Home


அய்யூப் அலைஹிஸ்ஸலாம்

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குர் ஆனில் கூறப்பட்டிருக்கும் நபிமார்களில் ஒருவர். இறைவனின் நாட்டப்படி  செல்வந்தராக 80 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் செல்வம் அனைத்தும் இழந்து உடல் முழுவதும் கொடிய புண்கள் ஏற்பட்டு  புழுக்கள் நெளிந்தன. அப்பொழுதும் அவர் இறைவனை தொழுவதையும், துதி (திக்ரு) செய்வதையும் தொடர்ந்து செய்து வந்தார்கள். நோய் பரவி இதயம், மற்றும் நாவை பாதிப்படைய தொடங்கும் பொழுது இறைவனை துதி செய்ய நாவு வேண்டும் என இறைவனிடம் துஆ செய்ய, இறைவன் இவர்களுக்கு பூரண குணத்தை நல்கினான்.

நோய் நொம்பலங்களைக் காட்டிக் கடமையான இறை வணக்கங்களை நிகழ்த்தாதவனுக்கு, மறுமையில் இறைவன் இவர்களையே காட்டி “இவரை விடவா நீ பிணியாளனாய் இருந்தாய்?” என்று கேட்பான் என்றும் சொல்லப் படுகிறது.

திருமறையில் இவர்களை பற்றி

        இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்த போது, (21:83.)

        நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது. (21:84.)

அய்யூப் நபி அவர்களின் வமிசமும், குடும்பமும்

        இவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் முதல் மகன் ஈஸுவுடைய வழியில் வந்தவர்கள் என்றும், இவரின் தந்தை பெயர் ஆமூஸ் என்றும், இவர்களின் அன்னை லூத் (அலை) அவர்களின் வழி வந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவர்களின் தந்தை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை சேர்ந்தவர் என்று தவரீ கூறுகிறார். இவர்களின் மனைவி யூஸுஃப் (அலை) அவர்களின் புதல்வர் அப்ராயீமின் மகள் என்பது பெரும்பாலோரின் கருத்து. மனைவி பெயர் ரஹ்மா.

        அய்யூப் (அலை) அவர்கள் உயரமாகவும் கருநிறக் கண்களும் சுருள் முடியும் பெற்றிருந்தனரென்றும், இவர்களின் தலை பெரிதாயும் கழுத்து குட்டையாகவும் கை கால்கள் நீண்டவையாகவுமாக இருந்தன என்றும் இவர்கள் பழுப்பு நிறமுள்ளவராக இருந்தனரென்றும் கூறுவர்.

இவர்களது செல்வ செழிப்பும், குண நலன்களும்

        அய்யூப் (அலை) அவர்கள் வாழ்ந்த நாடு ஹெளரான் என்றும் பதானியா என்றும் சிரியாவிலுள்ள மித்னா என்றும் பல்வேறு விதமாக கூறப்படுகிறது.  இவர்கள் செல்வந்தராயிருந்தனர். இவர்களிடம் ஆயிரம் பெண் குதிரைகளும், ஆயிரம் ஆண் குதிரைகளும், இரண்டாயிரம் கோவேறு கழுதைகளும், எழுநூறு ஒட்டகங்களும், ஆயிரம் காளைகளும், ஆயிரம் பசுக்களும், ஏழாயிரம் ஆடுகளும், ஐநூறு அடிமைகளும் முதலான செல்வங்களை இறைவன் அருளியிருந்தான். எனினும் அவர் சிறிதும் கர்வம் கொண்டவராயில்லாமல், மிக எளிமையான வாழ்க்கையே நடத்தி வந்தார். இறைவனைத் தொழுது, இல்லார்க்கு ஈந்து, ஈகை நிறைந்தவராக வாழ்ந்து வந்தார். மக்களுக்கு இறையின் மார்க்கத்தை உணர்த்தி வந்தார்கள். இவர்களுக்கு ஏழு குமாரர்களும், ஏழு குமாரிகளும் பிறந்தார்கள்.

நல்லடியார்களை எல்லாம் வழிகேட்டில் ஆக்கியதாக இப்லீஸ் பெருமிதம்

        அய்யூப் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் நல்லடியாராக வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இப்லீஸ் இறைவனிடம் தான் இறைவனின் நல்லடியார்களை யெல்லாம் வழிகேட்டில் ஆக்கி விட்டதாய்க் கூற இறைவன் தன் அடியாராகிய இவர்களை உன்னால் அவ்விதம் ஆக்க இயலுமோ எனக் கேட்க, முடியும் என இப்லீஸ் கூறி, அதற்கு இவர்களின்  உடைமையில் ஆதிக்கம் கோரினான் அவன். இறைவன் அவ்வாறே அளிக்க, இப்லீஸ், இவர்களின் உடைமைகள் அனைத்தையும் ஒழித்தான். ஆனால் அதற்கு இவர்கள் அணுவளவும் பொறுமை இழக்கவில்லை.

சோதனை மேல் சோதனைகள்

பிறகு  இப்லீஸ் இறைவனிடம்  இவர்களின் மக்கள் மீது ஆதிக்கம் கோர இறைவனும் அவ்வாறே அளித்தான். இப்லீஸ் இவர்களின் மக்களை மரிக்கச் செய்ய அப்பொழுதும் இவர்கள் பொறுமை இழக்கவில்லை. அடுத்து இவர்களின் உடலின் மீது ஆதிக்கம் கேட்டுப் பெற்று உடல் முழுவதும் கொடிய புண் ஏற்படச் செய்தான். அவற்றில் எண்ணற்ற புழுக்கள் நெளிந்தன. அவை கீழே விழுந்தோறும் அவற்றை எடுத்துத் தம் உடலிலே விட்டுக் கொள்வார்கள் இவர்கள். அரிப்போ இவர்களைக் கொன்று கொண்டிருந்தது.    

இறைவனிடம் இறைஞ்சக் கூடாதா?

        இவர்கள் படும் அவதியைக் காணச் சகியாது “இத் துன்பங்களிலிருந்து மீட்சி நல்குமாறு இறைவனிடம் இறைஞ்சக் கூடாதா? “ என்று இவர்களின் மனைவி ரஹ்மா அவர்கள் கேட்ட பொழுது “நலமாகவும் வளமாகவும் நாம் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தோம், அதே போன்று எண்பது ஆண்டுகள் நாம் சோதிக்கப் படாமல் இருக்குமாறும் இதனை இத்துணை விரைவில் நீக்குமாறும் இறைவனிடம் இறைஞ்ச நான் நாணமுறுகிறேன்.” என்று கூறி விட்டார்கள் இவர்கள்.

மக்கள் அவதூறு பேசத் துவக்கம்

        இவர்களின் புண்ணிலிருந்து வடிந்த நீர் இவர்கள் இருந்த பள்ளியறையை அசுத்தப்படுத்தவே இவர்கள் ஒதுக்குப் புறமாக  ஓரிடத்தில் போய்த் தங்கினார்கள். “அய்யூபின் மீது அவரின் இறைவன் சினமுற்று விட்டான். அவரின் வணக்கங்களெல்லாம் வெளிப் பகட்டிற்காகச் செய்யப் பட்டவை” என்று மக்கள் பேசத் துவங்கி விட்டனர்.

கூலி வேலை செய்து கணவரை காத்த மனைவி

        அய்யூப் (அலை) அவர்களின் உடலெல்லாம் அழுகி, புழுக்கள் பெருகி, நாற்றமெடுத்த நிலையிருந்த போதும் அவர் மனைவி ரஹ்மா அவர்கள் சிறிது கூட அருவெறுப்போ, மனத்தாங்கலோ கொள்ளாமல் அன்பு கணவருக்குப் பணி விடை செய்வதில் பெருமை பெற்று விளங்கினார்.

        வறுமை வாட்ட இவர்கள் மனைவியார் கூலி வேலை செய்து தமக்கும் தம் கணவருக்கும் உணவுப் பொருள்கள் வாங்கச் சென்ற பொழுது வழியில் இப்லீஸ் ஒரு வயோதிகச் செல்வனின் உருவில் வந்து அவர்கள் தம்மை மணமுடித்துக் கொண்டால் இன்ப வாழ்வு வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறினான். அதற்கு அவர்கள் இணங்கவில்லை.

ஊரை விட்டு வெளியேற்ற முயற்சி

        இவர்களின் புண்ணிலிருந்து நாற்றம் கிளம்பவே ஊர் மக்கள் இவர்களை வெளியேற்ற முயன்றார்கள். பிறகு நாய்களை ஏவி விட்டு இவர்களைக் கொல்ல நினைத்தார்கள். ஆனால் அதுவும் வெற்றி பெறவில்லை. எனினும் ஊர் மக்கள் வெறுக்கும் பொழுது அங்கிருக்க விரும்பாத இவர்களை மற்றோர் இடத்திற்கு நன்மனம் கொண்ட நால்வர் தூக்கிச் சென்றனர்.

இப்லீஸின் வேலை

        ஒரு நாள் இப்லீஸ், ரஹ்மா அவர்களைச் சந்தித்து தாம் ஒரு மருத்துவர் என்றும் அவரின் கணவர் பன்றிக் கறியும், மதுவும் அருந்தினால் நோய் நீங்கப் பெறலாம் என்றும் கூறினான். இதனை ரஹ்மா, அய்யூப் (அலை) அவர்களிடம் கூற இவர்கள் அதனை அடியோடு மறுத்து விட்டனர். பின்னர் அவன் ரஹ்மா அவர்களிடம் அவர்களின் கூந்தலை விலைக்குக் கேட்டு வெட்டிப் பெற்று, இவர்களிடம் சென்று இவர்களின் மனைவி வழுக்கி விழுந்து விட்டாள் என்று கூறினான்.

        சற்று நேரம் கழித்து ரஹ்மா அவர்கள் வந்து உண்மையைக் கூற அது இப்லீஸின் வேலை என்பதை இவர்கள் விளங்கிக் கொண்டனர்.

இறைவனிடம் பிரார்த்தனை

        இப்பொழுது இவர்களின் நோய் நாவிலும் இதயத்திலும் பரவவே, இனித் தம்மால் இறைவனை  எண்ணவும் துதிக்கவும் இயலாமற் போகுமே என்று இவர்கள் பெரிதும் வருந்தினர். இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்த போது, அவருடைய பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டான்.

உடல் நோய் நீங்கி பொன் மேனி பெற்றது

        இறைவனின் சோதனையில் பொறுமை மிகக் கொண்டு தேறிய அய்யூபின் மீது  இறைவனின் கருணை பாய்ந்தது. ஒரு வெள்ளிக் கிழமை ஜீப்ரில் (அலை) அவர்கள் வந்து இவர்களை எழுந்து நின்று காலை மண்ணில் அடிக்குமாறு கூறினர். அவ்விதமே இவர்கள் செய்ய ஒரு நீருற்றுப் பொங்கியது. இவர்கள் அதில் குளித்து அதன் நீரை அருந்த இவர்களின் உடல் நோய் நீங்கிப் பொன் மேனி பெற்றார்கள். அதன் பிறகு இவர்களின் வாழ்வு மீண்டும் வளம் பெற்றது. இழந்த பொருட்கள் எல்லாம் மீண்டும் கிடைக்கப் பெற்றன.

இறுதி கால வாழ்வு

        ஒரே இறை வணக்கத்தை இவர்கள் தம் மக்களுக்குப் போதித்தனர். ரூம் நாடு சென்று அங்கும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர். தம் மகன் ஹுமைலை உலகில் தம் பிரதிநிதியாக நியமித்து விட்டு இவர்கள் காலமாயினர்.

        இவர்களின் அடக்கவிடம் திமிஷ்கின் அண்மையில் உள்ள நாவா என்ற இடத்தில் இருக்கிறது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...