யஃகூப் அலைஹிஸ்ஸலாம்
யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் இளைய மகனாவார். இவர்களை இஸ்ராயீல் என்றும் சொல்வதுண்டு. இவர்களுக்கு பனிரெண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்த சந்ததியினரை தான் பனீ இஸ்ராயீல் என்றழைக்கப் படுகின்றனர். பெரும்பாலான நபிமார்களை இவர்களிலிருந்தே தோன்றச் செய்தான் இறைவன். குர் ஆன் ஷரீபில் சூரே யூசுஃபில் யஃகூப் நபியவர்களைப் பற்றி சில குறிப்புகள் காணப் படுகின்றன. அவைகள் தன் பேசியதையே குறிக்கின்றன. இதர இடங்களில், மற்ற நபி மார்களின் வரிசையில் இவர்கள் பெயரும் சேர்த்துச் சொல்லப்படுகிறது.
ஆரம்ப கால வாழ்வு
இவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் நன்மகனாவார். இவர்களின் அன்னை பெயர் ருபாக்கா. இவர்களும், ஈஸுவும் ஓரே சூலில் பிறந்தவர்களென்றும், ஈஸ் இவர்களை முந்திக் கொண்டு முதலில் பிறக்க விரும்பினார் என்றும், இதனால் இருவருக்கும் பிணக்கு ஏற்பட்டதென்றும் இவர்கள் ஈஸுவின் காலில் கொழுவிய வண்ணம் பிறந்ததனால் குதிகாலோடு கொழுவி வந்தவர் என்று பொருள்படும் யஃகூப் எனப் பெயரிடப் பட்டார் என்றும் கூறுவர்.
இஸ்ஹாக் (அலை) அவர்களின் பிரார்த்தனை
இஸ்ஹாக் (அலை) அவர்களின் மனைவி யஃகூப் மீது அதிக அன்பு செலுத்தினார். இஸ்ஹாக் (அலை) அவர்கள் தங்கள் முதல் மகன் ஈஸுவின் மீது அதிக அன்பு செலுத்தினார்கள். அவருடைய வழித்தோன்றல்களாய் நபிமார்கள் பிறக்க இறைஞ்சுவதாகவும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒர் ஆடறுத்துச் சமைத்துத் தம் முன் கொண்டு வருமாறும் அதனை உண்டு விட்டு அவருக்காக இறைஞ்சுவதாகவும் கூறினார்கள். இதனையறிந்த அன்னை தம் அன்பு மகன் யஃகூபிடம் ஆடறுத்துச் சமைத்துத் தம் தந்தையின் முன் வைக்குமாறு ஆலோசனை கூறினர். அவ்விதமே இவர்கள் செய்தார்கள். கண்பார்வையற்ற இஸ்ஹாக் (அலை), இவர்களை ஈஸு வென எண்ணிக் கொண்டு இவர்கள் வழியில் நபிமார்களை உண்டு பண்ண இறைஞ்சினார்.
“இஸ்ராயீல்” பெயர் வரக் காரணம்
வெளியிலிருந்து வந்த ஈஸ் நடந்தவற்றை விளங்கியதும் இவர்கள் மீது அடங்காச் சினம் கொண்டார். இஸ்ஹாக் (அலை) அவர்கள் இறந்த பின் இரு சகோதரர்களிடையேயும் பகைமை அதிகரித்தது. இவர்களைக் கொல்ல அவர் சதி சூழ்ந்தார். அதை அறிந்து இவர்கள் இரவோடு இரவாய்த் தங்கள் மாமன் வீட்டிற்கு ஓடினார்கள். எனவே இவர்களுக்கு ‘இரவில் சென்றவர்’ என்று பொருள் படும் “இஸ்ராயீல்” என்னும் பெயர் ஏற்பட்டது. இவர்களின் வழித்தோன்றல்கள் பனீ இஸ்ராயீல் என்று வழங்கப் பெற்றார்கள்.
குடும்பம்
தொடக்கத்தில் இவர்கள் தங்கள் மாமன் மகள் லியாவை மணமுடித்து எட்டு ஆண் மக்களை ஈன்றெடுத்தார்கள். பின்னர் லியா இறந்ததும் அவரது சகோதரி ராஹிலாவை மணமுடித்து யூசுஃப் (அலை) அவர்களையும், புன்யாமீனையும் பெற்றெடுத்தார்கள். இவர்கள் தங்கள் இளைய மகன் யூசுஃப் (அலை) அவர்களிடம் கொண்டிருந்த அளப்பெரும் அன்பு மற்ற சகோதரர்களை அவர்கள் மீது பொறாமை கொள்ளச் செய்தது. பதினொரு விண்மீன்கள் தம் பாதம் பணியத் தாம் கனவு கண்டதாய் யூசுஃப் (அலை) அவர்கள் கூறியதை அறிந்ததும் அவர்களின் பொறாமை, பகைமையாய் மாறியது. எனவே, அவர்கள் யூசுப் (அலை) அவர்களைக் கானகம் அழைத்துச் சென்று கொல்லத் திட்டமிட்டார்கள்.
யூசுஃப் (அலை) அவர்களை கிணற்றில் தள்ளியது
விளையாட யூசுஃபைக் கானகம் அழைத்துச் செல்வதாய்த் தந்தையாரிடம் தந்திரமாக வற்புறுத்தினார்கள். ஆனால் அவர்களுடன் அனுப்பி வைக்க யஃகூப் (அலை) அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை ஆகையால், மைந்தர்களை பார்த்து, “ஓநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால் யூசுஃபின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து விளையக் கூடுமென அஞ்சுகிறேன்.” என்றார்கள். ஆயினும் அவர்கள், யூசுஃபுக்கு எத்தகைய ஆபத்தும் நேரிடாமல் தாங்கள் பாதுகாத்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்ற அவரது சகோதரர்கள், யூசுஃப் (அலை) அவர்களைப் பாழுங்கிணற்றிலே தள்ளிவிட்டு வந்து, தங்கள் தந்தை யாகூப் (அலை) அவர்கள் முன்னிலையில் நீலிக் கண்ணீர் வடித்த வண்ணம், “யூசுஃபை ஓநாய் கிழித்துத் தின்று விட்டது” என்று கூறி, அதற்கு அடையாளமாக யூசுஃபின் சட்டையொன்றில் போலி இரத்தக்கரையைப் படியச் செய்து காண்பித்தார்கள்.
நிலைமைகளை மனத்துயரோடு கேட்டுக் கொண்டிருந்த யஃகூப் (அலை) அவர்கள், இதில் ஏதோ மோசடி இருக்கிறது எனக் கருதியதோடு “எல்லாம் ஆண்டவன் நன்கறிவான்: நான் அவனையே நம்பியிருக்கிறேன்” என்று பதிலளித்தார்கள். எனினும் இவர்களின் கண்களிலிருந்து நீர் ஆறென ஓடியது. அதன் காரணமாய் இவர்களின் கண்ணொளி மங்கியது.
எகிப்தின் மந்திரியாய் சந்திப்பு
இதன் பின் இவர்கள் தங்கள் அருமை மகன் யூசுஃபை என்பது ஆண்டுகளுக்குப் பின்போ, இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின்போ, எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்போ எகிப்தின் அஸீஸா(மந்திரியா)ய்ச் சந்தித்தார்கள். அப்பொழுது யூசுஃப் (அலை) தம் தந்தையை நோக்கி, “நம் இருவரையும் இறைவன் மறுமையில் ஒன்று சேர்ப்பான் என்பதை அறிந்திருந்தும் தாங்கள் ஏன் எனக்காக அழுது அழுது கண்ணொளி மங்கப் பெற்றீர்கள்?” என்று வினவிய பொழுது, “நம் அனைவரையும் இறைவன் மறுமையில் ஒன்று சேர்ப்பான் என்பதை அறிந்தே இருந்தேன். எனினும், நீர் இப்ராஹீமின் மார்க்கத்தை விட்டு விலகிச் சென்று விடுவீரோ? அதன் காரணமாக நம் இருவரிடையே எவ்விதத் தொடர்பும் கொள்ள இயலாது போய் விடுமோ என்று அஞ்சினேன்” என்று கூறினர்.
சிறு குடில் போதும்
பின்னர் யூசுஃப் (அலை) அவர்கள், இவர்களைத் தங்களுடன் தங்கள் மாளிகையிலேயே வாழ வேண்டுமென்று வேண்ட, யஃகூப் (அலை) அவர்கள், “எனக்கு இந்த ஆடம்பர அலங்காரங்களெல்லாம் வேண்டாம். கன்ஆனில் நான் வாழ்ந்தது போன்று ஒரு சிறு குடில் அமைத்துத் தாருங்கள்! அது போதும்” என்றார்கள். அவ்விதமே சிறு குடில் அமைக்கப் பட்டு அதிலே இவர்கள் ஏறத்தாழ பதினேழு ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
யஃகூப் (அலை) சந்ததிகள் கொடுத்த உறுதிமொழி
(யூதர்களே!) யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி "எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு "உங்களுடைய இறைவனும், உங்களுடைய மூதாதைகளான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்" என்றே கூறினார்கள். (அல்குர்ஆன் : 2:133)
உயிர் நீத்தல்
அதன் பின் இவர்கள் தங்கள் அருமை மகன் யூசுஃப் (அலை) அவர்களைத் தம் பிரதிநிதியாய் இவ்வுலகில் நியமித்துவிட்டு உயிர் நீத்தார்கள். அப்பொழுது இவர்களுக்கு வயது 147. இவர்களது விருப்பப்படி இவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய பைத்துல் முகத்தஸ் எடுத்துச் சென்றார்கள் யூசுஃப் (அலை) அவர்கள். அப்பொழுது ஈஸுவும் இறப்பெய்தி நல்லடக்கம் செய்யப்பட அங்குக் கொணரப் பட்டார். ஏறத்தாழ ஒரே பொழுதில் உலகில் தோன்றிய இரு சகோதரர்களும் ஒரே பொழுதில் மண்ணறையில் வைக்கப் பெற்று மண்ணால் மூடப்பட்டார்கள்.
திருக்குர் ஆனில்
(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம். (19:49.)
மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம். (19:50.)
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம். (21:72.)
இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர். (21:73.)
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...