உஜைர் அலைஹிஸ்ஸலாம்
உஜைர் (அலை) இவர்கள் ஒரு நபி என்று கருதப்பட்டனர். இவர்கள் ஹாரூன் (அலை) அவர்களின் பேரர் பின்ஜாஸின் மகனாவார். இவர்களின் தந்தையின் பெயர் ஷரஹ்யா என்றும் அவர் ஓர் எழுத்தர் என்றும் கூறப்படுகிறது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த உஜைர் ஒரு நபியா என்ற விஷயத்தில் கருத்து வேறுபாடு உண்டு. பெரும்பான்மையோர் கருத்து, அவர் ஒரு நபியாவார் என்பதே ஆகும். இவர்கள் ஒரு நபியா என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது அதனை அவர்கள் மறுக்கவோ ஒப்புக்கொள்ளவோ செய்யாது அது தமக்குத் தெரியாது என்று மட்டும் தெரிவித்தனர். இவர்களது பெயர் திருக்குர்ஆன், ஸூரத்துத் தவ்பாவில் ஒரே ஒரு தடவை குறிப்பிடப் பட்டுள்ளது.
இவரைப் பற்றி திருக்குர்ஆனில்……
யூதர்கள் (நபி) "உஜைரை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் "மஸீஹை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்? (9:30. )
(நபியே!) அல்லது ஒரு கிராமத்தின் மீது சென்றவரைப் போல் (நீங்கள் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) "இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்தபின் அல்லாஹ் இதனை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?" என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரையில் மரணித்திருக்கச் செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி "இந்நிலையில்) நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள்" எனக் கேட்க "ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்" எனக் கூறினார். (அதற்கு அவன்) "அல்ல! நீங்கள் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர்கள். (இதோ!) உங்களுடைய உணவையும், உங்களுடைய பானத்தையும் பாருங்கள். (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உங்களுடைய கழுதையைப் பாருங்கள். (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கின்றது.) இன்னும் உங்களை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர் களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்பு களையும் நீங்கள் பாருங்கள். எவ்வாறு அவைகளைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கின்றோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது (அவர்) "நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்துகொண்டேன்" என்று கூறினார். (2:259.)
இறைவன் இவர்களை மரிக்கச் செய்து 100 ஆண்டுகளுக்கு பின்
இவர்கள் தம் முப்பதாவது வயதில் பைத்துல் முகத்தஸின் வழியாக சென்ற பொழுது அந்த ஊர் புக்த் நஸரின் படையெடுப்பால் பாழடைந்து மனிதர்கள் இன்றி முற்றிலும் நாசமடைந்து கிடப்பதைக் கண்டு அழிந்து போன அந்த ஊரை அல்லாஹ் எப்படி உயிரூட்டி செழிக்கச் செய்வான் என்று எண்ணி வியந்தார்கள். பின்னர் நகருக்கு அருகே ஓரிடத்தில் தம் வாகனமான கழுதையைக் கட்டிப் போட்டு விட்டு, தம்முடன் எடுத்து வந்த உணவு, நீர் முதலியவற்றை அங்கே வைத்து விட்டு உஜைர் உறங்கி விட்டார். அப்படியே அவரை அல்லாஹ் மரணிக்க செய்து விட்டான். இது உண்மையான மரணமே என்பது சில விரிவுரையாளர்களின் கருத்து. மற்ற சிலர் “அஸ்ஹாபுல் கஹ்ஃபு - குகைவாசிகள்” முன்னூறு ஆண்டுக்காலம் உறங்கியது போல 100 ஆண்டுகள் உஜைரும் உறங்கினார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
இறைவன், அழிந்ததைத் தன்னால் செழிக்கச் செய்ய இயலும், இறந்து போனவரைத் தன்னால் எழுப்ப இயலும் என்பதை எண்பிப்பதற்காக இவர்களையே மரிக்கச் செய்து ஒரு நூறு ஆண்டுகளுக்கு பின் உயிர் பெற்றெழச் செய்தான். இதற்கிடையே பாரசீக மன்னன் போஷக் என்பவன் பைத்துல் முகத்தஸை மீண்டும் நிர்மாணித்துச் செழிப்புறச் செய்தான்.
100 ஆண்டுகளுக்கு பின் உயிர் பெற்றெழுந்த உஜைர்
நூறாண்டுகள் கழித்த பின்னர் உஜைரை மீண்டும் எழுப்பி, “இங்கே எவ்வளவு காலம் தங்கியிருந்தீர்?” என்று அல்லாஹ் வினவினான். நூறாண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் உறங்கத் தொடங்கிய அவர், இப்போது மாலை நேரத்தில் எழுந்தார். எனவே ‘ஒரு நாள் அல்லது சில மணி நேரங்கள் உறங்கியிருப்பேன்’ என்று உஜைர் பதிலளித்தார். அதற்கு அல்லாஹ் ‘இல்லை; நூறாண்டுகள் கழிந்து விட்டன. அப்படியிருந்தும் உம்முடைய உணவும் நீரும் கெட்டுப் போகாமல் இருப்பதைப் பாரும். ஆனால் அதோ உம்முடைய கழுதையைப் பாரும். அது மடிந்து மக்கிப் போய் எலும்புகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இனி அந்த எலும்புகளில் தசையைப் பொருத்தி, மீண்டும் கழுதையை எவ்வாறு உயிர்ப்பிக்கிறோம் என்பதைப் பாரும்’ என்று கூறினான். அவ்வாறே செய்தும் காட்டினான்.
இதையெல்லாம் கண்ட நபி உஜைர் (அலை) அவர்கள் “நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் பெற்றவன் என்பதை அறிந்து கொண்டேன்” என்று மொழிந்தார்கள்.
உயிர் பெற்றெழுந்த உஜைர் அவர்கள் தம் இல்லம் சென்ற பொழுது அங்குத் தாம் அறிந்த ஒருவரும் காணப்படவில்லை. கண் பார்வையற்ற ஒரு மூதாட்டியைக் கண்டு அது உஜைரின் வீடுதானா என்று வினவ, “ஆம்; ஆனால் அவர் சென்று வெகு காலமாகிறது. தாங்கள் யார்?” என்று கேட்டாள் அவள். அவர்கள் தாமே உஜைர் என்று கூறவும் அந்த மூதாட்டி “உஜைரின் இறைஞ்சுதல் இறைவனால் உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளப்படுவது வழக்கம். தாங்கள் எனக்கு இழந்த பார்வையை வழங்குமாறு இறைவனிடம் இறைஞ்சுங்கள்! பார்வை மீளப் பெற்றதும் தங்களைப் பார்த்து நான் சான்று பகர்கின்றேன்” என்று கூறினாள். அவ்வாறே இவர்கள் இறைஞ்ச அவள் கண்ணொளி மீளப் பெற்றாள். உடனே அவள் இவர்களைப் பார்த்து “தாங்கள் உஜைர் தாம்” என்று கூறியதுடன் ஊர் மக்களிடம் சென்று அதனைத் தெரிவித்தாள். ஆனால் அவர்களோ அதனை ஏற்க மறுத்த பொழுது அவள் தமக்குப் பார்வை வந்ததைக் கூறினாள். அதன் பிறகுதான் மக்கள் திரண்டு வந்தார்கள்.
100 ஆண்டுகளுக்கு பின்பும் முப்பது வயது இளைஞராக இவர்
அவ்வாறு திரண்டு வந்தவர்களில் இவர்களின் சகோதரர் அஸீஸும், மகனும் இருந்தனர். இவர்கள் முப்பது வயது இளைஞராக நின்று கொண்டிருந்த பொழுது இவர்களுடன் ஒரே சூலில் பிறந்த இவர்களின் தம்பி அஸீஸோ 130 வயதுள்ள கிழவராகவும், மகனோ 108 வயதுள்ள கிழவராகவும் கம்பூன்றிக் கூனிக் குறுகி வந்து கொண்டிருந்தனர். முதலில் அவர்களும் இவர்களை நம்பாத போதினும் பின்னர் இவர்களின் மகன் இவர்களின் தோளிலிருந்த மறுவால் இவர்களை இலக்குக் கண்டு இவர்களைத் தம் தந்தையென ஒப்புக் கொண்டார்.
தெளராத்தை உஜைர் ஒப்புவித்தது
புக்துநஸர் ஜெருசலத்தைக் கைப்பற்றி அழித்து, பைத்துல் முகத்தஸை சேதப்படுத்தி, அனைவரையும் கொன்று விட்டதால், தெளராத் வேதப் பிரதிகள் அனைத்தும் காணாமல் அல்லது அழிந்து போய்விட்டன. இஸ்ரவேலர்களில் எவரும் தங்கள் வேதத்தை மனனம் செய்யாமலிருந்து, நபி உஜைருக்கு மட்டுமே மனனமிருந்ததாலும் நூறாண்டுகளுக்குப் பின் இவர் திரும்பி வந்ததாலும், மக்களின் வேண்டுகோளுக்காக உஸைர் (அலை) அவர்கள் தமது நினைவில் இருந்த தெளராத்தை ஒப்புவிக்க மக்கள் அதனை எழுதிக் கொண்டு “இத்துணை சிறப்பு வாய்ந்த இவர்கள் அல்லாஹ்வின் மகனேயன்றி வேறில்லை” என்று கூறலாயினர். இதைக் கண்டிக்கும் வகையில் ‘உஜைர் அல்லாஹ்வின் மைந்தர் என்று யூதர்கள் கூறுகிறார்கள். மஸீஹ் (ஈஸா) அல்லாஹ்வின் மைந்தர் என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். இவை அவர்கள் தங்களுடைய நாவினால் கூறும் (உண்மைக்குப் புறம்பான) கூற்றுகளாகும்’ என அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
உஜைர் (அலை) மரணம்
இதன் பின்னர் இவர்களும், இவர்களின் தம்பி அஸீஸும் இருபதாண்டுகள் இவ்வுலகில் உயிர் வாழ்ந்து ஒரே நாளில் இறப்பெய்தினர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி தாவூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி ஸுலைமான்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி ஜகரிய்யா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....