Home


இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம்

        நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றிய மக்கள் நாளடைவில், பல தெய்வ வணக்கத்தில் மூழ்கி வந்தனர். இவர்களை மீண்டும் நேர்வழிப் படுத்த - மூஸாவின் மார்க்கத்தை நிலை நிறுத்தும் நோக்கத்தோடு இல்யாஸ் (அலை) அவர்களுக்கு இறைவன் நபித்துவமளித்தான். ஹாரூன் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இவர்களைப் பற்றி இறைவன் திருக்குர் ஆனில் இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றான். இவர்கள் ஸமாரிய நாட்டு மன்னர்களான அஹப், அஸாரியா ஆகியவர்களின் காலத்தில்  (கி.மு.896-874) வாழ்ந்தனர்.

திருக்குர் ஆனில் இவர்களைப் பற்றி...

        ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள் (6:85)

        சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ் மீது! (37:130)

ஒரிறை வணக்கப் பிரச்சாரம்

        ஸமாரிய நாட்டு அஹப் என்ற அரசன் ‘பஅலு’ என்னும் 70 அடியுள்ள பெண் சிலையைச் செய்து அதனையே தெய்வமென வணங்கி வந்தான். இல்யாஸ் (அலை) அவர்கள் அவனிடம் சென்று  உருவமற்ற ஒரிறை வணக்கத்தை எடுத்துரைக்க அவனும், அவனுடைய அவையினரும் அதனை ஏற்று இஸ்லாத்தைத் தழுவினர்.

ஏழு மன்னர்களை மணந்து அவர்களைக் கொன்றவள்

        ஸமாரிய நாட்டு மன்னன் அஹப்புடைய மனைவி ‘ஜேஸபல்’ என்பவளோ ஏழு மன்னர்களை மணந்து அவர்களைக் கொன்றவள். அவள் இல்யாஸ் (அலை) அவர்களுக்கு மன்னனின் மனதில் இடம் கிடைத்து விட்டதை அறிந்து அழுக்காறு கொண்டாள்.

        தம்முடைய பல கணவர்கள் மூலம் பெற்ற எழுபது ஆண் மக்களைக் கொண்டு அவள் அரசனை ஆட்டிப் படைத்தாள். ஒரு முறை அரசன் பயணம் சென்றிருந்த பொழுது இவள் “முஜுதகி” என்னும் நல்லாரைக் கொன்று  அவரின் பூங்கா ஒன்றையும் அபகரித்தாள். நாடு திரும்பிய அரசன் அது கண்டு வெகுண்ட பொழுது அதனைத் தந்திரத்தால் தான் செய்தது சரிதான் என்று ஏற்கச் செய்தாள்.

இறை செய்தி வந்தது

        இப்பொழுது இறைவன்  இல்யாஸ் (அலை) அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். அரசன் பாவமன்னிப்பு கோரி ‘முஜுதகி’யின் வாரிசுகளிடம் அந்த பூங்காவை ஒப்படைக்காவிடில் அரசனையும் அவன் மனைவியையும் அப்பூங்காவில் இறக்கச் செய்து அவர்களின் உடலங்களைப் பிய்த்தெறியச் செய்வதாகக் கூறும் படி ஆணையிட்டான்.

        அவ்வாறே இல்யாஸ் (அலை) அவர்கள் கூறிய பொழுது அரசன் தன் மனைவியுடன் சேர்ந்து கொண்டு அவர்களுடன் வாதிடவும் அவர்களைக் கொல்லவும் திட்டமிட்டான். இல்யாஸ் (அலை) அவர்கள் மலை மீதிருந்த குகை ஒன்றில் அடைக்கலம் புகுந்தனர்.

மீண்டும் பஅலு என்னும் 70 அடி பெண் சிலை

        இதன் பின்னர் அரசன் மீண்டும் உருவத் தொழும்பனானான். மீண்டும் ‘பஅலு’ என்னும் 70 அடியுள்ள பெண் சிலையைச் செய்து, கோயில் எழுப்பி அக்கோயிலை நிர்வகிக்க நானூறு பேர்களையும் நியமித்தான்.  இச் சமயம் அரசனின் மகன் கடுமையான நோய் வாய்ப்பட, அரசன் தன் தெய்வத்திடம் எவ்வளவோ வேண்டியும் பயன் படாமல் போய் விட்டது. எனவே சிரியாவிலிருந்த பெரும் தெய்வங்களிடம் வேண்ட அந்த நானூறு பேர்களையும் அவன் அனுப்பி வைத்தான்.

இல்யாஸ் (அலை) அவர்களின் அறவுரை

சிரியா புறப்பட்ட அந்த நானூறு பேர்களை இறையாணைப்படி  இல்யாஸ் (அலை) அவர்கள் சந்தித்து அறவுரை பகர்ந்தனர். உடனே சிரியா செல்லாது அரசனிடம் மீண்டு ‘பஅலுவை’ வணங்கியதால் அல்லாஹ்வின் சினம் ஏற்பட்டு அவன் மகன் கடும் நோய் வாய்ப்பட்டான் என்றும் அவன் விரைவில் இறப்பான் என்றும் இல்யாஸ் (அலை) அவர்கள் கூறிய செய்தியை அவர்கள் நவின்றனர். அது கேட்டு வெகுண்ட அரசன் இல்யாஸ் (அலை) அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து கொல்ல முயன்றான்.

அரசனின் மகன் மரணம்

        ஆனால் இல்யாஸ் (அலை) அவர்கள் தலைநகர் வந்த பொழுது அரசனின் மகன் இறக்க, இல்யாஸ் (அலை) அவர்கள் சற்று நேரம் அங்குத் தங்கி விட்டுத் தம் குகைக்குத் திரும்பி விட்டனர். இல்யாஸ் (அலை) அவர்கள், வழி தவறிய அந்த மக்களிடையே எவ்வளவோ பிரச்சாரம் மூலம் போதித்தும் மக்கள் திருந்தாத பொழுது, இவர்கள் மூன்றாண்டுகள் மழை பெய்யாது தடுத்தனர். நாடு வரண்டது. பிறகு இறைவனிடம் இறைஞ்சி மழை பொழியச் செய்தனர்.

இல்யாஸ் (அலை) அவர்களை கொல்ல முயற்சி

        இல்யாஸ் (அலை) அவர்கள் மலைப் பகுதியில் குகைக்குள் சென்று விட்ட பிறகும் அவரைக் கொலை செய்து விட எண்ணிய அரசன் மூர்க்கத்தனமான பயங்கர ஆட்கள் பலரை அனுப்பி வைத்தான். ஆனால் இல்யாஸ் (அலை) அவர்களை, கொலைகாரர்களிடம் இருந்து  இறைவன் பாதுகாத்தான். எனினும் மக்கள் நன்றி கொன்று  உருவத் தொழும்பில் உழல்வதைக் கண்டு வருந்திய இவர்கள் இறைவனிடம் இறைஞ்சினர். ஒளிப் பிழம்பனைய ஒரு புரவி வந்தது. அதில் ஏறி, தம் மேல் துணியைத் தம் மாணவர் அல் யஸஃவின் தோள்களில் வீசித் தம் பிரதிநிதியாக அவர்களை ஆக்கி விட்டு இவர்கள் மறைந்தனர்.

 இறைவனின் சினம் அம்மக்கள் மீது இறங்கியது

        இதன் பின் இறைவனின் சினம் அம்மக்கள் மீது இறங்கியது. பகையரசன் படையெடுத்து வந்து ஸமாரிய நாட்டு மன்னன் அஹபையும் அவனுடைய மனைவி ஜேஸபலையும் கொன்று அவர்களின் வெற்றுடல்களை ‘முஜுதகி’யின் தோட்டத்தில் தூக்கி எறிந்தான்.

இப்பொழுதும் உலகில் உயிரோடு

        இப்பொழுதும் உலகில் இரண்டு நபிமார்கள் உயிரோடு இருக்கின்றனரென்றும்  அவர்களில் இல்யாஸ் (அலை) அவர்கள் காடுகளிலும், கிள்ரு (அலை) அவர்கள் கடலிலும் வாழ்கின்றார்கள் என்றும் கூறப்படுகிறது. தபூக் படையெடுப்பின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்களை இல்யாஸ் (அலை) அவர்கள் சந்தித்ததாக “கஸாயிஸுல் ஸுக்ரா” என்னும் நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musa Nabi

நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....