ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம்
தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனாகிய ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், பதின்மூன்று வயதிலேயே அரியணை ஏறி அரசராகவும், நபியாகவும் விளங்கினார். இவர்கள் அரசாங்கத்தை விட அறிவே தமக்கு வேண்டுமெனக் கூறியதன் காரணமாக, இறைவன் இவர்களுக்கு அரசாங்கத்தையும், அறிவையும் ஒருங்கே வழங்கினான். ஜின்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், காற்று, தண்ணீர் அனைத்தும் நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டிருந்தன. நபி தாவூத் (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸை நிர்மாணிக்க அஸ்திவாரமிட்டார்கள், ஆனால் அவர்கள் காலத்தில் அது பூர்த்தியடையவில்லை. ஸுலைமான் (அலை) அவர்கள் அதைப் பூரணமாக நிர்மாணித்து முடித்தார்கள். பள்ளிவாசலின் நான்கு சுவற்றையும், வெள்ளை, பச்சை, மஞ்சள் நிற சலவைக் கற்களால் அழகுற அமைத்தார்கள். அகில உலக மன்னர்களும் ஸுலைமான் (அலை) அவர்களுக்கு அடங்கி நடந்தனர்.
ஸுலைமான் (அலை) அவர்களின் அரசாங்கம்
ஸுலைமான் (அலை) அவர்கள், தமக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத அத்துணைப் பெரிய அரசாங்கத்தைத் தமக்கு நல்குமாறு இறைஞ்ச, இறைவன் இவர்களின் இறைஞ்சுதலை ஏற்று, காற்றை இவர்களின் கைவசமாக்கினான்; ஜின் கணங்களை இவர்களுக்கு குற்றேவல் புரியுமாறு செய்தான். பறவை இனங்கள், விலங்கினங்கள், பூச்சி, புழுக்கள் ஆகியவற்றின் மொழிகளையெல்லாம் இவர்களுக்குக் கற்றுத்தந்து அவற்றையும் இவர்களின் ஆதிபத்தியத்தின் கீழ் ஆக்கினான். மேலும் செம்பை ஊற்று நீரைப் போன்று இவர்களுக்கு உருகி ஓடவும் செய்தான். இவர்களின் அரசாங்க முத்திரை ஐந்து முனைகளுள்ள விண்மீனின் உருவைப் பெற்றிருந்தது. “இவர்களின் அரசாங்கம் எகிப்திலிருந்து ஆப்கானிஸ்தான் வரையிலும் பரவி கிடந்தது” என்று மக்காதில் (ரஹ்) கூறியுள்ளனர்.
திருமறையில் இவர்கள் பற்றி
27:15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் (இம்மை மறுமையில் பயனளிக்கக்கூடிய) கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும் "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அவன்தான் நம்பிக்கை கொண்ட தன்னுடைய நல்லடியார்களில் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான்" என்று கூறி (நன்றி செலுத்தி)னார்கள்.
27:16. பின்னர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். (ஸுலைமான் மனிதர்களை நோக்கி) "மனிதர்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்பிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு (வேண்டிய) எல்லா பொருள்களும் (ஏராளமாகவே) கொடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயமாக இது (இறைவனின்) மிக்க தெளிவானதொரு அருளாகும்" என்று கூறி(யும் நன்றி செலுத்தி)னார்.
27:17. ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவைகளிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன.
27:18. அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது.
27:19. அதன் சொல்லைக் கேள்வியுற்று ஸுலைமான் சிரித்தவராக புன்னகைப் பூத்தார். மேலும், "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த உன்னுடைய அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ அருள் புரிவாயாக! உனக்குத் திருப்தியளிக்கக் கூடிய நற் செயல்களையும் நான் செய்ய(க்கூடிய பாக்கியத்தை எனக்கு) அருள் புரிந்து, உன்னுடைய கிருபையைக் கொண்டு உன்னுடைய நல்லடியார்களுடனும் என்னைச் சேர்த்து விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்.
34:12. அன்றி, ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. அன்றி, செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) எவன் நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்).
34:13. அ(ன்றி, ஜின் ஆகிய)வைகள் ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) "தேகு" (சமையல் பாத்திரங்)களையும் செய்து கொண்டிருந்தன.
21:81. ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச் செல்லும். எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்.
ஜின்களின் ஒத்துழைப்பு
ஜின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து மூன்று மைல் நீளமும், மூன்று மைல் அகலமும் உள்ள ஒரு பசும் பட்டு விரிப்பைச் செய்து இவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கின. அதன் ஊடே பொன்னிழைகள் ஓடின. அதன் நடுவே ஒரு பொன்னாசனம் வைக்கப்பட்டிருந்தது. அதைச் சூழ மூவாயிரம் பொன், வெள்ளி நாற்காலிகளில் நபிமார்களும் அறிஞர்களும் அமர்ந்திருந்தனர். மனிதரிலும், ஜின்களிலும், பறவைகளிலும் உள்ள தங்களின் படையினரையும், தங்களின் முந்நூறு மனைவியரையும் ஏறச் செய்து காற்றை நோக்கித் தக்களைக் கனக வெளியிலே சுமந்து செல்லுமாறு சொல்வர் ஸுலைமான் (அலை). அது அவ்விதமே செய்யும்.
மக்காவில் இறைவணக்கம்
ஒரு தடவை இவர்கள் மதீனாவுக்கு நேரே வந்தக்கால், “இங்குக் குடியேறும் இறுதி நபியைப் பின்பற்றுபவருக்கே சோபனம்” என்றனர். மக்காவில் வந்து இறைவணக்கம் நிகழ்த்தி ஐயாயிரம் ஒட்டகங்களையும், ஐயாயிரம் மாடுகளையும் இருபதாயிரம் ஆடுகளையும் அறுத்து இறைவனுக்குப் பலியிட்டனர்.
எளிய வாழ்வு
இவர்கள் எளிய வாழ்வு வாழ்ந்து வந்தனர். இவர்களின் அடுக்களை அல்லும் பகலும் எரிந்து கொண்டிருந்த போதினும், இவர்கள் உண்டு வந்தது சில ரொட்டித் துண்டுகளைத் தாம். அவையும் இவர்களுடைய உழைப்பினால் வந்த ஊதியத்திலிருந்து தயாரிக்கப்பட்டவை ஆகும். நாள் தோறும் கூடை பின்னி அதிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு ரொட்டி சுட்டு அவற்றைப் பள்ளியில் வைத்து ஏழைகளுடன் பகிர்ந்துண்டு வந்தார்கள் இவர்கள். ஒரு நாள் இவர்கள் பள்ளியில் நுழைந்த பொழுது, ஆங்கு ஏழை வழிப்போக்கர் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அவரருகே சென்று அமர்ந்து, “ஓர் ஏழையுடன் மற்றோர் ஏழை அமர்ந்திருக்கிறார்” என்று கூறினார்.
வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கல்
இவர்கள் தம் தவிசிலிருந்து தவக்கோலம் தாங்கி மனிதர்களுக்கொரு நாள், ஜின்களுக்கொரு நாள், ஷைத்தான்களுக்கொரு நாள், பறவைகளுக்கொரு நாள், விலங்கினங்களுக்கொரு நாள் எனப் பிரித்து, அவற்றின் வழக்குகளை விசாரித்து வந்தார்கள். “இத்தகு மாபெரும் அரசாதிபத்தியத்தை இறைவன் இவர்களுக்கு அளித்திருந்த போதினும், இறைவன் மீதிருந்த அச்சத்தின் காரணமாக, இவர்கள் விண்ணை நோக்கித் தம் பார்வையை உயர்த்தாதிருந்தனர்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இது பற்றி திருமறையில்
21:78. தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பி வைத்தோம்.) ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்துவிட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்.
21:79. தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம்.
ஸபா அரசி பல்கீஸ்
பல்கீஸின் தந்தையின் பெயர் ஷர்ஹபீல் இப்னு மாலிக் என்பதாகும். இவருடைய குடும்பத்தினர் நாற்பது தலைமுறையாக யமன் நாட்டை ஆண்டு வந்தனர். இவர் யமன் நாட்டிலேயே இணையற்ற அழகியாக இருந்தார். இவர் ஸபாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார்.
ஹூத் ஹூத் என்னும் பறவை மூலம் இவரின் மாண்பினைப் பற்றியும், பொன்னாலும் மணியாலும் ஆன இவரின் அரியணை பற்றியும், இவரும் இவருடைய மக்களும் சூரியனை வணங்கி வருவதைப் பற்றியும் ஸுலைமான் (அலை) அவர்கள் கேள்வியுற்றதும் இவருக்கு மடல் தீட்டினர். அதன் துவக்கத்தில் “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஒரே இறை வணக்கத்தின் பால் இவரையும் இவருடைய மக்களையும் ஸுலைமான் (அலை) அவர்கள் அம்மடலில் அழைத்திருந்தனர்.
முதலில் ஸுலைமான் (அலை) அவர்களைச் சோதிப்பதற்காகக் காணிக்கைகளை அனுப்பி வைத்தார் இவர். அல்லாஹ் தமக்குத் தந்துள்ளது அவற்றைவிட மேலானதெனக் கூறி அவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளாது திருப்பி அனுப்பி விட்டனர்.
இதன் பின், “பல்கீஸின் அரியணையை இங்குக் கொணர்வார் உண்டா?” என்று ஸுலைமான் (அலை) அவர்கள் வினவ, அரசவை கலைவதற்கு முன் அதனைத் தான் இங்குக் கொண்டு வந்து விடுவதாக இப்ரீத் என்ற ஜின் கூறியது. வேத ஞானம் பெற்ற ஆஸிஃப் இப்னு பர்கியாவோ கண் மூடித் திறப்பதற்குள் அதனை இங்குக் கொணர்வதாகக் கூறி அவ்விதமே செய்தார். பல்கீஸின் அறிவாற்றலைச் சோதிக்க விரும்பிய ஸுலைமான் (அலை) அவர்கள், அந்த அரியணையை மாற்றியமைக்குமாறு கூறினர்.
பல்கீஸ் தம் குழுவினருடன் வருகை
பல்கீஸ் தம் குழுவினருடன் ஸுலைமான் (அலை) அவர்கள் முன் வந்ததும், அரியணையைச் சுட்டிக் காட்டி, “உன்னுடைய அரியணை இவ்வாறு தானா இருக்கும்?” என்று வினவினர். அது தன்னுடையது தான் என்பதை பல்கீஸ் விளங்கிக் கொண்ட போதினும், அடக்கத்துடன், “இது முற்றிலும் அதைப் போன்றே இருக்கிறது” என்று கூறியதுடன், தாமும் தம் குழுவினரும் முஸ்லிம்களாகவே அங்கு வந்துள்ளதாகக் கூறினார்.
பல்கீஸுடைய கால்களை சோதிக்க
பல்கீஸுடைய கால் கழுதைக் கால் போன்றிருக்கும் என்ற கட்டுக் கதையைச் சோதித்து அறிவதற்காக ஸுலைமான் (அலை) அவர்கள், பளிங்கு மாளிகை எழுப்பி அதன் முன் பளிங்கினால் ஒரு பெரும் குளம் நிர்மாணித்து அதில் விதவிதமான மீன்களையெல்லாம் விட்டு, அக்குளத்தின் மேல் பகுதியைப் பளிங்குத் தளத்தால் மூடி வைத்தனர். அங்கு வந்த பல்கீஸ் அதனைத் தண்ணீர் என நினைத்துத் தம் துணியை உயர்த்திய பொழுது அவரின் கால்களைப் பார்த்து உண்மையை விளக்கிக் கொண்டு, “அது பளிங்கு மாளிகையின் முற்றம் தான். எனவே துணியை உயர்த்தாது வரலாம்” என்று கூறினர்.
திருமறையில் இது பற்றி
27:20. அவர் பறவைகளைப் பரிசீலனை செய்தபொழுது "என்ன காரணம்? "ஹுத்ஹுத்" என்னும் பறவையை நான் காணவில்லையே! (அது பறவைகளின் நெருக்கடியில்) மறைந்திருக்கின்றதா? (அல்லது என் அனுமதியின்றி எங்கேனும் சென்றுவிட்டதா?)
27:21. (அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதனைக் கடினமான வேதனை செய்வேன். அல்லது அதனை அறுத்துவிடுவேன். அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.
27:22. (இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் என்னும் பறவை அவர் முன் தோன்றி) "நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்துகொண்டு "ஸபா"வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
27:23. மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்கு இருக்கின்றது.
27:24. அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றிச் சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன். அவர்களுடைய இக்காரியத்தை ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். ஆதலால், அவர்கள் நேரான வழியை அடையவில்லை.
27:25. வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவைகளை வெளிப்படுத்தக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா? அன்றி, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அவன் நன்கறிந்து கொள்கிறான்.
27:26. அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவன்தான் மகத்தான அர்ஷுடையவன்" என்று கூறிற்று.
27:27. (அதற்கு ஸுலைமான்) "நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய் சொல்கிறாயா? என்பதை அதிசீக்கிரத்தில் நாம் கண்டு கொள்வோம்.
27:28. என்னுடைய இக்கடிதத்தைக் கொண்டு போய் அவர்களின் முன் எறிந்துவிட்டு அவர்களைவிட்டு விலகி (மறைவாக இருந்து கொண்டு) அவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நீ கவனித்துவா" என்று கூறினார்.
27:29. (அவ்வாறே அப்பறவை அவர்கள் முன் அக்கடிதத்தை எறியவே அதனைக் கண்ணுற்ற அவ்வரசி தன் பிரதானிகளை நோக்கி) "தலைவர்களே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் என் முன் எறியப்பட்டிருக்கின்றது.
27:30. மெய்யாகவே அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. நிச்சயமாக அ(தன் ஆரம்பத்)தில் "பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்றெழுதி,
27:31. நீங்கள் (கர்வம் கொண்டு) என்னிடம் பெருமை பாராட்டாதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்" (என்றும் எழுதப்பட்டிருக்கின்றது என்று கூறி)
27:32. (தன்னுடைய பிரதானிகளை நோக்கி) "தலைவர்களே என்னுடைய இவ்விஷயத்தில் நீங்கள் (உங்கள்) ஆலோசனைகளைக் கூறுங்கள். என் சமூகத்தில் நீங்கள் நேராக வந்து (அபிப்பிராயம்) கூறாத வரையில் நான் எவ்விஷயத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று அவள் கூறினாள்.
27:33. அதற்கவர்கள் "நாங்கள் பலவான்களாகவும், கடுமையாக போர் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். (போர் செய்வதோ, சமாதானம் செய்வதோ) உங்கள் உத்தரவைப் பொறுத்திருக்கின்றது. ஆகவே, நீங்கள் உத்தரவு செய்வ(திலுள்ள சாதக பாதகத்)தை நன்கு கவனித்துப் பாருங்கள்" என்று கூறினார்கள்.
27:34. அதற்கவள் "அரசர்கள் யாதொரு ஊரில் நுழைந்தால் நிச்சயமாக அதனை அழித்துவிடுகின்றனர். அன்றி, அங்குள்ள கண்ணியவான்களை கேவலப்பட்டவர்களாக ஆக்கிவிடுகின்றனர். (ஆகவே,) இவர்களும் இவ்வாறே செய்யக்கூடும்.
27:35. ஆகவே, நான் அவர்களிடம் (உயர்ந்த பொருள்களைக் கொண்ட) ஒரு காணிக்கையை அனுப்பி வைத்து (அதனைக் கொண்டு செல்லும்) தூதர்கள் (அவரிடமிருந்து) என்ன பதில் கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் எதிர்பார்த்திருப்பேன்" என்று கூறி (அவ்வாறே அனுப்பி வைத்தாள்.)
27:36. அந்தத் தூதர்கள் ஸுலைமானிடம் வரவே (ஸுலைமான் அவர்களை நோக்கி) "நீங்கள் பொருளைக் கொண்டு எனக்கு உதவி செய்யக் கருதுகின்றீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்து இருப்பவைகள் உங்களுக்குக் கொடுத்திருப்பவைகளை விட (அதிகமாகவும்) மேலானதாகவும் இருக்கின்றன. உங்களுடைய இக்காணிக்கையைக் கொண்டு நீங்களே சந்தோஷமடையுங்கள். (அது எனக்கு வேண்டியதில்லை) என்றும்,
27:37. நீங்கள் அவர்களிடம் திரும்பச் செல்லுங்கள். எவராலும் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்" என்று (கூறி அனுப்பிவிட்டு,)
27:38. (ஸுலைமான் தன் மந்திரிகளை நோக்கி) "சன்றோர்களே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அவளுடைய சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?" என்று கேட்டார்.
27:39. அதற்கு ஜின்களிலுள்ள "இஃப்ரீத்" (என்னும் ஒரு வீரன்) "நீங்கள் இந்தச் சபையை முடித்துக்கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதனை நான் கொண்டு வந்துவிடுவேன். நிச்சயமாக நான் இவ்வாறு செய்ய மிக்க சக்தியும் நம்பிக்கையும் உடையவன்" என்று கூறினான்.
27:40. (எனினும், அவர்களில்) வேத ஞானம் பெற்ற ஒருவர் (இருந்தார். அவர் ஸுலைமான் நபியை நோக்கி) "நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதனை நான் உங்களிடம் கொண்டு வந்துவிடுவேன்" என்று கூறினார். (அவ்வாறே கொண்டு வந்து சேர்த்தார்.) அது தன் முன் (கொண்டு வந்து வைக்கப்பட்டு) இருப்பதை (ஸுலைமான்) கண்டதும், "இது நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக என் இறைவன் எனக்குப் புரிந்த பேரருளாகும். எவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றியை நிராகரிக்கின்றானோ (அதனால் என் இறைவனுக்கு யாதொரு நஷ்டமுமில்லை.) நிச்சயமாக என் இறைவன் (எவருடைய) தேவையற்றவனும், மிக்க கண்ணியமானவனாகவும் இருக்கிறான்" என்று கூறி (தன் வேலைக்காரர்களை நோக்கி,)
27:41. "அவளுடைய சிம்மாசனத்தை மாற்றி (அமைத்து) விடுங்கள். அவள் அதனை(த் தன்னுடையதுதான் என்று) அறிந்து கொள்கிறாளா அல்லது அறிந்துகொள்ள முடியாதவளாகி விடுகின்றாளா?" என்று பார்ப்போமென்று கூறினார்.
27:42. அவள் வந்து சேரவே (ஸுலைமான் அவளை நோக்கி) "உன்னுடைய சிம்மாசனம் இவ்வாறு தானா (இருக்கும்)?" என்று கேட்டதற்கு அவள் "இது முற்றிலும் அதைப் போலவே இருக்கின்றது. இதற்கு முன்னதாகவே (உங்கள் மேன்மையைப் பற்றிய) விஷயம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டு விட்டது. நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டே வந்திருக்கிறோம்" என்றாள்.
27:43. இதுவரையில் (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) தெய்வங்கள் தாம். ஏனென்றால், அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்களில் உள்ளவளாக இருந்தாள்.
27:44. பின்னர் "இம்மாளிகையில் நுழை" என்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் அதனைக் கண்டு (அதன் தரையில் பதிக்கப்பட்டிருந்த பளிங்கு கற்களை) தண்ணீர் என்று எண்ணி ஆடையை (நனைந்து போகாதிருக்க) இரு கெண்டைக்கால்களில் இருந்து உயர்த்தினாள். அதற்கு (ஸுலைமான் "அது தண்ணீரல்ல) பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட மாளிகை தான்" என்று கூறினார். அதற்கவள் "என் இறைவனே! நிச்சயமாக நானே எனக்குத் தீங்கிழைத்துக் கொண்டிருந்தேன். உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு ஸுலைமானுடன் நானும் முற்றிலும் கட்டுப் படுகின்றேன்" என்று கூறினாள்.
பல்கீஸ் திருமணம்
ஸுலைமான் (அலை) அவர்கள் ‘பல்கீஸை’ ஆஷுரா நாளில் மணமுடித்து ‘ருஜஹீம்’ என்று பெயருள்ள ஒரு மகனை ஈன்றெடுத்ததாகவும், அவரும் ஸுலைமான் (அலை) அவர்களுக்குப் பின் நபியாக இருந்து அரியணை ஏறினார் என்றும் கூறப்படுகிறது.
நூதனமான செடி
ஒரு நாள் ஜின் கூட்டங்களிடமிருந்து இவர்கள் வேலை வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது தீடீரென இவர்களின் முன் நூதனமான செடி ஒன்று முளைத்தது. அதை நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று இவர்கள் வினவிய பொழுது, “என் பெயர் ஹராப் (அழிவு) என்பதாகும். அரசாங்கத்தையும், ஆதிபத்தியத்தையும் அழிப்பது என் அலுவல்” என்று அது கூறியது.
உயிர் உடலை விட்டு பிரிந்து ஒராண்டு
இது கேட்டு தம் முடிவு நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த இவர்கள், பளிங்காலான தம் தொழும் மன்றத்தில் நுழைந்து கைத்தடியை ஊன்றிய வண்ணம் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தனர். அந் நிலையிலேயே இவர்களின் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. இதற்கு ஒராண்டுக்குப் பின் தான் இவர்கள் சாய்ந்து கொண்டிருந்த தடியைக் கரையான் அரித்து விட்டதன் காரணமாக அத்தடி ஒடிந்து விழுந்தது. ஸுலைமான் (அலை) அவர்களும் கீழே விழுந்தனர். அப்பொழுது தான் தாங்கள் இதுகாறும், இவர்கள் உயிரோடிருப்பதாகக் கருதிக் கடின உழைப்புச் செய்ததை எண்ணி ஜின்கள் வருந்தின.
மரணம் பற்றி திருமறையில்
34:14. ஸுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் இறந்துவிட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்துவிட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக்கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தரித்திருக்கமாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது.
ஸுலைமான் (அலை) அவர்களின் அடக்கவிடம்
இவர்கள் பைத்துல் முகத்தஸில் குப்பத்துஸ் ஸக்ரா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் அடக்கவிடம் திபரீயாஸ் கடல் அருகில் இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இவர்களின் காலம் கி.மு.970 முதல் கி.மு.930 வரையிலாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி தாவூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....