Home


அபூ லுபாபா இப்னு அப்துல் முன்திர் 

ரழியல்லாஹு அன்ஹு

        வரலாற்றுச் சிறப்புமிக்க அகபா உடன்படிக்கையின் பிறகு நபியவர்களிடம் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அன்சாரித் தோழர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் அபூ லுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்கள். மதீனாவின் அவ்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த இவர்களின் இயற்பெயர் ரிபா அத் இப்னு அப்துல் முன்திர் என்பதாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழர்களில் இவரும் ஒருவர். இஸ்லாத்தை ஏற்ற தருணத்திலிருந்து அதில் சிறந்து விளங்கி, நபியவர்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகிய அபூ லுபாபாவுக்கு தொழில் வியாபாரம். அதில் அவர் தம் குடும்பத்தை பராமரித்து வந்தார். மூன்று யூத கோத்திரத்தினர் மதீனாவில் வாழ்ந்து வந்தார்கள் அதில் ஒன்றான பனூ குரைளா கோத்திரத்தினர் குடியிருப்பின் அருகே தான் அபூலுபாபாவின் வீடு. அவர்களுக்கு மத்தியில்தான் இவரது தொழில் வியாபாரம் அமைந்திருந்தது. இஸ்லாத்திற்கு முந்தைய காலங்களில் அவ்ஸ் கோத்திரத்தினருக்கு பனூ குரைளாவுடன் நெருங்கிய நட்பும் நெருக்கமும் இருந்து வந்தன.

பத்ருப் போருக்கு சென்ற அபூ லுபாபா திருப்பி மதீனாவின் பிரதிநிதியாக

        பத்ருப் போருக்கு முஸ்லிம்கள் கிளம்பிச் சென்றபோது இம்முறை மதீனாவிற்கும், அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதியாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து வெளியேறி ‘ரவ்ஹா’ என்ற இடத்தை அடைந்த போது அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்து மதீனா அனுப்பி மதீனாவின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். அந்த அளவிற்கு அவர் மீதும் அவரது தகுதியின் மீதும் நபியவர்களுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.

        உரிய காரணங்களுடனோ, இதர பணிகளினாலோ பத்ருப் போரில் நேரடியாகக் களத்தில் பங்கு பெறாமல் பிற அலுவல்களில் ஈடுபடுத்தப்பட்ட தோழர்களும் பத்ருத் தோழர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோழர்களை அப்படித்தான் நடத்தியிருக்கிறார்கள். பத்ரு வெற்றிக்குப் பின்னர் போரில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் போர் வீரர்களுக்கு எப்படிப் பகிர்ந்து அளிக்கப்பட்டதோ அதே விகிதாசாரத்தில் அபூலுபாபாவுக்கும் அளிக்கப்பட்டது.

‘ஸவீக்’ போர்

        இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, பத்ர் போர் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து நடந்த ஒரு நிகழ்ச்சியாகும். பத்ர் போர் முடிந்த பிறகு அதில் தனது இனத்தவருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டவும் முஸ்லிம்களை பழிவாங்கவும் “முஹம்மதிடம் போர் செய்யும் வரை நான் என் மனைவியுடன் சேரமாட்டேன்” என்று அபூ ஸுஃப்யான் நேர்ச்சை செய்தார். ஆகவே, முஸ்லிம்களைத் தாக்க அவர் திட்டம் ஒன்று தீட்டினார். அதாவது, அதில் செலவும் சிரமமும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம்களுக்குப் பாதிப்பு அதிகமாக ஏற்பட வேண்டும். இதனால் தனது சமுதாயத்தின் இழந்த மதிப்பை மீட்க முடியும் அதன் ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.

தனது இந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக இருநூறு வீரர்களுடன் புறப்பட்டு மதீனாவிலிருந்து 12 மைல்கள் தொலைவில் இருக்கும் ‘சைப்’ என்ற மலைக்கருகிலுள்ள கணவாயில் வந்து இறங்கினார். எனினும், மதீனாவின் மீது பகலில் பகிரங்கமாக போர் தொடுக்க அவருக்குத் துணிவு வரவில்லை. கொள்ளையர்களைப் போன்று மதீனாவின் மீது இரவில் தாக்குதல் நடத்த திட்டம் ஒன்று தீட்டினார். இரவின் இறுதியில் அபூ ஸுஃப்யான் தனது படையின் ஒரு பிரிவை மதீனாவில் ‘அல் உரைழ்’ என்ற பகுதியில் கொள்ளையடிக்க அனுப்பினார். அந்தப் படையினர் அங்குள்ள பேரீத்தம் மரங்களை வெட்டி வீழ்த்தி எரித்தனர். அன்சாரிகளில் ஒருவரையும், அவரது ஒப்பந்தக்காரர் ஒருவரையும் கொன்றனர். அவ்விருவரும் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். இதற்குப் பின் அபூ ஸுஃப்யானும் அவரது படையும் மக்கா நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைக்கவே, மதீனாவில் அபூலுபாபா இப்னு அப்துல் முன்திரைப் பிரதிநிதியாக நியமித்து, தங்களது சில தோழர்களுடன் அபூ ஸுஃப்யானையும் அவரது படையையும் விரட்டிப் பிடிப்பதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். ஆனால், அவர்கள் அதிவிரைவில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

அவ்வாறு செல்லும்போது தங்களது பயணத்தை விரைவாக தொடரத் தடையாக இருந்த சத்து மாவு மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை வழியில் விட்டுவிட்டனர். நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் ‘கர்கரத்துல் குதுர்’ என்ற இடம் வரை சென்றும் அவர்களைப் பிடிக்க முடியாததால் மதீனா திரும்பினார்கள். வழியில் எதிரிகள் விட்டுச் சென்ற உணவுப் பொருள் மற்றும் சத்து மாவை தங்களுடன் எடுத்துக் கொண்டனர். அதில் சத்து மாவு அதிகம் இருந்ததால் அதை குறிக்கும் ‘ஸவீக்’ என்ற சொல்லை வைத்தே இந்த தாக்குதலுக்கு ‘ஸவீக் போர்’ என்ற பெயர் வந்தது. (ஜாதுல் மஆது)

பனூ குரைளா போர்

        பனூ குரைளா என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது. அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து “என்ன நீங்கள் உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டீர்களா? நிச்சயமாக வானவர்கள் தங்களின் ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை. நான் இப்போது தான் எதிரிகளை விரட்டி விட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப் புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை அசைக்கிறேன். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வானவர்களின் ஒரு கூட்டத்துடன் புறப்பட்டார்.

        நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக் கூறினார்கள்: “யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர் அஸ்ர் தொழுகையை குரைளாவனரிடம் சென்றுதான் தொழ வேண்டும்” (அதாவது உடனடியாக இங்கிருந்து குரைளாவினரை நோக்கி புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள். இவ்வாறு இஸ்லாமியப் படை ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவிலிருந்து புறப்பட்டு நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தது. இஸ்லாமியப் படையில் மொத்தம் மூவாயிரம் வீரர்களும், முப்பது குதிரைகளும் இருந்தன. குரைளாவினன் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். முஸ்லிம்களின் முற்றுகை கடுமையாக இருந்ததைக் கண்ட குரைளாவினன் தலைவன் கஅப் இப்னு அஸது தனது மக்களிடம் மூன்று கருத்துகளை முன் வைத்தான். அதில் எந்த ஒன்றையும் யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக நபியவர்கள் கூறும் தீர்ப்பையே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.

        இருப்பினும் சரணடைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள தங்களுக்கு நண்பர்களாக இருந்த சில முஸ்லிம்களுடன் தொடர்பு கொண்டு அறிய விரும்பினர். ஆகவே, நபியவர்களிடம் தூதனுப்பி அபூலுபாபாவை தங்களிடம் அனுப்பும்படி கேட்டுக் கொண்டனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரை அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அபூலுபாபா யூதர்களின் நட்புரீதியான ஒப்பந்தக்காரராக இருந்தார். இவருடைய பொருட்களும், பிள்ளைகளும் யூதர்களின் பகுதியில் இருந்தன. அபூலுபாபா யூதர்களைச் சந்தித்தவுடன் அவரிடம் பெண்களும், சிறுவர்களும் எழுந்து வந்து அழுதனர். இதைப் பார்த்து அவரது உள்ளம் இளகிவிட்டது. அவர்கள் “அபூலுபாபாவே! நாங்கள் நபியவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் நபியவர்கள் எங்களுக்கு என்ன தீர்ப்பளிப்பார்கள்?” என்றனர். அப்போது அபூலுபாபா “தனது கழுத்தைச் சீவுவது போல் செய்து காட்டி, அந்தத் தீர்ப்பு கொலை!” என்று சூசகமாகக் கூறினார்.

தவறு செய்து விட்டோம் என்று அபூலுபாபா உணர்ந்தார் வருந்தினார்

        நபி (ஸல்) அவர்களின் இந்த இரகசிய முடிவை வெளிப்படுத்தி தவறு செய்து விட்டோம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மோசடி செய்து விட்டோம் என்று அபூலுபாபா உணர்ந்தார் வருந்தினார். எனவே, நபியவர்களைச் சந்திக்கச் செல்லாமல் மஸ்ஜிதுந் நபவிக்குச் சென்று தன்னை ஒரு தூணுடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டார். இனி ஒருக்காலும் குரைளாவினரின் பூமிக்கு செல்லவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார். நபியவர்கள் அபூலுபாபாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் இவர் மதீனா சென்று தன்னை தானே தூணில் கட்டிக் கொண்ட செய்தி நபியவர்களுக்கு கிடைத்தவுடன் “அவர் என்னிடம் நேரடியாக வந்து விஷயத்தை கூறியிருந்தால் நான் அவருக்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால், எப்போது அவர் அவருடைய விருப்பப்படி நடந்து கொண்டதால், அல்லாஹ் அவரை மன்னிக்கும் வரையில் என்னால் யாதொன்றும் செய்ய இயலாதே” என்று கூறினர்.

        இவர் தம்மைத் தூணுடன் பிணைத்துக் கொண்டு ஆறு நாட்கள் வரை இருந்தார். இந்த ஆறு நாட்களிலும் தொழுகை நேரத்தில் இவருடைய மனைவி அங்கு வந்து இவரை அவிழ்த்து விடுவார். தொழுகை முடிந்ததும் இவர் திரும்பவும் அந்த தூணுடன் பிணைத்துக் கொள்வார். பட்டினியாக இந்த ஆறு நாட்களும் இருந்ததால் ஏழாவது நாள் இவர் தன்னுணர்வு இழந்து விட்டார்.

அபூலுபாபாவின் பாவமன்னிப்பு தொடர்பான செய்தி

        நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு உம்மு ஸலமாவின் வீட்டில் இருந்த போது அதிகாலை ஸஹர் நேரத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் புன்னகைப்பதை கவனித்த அன்னை உம்மு ஸலமா அவர்கள், “அல்லாஹ் தங்களை எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வைப்பானாக. தாங்கள் எதற்காக சிரித்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அபூலுபாபாவின் தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது” என்று கூறினார்கள்.  நான் அதை தெரிவித்து விடட்டுமா என்று அனுமதி பெற்று,  உம்மு ஸலமா (ரழி) தனது அறையின் வாசலில் நின்றவராக “அபூ லுபாபாவே! நீங்கள் நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான்” என்று கூறினார். இச்செய்தியைக் கேட்ட மக்கள் அவரை அவிழ்த்து விடுவதற்காக அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், நபி (ஸல்) அவர்களைத் தவிர தன்னை வேறு யாரும் அவிழ்க்கக் கூடாது என்று மறுத்துவிட்டதால் நபியவர்கள் சுபுஹு தொழுகைக்கு வந்த போது அவரை அவிழ்த்து விட்டார்கள்.

இறைவனின் மன்னிப்பை ஏற்று மகிழ்ந்த அபூலுபாபா

        இறைவனின் மன்னிப்பை ஏற்று மகிழ்ந்த அபூலுபாபா இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகத்தான் தாம் பாவம் செய்த பொழுது தங்கி இருந்த வீட்டைக் காலி செய்து விட்டுக் கிளம்பி விடுவதாகவும், தம் சொத்து முழுவதையும் தர்மம் செய்து விடுவதாகவும் கூறினார். ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர் தம் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை தர்மம் செய்து விடுமாறு கூறினர். அபூலுபாபா அவர்களும் மூன்றில் ஒரு பகுதி சொத்தை தர்மம் செய்தார்கள், தங்கி இருந்த வீட்டையும் தர்மம் செய்தார்கள்.

இவர்களின் இறுதிகாலம்

மக்கா வெற்றியின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்களுடனேயே இவர்களும் பயணத்தில் இருந்தனர். அன்சார்களின் அவ்ஸ் கோத்திரத்தின் கொடியை ஏந்தியவர்களாக இவர்கள் மக்காவில் நுழைந்தார்கள். பின்னர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்த இவர்களின் மரணம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. சிலர் ஹலரத் அலீ (ரழி) அவர்களின் கிலாஃபத் காலகட்டத்தில் மரணமடைந்ததாகவும், சிலர் ஹலரத் உஸ்மான் (ரழி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட பிறகு மரணம் நிகழ்ந்தது என்றும் கூறுகின்றார்கள்.  

மஸ்ஜிதுன் நபவியில் உள்ள சுவர்க்கப் பூங்கா

        மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாயிலில், “சுவர்க்கப் பூங்காவின் ஒரு துண்டு” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களால் வர்ணிக்கப்பட்ட இடத்தில் இப்பொழுதும் அந்த தூண் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் மீது, ‘இது அபூலுபாபாவின் தூண்’ என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஹஜ் உம்ரா செல்லும் யாத்திரிகர்கள் இவ்விடத்தில் தங்களின் பாவம் போக்க இறைவனை இறைஞ்சுகின்றார்கள்.

 


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.