துல்கிஃப்ல் அலைஹிஸ்ஸலாம்
துல்கிஃப்ல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு நபியாவர். இவர்களைப் பற்றி இறைவன் தன் திருமறையில் 21:85, 38:48 ஆகிய இரு திருவசனங்களில் குறிப்பிடுகின்றான். இவர்கள் தம் நல்லடியார்களில் ஒருவரென்றும், தமக்கேற்பட்ட துன்பங்களைச் சகித்துக் கொண்டார் என்றும் இறைவன் கூறுகின்றான். இவர்களைப் பற்றி ஹதீதில் யாதொரு குறிப்பும் காணப் பெறவில்லை.
திருக்குர் ஆனில் இவர்களைப் பற்றி…
21:85. இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லுவையும் (நாம் நம்முடைய தூதர்களாக அனுப்பி வைத்தோம்.) இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டனர்.
21:86. ஆகவே, இவர்கள் அனைவரையும் நாம் நம்முடைய அருளில் புகுத்தினோம். ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் அனைவரும் நல்லோர்களே.
38:48. (நபியே!) இஸ்மாயீல், அல்யஸவு, துல்கிஃப்லு இவர்களையும் கவனித்துப் பாருங்கள். இவர்களனைவரும் நல்லடியார்களில் உள்ளவர்கள்தாம்.
இஸ்ரவேலர்களுக்குத் தலைமை தாங்கியது
இவர்கள் இல்யாஸ் (அலை) அவர்களின் சிறிய தந்தையின் மகன் என்றும், அவர்களுக்குப் பின் இஸ்ரவேலர்களுக்குத் தலைமை தாங்கினார் என்றும், தலைமை தாங்குவதற்கு முன் மூன்று வாக்குறுதிகளைச் செய்தனர் என்றும், பகலில் நோன்பு நோற்பதாகவும், இரவில் இறைவணக்கத்தில் ஈடுபடுவதாகவும், பாவச் செயல்களை ஒரு போதும் செய்வதில்லை என்றும் உறுதி கூறி அவ்வுறுதி காத்தார் என்றும், எனவே உறுதி காத்தவர் என்ற பொருளில் இவர்கள் “துல்கிஃப்ல்” என்று அழைக்கப்பட்டனர் என்றும் கூறுவர்.
கின்ஆன் மன்னனைத் திருத்தியது
துல்கிஃப்ல் என்ற பெயர் அய்யூப் (அலை) அவர்களின் மகன் பஷீர் என்பவரைக் குறிக்கும் என்றும், அவர்கள் கின்ஆன் என்ற மன்னவனிடம் அவன் ஒரே இறை வழிபாட்டை மேற்கொளின் அவனுக்கு சுவர்க்கம் கிடைக்கும் என உறுதிமொழி அளித்ததன் காரணமாக அவர்களுக்கு இப் பெயர் ஏற்பட்டதென்றும் வேறு சிலர் கூறுகின்றார்கள். இவர்களை அம்மன்னன் நெருப்பிலிட நெருப்பு இவர்களைத் தீண்டாததைக் கண்டு வியப்புற்று ஒரே இறை வணக்கத்தை அவன் மேற்கொண்டான் என்றும் கூறுவர்.
இரு மடங்கு நற்கூலி
கிஃப்ல் என்றால் இரு மடங்கு எனப் பொருள்படும் என்றும், இவர்கள் மற்றவர்களை விட இரு மடங்கு வணக்கங்களில் ஈடுபட்டதனால் இவர்களுக்கு இரு மடங்கு நற்கூலி இறைவனால் நல்கப்பட்டது என்றும், அதனால் இவர்களுக்கு இப்பெயர் வந்ததென்றும் வேறு சிலர் விளம்புகின்றனர்.
எழுபது நபிமார்களை வைத்து பராமரித்தல்
இச் சொல் தகஃப்பலா என்ற சொல்லிலிருந்து பிறந்ததென்றும், இதன் பொருள் பராமரித்தல் என்பதாகும் என்றும், இவர்கள் எழுபது நபிமார்களை வைத்துப் பராமரித்ததன் காரணமாக இவர்களுக்கு இப் பெயர் ஏற்பட்டதென்றும் வேறு சிலர் கூறுகிறார்கள். மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றிய கிஜ்பீல் என்பவரே துல்கிஃப்ல் (அலை) என்றும், அவர் எழுபது நபிமார்களுக்குப் பகரமாக இருந்து, அவர்கள் கொல்லப்படாது காப்பாற்றினார் என்றும் மற்றும் சிலர் சொல்கின்றனர். துல்கிஃப்ல் என்பதன் பொருள் ஒரு பகுதியைப் பெற்றவர் என்பதாகும் என்று வேறு சிலரும் கூறுகின்றனர்.
துல்கிஃப்ல் (அலை) அவர்களின் அடக்கவிடம்
துல்கிஃப்ல் (அலை) அவர்களின் அடக்கவிடமென பலஸ்தீனிலிருந்து பல்க் வரை பல இடங்கள் காட்டப்படுகின்றன. ஆனால் மெஸபடோமியாவிலுள்ள ஹிந்திய வாய்க்காலின் இடது கரையிலுள்ள காஃபீல் என்ற இடத்திலுள்ள அடக்கவிடமே துல்கிஃப்ல் (அலை) அவர்களின் அடக்கவிடம் என்றும் கூறப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...