ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்
ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூத்த சகோதரர் ஆவர். இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தைகளை வெட்ட வேண்டுமென்று ஃபிர்அவ்ன் ஆணையிடுவதற்கு முன் பிறந்தவர்கள் இவர்கள். இவர்களின் தந்தை பெயர் இம்ரான். அன்னை பெயர் யூகானிது. தூர்ஸினாய் மலையில் இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி ஃபிர் அவ்னிடம் சென்று அவனுக்குச் சன்மார்க்கத்தைப் போதிக்குமாறு கூற, தமக்கு அப்பணியில் உறுதுணையாகத் தன் தமயனார் ஹாரூனை ஏற்படுத்துமாறு வேண்ட அவ்விதமே இவர்களையும் ஒரு நபியாயும் மூஸா (அலை) அவர்களுக்கு அமைச்சராயும் இறைவன் ஆக்கினான். இவ்விருவரையும் பற்றி இறைவன் தன் திருமறையில், “அவ்விருவரும் நம்முடைய விசுவாசியான நல்லடியார்களில் உள்ளவர்” என்று கூறுகின்றான்.
திருமறையில் இறைவன்
அன்றி, மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், "மன்னுஸல்வா" என்ற உணவு போன்ற)வைகளையும் உங்களுக்கு அளித்திருக்கின்றான்" என்று கூறியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (அல்குர்ஆன் 5:20)
(மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதனைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு "நாங்களும் மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 20:70)
சன்மார்க்கப் பிரச்சாரத்தில் ஹாரூன் (அலை)
பல்லாண்டுகளுக்குப் பின் இல்லம் திரும்பிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இவர்கள் இலக்குக் கண்டு கொண்டார்கள். அடுத்த நாள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கள் தமையனாருடன் ஃபிர் அவ்னின் அரசவை சென்று அவனுக்கு நேர்வழியையும் இறைவனின் மாண்பையும் எடுத்தோதினார்கள். மூஸா (அலை) அவர்களது சன்மார்க்கப் பிரச்சாரத்திலும் அதற்காக அவர்கள் போராடிய போராட்டங்களிலும் இவர்கள் அவர்களது வலக் கரம் போன்று விளக்கினார்கள்.
பிரதிநிதியாய் ஹாரூன் (அலை)
இரண்டாவது முறையாய் மூஸா (அலை) அவர்கள் தூர்ஸினாய் மலைக்குச் சென்ற பொழுது இவர்களையே அவர்கள் தங்கள் பிரதிநிதியாய் நியமித்து விட்டுச் சென்றார்கள். அப்பொழுது தான் ஸாமிரி என்பவன் தங்கத்தால் காளைமாட்டைச் செய்து அதனைக் கடவுளாக வணங்குமாறு பனீ இஸ்ராயீல்களை வழி கெடுத்தான். இவர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் ஸாமிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகி விட்டார்கள்.
20:90 இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி "என்னுடைய மக்களே! (இச்சிலையை வணங்கி) நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலையன்று!) என்னைப் பின்பற்றுங்கள்; என்னுடைய கட்டளைக்கு கட்டுப்படுங்கள்" என்று கூறினார்.
சினத்துடன் திரும்பிய மூஸா (அலை)
பனீ இஸ்ராயீல்கள் காளைமாட்டை கடவுளாக வணங்குவதை இறைவன் மூலம் உணர்ந்து அடங்காச் சினத்துடன் திரும்பிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தங்கள் தமையனாரின் தலை முடியைப் பிடித்துத் தம்பால் இழுத்து அதன் பின் அவர்களின் தாடியைப் பிடித்து உலுக்கி, “அவர்கள் வழி தவறிச் சென்ற பொழுது நீர் ஏன் அவர்களுடன் சமர் செய்து அவர்களை அழித்தொழிக்கவில்லை?” என்று வினவினார்கள்.
தங்களுடைய இயலாமையையும் அவர்கள் தங்களைக் கொன்றொழிக்கச் சதி செய்ததையும் எடுத்துரைத்த இவர்கள் தங்களைத் தங்களுடைய எதிரிகளின் முன் இழிவுபடுத்தி அவர்களை மகிழ்ச்சியுறச் செய்ய வேண்டா என்று கூறினார்கள்.
தெளராத் வேதத்தை வைப்பதற்கு ஓர் ஆலயம்
இறை ஆணைப்படி தெளராத் வேதத்தை வைப்பதற்கு ஓர் ஆலயத்தை நிருமாணித்து அதன் நிர்வாகியாய் ஹாரூன் (அலை) அவர்களை மூஸா (அலை) அவர்கள் நியமித்தது பனீ இஸ்ராயீல்களுக்கு பொறாமையை உண்டு பண்ணியது. அவர்கள் இதனைச் செய்தது இறை ஆணைப்படி தான் என்பதற்குச் சான்று காட்டுமாறு கூற, எல்லாருடைய கைத்தடிகளையும் ஓரிரவு அப்புனித ஆலயத்தில் வைக்குமாறு பணித்தார்கள் மூஸா (அலை) அவர்கள். அவ்விதமே எல்லாரும் செய்ய அடுத்த நாள் வைகறையில் இவர்களது கைத்தடி மட்டும் கொப்பும் கிளையுமாய்ப் பசுமை பெற்று விளங்கியது. அது கண்டு “இது மூஸாவின் சூனியமேயன்றி வேறில்லை” என்று கூறினர்.
ஹாரூன் (அலை) அவர்களின் மரணம்
பனீ இஸ்ராயீல்கள் தீஹ் என்னும் வனாந்தரத்தில் இருக்கும் பொழுது இவர்கள் காலமானார்கள் எனக் கூறுவர்.
இவர்களது அடக்கவிடம் ஸினாய் பாலைவனத்திலுள்ள ஸவீக் மலை மீதுள்ளதென்றும், ஜோர்டான் நாட்டில் பெட்ரா அருகில் ஹூர் மலை (தற்பொழுது ஹாரூன் மலை என்றழைக்கப்படும்) மீதுள்ளதென்றும் கூறப்படுகிறது.
இவர்கள் மூஸா (அலை) அவர்களை விட உயரமாயும், மென்மையாயும், வெண்மையாகவும் இருந்தார்கள். ஹாரூன் என்ற ஹீப்ரு சொல்லின் பொருள் சிவப்பும் வெண்மையும் என்பதாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....