உமர் இப்னு அல்-கத்தாப்(ரழி)
உமர் இப்னு அல்-கத்தாப்(ரழி) அமீர் உல் முஃமினீன் (கி.பி580-கி.பி644) அவர்கள் கலீபாக்களில் இரண்டாமவரும், அவர்களுள் முக்கியமானவரும் ஆவார். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஆலோசகரும், தோழரும் ஆவார்கள். “அஷ்ரதுல் முபஷ்ஷராஹ்” எனப்படும் சுவர்க்கத்துக்கு நன்மாராயங் கூறப்பட்ட பதின்மருள் ஒருவராவார். நபி(ஸல்) அவர்களுக்கு பின்னர் முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாகப் பொறுப்பேற்றார். இவரது நிருவாக மற்றும் போர்த் திறமையால் இஸ்லாமிய ஆட்சிப் பரப்பு மிக வேகமாக வளர்ச்சியடைந்தது. இவரது ஆட்சி காலத்தில் ஈராக், ரோம், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகள் வெற்றி கொள்ளபட்டது.
உமர் (ரழி) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தைச் சேர்ந்தவரான கத்தாப் பின் நுஃபைல் மற்றும் கந்தமா பின்த் ஹிஸாம் ஆகியோர்களின் மகனாக மக்காவில் பிறந்தார். உமர் (ரழி) அவர்களின் பிறந்த தேதி பற்றிய சரியான குறிப்புகள் இல்லை எனினும், சற்றேறக்குறைய கி.பி.580 ஆம் ஆண்டு பிறந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
உமர் (ரழி) அவர்கள் குடும்பம் சாதாரண, நடுத்தர குடும்பமாகத் தான் இருந்தது. அவர் தனது இளமைப் பருவத்தை ஆடு, ஒட்டகம் மேய்ப்பதில் கழித்தார். அவரது தந்தை சாட்டையால் உமரை அடித்து, உட்கார விடாமல், கால்நடைகளை மேய்க்கச் சொல்வாராம். உமர்(ரழி) அவர்கள் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்கள். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவராகத் திகழ்ந்தார். வெறுங் காலுடன் பல மைல்கள் நடக்கக் கூடியவராகவும், சிறந்த ஓட்ட பந்தய வீரராகவும், மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தார். உகாஸ் சந்தையில் வருடா வருடம் திருவிழாவில் நடக்கும் மல்யுத்தப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு, வெற்றிப் பரிசுகளையும் பெற்றுள்ளார். நல்ல குதிரை ஏற்ற வீரர். எப்படிப்பட்ட குதிரையையும் அடக்கி, அதனை லாவகமாக ஓட்டக் கூடியவர். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராகவும் திகழ்ந்தார். இன்னும் பிரச்னைகளில் குறைஷிகளின் மத்தியில் சரியான தீர்வு சொல்லக் கூடிய மத்தியஸ்தராகவும் திகழ்ந்தார். ரோம், பாரசீக நாடுகளுக்கு வியாபாரத்திற்கும் சென்று பொருளீட்டி செல்வந்தராகவும், வணிகராகவும் இருந்தார்.
உமர் (ரழி) அவர்களின் குடும்ப வாழ்வில் மூன்று மனைவிகள் முதலாவது மனைவியின் பெயர் கரீபா பின்த் அபீ உமைய்யா அல் மக்சூமி. இரண்டாவது மனைவியின் பெயர் ஜைனப் பின் மாஸியுன் இவருக்கு, அப்துல்லா மற்றும் ஹஃப்ஸா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மூன்றாவது மனைவியின் பெயர் மலைக்கா பின்த் ஜாருல் அல் குஸைய் இவர் உம்மு குல்தூம் என்றும் அழைக்கப்பட்டார்.
இஸ்லாமிய அழைப்பு பணி தொடங்கியது முதல் இவர் முஹம்மது நபியை இறைத்தூதர் என அங்கீகரிக்கவில்லை முஸ்லிம்களின் பெரும் விரோதியாக இருந்தார். முஸ்லிம்களுக்கு தொடர்ந்து துன்பங்களை தந்து வந்தார். ஒருநாள் நபியை கொன்று விடுவதாக உருவியவாளுடன் சென்றவர் வழியில் நுஐம் (ரழி) அவர்கள் என்ன? என விபரம் என கேட்டு முஹம்மதை கொன்றால் பிரச்சனையாகும், உனது சகோதரியும், மைத்துனரும் முஸ்லிம்களாகி விட்டார்கள் என்று கூற உறைந்து போய் நின்ற உமர் அவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கிச் சென்ற தனது பயணத்தை மாற்றி, தனது தங்கை ஃபாத்திமாவையும், அவரது கணவர் ஸயீத் பின் ஜைத் (ரழி) அவர்களின் வீடு நோக்கிச் சென்றார்கள்.
அங்கு சகோதரியிடம் சச்சரவு ஏற்படுத்தி இஸ்லாத்தை ஏற்றிருந்த தனது சகோதரியிடமிருந்த குர்ஆன் வசனங்கள் எழுதியிருந்த காகிதத்தை வாங்கி வாசித்ததும் உண்மை உணர்ந்து நபி (ஸல்) அவர்களை வந்து சந்தித்து இஸ்லாத்தை தழுவினார். இவர் இஸ்லாத்தை தழுவிய பின்னர் இஸ்லாமியருக்குப் பலம் அதிகரித்தது. இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபின், அதனை மறைத்து வைக்க விரும்பாத உமர் (ரழி) அவர்கள், தனது மாற்றத்தை மக்காவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.
இஸ்லாத்தை வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற உமர் (ரழி) அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். முஸ்லிம்கள் முதன்முதலாக, கஃபாவில் தொழுது முடித்தவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு ”அல் ஃபாரூக்” என்ற புனைப் பெயரை வழங்கினார்கள்.
கி.பி. 622 ல் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் உச்ச கட்டத்திற்குச் சென்று விட்ட பொழுது, ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்ல நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவும், இரகசியமாக செல்ல ஆரம்பித்த பொழுது உமர் (ரழி) அவர்களோ மிகவும் பகிரங்கமாக அறிவிப்புச் செய்து விட்டு, உங்களில் எவருக்காவது துணிவு இருக்கும்பட்சத்தில் என்னைத் தடுத்து நிறுத்திப் பாருங்கள், என்று சவால் விட்ட வண்ணம் மக்காவை விட்டு வெளியேறி மதீனா சென்றார்கள்.
மக்காவில் உமர் (ரழி) அவர்கள் ஒரு வியாபாரியாக இருந்தார்கள். ஹிஜ்ரத்திற்காக அவர் பயணப்பட்டு, மதீனாவிற்கு வரும் பொழுதே தன்னுடன் தன்னுடைய பொருளாதாரத்தையும் கொண்டு வந்திருந்தார். எனவே, அந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு மதினாவில் புதிதாக வியாபாரத்தைத் தொடங்க ஆரம்பித்தார்கள். வியாபாரம் மதீனாவில் மிகவும் ஆமோகமாக நடந்து வந்தது. தனது வியாபாரத்தில் செலவிட்ட நேரம் போக மீதமுள்ள நேரங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து தனது நேரத்தைச் செலவழிப்பவர்களாக இருந்தார்கள். முக்கியமான விஷயங்களில் நபி (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரழி) அவர்களிடமும், உமர் (ரழி) அவர்களிடமும் ஆலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேறி, முதன் முதலாகத் தொழுகைப் பள்ளியை உருவாக்கினார்கள். அப்போது மக்களைத் தொழுகைக்கு அழைக்க எம் முறையை பின்பற்றுவது என்ற பிரச்சனை எழுந்தது. அப்போது உமர்(ரழி) தம் கனவில் கண்ட ‘அதான்’ முறையில் ஒருவரைப் பாங்கு சொல்லச் செய்வதன் மூலம் தொழுகைக்கு அழைக்கலாம் என்றார். அந்த யோசனையை நபி(ஸல்) அவர்களும் பிறகு ஏற்றனர். சில விஷயங்களில் இவர் கூறும் யோசனைகளே பின்னர் வஹியாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு வந்துள்ளது. இது இவரது பெருமைக்குச் சான்றாகும்.
மக்கத்துக் குறைஷிகளுடன் நடைபெற்ற பத்ரு, உஹுத் மற்றும் அனைத்துப் போர்களிலும், மேலும் மதினாவை சுற்றிலும் நடைபெற்ற எல்லா போர்களிலும் நபி(ஸல்) அவர்களுடன் இணைந்து நின்று போரிட்டார். போருக்கெனத் தம் சொத்தில் சரி பாதியைப் போர் நிதியாக நபிகளாரிடம் அளித்தார்.
நபி(ஸல்) அவர்களின் மறைவுக்கு பின் யாரைக் கலீஃபாவாக ஆக்குவது என்ற பிரச்சனை எழுந்தது, முடிவு காண இயலாத நிலை ஏற்பட்டது. அப்போது அபூபக்ர்(ரழி) அவர்களை கையுடன் அழைத்துச் சென்று அவர்களை முதல் கலீஃபாவாக அறிவித்தார். அபூபக்ர்(ரழி) அவர்கள் முதல் கலீஃபாவாக அமர்ந்து ஆட்சி செய்தபோது, உமர்(ரழி) அவர்கள் மிக முக்கியமானவராக விளங்கினார். உமர் (ரழி) அவர்கள் கலீஃபா அவர்களின் முதன்மை ஆலோசகராக திகழ்ந்தார்கள்.
அபூபக்ர்(ரழி) அவர்களின் தேர்வு மற்றும் அணைவரின் ஏகோபித்த முடிவு படி அபூபக்ர்(ரழி)க்கு பின்னர் உமர்(ரழி) அவர்கள் இரண்டாவது கலீஃபாவானார்கள். முதலில் நிர்வாகத்தை முறைபடுத்த உமர் (ரழி) அவர்களது காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யமானது பல்வேறு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரதேசமும் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரதேசமும் கவர்னர் அல்லது வலி என்று பொறுப்புதாரரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு முக்கியமான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்கள், அதாவது1)”ஆமில்” - தனிச் சிறப்பு அதிகாரத்தையும் இன்னும் பொது நிர்வாகம் ஆகிய இரு பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன. 2)”காழி ”- நீதித்துறை பரிபாலணம் வழங்கப்பட்டது.
அரசாங்க நிர்வாகம் சீராக நடைபெறுவதற்கு பிராந்தியக் கவர்னர்களின் திறமையும், சீரிய நிர்வாகவும் தேவையானது என்பதை உணர்ந்த உமர் (ரழி) அவர்கள், கவர்னர்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் மிகவும் கவனமாகவும், அவர்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கண்டிப்பான நடைமுறைகளைப் பேணுபவர்களாகவும் இருந்தார்கள்.
அந்தப் பிரதேசங்களில் நியமிக்கப்பட்ட ஏனைய அதிகாரிகளின் அதிகார வரம்புகள் பின்வருமாறு: கதீப் அல்லது தலைமைச் செயலாளர், கதீப் உத் திவான் - செயலாளர்இராணுவம், ஸாஹிப் உல் கர்ராஜ் -வருவாய்த் துறை அதிகாரி, ஸாஹிப் உல் அஹ்தாத்- காவல் துறை அதிகாரி, ஸாஹிப் உல் பைத்துல் மால்- கருவூலக அதிகாரி, காழி- தலைமை நீதிபதி, சில மாவட்டங்களில் தனிச்சிறப்பு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
அதிகாரி நியமன நேரத்தில், கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக் கொள்ளும்படி ஒவ்வொரு அதிகாரியும் வேண்டப்பட்டார். அதாவது:-
1. துருக்கிய குதிரையில் பயணிப்பதில்லை
2. அழகிய மிருதுவான ஆடைகளை அணிவதில்லை
3. மிருதுவான மாவினைக் கொண்டு செய்யப்பட்ட உணவை உண்பதில்லை
4. பணியாள் ஒருவரை வீட்டு வாயிலில் வாயில் காப்போனாக நிறுத்தி வைப்பதில்லை, மற்றும்
5. பொதுமக்கள் எளிதில் அணுகும் வண்ணம் வீட்டு வாசலை திறந்தே வைத்திருப்பது.
இன்னும் அதிகார நியமனத்திற்கு முன்பாக, மேற்கண்ட அதிகாரியின் சொத்து மற்றும் அவர் வைத்திருப்பவைகள் குறித்து முழு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவரது அதிகார நாட்களின் பொழுது இவற்றில் ஏதேனும் இயல்புக்கு மாறாக கூடியது என்றால், அந்த அதிகாரி அழைக்கப்பட்டு, அதற்கான பதில் அளிக்கும் படி கோரப் பட்டார், இன்னும் அவ்வாறு இயல்புக்கு மீறி சொத்து சேர்த்திருந்தால் அந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கஜனாவில் சேர்க்கப்பட்டது.
உமர்(ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததன் பின்னர் ஒருமுறை தன்னுடைய மகன் அப்துல்லா அவர்களை கைபருக்கு அனுப்பி வைத்து, யூதர்களிடமிந்து வரிப் பணத்தை வசூல் செய்து வருமாறு அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது கைபருக்கு வந்த அப்துல்லா (ரழி) அவர்கள், ஒரு வீட்டுக் கூரையின் கீழ் படுத்துக் கொண்டிருந்த பொழுது யூதர்கள் சதி செய்து அவரது படுக்கையை கீழே தள்ளி விட்டு காயமேற்படுத்தி விட்டார்கள்.
இந்த வழக்கை ஆய்வு செய்த உமர்(ரழி) அவர்கள் யூதர்கள் கொலைச் சதியில் ஈடுபட்டிருந்ததை அறிந்து கைபரை விட்டும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை வெளியேறும்படி உத்தர விட்டார்கள். அசையும் சொத்துக்களை மட்டும் அவர்களுடன் எடுத்துச் செல்ல அனுமதித்த உமர் (ரழி) அவர்கள், அசையாச் சொத்துக்களை அங்குள்ள முஸ்லிம்களிடத்தில் பங்கிட்டு விட்டார்கள்.
இன்னும், யமன் தேசத்திற்கு அருகில் இருந்த நஜ்ரான் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எந்தவித எதிர் நடவடிக்கைகளிலும் கிறிஸ்தவர்கள் ஈடுபடாத வரைக்கும் அவர்களை அங்கு தங்கி வாழ்ந்து வருவதற்கு அனுமதி வழங்கினார்கள். இன்னும் இந்த சட்டத்தின் அடிப்படையில் 'வட்டி”யையும் அங்கு தடை செய்திருந்தார்கள். ஆனால் உமர் (ரழி) அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், வட்டி முறை அவர்களிடத்தில் புளங்கி வருவதையும் அறிந்து கொண்டார்கள். அவர்களைச் சந்திக்க வந்த கிறிஸ்தவ பிரதிநிதிகளிடம், செய்து கொண்ட ஒப்பந்தத்தை நீங்கள் மீறி விட்டீர்கள் என்று நிரூபித்த பின்னர், அவர்களை அங்கிருந்து வெளியேற்றி ஈராக் அருகில் வசித்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்தார்கள்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர், அரேபியா முழுவதும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டதொரு தேசமாக மாறி விட்டது. உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் பொழுது தான் அரேபியா முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாறிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கப்பட்டது.
உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகள் ஆட்சியின் கீழ் வந்தன.
பஸராவின் கவர்னரது சந்தேகம் உமர் (ரழி) அவர்களைச் சிந்திக்க வைத்தது. சிலர் ரோமர்களின் முறையையும், இன்னும் சிலர் பாரசீக முறைப்படியும் காலண்டர் உருவாக்கிக் கொள்ளலாம் என்றார்கள். ஆனால் உமர் (ரழி) அவர்களோ., நாம் முஸ்லிம்கள்.., முஸ்லிம்களுக்கென்று ஒரு நாட்காட்டி வேண்டும் என்றார்கள். முஸ்லிம்களினுடைய மறுமலர்ச்சி என்பது மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்ட நாளிலிருந்து ஆரம்பமாகின்றது என்றார்கள், அலி (ரழி) அவர்களினுடைய இந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது ஹிஜ்ரி காலண்டர் உறுவாக்கப் பட்டது.
ரமளான் மாதங்களில் இஷாத் தொழுகைக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய இரவுத் தொழுகையை, கூட்டாக - ஜமாத்தாக நிறைவேற்றும்படியும், இன்னும் இது யார் மீதும் கட்டாயமாக நிறைவேற்றிட வேண்டிய கடமையானதுமல்ல என்றும், எவர்கள் விரும்புகின்றார்களோ அவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அரேபியா முழுவதும் அறிவிப்புச் செய்தார்கள். தனித்தனியாக நின்று தொழுவதை விட ஒரு இமாமின் கீழ் நின்று தொழுவது சிறந்தது என்ற அடிப்படையில் தொழுவது சிறந்தது என்று விளக்கமளித்தார்கள்.
உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் தேசமெங்கும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் துவங்கப்பட்டு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதற்கென்று கற்றறிந்த உலமாக்கள் தேர்வு செய்யப்பட்டு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள், அவர்களுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்பட்டது.
உமர் (ரழி) அவர்களது காலத்தில் தொடர்ச்சியாக இஸ்லாமியப் பிரதேசங்கள் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன, அவ்வாறு வளர்ச்சி காணும் பிரதேசங்களில் எல்லாம் பள்ளிவாசல்கள் கட்டப்பட வேண்டும் என்று உமர் (ரழி) அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். உமர் (ரழி) அவர்களது காலத்தில் மட்டும் 4000 பள்ளிவாசல்கள் சிறிதும் பெரிதுமாகக் கட்டப்பட்டன. உமர் (ரழி) அவர்கள் மக்காவில் உள்ள கஃபா பள்ளிவாசலையும் விஸ்தரித்துக் கட்ட ஆரம்பித்தார்கள். முதன்முறையாக உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் பள்ளியினுள் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. முன்பு கஃபாவைச் சுற்றி கட்டப்பட்டுள்ள துணி சாதாரண துணியினால் ஆனது. பின்னர் அதற்காக பிரத்யேகமான துணியால் நெய்யப்பட்டு, எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டது. மக்காவில் புனித ஹரம் பகுதியைப் பிரித்து அவைகளைப் புனிதப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. கஃபாவினைப் போலவே மதினாவில் உள்ள நபி(ஸல்) அவர்களது பள்ளிவாசலும் விஸ்தரிக்கப்பட்டது.
திருமறைக் குர்ஆனின் வழிகாட்டுதல்களின்படி மது அருந்துவது தடை செய்யப்பட்டது. விபச்சாரம் மற்றும் முஅத்தா என்ற தற்காலித் திருமணத்திற்கும் தடை விதித்தார்கள். முஸ்லிம்களிடையே அதிகமான அடிமைப் பெண்கள் இருந்து வரலானார்கள், இதுவும் மக்களிடையே பாலியல் ரிதியான ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்துவதைக் கணித்த உமர் (ரழி) அவர்கள், எந்த அடிமைப் பெண்கள் தங்களது எஜமானர்களது குழந்தையை கருத்தரித்துக் கொண்டார்களோ அவர்கள் சுதந்திரமான பெண்களாக கணிக்கப்படுவார்கள், அவர்களை எஜமானர்கள் தங்களது அடிமைகளாக நிர்வகித்து வர முடியாது, என்று அறிவிப்புச் செய்தார்கள்.
உமர் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்த அடிமைத் தனத்தை முடிந்தளவு ஒழித்து விட வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார்கள். அதற்காக மிகவும் துணிகரமான முறையில், ''அரபுலகத்தில் எந்த அரபும் அடிமையாக இருக்க முடியாது” என்றதொரு அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் இந்த உலகத்திலேயே முதன்முதலாக அடிமைகள் இல்லாத பிரதேசமான அரேபியா திகழ ஆரம்பித்தது. உமர் (ரழி) அவர்களது காலத்தில் பல அடிமைகள் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டு கண்ணியமளிக்கப் பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதீனாவின் கருவூலகம் நிரம்பி வழிந்தது, இதுவே உமர் (ரழி) அவர்களுக்கு மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இந்த செல்வத்தை என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.
மாதாந்திர உதவித் தொகை போல ஒரு தொகையை நிர்ணயம் செய்து விடலாம் என்று முடிவாகியது. அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். இறுதியாக முழு பட்டியலும் தயாரிக்கப்பட்ட பின், அதற்கு உமர் (ரழி) அவர்கள் ஒப்புதல் வழங்கினார்கள்.
கி.பி. 640 வாக்கில் அரேபிய முழுவதும் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. நிலைமையின் விபரிதத்தை உணர்ந்த கலிஃபா உமர் (ரழி) அவர்கள், ஏனைய பிரதேச கவர்னர்களுக்கு கடிதம் எழுதி, அரேபியாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைக்குமாறு கோரினார்கள். சிரியா, எகிப்து, மற்றும் ஈராக் பகுதிகளில் இருந்து ஒட்டகம் நிறைய உணவுப் பொருட்கள் மதீனாவை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன, எகிப்திலிருந்து கடல் மார்க்கமாகவும் உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்தன.
குடும்ப வாரியாக உணவுப் பொருட்கள் பங்கீடு செய்யப்பட்டன, கிராமப் புறங்களிலிருந்து வந்து மதீனாவில் தஞ்சம் புகுந்திருந்த மக்களுக்கு அரசின் செலவில், உணவு சமைத்து வழங்கப்பட்டது.
மிகச் சிறந்த போர் வீர்ராக விளங்கிய உமர்(ரழி) தம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பாரசீக, ரோமப் பேரரசுகளின் ஆதிக்கத்தை முறியடித்தார்கள். ஜெரூசலத்தைக் கைப்பற்றி அங்கு நேரில் சென்று பைத்துல் முகத்தஸ் இடத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை விரிவாக்கி கட்டினார். எகிப்து, திரிப்போலி நாடுகளை வென்றார். பிற்காலத்தில் புகழ்பெற்ற நகரங்களாக விளங்கிய கூஃபா, பஸ்ரா நகரங்கள் இவர் காலத்தில் தான் உறுவாக்கப்பட்டன.
நீதி, நேர்மை ஆகியவற்றிற்குச் சிறந்த இலக்கணமாகத் திகழ்ந்தவர். சந்தர்ப்பவசத்தால் யாருக்காவது பிழை செய்து விட்டதாக உணர்ந்தால், அதற்கான சவுக்கடி தண்டனையைத் தமக்கு தாமே வழங்கிக் கொள்வார். இவர் இறந்த பின் இவர் உடலை குளிப்பாட்டும் போது, இவர் உடலில் காணப்பட்ட சவுக்கடித் தழும்புகள் இவ் உண்மையை உணர்த்தின.
உமர்(ரழி) பெரும் செல்வந்தராக இருந்த போதிலும், மிக எளிமையான வாழ்வே வாழ்ந்தார். இஸ்லாத்தின் இணையற்ற இரண்டாம் கலீஃபாவாக வாழ்ந்த இவரது சட்டையில் பதினெட்டு ஒட்டுகள் இருந்தனவாம். என்னே இவரது எளிமை.
ஒருநாள் இவர் பஜ்ர் தொழுகை தொழுது கொண்டிருந்தபோது அபூலூலு என்பவனால் குத்தப்பட்டார். கத்தி குத்தப்பட்ட உமர்(ரழி) அவர்களோ தொழுகையை தொடர்ந்து நடத்தும்படி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபை கேட்டுக் கொண்டார். அவரும் அவ்வாறே செய்தார். தாம் குற்றுயிராய்க் கிடந்தபோது கூட இறைவணக்கம் தடையின்றி நடக்கச் செய்த செயலானது இஸ்லாமிய இறை நியதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதில் அவர் காட்டிய உறுதிக்கு இன்றும் சான்றாக விளங்கி வருகிறது.
உமர்(ரழி) அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் தனக்கு பின் கலீஃபாவை தேர்வு செய்ய ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து மூன்று நாட்களுக்குள் தேர்வுசெய்ய கூறினார். அவர்கள் உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களை மூன்றாவது கலீஃபாவாக தேர்வு செய்தார்கள். உமர்(ரழி) அவர்கள் கத்திக் குத்துப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின் காலமானார். இவரது உடல் முதல் கலீஃபாவான அபூபக்ர்(ரழி) அவர்களின் அடக்கவிடத்திற்கு அருகிலேயே அடக்கப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் குவைலித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் உம்மு சலமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...