்குச் சேரவே இவர்கள் அதனை ஒரிலட்சம் திர்ஹங்களுக்கு விற்று அப்பணத்தை உற்றார் உறவினர்களுக்கு வழங்கி விட்டனர். நோயுற்ற சமயங்களில் இவர்கள் தம்மிடமிருந்த அடிமைகளை எல்லாம் விடுதலை செய்து விடுவார்கள்.
இவர்கள் மூலம் 56 நபி மொழிகள் கிடைத்துள்ளன. அவற்றில் பல ஸஹீஹ் புகாரியிலும் இடம் பெற்றிருக்கின்றன.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.