யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்
நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழி வந்தவர் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். இவர்களின் தந்தை பெயர் மத்தா. அன்னையின் பெயர் பதூரா. இவர்கள் நீனவா என்னும் நகரத்தின் நூறாயிரம் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்கென்று இறைவனால் நபியாக அனுப்பப் பட்டார்கள். இவர்கள் பெயரில் திருக்குர் ஆனில் ஒரு அத்தியாயம் (ஸூரத்து யூனுஸ்) அருளப்பட்டுள்ளது. இவர்கள் ‘நூன்’ என்ற மீன் வயிற்றில் பல நாள்கள் இருந்ததால் இவர்களுக்கு ‘துன்னூன்’ (மீனையுடையவர்) என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.
நிச்சயமாக யூனுஸும் நம்முடைய தூதர்களில் ஒருவர்தான். ( 37:139.)
இஸ்மாயீல், அல்யஸவு (எலிஸை,) யூனுஸ், லூத் (இவர்களையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரையும் உலகத்திலுள்ள அனைவரின் மீதும் மேன்மையாக்கியும் வைத்தோம்.(6:86.)
நீனவா நகர் செல்லும் வழியில்
நபி யூனுஸ் (அலை) அவர்கள் நீனவா நகர் செல்லும் பொழுது வழியில் ஒரு ஆறு குறுக்கிடவே தங்கள் ஒரு மகனை ஆற்றின் மறு கரை சேர்த்து, அடுத்த மகனை ஆற்றின் நடுவில் கொண்டு வரும் பொழுது ஆற்றின் மறுகரையில் இருந்த மகனை ஓநாய் கொண்டு செல்ல, அந்தப் பதற்றத்தில் இவர்கள் கையிலிருந்த குழந்தை கீழே நழுவி விழ, அதனை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றது. இவர்கள் உயிர் தப்பி அக்கரை வந்து சேர்ந்தார்கள். மனைவியோ இக்கரையில் இருந்தார்.
உருவமற்ற ஓரிறை வணக்கத்தை போதித்தது
அப்பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி இவர்களை நீனவா செல்லுமாறும், இவர்கள் மனைவி, மக்களை இறைவன் இவர்களிடம் ஒன்று சேர்ப்பான் என்றும் கூறி மறைந்தார்கள். அவ்விதமே இவர்கள் அங்குச் சென்று உருவமற்ற ஓரிறை வணக்கத்தை அவ்வூர் மக்களுக்குப் போதித்தும் அவர்கள் கேட்கவில்லை.
அனல் காற்று பட்டு அலறிய மக்கள்
பொறுமையிழந்த நபி யூனுஸ் (அலை) அவர்கள், அம்மக்கள் மீது நெருப்பு மழையைப் பொழியுமாறு இறைவனிடம் இறைஞ்சினார்கள். “சரி , அவ்விதமே செய்கிறேன். நீர் இன்ன மலை மீது போய் அமர்ந்திரும்” என்று இறைவன் கூறினான். அவ்விதமே இவர்கள் செய்ய, அனல்காற்று வீசத் தொடங்கியது. அது கண்டு அலறிய மக்கள் தங்கள் பாவம் பொறுத்தருளுமாறும், வணங்குதற்குரியோன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்றும், யூனுஸ் (அலை) அவனுடைய திருத்தூதர் என்று தாங்கள் நம்புவதாகவும், நாற்பது இரவு பகல் குப்புற வீழ்ந்து கண்ணீரும் கம்பலையுமாய்க் கூற இறைவன் அவர்கள் மீது இரங்கினான். தீமழை செழு மழையாய்ப் பெய்தது.
இது பற்றி திருமறையில்
10:98. தங்களுடைய நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) "யூனுஸ்" உடைய மக்களைப் போல மற்றொரு ஊரார் இருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். அன்றி, சிறிது காலம் சுகம் அனுபவிக்கவும் அவர்களை நாம் விட்டு வைத்தோம்.
அல்லாஹ்வின் ஆணையை பெறாமல் ஊரைவிட்டு வெளியேறியது
யூனுஸ் (அலை) அவர்களுடைய சமூகம் அவரை நிராகரித்து விட்டதால் மனம் வெறுத்திருந்த இவர்கள், அல்லாஹ்வின் ஆணையை பெறாமலே அந்த ஊரை விட்டு வெளியேறினார். அங்கே பயணிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறிச் சென்றார்கள். நடுக் கடலில் கப்பல் திடீரென தத்தளித்து தடுமாறி மேல் செல்ல முடியாததால், அக்கப்பலில் இருந்து யாரேனும் ஒருவர் இறங்கினால் மாத்திரமே மற்றவர்கள் அனைவரும் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
“நூன்” என்ற மீன் விழுங்கியது
கப்பலில் உள்ளவர்களில் பெயரை சீட்டு குலுக்கி போட்டு, அதில் யூனுஸ் (அலை) அவர்கள் பெயர் வரவே, அவர் கடலில் வீசி ஏறியப்பட்டார். அப்பொழுது இறை ஆணைப்படி, “நூன்” என்ற மீன் இவர்களைத் தூக்கி விழுங்கியது. எனினும் அவற்றின் உடல் கண்ணாடி போன்றிருந்தனவென்றும், எனவே மீன் வயிற்றிற்குள் இருந்த வண்ணமே யூனுஸ் (அலை) அவர்கள் கடலின் அற்புதங்களைக் கண்ணுற்றனர் என்றும் கூறப்படுகிறது.
தவற்றிற்காக வருந்தி பிரார்த்தனை செய்தார்
இக்காலை அவர்கள் தம் தவற்றிற்காக வருந்தி, “லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினழ் ழாலிமீன்” (அல்லாஹ்வே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியோன் வேறு எவனுமில்லை. நீ தூய்மையாளன். நிச்சயமாக, நான் அநியாயக்காரர்களில் ஒருவனாக உள்ளேன்) என்று லட்சோப லட்சம் தடவைகள் கூறியதன் காரணமாக, இறைவன் அவர்களின் பவம் பொறுத்து மன்னித்து அவர்களைக் கரையில் கக்கி விடுமாறு இம் மீனுக்கு இறைவன் ஆணையிட அது அவ்வாறு செய்தது.
“யக்தீன்” என்ற செடியின் நிழல் வழங்கியது
மீன் வயிற்றிலிருந்து வெளியாக்கப்பட்ட யூனுஸ் (அலை) அவர்கள் மிகவும் சோர்வுடனும், களைப்புடனும் இருந்ததால், இறைவன் “யக்தீன்” என்னும் ஒரு சுரைக்கொடி செடியினால் இவர்களை மூடிப் பாதுகாப்பும், நிழலும் வழங்கினான். மேலும் ஒரு மான் காலையிலும், மாலையிலும் வந்து இவர்களுக்கு பால் நல்கி வந்தென்றும் கூறப்படுகிறது.
யூனுஸ் (அலை) அவர்களின் இறுதி காலம்
பின்னர் இவர்கள் மனைவியையும், மக்களையும் இவர்களுடன் ஒன்று சேர்த்தான் இறைவன். நீனவா மக்கள் இவர்களை இலக்கு கண்டு கொண்டு “கலிமா” உரைத்து இவர்களைத் தங்கள் ஊர் வருமாறு வேண்ட, “ஒரு நபி ஒர் ஊரைவிட்டு வெளியேறி விடின் மீண்டும் அதில் அவர் குடி புக மாட்டார்” என்று கூறி, சகியூ என்ற மலையை அடைந்து அங்கேயே வாழ்ந்து இவர்கள் உயிர் நீத்தார்கள்.
திருமறை குர் ஆனில் இந்த வரலாறு
37:139. நிச்சயமாக யூனுஸும் நம்முடைய தூதர்களில் ஒருவர்தான்.
37:140. (மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்).
37:141. அ(க் கப்பலிலுள்ள)வர்கள் (திருவுளச்) சீட்டுப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்.
37:142. (அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கிவிட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்.
21:87. (யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம்முடைய தூதராக ஆக்கினோம்.) அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்.
21:88. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) கஷ்டத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (கஷ்டத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
37:143. நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால்,
37:144. (மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில் அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
37:145. (அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.
37:146. ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச் செடியை முளைப்பித்தோம்.
37:147. பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.
37:148. அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரையில் சுகமாக வாழவைத்தோம்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி தாவூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி ஸுலைமான்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....