Home


ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்

        ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் வழி வந்த மிக்கீல் என்பவரின் திருமகனாவார்கள். துவக்கத்தில் இவர்களது பெயர் பீர் என்பதாய் இருந்தது. இவர்கள் நபியாவார்கள் என்று மிக்கீலுக்கு இறைவன் கனவில் அசரீரியாய் அறிவித்தான். அதிலிருந்து தந்தை, இவர்களை ஷுஐப் (கிளை) என்று அழைக்கலானார். தொடக்கத்தில் வாணிபம் செய்து வந்த இவர்கள் தங்களுடைய பெரும் பாலான நேரத்தை வணக்கத்தில் செலவழித்தார்கள்.

அளவையிலும், நிறுவையிலும் மோசம் செய்த மக்கள்

        மத்யன் என்ற ஊருக்கு நபியாக இவர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று சிலரும், மத்யனுக்கும் ஜக்காவுக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள் என்று வேறு சிலரும் கூறுகின்றனர். இந்த மத்யனில் வாழ்ந்த மக்களையே இறைவன் அஸ்ஹாபுல் ஜக்கா என்று குறிப்பிடுகின்றான் என்றும் அதன் பொருள் தோப்பூரார் என்பதாகும் என்றும் கூறப்படுகின்றது. அளவையிலும், நிறுவையிலும் மோசம் செய்து வந்த அம்மக்களிடம் நேர்மையோடு வாணிபம் செய்யுமாறு இவர்கள் முதலில் போதித்தார்கள். “இது எங்களின் பாரம்பரிய வணிக முறை, இதில் நீர் தலையிடாதீர்!’ என்று அவர்கள் வெகுண்டுரைத்தார்கள்.

‘கத்தீபுல் அன்பியா’ (நபிமார்களுள் நாவலர்)

        பின்னர் இவர்கள் தமக்கு நபிப் பட்டம் வந்ததும் ஒரே இறைவழிபாட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். சிறந்த நாவன்மை பெற்றிருந்ததால் ‘கத்தீபுல் அன்பியா’ (நபிமார்களுள் நாவலர்) என்ற சிறப்புப் பெயர் இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. எவ்வளவு தான் நாவன்மையுடன் இவர்கள் ஒரிறை வணக்கப் பிரச்சாரம் செய்த போதினும் அது பெரும் பலன் நல்கவில்லை. அது கண்டு மனம் வெதும்பிய இவர்கள் தங்களுக்கும் மத்யனில் வாழ்ந்த மக்களுக்கும் இடையே தீர்ப்பு நல்குமாறு இருகரம் ஏந்தி இறைவனிடம் இறைஞ்சினார்கள்.

திருமறை குர் ஆனில் நபி ஷுஐப் (அலை)

        "மத்யன்" (என்னும்) நகரத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் "ஷுஐபை" (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது. ஆகவே அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் யாதொன்றையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பத்தை உண்டுபண்ணாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்" என்று கூறினார். (7:85)

        (அன்றி) "நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்துகொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப் பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடை செய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். வெகு சொற்ப மக்களாக இருந்த உங்களை அதிக தொகையினராக ஆக்கி வைத்ததையும் எண்ணி (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி) வாருங்கள். (பூமியில்) விஷமம் செய்துகொண்டு அலைந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் கவனித்துப் பார்ப்பீர்களாக!" (என்றும் கூறினார்.) (7:86)

        (நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதனை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன்.  (7:87)

        (ஷுஐப் நபியை நாம் நம்முடைய தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) "ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்களுடைய மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்களுடைய ஊரிலிருந்து துரத்தி விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி "உங்களுடைய மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?" என்று கேட்டார்.  (7:88)

தீர்ப்பு நல்குமாறு இறைவனிடம் இறைஞ்சினார்கள்

        (அன்றி) "உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்துக் கொண்டதன் பின்னர் உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர்களாவோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் மீளவே முடியாது. எங்கள் இறைவனின் கல்வி ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது. அல்லாஹ்வையே நாங்கள் நம்பினோம்" (என்றும் கூறி, இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் நீ நியாயமான தீர்ப்பளிப்பாயாக! நிச்சயமாக நீ தீர்ப்பளிப்பவர்களில் மிக்க மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்.)  (7:89)

        (ஷுஐபை) நிராகரித்த மக்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தே தீருவீர்கள்" என்று கூறினார்கள்.  (7:90)

        ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர். (7:91)

        ஷுஐபை பொய்யாக்கியவர்கள் தங்கள் ஊர்களில் ஒருக்காலத்திலுமே வசித்திராதவர்களைப் போல (யாதொரு அடையாளமுமின்றி அழிந்து விட்டனர்.) எவர்கள் ஷுஐபை பொய்யாக்கினார்களோ அவர்கள்தான் முற்றிலும் நஷ்ட மடைந்தார்கள். (7:92)

        (அது சமயம்) ஷுஐப் அவர்களிலிருந்து விலகி (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் இறைவனின் தூதையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசமும் செய்தேன். ஆகவே (அதனை) நிராகரித்த மக்களுக்காக நான் எவ்வாறு கவலை கொள்வேன்" என்று கூறினார். (7:93)

மத்யன் ஊர் அழிந்தது

        ஒரு புதன் கிழமை கருமேகம் ஒன்று வானிலே மிதந்து வந்தது. அப்பொழுது இவர்களும் இவர்களைப் பின்பற்றியவர்களும் அவ்வூரை விட்டு வெளியேறுமாறு இறை ஆணை வந்தது. அவ்விதமே இவர்கள் செய்தார்கள். சற்று நேரத்தில் கருமேகம் தீக்குழம்பைப் பொழிந்தது. அத்துடன் பயங்கரப் பேரொலியும் நில அசைவும் சேர்ந்து அவ்வூரை அழித்தொழித்தன.

மூஸா (அலை) அவர்கள் மத்யன் வந்தது

        பின்னர் இவர்கள் மத்யன் மீண்டு தங்களைப் பின் பற்றியவர்களுடன் வாழ்ந்து வந்தார்கள். அப்பொழுது தான் மூஸா (அலை) அவர்கள் அங்கு வந்து எட்டாண்டுத் தவணைக்கு இவர்களுடைய ஆடுகளை மேய்த்து இவர்கள் மகள் ஸபூராவை மணந்து வாழ்ந்தார்கள். ஆடு மேய்ப்பதற்காக இவர்கள் மூஸா (அலை) அவர்களுக்குக் கொடுத்த கைத்தடி தான் பிற்காலத்தில் மூஸா (அலை) அவர்களது பிரபலமான ‘அஸா’வாய் விளங்கியது.

கண்ணொளி மீளப் பெற்ற ஷுஐப் (அலை)

        இறைவன் மீது தங்களுக்கிருந்த அளவற்ற அன்பின் காரணமாக எப்பொழுதுமே அழுது கொண்டிருந்ததனால் இவர்களின் கண்ணொளி மங்கி விட்டது. மூஸா (அலை) அவர்கள், இவர்களை விட்டுப் பிரிவதற்கு விடை வேண்டிய பொழுது, தங்களுக்குக் கண்ணொளியை மீண்டும் வழங்க இறைவனிடம் இறைஞ்சுமாறு கூறினார்கள் இவர்கள். அதற்கு மூஸா (அலை), “தாங்களே இறைஞ்சுங்கள்! நான் பின்னாலிருந்து ஆமீன் கூறுகிறேன்” என்று கூற அவ்விதமே செய்தார்கள் இவர்கள். உடனே கண்ணொளி மீளப்பெற்ற இவர்கள் தம் மருகரை முதன் முறையாய்க் கண்டதும் அவர்கள் ஆரத் தழுவி மகிழ்ச்சிக் கண்ணீர் உகுத்தார்கள்.

இறுதிக் காலம்

தங்கள் மகளையும், மருகரையும் எகிப்துக்கு அனுப்பிவிட்டு ‘ஹஜ்’ஜுச் செய்வதற்காக மக்கா வந்த இவர்கள் அங்கேயே நெடு நாள் வாழ்ந்து தங்கள் இருநூறாம் வயதில் உலகு நீத்தார்கள். இவர்கள் சிரியாவிலுள்ள ஹத்தீன் என்ற சிற்றூரில் காலமாகி நல்லடக்கம் செய்யப்பட்டதாக மற்றொரு வரலாறு கூறுகிறது. வேறொரு வரலாறோ இவர்களது அடக்கவிடம் யமனின் தலைநகரான ஸன்ஆவிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவிலுள்ள ஹதூர் மலை மீது இருக்கிறதாகக் கூறுகிறது.

இவர்கள் சிரிய மொழியில் பரூத் என்றும் அரபி மொழியில் ஷுஐப் என்றும் அழைக்கப் பெற்றார்கள்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...