ஒவ்வொரு நபிமாரின் பெயரின் பின்னால் (அலை) என குறிப்பிட்டுள்ளதை அலைஹிஸ்ஸலாம் எனவும், முஹம்மது நபியின் பெயருக்கு பின் (ஸல்) என குறிப்பிட்டுள்ளதை ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் எனவும் தொடர்ந்து படித்து கொள்ள வேண்டுகிறோம்.
யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் இளைய மகனாவார். இவர்களை இஸ்ராயீல் என்றும் சொல்வதுண்டு. இவர்களுக்கு பனிரெண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்த சந்ததியினரை தான் பனீ இஸ்ராயீல் என்றழைக்கப் படுகின்றனர். பெரும்பாலான நபிமார்களை இவர்களிலிருந்தே தோன்றச் செய்தான் இறைவன். குர் ஆன் ஷரீபில் சூரே யூசுஃபில் யஃகூப் நபியவர்களைப் பற்றி சில குறிப்புகள் காணப் படுகின்றன. அவைகள் தன் பேசியதையே குறிக்கின்றன. இதர இடங்களில், மற்ற நபி மார்களின் வரிசையில் இவர்கள் பெயரும் சேர்த்துச் சொல்லப்படுகிறது. விரிவு
யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய வரலாறு, “ஸூரத்து யூஸுஃப்” என்ற தனி அத்தியாயத்தில் குர்ஆன் ஷரீபில் தெளிவாகக் கூறியிருக்கிறது. 98 வசனங்களில் தொடர்வாக வரலாறு அதில் காணப்படுகிறது. இதல்லாமல் தனியாகக் குறிப்பிடப்படும் ஒரிரு வசனங்களும் உள்ளன. இவர் நபி யாகூப் (அலை) அவர்களின் அன்பு மகனாவார். அழகும், அருங்குணமும், ஒருங்கே பெற்றிருந்த நபி யூஸுஃப் (அலை) அவர்கள் மீது அதிக அன்பு பாராட்டி வந்தார்கள். இதனால் ஏனைய எல்லா சகோதரர்களுக்கும் யூஸுஃப் (அலை) அவர்கள் மீது பொறாமை ஏற்பட்டது. பைபிளிலும், யூத கிரந்தங்களிலும் “ஜோசப்” என்ற பெயரில் குறிப்பிடப் பட்டிருந்தாலும், இத் திருமறை குர் ஆன் கூறும் நபி யூஸுஃபின் வரலாறு, பைபிளில் உள்ள ஜோசப்பு கதையைப் போன்றதன்று. விரிவு
அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குர் ஆனில் கூறப்பட்டிருக்கும் நபிமார்களில் ஒருவர். இறைவனின் நாட்டப்படி செல்வந்தராக 80 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் செல்வம் அனைத்தும் இழந்து உடல் முழுவதும் கொடிய புண்கள் ஏற்பட்டு புழுக்கள் நெளிந்தன. அப்பொழுதும் அவர் இறைவனை தொழுவதையும், துதி (திக்ரு) செய்வதையும் தொடர்ந்து செய்து வந்தார்கள். நோய் பரவி இதயம், மற்றும் நாவை பாதிப்படைய தொடங்கும் பொழுது இறைவனை துதி செய்ய நாவு வேண்டும் என இறைவனிடம் துஆ செய்ய, இறைவன் இவர்களுக்கு பூரண குணத்தை நல்கினான். விரிவு
ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் வழி வந்த மிக்கீல் என்பவரின் திருமகனாவார்கள். துவக்கத்தில் இவர்களது பெயர் பீர் என்பதாய் இருந்தது. இவர்கள் நபியாவார்கள் என்று மிக்கீலுக்கு இறைவன் கனவில் அசரீரியாய் அறிவித்தான். அதிலிருந்து தந்தை, இவர்களை ஷுஐப் (கிளை) என்று அழைக்கலானார். தொடக்கத்தில் வாணிபம் செய்து வந்த இவர்கள் தங்களுடைய பெரும் பாலான நேரத்தை வணக்கத்தில் செலவழித்தார்கள். விரிவு
துல்கிஃப்ல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு நபியாவர். இவர்களைப் பற்றி இறைவன் தன் திருமறையில் 21:85, 38:48 ஆகிய இரு திருவசனங்களில் குறிப்பிடுகின்றான். இவர்கள் தம் நல்லடியார்களில் ஒருவரென்றும், தமக்கேற்பட்ட துன்பங்களைச் சகித்துக் கொண்டார் என்றும் இறைவன் கூறுகின்றான். இவர்களைப் பற்றி ஹதீதில் யாதொரு குறிப்பும் காணப் பெறவில்லை. விரிவு
மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களில் தோன்றிய மாபெரும் நபியும், “தெளராத்” அருளப் பெற்ற இறைவனின் திருத்தூதரும் ஆவார்கள். கொடுங்கோன்மையில் திளைத்திருந்த ஃபிர் அவ்னிடம் சென்று நீதி மார்க்கத்தை எடுத்துக் கூறுமாறு பணிக்கப்பட்டார்கள். அவ்வாறே மூஸா (அலை) அவர்கள் ஃபிர் அவ்னுடைய தர்பாருக்குச் சென்று தீன் நெறியை விளக்கிக் காட்டினார்கள். ஆனால், மமதை மிக்க மன்னனும் அவனது கூட்டத்தாரும் இறுதி வரை கர்வம் நிறைந்தவர்களாகவே இருந்ததோடு மூஸா (அலை) அவர்களுக்குப் பெரிதும் இன்னல் விளைவித்து வந்தனர். ஆகவே மூஸா (அலை) அவர்கள் தங்கள் கூட்டத்தாரை அழைத்துக் கொண்டு எகிப்து தேசத்தை விட்டு வெளியேறிச் சென்றார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றான் ஃபிர் அவ்ன். அதுபோது, இறைவனின் ஆணைக் கொப்ப மூஸா (அலை) அவர்கள் தமது கையில் இருந்த ‘அஸா’வால் (கைத்தடியால்) கடல் நீரை அடித்ததும், கடல் இரண்டாகப் பிளந்து வழி விட்டது மூஸா (அலை) அவர்கள் மற்றும் கூட்டத்தார் அக்கரை சென்றடைந்தனர். விரட்டி வந்த ஃபிர் அவ்ன் மற்றும் அவனது கூட்டத்தார்கள், பிளவு கண்ட கடல் வழியே இறங்கி விரைந்து கொண்டிருக்கையில் கடல் ஒன்றாக கூடிவிடவே அந்த கூட்டத்தார் அனைவரும் ஃபிர் அவ்ன் உட்பட கடலில் முழ்கி இறந்தனர். விரிவு
ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூத்த சகோதரர் ஆவர். இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தைகளை வெட்ட வேண்டுமென்று ஃபிர்அவ்ன் ஆணையிடுவதற்கு முன் பிறந்தவர்கள் இவர்கள். இவர்களின் தந்தை பெயர் இம்ரான். அன்னை பெயர் யூகானிது. தூர்ஸினாய் மலையில் இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி ஃபிர் அவ்னிடம் சென்று அவனுக்குச் சன்மார்க்கத்தைப் போதிக்குமாறு கூற, தமக்கு அப்பணியில் உறுதுணையாகத் தன் தமயனார் ஹாரூனை ஏற்படுத்துமாறு வேண்ட அவ்விதமே இவர்களையும் ஒரு நபியாயும் மூஸா (அலை) அவர்களுக்கு அமைச்சராயும் இறைவன் ஆக்கினான். விரிவு
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றிய மக்கள் நாளடைவில், பல தெய்வ வணக்கத்தில் மூழ்கி வந்தனர். இவர்களை மீண்டும் நேர்வழிப் படுத்த - மூஸாவின் மார்க்கத்தை நிலை நிறுத்தும் நோக்கத்தோடு இல்யாஸ் (அலை) அவர்களுக்கு இறைவன் நபித்துவமளித்தான். ஹாரூன் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இவர்களைப் பற்றி இறைவன் திருக்குர் ஆனில் இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றான். இவர்கள் ஸமாரிய நாட்டு மன்னர்களான அஹப், அஸாரியா ஆகியவர்களின் காலத்தில் (கி.மு.896-874) வாழ்ந்தனர். விரிவு
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யஃகூப் (அலை) அவர்களின் மகனான யஹுதாவின் வழி வந்தவர்கள். இவர்களின் தந்தை பெயர் அய்ஷா என்பதாகும். இவர்களுடன் பிறந்தோர் பதினொருவர். அவர்கள் அனைவருக்கும் இவர்கள் தான் இளையவர். இவர்கள் ஈஸா (அலை) அவர்களுக்கு 990 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்கள். . விரிவு
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனாகிய ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பதின்மூன்று வயதிலேயே அரியணை ஏறி அரசராகவும், நபியாகவும் விளங்கினார். இவர்கள் அரசாங்கத்தை விட அறிவே தமக்கு வேண்டுமெனக் கூறியதன் காரணமாக, இறைவன் இவர்களுக்கு அரசாங்கத்தையும், அறிவையும் ஒருங்கே வழங்கினான். ஜின்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், காற்று, தண்ணீர் அனைத்தும் நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டிருந்தன. அகில உலக மன்னர்களும் ஸுலைமான் (அலை) அவர்களுக்கு அடங்கி நடந்தனர். விரிவு
நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழி வந்தவர் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இவர்களின் தந்தை பெயர் மத்தா. அன்னையின் பெயர் பதூரா. இவர்கள் நீனவா என்னும் நகரத்தின் நூறாயிரம் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்கென்று இறைவனால் நபியாக அனுப்பப் பட்டார்கள். இவர்கள் பெயரில் திருக்குர் ஆனில் ஒரு அத்தியாயம் (ஸூரத்து யூனுஸ்) அருளப்பட்டுள்ளது. இவர்கள் ‘நூன்’ என்ற மீன் வயிற்றில் பல நாள்கள் இருந்ததால் இவர்களுக்கு ‘துன்னூன்’ (மீனையுடையவர்) என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. விரிவு
ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி சுலைமான் (அலை) அவர்களின் (சந்ததியாவார்) வழி வந்தவர்கள். தந்தையின் பெயர் ஆஜர் என்பது. இறை தூதராகிய இவர்கள் பிழைப்பின் பொருட்டு தச்சு வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். நபி ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம்(அலை) அவர்கள் ஜகரிய்யா (அலை) அவர்களின் பராமரிப்பில் தான் வளர்ந்து வந்தார்கள். நபி சுலைமான் (அலை) அவர்களின் சந்ததியிலிருந்தே மர்யம் (அலை) அவர்களும் பிறந்தவராவார். விரிவு
திருக்குர் ஆனில் கூறப்பட்ட இருபத்தைந்து நபிமார்களில் இவர்களும் ஒருவர். இல்யாஸ் (அலை), பனீ இஸ்ராயீல்கள் ஒருவரின் இல்லத்தில் நுழைந்த பொழுது அங்குச் சிறுவர் அல்யஸவு நோயுற்றுக் கிடப்பதைக் கண்டு அவர்களுக்காக இறைஞ்சினர். அடுத்தகணம் அவர்கள் நலம் பெற்றனர். உடனே அல்யஸவு, “இறைவன் ஒருவன், அவனுடைய தூதர் இல்யாஸ் (அலை) என்று கூறி அவர்களை எங்கணும் பின் தொடர்ந்து செல்லும் மாணவராயினர். விரிவு
நபி ஜகரிய்யா (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு இறைவன் அவர்களின் தள்ளாத வயதில் அவர்களுக்கு "யஹ்யா" என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) நற்செய்தி வழங்கினான். பின்னர் வயது முதிர்ந்த மலடான அவரது தாயாரின் உடல் நலத்தை சீராக்கி அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்களை வாரிசாக வழங்கினான். இறைவனின் அருளாள் யஹ்யா (அலை) அவர்கள் சிறுவயதிலே சிறந்த ஞானத்தையும், இரக்கமுள்ள மனத்தையும், பரிசுத்தத் தன்மையும், பெற்று அதிகமான இறை அச்சமுடைய நிலையில், தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவும் வளர்ந்து வந்தார்கள். விரிவு
உஜைர் (அலை) இவர்கள் ஒரு நபி என்று கருதப்பட்டனர். இவர்கள் ஹாரூன் (அலை) அவர்களின் பேரர் பின்ஜாஸின் மகனாவார். இவர்களின் தந்தையின் பெயர் ஷரஹ்யா என்றும் அவர் ஓர் எழுத்தர் என்றும் கூறப்படுகிறது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த உஜைர் ஒரு நபியா என்ற விஷயத்தில் கருத்து வேறுபாடு உண்டு. பெரும்பான்மையோர் கருத்து, அவர் ஒரு நபியாவார் என்பதே ஆகும். இவர்கள் ஒரு நபியா என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது அதனை அவர்கள் மறுக்கவோ ஒப்புக்கொள்ளவோ செய்யாது அது தமக்குத் தெரியாது என்று மட்டும் தெரிவித்தனர். இவர்களது பெயர் திருக்குர்ஆன், ஸூரத்துத் தவ்பாவில் ஒரே ஒரு தடவை குறிப்பிடப் பட்டுள்ளது. விரிவு