தாவூத் அலைஹிஸ்ஸலாம்
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யஃகூப் (அலை) அவர்களின் மகனான யஹுதாவின் வழி வந்தவர்கள். இவர்களின் தந்தை பெயர் அய்ஷா என்பதாகும். இவர்களுடன் பிறந்தோர் பதினொருவர். அவர்கள் அனைவருக்கும் இவர்கள் தான் இளையவர். இவர்கள் ஈஸா (அலை) அவர்களுக்கு 990 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்கள்.
அரசராகவும், நபியாகவும் ஆயினர்
ஜாலுத்தின் அறைகூவலை ஏற்று அவனைக் கொன்றதன் காரணமாக இவர்கள் அரசர் தாலூத்தின் மகளைத் திருமணத்தின் மூலம் அடையப் பெற்றார்கள். அவருக்குப் பின் இவர்கள் அரசராகவும், நபியாகவும் ஆயினர். இவர்களுக்கு இறைவன் “ஸபூர்” வேதத்தை வழங்கினான். அதனை இவர்கள் தீம் குரலில் எழுபது வகையான இராகங்களில், காலையிலும் மாலையிலும் ஓதும் பொழுது குன்றுகளும், மலைகளும், விலங்கினங்களும், புள்ளினங்களும் இவர்களுடன் சேர்ந்து இறை துதி பாடின. இவர்கள் அதிகமதிகமாக அழுது இறைவனிடம் கெஞ்சி இறைஞ்சுபவர்களாக இருந்தனர்.
திருமறையில் இவர்கள்
38:17. (நபியே!) இவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையாக சகித்துக்கொண்டு இருங்கள். அன்றி, மிக பலசாலியாகிய நமது அடியார் தாவூதை நினைத்துப் பாருங்கள். நிச்சயமாக அவர் (எத்தகைய கஷ்டத்திலும்) நம்மையே நோக்கி நின்றார்.
38:18. நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்தித் தந்தோம். காலையிலும், மாலையிலும் அவை அவருடன் சேர்ந்து துதி செய்து கொண்டிருந்தன.
38:19. பறவைகளின் கூட்டத்தையும், (நாம் அவருக்கு வசப்படுத்தித் தந்தோம்.) அவை, அவருடைய சப்தத்தைப் பின்பற்றி அவரை சூழ்ந்து (அவ்வாறே) சப்தமிட்டன.
38:20. அவருடைய ஆட்சியை நாம் பலப்படுத்தி, அவருக்கு ஞானத்தையும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தியையும் கொடுத்தோம்.
கவசம் செய்யும் கலையில் நிபுணர்
இவர்கள் இரவில் மாறுவேடம் பூண்டு நகர் சுற்றி மக்களின் குறையறிந்து, அதனைக் களைந்து வந்தனர். அப்பொழுது இவர்கள் பொதுக் கருவூலத்திலிருந்து தமக்குச் செலவழித்துக் கொள்வதை ஒருவர் குறை கூறிய பொழுது, தம் பிழைப்புக்கு ஒரு வழியைக் காண்பித்தருளுமாறு இறைவனிடம் இறைஞ்சினார்கள். இவர்களுக்கு இறைவன் கவசம் செய்யும் கலையைக் கற்றுத் தந்ததோடு, இவர்களின் கைபட்டதும் இரும்பை மெழுகு போல் துவளவும் செய்தான். நாளொன்றுக்கு இவர்கள் ஒரு கவசம் வீதம் செய்தார்கள். அதிலிருந்து இவர்களுக்கு ஆண்டொன்றிற்கு நாலாயிரம் திர்ஹம் வருமானம் கிடைத்தது. அதில் ஒரு பாதியைத் தம் குடும்பத்தினருக்கும், மறு பாதியை ஏழைகளுக்கும் இவர்கள் செலவழித்து வந்தனர்.
இறைவனின் பேரருளுக்குப் பாத்திரமாக விரும்பியது
ஒரு நாள் தாவூத் (அலை) அவர்கள் இறைவனை நோக்கி, “நீ எக்காரணத்தால் எனக்கு முன்போந்த நபிமார்களுக்கு உன் அருட் பேற்றினை வழங்கினாய்?” என்று வினவ, “நான் அவர்களைப் பற்பல சோதனைகளால் சோதித்தேன். அவற்றையெல்லாம் அவர்கள் வென்று நின்றார்கள். அதன் காரணமாக நான் அவர்கள் மீது என் அருள் மழையைச் சொரிந்தேன்.” என்று பதிலிறுத்தான் அவன். அது கேட்ட தாவூத் (அலை) அவர்கள் தமக்கும் அத்தகு சோதனைகளை இறக்கி வைக்குமாறும் தாம் அவற்றைப் பொறுமையுடன் ஏற்று இறைவனின் பேரருளுக்குப் பாத்திரமாக விரும்புவதாகவும் கூறினர். அதற்கு இறைவன் “மகிழ்ச்சிக்குப் பதிலாகத் துன்பத்தையா விரும்புகிறீர்? நல்லது, நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக! இன்ன நாளில் உமக்குச் சோதனை வந்து சேரும்” என்று கூறினான்.
ஊரியா என்பவரின் மனைவி
ரஜப் மாதம் 27 ஆம் நாள் புதன் கிழமை யன்று தாவூத் (அலை) அவர்கள் திருமறையை ஓதிக் கொண்டிருக்கும் பொழுது பொன்னிறத்துப் பறவை ஒன்று உள்ளே நுழைந்தது. அதனுடைய அழகைப் பார்த்து வியந்த தாவூத் (அலை) அவர்கள் அதனைப் பிடித்துத் தம் சின்னஞ் சிறு மகனுக்கு விளையாடக் கொடுக்க எண்ணி அதனைப் பிடிக்க முயன்ற பொழுது அது பறந்து சென்றது. அது எங்கே பறந்து செல்கின்றது என்பதை அறிய அவர்கள் உப்பரிகை மீது ஏறிப் பார்த்த பொழுது சற்றுத் தொலைவில் உள்ள வீட்டில் குளித்துக் கொண்டிருந்த ஓர் ஆரணங்கின் மீது அவர்களின் பார்வை விழுந்தது. கீழே இறங்கி வந்த அவர்கள் தம் அந்தப்புரத்தைச் சேர்ந்த இரு பெண்களை அழைத்து அப் பெண்மணி எவரென விசாரித்து வருமாறு கூற அவர்கள் விசாரித்து வந்து ஊரியா என்பவரின் மனைவி பத்தஷாயஃக் என்று கூறினர்.
சுலைமான் (அலை) அவர்கள் பிறந்தார்
உடனே தாவூத் (அலை) அவர்கள் ஊரியாவை அழைத்து அவர் தம் மனைவியை மண விடுதலை செய்து விடுமாறும் தாம் அவளை மண முடித்து வாழ விரும்புவதாகவும் கூறினர். அவரும் அதற்கு ஒப்பினார். இதனை பத்தஷாயஃ அறிந்ததும் தாவூத் (அலை) அவர்கள் மூலம் தமக்குப் பிறக்கும் மகனுக்கே அரியணை வழங்கப் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்க அதற்கும் இணங்கி அவரை அவர்கள் மண முடித்தனர். தாவூத் (அலை) அவர்களுக்கு சுலைமான் (அலை) அவர்கள் பிறந்தனர்.
நீதி கேட்டு வந்த இருவர்
ஒரு நாள் தாவூத் (அலை) அவர்கள் தம் வணக்க மாளிகையில் அமர்ந்து வணங்கிக் கொண்டிருந்த பொழுது இருவர் அங்கு வந்து தொப்பென்று குதித்தனர். அவர்களில் ஒருவர் “நாங்கள் இருவரும் ஒரு வழக்கைக் கொண்டு வந்துள்ளோம். இவர் என்னுடைய சகோதரராவார். இவரிடம் 99 ஆடுகள் இருக்கின்றன. என்னிடமோ ஒரே ஓர் ஆடு தான் இருக்கிறது. எனினும் அவர் அதனையும் தமக்கு வழங்க வேண்டுமென்று கூறி வாதத்தில் என்னை வென்று விட்டார். நீதி பகருங்கள்” என்று கூறினர்.
தவறு தான் என்பதை உணர்ந்தார்
“இஃதென்ன அநியாயமாக உள்ளது! 99 ஆடுகளையுடையவன் உன்னிடமுள்ள ஒரே ஆட்டையும் உன்னிடமிருந்து பறித்துக் கொள்ள நினைப்பதா? என்று கேட்டனர் தாவூத் (அலை), இவ்வாறு கூறி, வாய் மூடு முன் அவ்விருவரும் “தாவூத் தமக்கே தான் தீர்ப்பளித்துக் கொண்டார்” என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார்கள். இதன் பின் அவர்கள் இருவரும் தமக்கு அறிவுறுத்துவதற்காக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர்கள் என்பதை தாவூத் (அலை) அவர்கள் உணர்ந்தனர். தமக்கு 38 மனைவியர் இருந்தும் மற்றொருவரின் மனைவியை விரும்பி அவரை மணவிடுதலை செய்யுமாறு செய்து தாம் மணமுடித்துக் கொண்டது தவறு தான் என்பதை உணர்ந்து தாவூத் (அலை) அவர்கள் தம் பாவம் பொறுத் தருளுமாறு கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். அப்பொழுது அவர்கள் சிந்திய கண்ணீரும் உலகத்திலுள்ள அனைவரும் வடித்த கண்ணீரும் சமமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் பின் இறைவன் அவர்களின் பாவம் பொறுத்து அவர்களை ஆட்கொண்டான்.
அது பற்றி திருமறையில்
38:21. (நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உங்களுக்குக் கிடைத்திருக்கின்றதா? அவர்கள் (அவர் வணங்கிக் கொண்டிருந்த) மடத்து அறையின் சுவற்றைத் தாண்டி, (வந்து)
38:22. தாவூதிடம் நுழைந்தபோது, அவர் அவர்களைப் பற்றி(ப் பயந்து) திடுக்கமுற்றார். அதற்கவர்கள் "(தாவூதே!) நீங்கள் பயப்படாதீர்கள். (நாங்கள் இருவரும்) இரு கட்சிக்காரர்கள். எங்களில் ஒருவர் மற்றொருவர் மீது அநியாயம் செய்திருக்கின்றார். எங்களுக்கிடையில் நீங்கள் நீதமாகத் தீர்ப்பளியுங்கள். அதில் தவறிழைத்து விடாதீர்கள். எங்களை நேரான வழியில் செலுத்துங்கள்.
38:23. இவர் என்னுடைய சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரே ஒரு ஆடுதான் இருக்கின்றது. (அவ்வாறிருந்தும்) அவர் அதனையும் (தனக்குக்) கொடுத்துவிட வேண்டும் என்று கூறித் தர்க்க வாதத்தில் அவர் என்னை ஜெயித்துக் கொண்டார்" என்று கூறினார்.
38:24. அதற்கு தாவூத், "உன்னுடைய ஆட்டை, அவர் தன்னுடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்பது நிச்சயமாக அவர் உங்கள் மீது செய்யும் அநியாயமாகும். கூட்டாளிகளில் பெரும் பாலானவர்கள், ஒருவர் ஒருவரை மோசம் செய்து விடுகின்றனர்; நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கிறவர்களைத் தவிர, (நம்பிக்கையாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. மோசம் செய்யாத) இத்தகையவர்கள் வெகு சிலரே!" என்று கூறினார். இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதை சோதனைக்குள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி, தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி, சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தார்.
38:25. ஆதலால், நாம் அவருடைய குற்றத்தை மன்னித்து விட்டோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் மிக நெருங்கிய பெரும் பதவியும் அழகான இருப்பிடமும் உண்டு.
பன்றிகளாகவும், குரங்குகளாகவும் உருமாறிய மக்கள்
ஈலா நகரத்தில் வாழ்ந்த பனீ இஸ்ராயீல்கள் இறை ஆணைக்கு மாறாகச் சனிக்கிழமையன்று மீன் பிடித்ததனால் தாவூத் (அலை) அவர்களின் சாபத்திற்குள்ளாகிப் பன்றிகளாகவும், குரங்குகளாகவும் உருமாறி மூன்று நாட்களுக்குப் பின் செத்து மடிந்தனர் என்று கூறப்படுகிறது.
பைத்துல் முகத்தஸ் நகர் நிர்மாணம்
தாவூத் (அலை) தாம், பைத்துல் முகத்தஸ் நகரை நிர்மாணித்து, ஆங்கு இறைவனைத் தொழும் பள்ளியின் நிர்மாண வேலையையும் துவக்கியவர்களாவர். பள்ளி கட்டக் கட்ட அது நான்கு முறை கீழே வீழ்ந்தது. அப்பொழுது இறைவன், “நீர் இரத்தம் சிந்தினிர். எனவே இரத்தம் சிந்தாத உம் வழித் தோன்றலால் அதனை நான் எழுப்புவேன்” என்றான். அப்பேறு பின்னர் நபி சுலைமான் (அலை) அவர்களுக்கே கிடைத்தது.
தாவூத் (அலை) அவர்களின் மரணம்
ஒரு சனிக்கிழமை தாவூத் (அலை) தம் வணக்க மன்றத்திலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கும் பொழுது இஸ்ராயீல் (அலை), இவர்களின் முன் எதிர்ப்பட்டனர். மாடிப்படியிலிருந்து கீழே இறங்கும் வரை தமக்கு ஓய்வு தருமாறு இவர்கள் இஸ்ராயீலை வேண்ட, “அதற்கு இறை ஆணை இல்லை” என்றார் அவர். அவ்விடத்திலேயே இவர்கள் இறை ஆணைக்குத் தலை தாழ்த்திக் குப்புற வீழ்ந்தனர். அக்கணமே இவர்களின் உயிர் கைப்பற்றப் பட்டது. அப்பொழுது இவர்களுக்கு வயது நூறு.
அடக்கவிடம்
தாவூத் (அலை) அவர்களின் அடக்கவிடம் பெத்லஹமில் இருப்பதாக, 14 ஆவது நூற்றாண்டு வரை கருதப்பட்டு வந்தது. பின்னர் பைத்துல் முகத்தஸின் தென்மேற்கிலுள்ள ஒரு குன்றின் மீதுள்ள அடக்கவிடம் தான் தாவூத் (அலை) அவர்களின் அடக்கவிடம் என்று கருதப்பட்டு வருகிறது.
தாவூதிகள்
குர்திஸ்தானிலுள்ள ஒரு கூட்டத்தினர், தங்களை தாவூதிகள், அதாவது தாவூத் (அலை) அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் என்று இப்பொழுதும் கூறிக் கொள்கின்றனர்.
சிறந்த கவசத்திற்கு இப்பொழுதும் அரபிகள் “தாவூதி” என்று பெயர் கூறுகின்றார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....