இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்)
இவர்கள் நபிமார்களில் ஒருவர். இவர்களின் பெயர் ஹீப்ரு மொழியில் எக்னூஹ் என்றும், குனூஹ் என்றும் கூறப்படுகிறது. அவற்றின் பொருள் புனிதமானது என்பதாம். கிரேக்கர்கள் இவர்களை பாட்ரிஸ்மின் என்றும் ஆர்ஸின் என்றும் அழைக்கின்றனர். அரபியில் இவர்கள் பெயர் ஹெர்மிஸ் இத்ரீஸ் அல்முதுல்லுத்பின் பினாத் என்பதாகும். இதன் பொருள் மூன்று பேரருளைப் பெற்றவர் என்பதாகும். இச் சொல் படித்தல் என்று பொருள்படும் தர்ஸ் என்னும் சொல்லிலிருந்து பிறந்தது என்றும் இவர்கள் அறிவியல், விண் கலை, கணிதம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதால் இவர்களுக்கு இப் பெயர் ஏற்பட்ட தென்று சிலர் கூறுகின்றனர்.
இவர்கள் எகிப்திலுள்ள மஃனாப் என்னும் ஊரில் ஆதம் (அலை) அவர்கள் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின் பிறந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் துவக்கத்தில் எகிப்துக்கும், கிரீஸுக்கும் அனுப்பப்பட்ட நபியாகிய காஸீமுன் என்பவர்களின் ஆன்மீக மாணவராயிருந்தனர்.
இவர்களின் நிறம் பழுப்பு, நீண்ட உருவினராயிருந்த இவர்கள் பெரிய மீசையும், தாடியும் வைத்திருந்தனர். உருவத்தில் இவர்கள் ஷீத் (அலை) அவர்களை ஒத்திருந்தனர். இவர்கள் தையல் தொழில் செய்து வாழ்ந்தார்கள். துணியில் ஊசியை நுழைக்குந் தோறெல்லாம் இவர்கள் இறைவனை துதி செய்தனர்.
காபீலுடைய வழிதோன்றல்கள் அட்டூழியங்களில் ஈடுபட அவர்களை நேர்வழிப் படுத்துவதற்கு இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு அவர்களின் நாற்பதாவது வயதில் நபிப் பட்டம் வழங்கி முப்பது சுஹ்ஃபுகளையும் அருளினான் இறைவன். இவர்கள் ஒரு நூறு ஊர்களை உண்டு பண்ணி அங்கெல்லாம் மக்களை குடியேற்றி அவர்களை இறைவனளவில் எழுபத்திரண்டு வழிகளில் அழைத்தனர். முதன் முதலாக வானியலை ஆய்ந்து கோளங்களுக்குப் பெயரிட்டவர்கள் இவர்களே என்றும், விண்மீன்களைப் பார்த்து முன்னறிவிப்புச் செய்யும் கலையையும் இவர்களே தோற்றுவித்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களை பற்றி திருகுர்ஆனில் இரு முறை குறிப்பிடப் பட்டுள்ளது.
இவர்கள் தம் மக்களைக் குறிப்பிட்ட சில நாட்களில் இறைவனைத் தொழுமாறும், நோன்பு நோற்குமாறும், மார்க்கத்திற்காகப் போரிடுமாறும், ஏழைகளுக்கு நல்லது செய்யுமாறும் பணித்தார்கள். கழுதை, பன்றி ஆகிய வற்றின் இறைச்சியை உண்ணக் கூடாதென்றும் தடுத்தனர். பொழுதுபட்டு, தலைப் பிறையைக் கண்ட பின் இறைவனுக்குப் பலிகொடுக்குமாறும் இவர்கள் போதித்தார்கள்.
தனக்கு பின்னர் வரும் நபிமார்களைப் பற்றியும் நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் நிகழவிருந்த பிரளயத்தைப் பற்றியும் இவர்கள் முன்னறிவிப்புச் செய்தனர். தம் காலத்தில் ஆட்சி செய்த மன்னரை, அப்பிரளயத்தின் போது அவரின் நண்பர்களின் அடக்கவிடங்களைக் காப்பாற்றுவதற்காகக் குன்பு ஸஹ்ரான் என்ற ‘பிரமிடை’ (மலை கோபுரத்தை) கட்டுமாறு பணித்தார் என்றும், அவ்விதமே அவரும் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலும் இவர்கள் வாய்மூடியே இருப்பர். பேசினால் நிறுத்தி, நிறுத்திப் பேசுவர். அப்பொழுது தங்களின் சுட்டுவிரலை அசைப்பர். நடக்கும் பொழுது இவர்களின் பார்வை தரையிலேயே விழும். எப்பொழுதும் எதைப்பற்றியாவது சிந்தித்த வண்ணம் இவர்கள் இருப்பர். “மக்களின் நல்லபிமானத்தை எப்படிப் பெறுவது?” என்று ஒருவர் இவர்களிடம் வினவிய பொழுது, “எல்லோருடனும் அன்பாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வதனால்” என்று இவர்கள் பதிலுரைத்தனர்.
இறைவன் தன் திருமறை குர் ஆனில் “(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் (நம்முடைய) நபியாகவும் இருந்தார்.” (19:56)
அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம் (19:57)
இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்வுலகில் மரணமடையாமல், இறைவனால் வானத்தளவில் உயர்த்தப்பட்டது மேலே கண்ட திருமறை வாசகம் மூலம் அறியப்படுகிறது. ஆனால் கீழே உள்ள மாறுபட்ட கருத்துகளும் கூறப்படுகிறது.
ஒருநாள் இவர்கள், உயிரை எடுத்து செல்லகூடிய வானவர் இஸ்ராயீல் (அலை) அவர்களை நோக்கி, தம் உயிரை வாங்கிவிட்டு மீண்டும் அதனைத் தர வேண்டும் என்று தங்களின் விநோத ஆசையைத் தெரிவித்தனர். இறையாணைப்படி அவர்கள் அவ்விதமே செய்தனர். இவர்கள் விண்ணகம் சென்று சுவனத்தையும் நரகத்தையும் கண்டனர். சுவனத்தைக் கண்ட பின் இவர்களுக்கு மீண்டும் மண்ணகம் வர விரும்பவில்லை. அழைத்து சென்ற வானவர் இஸ்ராயீல் (அலை) அவர்கள், இவர்களை மண்ணகம் திரும்ப வேண்டி அழைத்த பொழுது, இவர்கள் “தாம் ஏற்கனவே ஒரு முறை இறந்து விட்டதாலும் சுவனம் ஒரு முறை புகுந்தவர் அதிலிருந்து வெளியேற்ற பட மாட்டார் என்பதாலும் தாம் அங்கேயே தங்க வேண்டும்.” என்று வாதிட்டனர், இஸ்ராயீல் (அலை) அவர்கள் விழித்தனர். இறைவன் இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினான். இவர்களும், ஈஸா (அலை) அவர்களும் விண்ணகத்தில் உயிரோடிருக்கும் நபிமார்களாவர் என்று கூறப்படுகிறது. (ஆதாரம் : இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், இரண்டாம் பாகம்)
ஆனால் ரெளஸத்துல் அஹ்பாப் என்னும் நூலில் இப்னு ஜரீர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு வானவரில் ஒரு நண்பர் இருந்தார். ஒரு நாள் அவர் இவர்களை விண்ணகம் எடுத்துச் சென்றார். இவர்கள் நான்காவது வானத்தில் இருந்த பொழுது இறப்பின் வானவர் இஸ்ராயீல் அவர்களைச் சந்தித்தனர். அப்பொழுது இத்ரீஸ் (அலை) அவர்களின் நன்பரான வானவர் அவரை நோக்கி, “இத்ரீஸ் (அலை) அவர்களின் வாணாட்களில் இன்னும் எத்தனை நாட்கள் பாக்கி இருக்கின்றன?” என்று வினவினார். “பாக்கியா! ஒன்றுமில்லையே. இத்ரீஸ் எங்கே? அவரின் உயிரை வாங்கத்தானே நான் அவரை தேடிக் கொண்டு திரிகிறேன்” என்று கூறி அக்கணமே அவரின் உயிரை வாங்கினார். தம் நண்பரின் இறக்கை மீதமர்ந்திருந்த நிலையில் நான்காவது வானத்தில் வைத்து இத்ரீஸ் (அலை) அவர்களின் உயிர் பிரிந்தது.
இவர்கள் கூறிய அறிவுரைகள் சில வருமாறு:
“மேலான நற்பண்புகள் மூன்றாகும். அவை 1) கோபம் வரும் பொழுது தாழ்மையை மேற் கொள்ளுதல்; 2) பஞ்ச காலத்தில் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளுதல்; 3) அதிகாரத்தில் இருக்கும் பொழுது மன்னிக்கும் இயல்பைப் பெற்றிருத்தல்.”
”மூன்று விதமான மனிதர்களை இலேசு காணாதவன் அறிவாளியாவான். அம்மூவர் அரசர், அறிஞர், நண்பர் ஆவர். அரசரை இலேசு காண்பவன் தன் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டவனாவான். அறிஞரை இலேசு காண்பவன் தன் இறை நம்பிக்கையையே பாழ்படுத்திக் கொண்டவனாவான். தன் நண்பரை இலேசு காண்பவன் பண்பாட்டை வேரறக் கிள்ளி வீசி எறிந்தவனாவான்.”
”அறிவாளி அறிவை விரும்பித் தேட வேண்டும். மக்களெல்லாம் அழும் பொழுது அவன் அழாது அமைதி காக்க வேண்டும். தன் மதிப்பு உயர, உயர அவன் தாழ்ந்து நிற்க வேண்டும். மக்களின் சிறு சிறு குற்றங்களுக்கெல்லாம் அவர்கள் மீது சீறி விழக்கூடாது. தன் செல்வம் அதிகரிக்க, அதிகரிக்க அவன் தன் குண இயல்புகளை மாற்றிக் கொள்ள கூடாது.”
”சக்தி வாய்ந்த அரசனோ, நேர்மையான நீதிபதியோ, கைதேர்ந்த மருத்துவனோ, ஓடும் ஓடையே இல்லாத இடத்தில் குடியேறுகின்றவன் தன் உயிரைப் பொருட்படுத்தாதவனாகவே இருக்க வேண்டும்.”
”செல்வம், வெளியூர்க்காரனையும் உள்ளூர்க்காரனாக ஆக்குகிறது.”
மேல் உள்ள இத்ரீஸ் (அலை) அவர்களின் அறிவுரையை ஷைகு ஸஅதீ (ரஹ்) அவர்கள் தம்முடைய குலிஸ்தானில் கவிதை உருவில் தந்துள்ளனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...