அன்னை ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி)
கதீஜா (ரழி) அவர்களின் மரணத்தை அடுத்து நபி(ஸல்) அவர்களது வாழ்க்கைத் துணைவியாக வாழ்க்கைப்பட்ட இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களின் வரிசையில், ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) அவர்கள் இருந்தார்கள். இறைநம்பிக்கை, கீழ்ப்படிதல் மற்றும் அற்பணம் ஆகியவற்றில் தாயவர்கள் மிகச் சிறந்த இடத்தை வகித்தார்கள். இவர்களது எளிமை மற்றும் சுயநலமில்லாத தயாள குணம் ஆகியநற்குணங்கள் ஆயிஷா (ரழி) அவர்களது மனதை மிகவும் கவர்ந்ததாக இருந்தது. ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மக்களில் ஒருவராகவும், இன்னும் இருமுறை ஹிஜ்ரத் செய்த பாக்கியத்தைப் பெற்றவர்களுமாவார்கள். ஒருமுறை அபிசீனியாவிற்கும் இன்னுமொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் சென்றார்கள். இவர்களது வாழ்வு, உலகத்துப் பெண்மணிகளுக்கோர் முன்னுதாரணமாகும்.
அன்னை ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) (கி.பி.570 – கி.பி.644) அவர்களது தந்தை சமாஆ இப்னு கெய்ஸ் மக்காவின் குறைஷிக் குலத்தில் பனூ ஆமிர் பின்லூய் என்ற கோத்திரத்தைச் சேர்ந்தவர், அவர்களது தாயார் அல்-ஷாமுஸ் பின்த் கெய்ஸ் மதீனாவில் உள்ள கஸ்ராஜ் என்ற குலத்தில் பனூ நஜ்ஜார் என்ற கோத்திரத்தைச் சார்ந்தவராவார். ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) அவர்கள் முதலில் சக்ரான் பின் அமர் என்பவரையும், இந்த முதல் கணவரது மரணத்தை அடுத்து, நபி(ஸல்) அவர்களையும் மணந்தார்கள். இன்னும் இவர்கள் அபிசீனியாவிற்குச் சென்ற ஹிஜ்ரத்தின் இரண்டாவது குழுவிலும் அடுத்து வந்த மதீனா ஹிஜ்ரத்திலும் இடம் பெற்ற சிறப்பிற்குரியவர்களுமாவார்கள். அபீசீனியாவில் வைத்து, அன்னையவர்களுக்கு அப்துர் ரஹ்மான் என்ற ஆண் மகவும் பிறந்தது. மக்காவிற்குத் திரும்புவதற்கு முன் ஒரு குறிப்பிட்ட கால அளவு அபிசீனியாவில் அன்னையவர்கள் தங்கியிருந்தார்கள்.
அன்னையவர்களின் தோழியர்களில் கவ்லா பின்த் ஹகீம் (ரழி) அவர்கள் மிகச்சிறப்புப் பெற்றவர்கள், இவர்கள் உத்மான் பின் மத்ஆன்(ரழி) அவர்களது தாயாருமாவார். ஒருநாள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்ற கவ்லா (ரழி) அவர்கள், கணவரை இழந்த அன்னை ஸவ்தா (ரழி) அவர்களது அவல நிலையையும், இன்னும் கதீஜா (ரழி) அவர்கள் இறந்த பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்அடைந்திருக்கும் துன்ப நிலையையும் நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். இன்னும் நீங்கள் கதீஜா (ரழி) அவர்களது நினைவிலேயே இருந்தால் என்னாவது? நீங்கள் திருமணம் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கவ்லா (ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்கு ஆலோசனை கூறினார்கள்.
என்னை யார் மணந்து கொள்வார்கள், இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அந்தக் கவலையை நீங்கள் விடுங்கள், நீங்கள் திருமணம் முடித்துக் கொள்ளச் சம்மதித்தீர்கள் என்று சொன்னால், நான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் நபரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்து அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு திரும்புகின்றேன் என்று கவ்லா (ரழி) அவர்கள் கூறினார்கள். இன்னும் அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்ற நபரைப் பற்றியும் இறைத்தூதர் (ஸல்)அவர்களிடம் கூறிய கவ்லா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட கவ்லா (ரழி) அவர்கள், நேரே ஸவ்தா (ரழி) அவர்களிடம் வருகின்றார்கள். ஸவ்தாவே! உங்களுக்கு நான் ஒரு சந்தோஷமான செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றேன் என்று சொன்ன கவ்லா (ரழி) அவர்கள், அந்தச் சந்தோஷமான செய்தி என்னவென்று அவர்களுக்குச் சொன்னவுடன், அதனை ஏற்றுக் கொண்டு, நபி(ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்த அவர்கள், எதற்கும் நான் என்னுடைய தந்தையிடம் கலந்தாலோசனை செய்து என்னுடைய இறுதி முடிவைச் சொல்கின்றேன் என்று கூறினார்கள்.
ஸவ்தா (ரழி) அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்ட கவ்லா (ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் சென்று இந்த சந்தோஷமான செய்தியைத் தெரிவிக்கின்றார்கள். இரு பக்கமும் சம்மதம் பெற்றுக் கொண்டவுடன், மிக விரைவாகவே திருமண வேலைகள் நடந்தன. நபி (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரழி) அவர்களுக்கு 400 திர்ஹம்களை மஹராகக் கொடுத்தார்கள்.
இப்பொழுது, திருமண முடிந்து விட்ட நிலையில் ஸவ்தா (ரழி) அவர்கள் கதீஜா (ரழி)அவர்கள் வாழ்ந்த வீட்டிற்கு குடித்தனம் வந்தார்கள். அங்கு தான் கதீஜா (ரழி) அவர்களுக்குப் பிறந்த மகள்களான உம்மு குல்தூம் (ரழி), ஃபாத்திமா (ரழி) ஆகியோரும் இருந்தார்கள். தனது முதல் கணவர் இறந்ததன் பின் இப்பொழுதுதான் தன்னுடைய வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கிடைத்திருப்பதாக உணர்ந்தார்கள், பாதுகாப்பை அனுபவித்தார்கள். மக்காவின் நிலை மிகவும் வேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது. குறைஷிகள் தங்களது கொடூரமான தாக்குதலை இறைத் தோழர்கள் மீதும், நபி(ஸல்)அவர்கள் மீதும் மிகவும் கடுமையாகக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். இந்தக் கொடுமைகளிலிருந்து தனது தோழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், தனது தோழர்களுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு அறிவுறுத்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை, எனவே, இப்பொழுது நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.
சில நாட்களிலேயே நபி(ஸல்) அவர்களையும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துசெல்லுமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். இறைவனின் கட்டளை கிடைத்ததும், தனது உற்றதோழர் அபுபக்கர் (ரழி) அவர்களுடன் தனது ஹிஜ்ரத் பயணத்தை நபி (ஸல்) அவர்கள் அமைத்துக் கொண்டார்கள். மதீனாவை அடைந்த நபி(ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரி (ரழி) அவர்களது வீட்டில் தங்கினார்கள். மதீனாவில் தனது இருப்பிடத்தைக் அமைத்துக் கொண்ட நபி(ஸல்) அவர்கள், தனது ஆருயிர்த் தோழர்களான ஜைத் பின் ஹாரிதா (ரழி) மற்றும் அபூ ராஃபிஆ(ரழி) ஆகியோர்களை அழைத்து, அவர்களிடம் சில ஒட்டகங்களையும், 500 திர்ஹம்களையும் கொடுத்து, மக்காவில் இருக்கும் தனது குடும்பத்தவர்களை அழைத்து வரும்படி பணித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களது குடும்பத்தவர்களான அவர்களது மனைவி ஸவ்தா (ரழி), மற்றும் மகள்களான ருக்கையா(ரழி), உம்மு குல்தூம்(ரழி), ஃபாத்திமா(ரழி) ஆகியோர்களையும், இன்னும் ஜைத் பின் ஹாரிதா(ரழி) அவர்களது மனைவியான உம்மு ஐமன்(ரழி) அவர்களது மகன் உஸாமா(ரழி) ஆகியோர்களையும் இந்தப் பயணத்தில் இணைத்துக் கொண்டு, மதீனாவை நோக்கி பயணமானார்கள். இவர்கள் அனைவரும் மதீனாவை அடைந்தவுடன், அனைவரையும் நபித்தோழர் நுஃமான் அன்சாரி(ரழி) அவர்களது வீட்டில் தங்க வைத்தார்கள்.மதீனாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த ஆரம்ப கால கட்டத்தில் நபி(ஸல்) அவர்கள், ஆயிஷா (ரழி) அவர்களையும் மணந்து கொண்டார்கள்.
இப்பொழுது மதீனா நகரம் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. அரபுத்தீபகற்பத்தில் மதீனா சிறப்புக்குரிய நகரமாக, அதிலும் முஸ்லிம்களின் தலைமைப் பீடமாக வளர்ந்து கொண்டிருந்தது. வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அடிக்கடி வந்து சென்று போய்க் கொண்டிருக்கின்ற தளமாக மதீனா விளங்கிக் கொண்டிருந்தது.
நாட்கள் வேகமாக நகர்ந்ததில், அன்னை ஸவ்தா(ரழி) அவர்களுக்கு மிகவும் அதிக வயதாகி முதுமை அடைந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது, தனக்கு அதிக முதுமை ஆகி விட்டதன் காரணமாக எங்கே நபி(ஸல்) அவர்கள் தன்னை மணவிலக்குச் செய்து விடுவார்களோ என்ற பயமும் அதிகரித்தது. எனவே இறைத்தூதர் (ஸல்)அவர்கள் தன்னுடன் தங்கியிருக்கக் கூடிய தனக்காக ஒதுக்கப்பட்ட நாளை, ஆயிஷா (ரழி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். இந்த நேரத்தில் அன்னையைக் குறித்து இறைவன் ஒரு வசனத்தை இறக்கியருளினான் :
“ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்துவிடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒருமுடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை அத்தகைய சமாதானமேமேலானது” (4:128)
இப்பொழுது முன்னைக் காட்டிலும் ஆயிஷா (ரழி) அவர்கள் ஸவ்தா (ரழி) அவர்களுடன்மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அன்னை ஸவ்தா (ரழி) அவர்களின் இதயம் மிகவும் சுத்தமானது, அதில் போட்டிகளுக்கோ பொறாமைகளுக்கோ இடம் கிடையாது.
ஸவ்தா (ரழி) அவர்கள் மிகவும் உயரமாக வளர்ந்திருப்பார்கள், இன்னும்ஆரோக்கியமான நகைச்சுவைக் குணமுடையவர்கள். ஒருமுறை ஸவ்தா (ரழி) அவர்கள்எவ்வாறு இரவுத் தொழுகையை நிறைவேற்றினார்கள் என்பதை, இப்னு சஅத் (ரழி)அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.
மிக நீண்ட அந்த இரவுத் தொழுகையின் போது இறைவன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக தனது நாடி நரம்புகள் யாவும் புடைத்து, சுவாசக் குழாயின் நரம்புகள் வெடித்து எங்கே மூக்கின் வழியாக இரத்தம் வழிந்தோடி விடுமோ என்ற அளவுக்குதான் உணர்ந்ததாக அன்னையவர்கள் மறுநாள் காலையில் இப்னு சஅத் (ரழி)அவர்களிடம் தெரிவித்தார்கள்.
அவர்களது உருவத் தோற்றம் நபி(ஸல்) அவர்களை குதூகலத்தில் ஆழ்த்தி, சிரிப்பை வரவழைத்து விடும். அன்னையவர்கள் மிகவும் எளிமையான, பழகுவதற்கு பண்பான குணமுடையவர்கள். இயற்கையிலேயே அன்னையவர்கள் மிகவும் மெதுவாக ஆடி அசைந்து நடக்கக்கூடியவர்கள். இதனால் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு ஹஜ்ஜில் கலந்துகொண்டிருந்த பொழுது, கூட்ட நெரிசலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, முஸ்தலிபாவிலிருந்து மிக விரைவாக மினாவுக்குச் சென்று கல்லெறிவதற்கு நபி(ஸல்) அவர்களிடம் சிறப்பு அனுமதியைப் பெற்றார்கள்.
ஒருமுறை ஆயிஷா (ரழி) அவர்களும் அன்னை ஸவ்தா (ரழி) அவர்களும் உட்கார்ந்துபேசிக் கொண்டிருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் அன்றைய தினம் ஒரு சிறப்புஉணவைத் தயாரித்து பின்னவரான ஸவ்தா (ரழி) அவர்களுக்குக் கொடுக்க வந்தார்கள்.ஆனால் அன்னையவர்கள் தனக்கு வேண்டாம் என மறுத்துக் கொண்டிருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்களோ அப்பொழுது மிகவும் இளமைத்துடிப்புடன் உள்ள சிறுமியாகத் தான்இருந்தார்கள். எனவே, தான் செய்த அந்த உணவை கண்டிப்பாகச் சாப்பிட்டே ஆகவேண்டும் என அடம் பிடித்து, வலுக்கட்டாயமாக அதனை அன்னையர்வர்களுக்கு ஊட்டிவிட முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அன்னையவர்கள் மறுக்க, ஆயிஷா (ரழி)அவர்கள் வலுக்கட்டாயமாக முயற்சித்துக் கொண்டிருக்க, இறுதியில் அந்த உணவு அன்னையவர்களின் முகத்தில் கொட்டி விட்டது.
இன்றைக்கு அக்கா தங்கைகளுக்கிடையே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்குமென்று சொன்னால் அன்றைக்கு வீடே இரண்டு பட்டுப் போயிருக்கும். ஆனால் சக்களத்திகளாக அவர்கள் இருந்தும், எந்தவித கெட்ட எண்ணமோ, பொறாமைக் குணங்களோ அவர்களிடம் இல்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து சந்தோஷமான வாழ்வை வாழ்ந்தார்கள். இந்தக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும்பொழுது, பாங்கு சப்தம் கேட்டு விட்டால் தன்னுடைய குடும்பத்தவர்களுடன் இருந்து கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாத அளவுக்கு, நபி(ஸல்) அவர்கள் விறுவிறு என்று பள்ளிவாசலை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் முடிந்தவுடன், இனிமேல் இந்த ஹஜ்ஜுக்குப் பின் நீங்கள் உங்களது இல்லங்களிலேயே தங்கி இருங்கள், இதுஅல்லாஹ்வினுடைய கட்டளை என்று நபி(ஸல்) அவர்கள் தனது மனைவிமார்களைநோக்கிக் கூறினார்கள்.
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; (33:33)
அதன் பின் அன்னையவர்களும், இன்னும் ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரழி) அவர்களும் நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின்னால், எங்கும் பயணம்செய்ததில்லை, மதீனாவிலேயே தங்கியிருந்தார்கள். நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஹஜ்ஜும் செய்தாகி விட்டது, உம்ராவும் செய்தாகி விட்டது, நபி(ஸல்) அவர்களது கட்டளைக்கு ஏற்ப நாங்கள் இனி எங்கும் பயணம் செல்ல மாட்டோம், வீட்டிலேயே தங்கியிருந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களதுகட்டளைக்குக் கீழ்ப்படிய விரும்புகின்றோம் என்று கூறினார்கள்.
இன்னும் ஸவ்தா (ரழி) அவர்கள் மிகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் விளங்கினார்கள். ஒருமுறை உமர்(ரழி) அவர்களது ஆட்சிக் காலப் பிரிவில், உமர் (ரழி) அவர்கள் அன்னையவர்களுக்கு ஒரு பை நிறைய திர்ஹம்களைக் கொடுத்தனுப்பினார்கள். அந்தப் பையில் உள்ளவை திர்ஹம் என்பதை அறிந்த மாத்திரத்திலேயே, இது என்ன பேரீத்தம் பழம் நிறைக்கப்பட்ட பையைப் போல உள்ளது எனக் கூறியவர்களாக, அந்தப் பையில் உள்ள அனைத்து திர்ஹம்களையும் தானமாக ஏழைகளுக்கும் இன்னும் தேவையுடைய மக்களுக்கு வழங்கி விட்டார்கள்.
இமாம் தஹபீ அவர்களது கூற்றுப்படி, அன்னையின் பெயரால் ஐந்து ஹதீஸ்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. “ஆடு ஒன்று இறந்து விட்டபின், அந்த ஆட்டின் தோலை உரித்து, அதனைப் பதனிட்டுஎவ்வாறு பயன்படுத்தினோம்” என்று அன்னையவர்கள் அறிவிப்புச் செய்த அந்த ஹதீஸின் மூலமாக, இறந்த ஆட்டினுடைய தோலைப் பயன்படுத்தலாம், அனுமதிக்கப்பட்டது, என்பதை நாம் அறிந்து கொள்ள முடிந்தது.
இன்னுமொரு ஹதீஸ் அன்னையவர்களின் பெயரால் இமாம் அஹமது அவர்கள் தனது முஸ்னதில் பதிவு செய்திருக்கின்றார்கள். ஒருமுறை ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வயதான எனது தகப்பனாருக்காக ஹஜ்ஜுச்செய்யலாமா? என்று கேட்டு விட்டு, இன்னும் அவர் அதன் கிரியைகளைச் செய்யச்சக்தி பெறவே மாட்டார் என்றும் கூறினார்.
இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், உனது தந்தையின் கடனை அடைப்பதும், இன்னும் அது போல உள்ளவற்றையும் அடைப்பது உன் மீது கடமையாக இருக்குமென்று சொன்னால், இதுவும் அது போல ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்று கூறினார்கள். ஆம்! அவ்வாறு (கடனை) அடைப்பதும் என்மீது உள்ளதே என்றும் கூறினார். பின்னர், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணையுடையவனாகவும் இருக்கின்றான், நீங்கள் முதலில் உங்களுக்காக ஹஜ்ஜுச் செய்து கொள்ளுங்கள், பின்னர் உங்களது தகப்பனாருக்காக ஹஜ்ஜுச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு வந்த கலீபாக்கள் அத்தனை பேரும், நபி (ஸல்) அவர்களது மனைவிமார்கள் மீது அளப்பரிய மரியாதை செலுத்தி, அன்னையவர்களது நலன்களில் அதிகக் கவனம் செலுத்தினார்கள். இன்னும் இறை நம்பிக்கையாளர்களின் தாய்மார்களான அவர்களை பாதுகாப்பதும், கண்ணியப்படுத்துவதும் தம் மீது உள்ள கடமையாகக் கருதினார்கள்.
ஸவ்தா (ரழி) அவர்கள், தனது தள்ளாத முதுமை வரையிலும், அதவாது 80 வயது வரை வாழ்ந்தார்கள். உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது அன்னையவர்கள் இறையடி சேர்ந்தார்கள், அவர்களது உடல் ஜன்னத்துல் பகீஃ யில் நல்லடக்கம்செய்யப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஸஃபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.