Home


ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்

        ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி சுலைமான் (அலை) அவர்களின் (சந்ததியாவார்) வழி வந்தவர்கள். தந்தையின் பெயர் ஆஜர் என்பது. இறை தூதராகிய இவர்கள் பிழைப்பின் பொருட்டு தச்சு வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். நபி ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம்(அலை) அவர்கள் ஜகரிய்யா (அலை) அவர்களின் பராமரிப்பில் தான் வளர்ந்து வந்தார்கள். நபி சுலைமான் (அலை) அவர்களின் சந்ததியிலிருந்தே மர்யம் (அலை) அவர்களும் பிறந்தவராவார்.

 தள்ளாத வயதில் இறைவன் அருளிய குழந்தை

மர்யம் (அலை) அவர்களின் தாயார் பெயர் ஹன்னா. ஹன்னாவின் சகோதரி ஈஷாஉ அவர்களை நபி ஜகரிய்யா (அலை) அவர்கள் மண முடித்திருந்தார்கள். ஜகரிய்யா (அலை) அவர்களின் மனைவியார் மர்யம் (அலை) அவர்களுக்கு சிறிய தாயாராகும்.

ஜகரிய்யா (அலை) அவர்களுக்கு 99 வயதும், இவர்களின் மனைவி ஈஷாஉவுக்கு 98 வயதும்  ஆனபொழுதும்  சந்ததியின்றி வருந்திய நிலையில் தனக்கு நல்லதொரு  சந்ததியைத் தந்தருளுமாறு இறைவனை இறைஞ்சினார். வேண்டுகோளை அங்கீகரித்த இறைவன். தள்ளாத வயதிலும் யஹ்யா(அலை) அவர்கள் பிறக்கப் போவதைப் பற்றி இறைவன் நன்மாராயம் மொழிந்த பொழுது இவர்கள் அது பற்றித் தம் ஐயத்தைத் தெரிவித்தார்கள். அது கேட்டு இறைவன், “இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாதிருந்த பொழுது நான் உம்மைப் படைக்கவில்லையா?” என்று கேட்டான். இவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.

இது பற்றி திருமறையில்…

        19:2. (நபியே!) உங்களது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருள் (இங்கு) கூறப்படுகிறது.

19:3. அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் அழைத்து,

19:4. "என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்துவிட்டது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கின்றாய்.)

19:5. நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளனைப் பற்றிப் பயப்படுகிறேன். என்னுடைய மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கு பாதுகாவலனை ( ஒரு பிள்ளையை) வழங்குவாயாக!

19:6. அவன் எனக்கும், யஃகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக்கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை" என்று பிரார்த்தித்தார்.

19:7. (அதற்கு இறைவன் அவரை நோக்கி) "ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் "யஹ்யா" என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உங்களுக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்.)

19:8. அதற்கவர் "என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என்னுடைய மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்துவிட்டேன்" என்று கூறினார்.

19:9. அதற்கவன் "(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அவ்வாறு செய்வது எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீங்கள் ஒன்றுமில்லாமலிருந்த சமயத்தில் நானே உங்களை படைத்தேன் என்று உங்களது இறைவனே கூறுகிறான்" என்றும் கூறினான்.

19:10. அதற்கவர் "என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி" என்று கேட்டார். (அதற்கு இறைவன்) "உங்களுக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது: நீங்கள் (சுகவாசியாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்" என்று கூறினான்.

19:11. பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடையாகக் காண்பித்தார்.

19:12. (நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) "யஹ்யாவே! நீங்கள் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.

19:13. அன்றி, இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறை அச்சமுடையவராகவே இருந்தார்.

19:14. அன்றி, தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். அவர்களுக்கு மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை.

யஹ்யா (அலை) அவர்கள் ஷஹீத்

        யஹ்யா (அலை) அவர்களை யூதர்களின் அதிபதியான ஹர்தோஸ் என்பவன், மார்க்கத்திற்கு முரணான காரியத்தை சுட்டிகாட்டியதற்காக ஷஹீதாக்கினான். அப்போது யஹ்யா (அலை) அவர்களின் வயது 30. யஹ்யா (அலை) அவர்களைக் கொன்ற பின் அரசனின் சினப்பார்வை ஜகரிய்யா (அலை) அவர்கள் மீது பாய்ந்தது.

மரம் பிளந்து மூடிக் கொண்டது

        அரசாங்க ஊழியர்கள் ஜகரிய்யா (அலை) அவர்களை விரட்டி வரும் பொழுது வழியில் ஒரு மரம் நிற்பதைக் கண்டு, “ மரமே! என்னைக் காப்பாற்று” என்று இவர்கள் கூற மரம் பிளந்தது என்றும் அதில் இவர்கள் நுழைந்ததும் அது மூடிக் கொண்டது என்றும், எனினும் இப்லீஸ் இவர்களின் துணியின் ஒரு நுனியைப் பிடித்திழுத்து வெளியிலிருக்குமாறு செய்து இவர்களைக் காட்டிக் கொடுத்தான் எனவும், அரசாங்க ஊழியர்கள் அம்மரத்தை ரம்பத்தால் அறுக்க, ரம்பம் இவர்களின் தலையைத் தாக்கவே இவர்கள் முனகினார்கள் எனவும், அப்பொழுது இறைவன், “ஜகரிய்யாவே! நீர் முனகின் உம்முடைய நபித்துவம் பறிபோய் விடும்” என்று சொன்னான் எனவும் கூறுவர்.

        இவர்கள் மரத்தை நோக்கித் தம்மைக் காப்பாற்றுமாறு கூறியதால் மரம் தன்னால் இயன்ற அளவு இவர்களை காப்பாற்றியது என்றும், இறைகாவலை இவர்கள் வேண்டி இருப்பின் நிச்சயமாக இவர்களின் உடல் காப்பாற்றப் பட்டிருக்கும் என்றும் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

இவர்களின் அடக்கவிடம்

        இவர்களின் அடக்கவிடம் சிரியாவிலுள்ள ஹலப் நகரில் “ஜாமிஆ ஜிக்கி” என்ற பள்ளி வாயிலுள்ள மேடை (மிம்பர்)க்கு அண்மையில் இருக்கிறது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Esha Nabi

நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Nuh Nabi

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Ibrahim Nabi

நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ismayil Nabi

நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musa Nabi

நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Dawood Nabi

நபி தாவூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....

Sulayman Nabi

நபி ஸுலைமான்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....